வள்ளல் நள்ளியின் வரலாறு - கடையேழு வள்ளல்கள்

STORY SOURCE - Ki Va Ja ஏழு பெருவள்ளல்கள் ( With Modified Screenplay)

பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நள்ளி, பேகன் இந்த எழுவரும் கடையேழு வள்ளல்களாவர். இந்தக் கட்டுரையில், நாம் கடையேழு வள்ளல்களுள் ஒருவரான கண்டீரக் கோப்பெரு நள்ளியின் வரலாற்றைப் பார்க்கப் போகிறோம்.

கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quiz

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


முன்னுரை 

வலக்கைக் கொடுப்பது இடக்கைக்குக் கூடத் தெரியக்கூடாது என்று சொல்வார்கள். இந்தக் காலத்தில் அதைப் பின்பற்றுவது கடினமென்றாலும், சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் அந்தக் கூற்றுப்படி தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் விளம்பரத்துக்காக எந்தவொரு பொருளும் கொடுத்ததும் கிடையாது, தங்களைப் பாடச்சொல்லி எழுதி வைத்ததுக் கொண்டதும் கிடையாது.

'அப்படியென்றால், இந்தப் பாடல்களெல்லாம் எப்படி வந்தன !!' , என்று யோசிக்கிறீர்களா ?

அந்தக் காலத்தில் வாழ்ந்த புலவர்களோ, பாணர்களோ, கூத்தர்களோ, அடிக்கடி ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்துக்குப் பயணப்படுவார்கள். அப்படிச் செல்லும் வேளையில், அவர்கள் சந்தித்த நாட்டைப் பற்றியும் மன்னர்களைப் பற்றியும் பிற நாட்டிலிருக்கும் மக்களுக்கோ, அல்லது வழி சொல்லும்போது புலவர்களுக்கோ சொல்வார்கள். அப்படித் தாம் பொருள் பெற்று வந்த மன்னனைப் பற்றிப் புகழ்ந்து அவர்களாகவே சொல்லியதாகத்தான் இந்தப் பாடல்கள் யாவும் அமைந்துள்ளன.

அகநானூறு, புறநானூற்றில் புலவர்கள் இப்படிப் பாடியிருப்பதையும், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம், பதிற்றுப் பத்து ஆகியவற்றில் பாணர்கள், கூத்தர்கள் இப்படிப் பாடியிருப்பதையும் நம்மால் காணமுடிகிறது. மற்றபடி, மன்னராகப் பொருள் கொடுத்துப் பாடச் சொன்னதாக எந்தவொரு பாடலும் சங்க இலக்கியத்தில் கிடையாது.

வீரத்தோடு சேர்த்து அவர்கள் கட்டிக்காத்த இந்த அறம் தான், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், அவர்களுடைய புகழ் நிலைநிற்பதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நாம் வள்ளல் நள்ளியின் வரலாறைப் பார்க்கலாமா ?


கண்டீரத்தின் வளங்கள் 

சங்ககாலத்தில், கண்டீரம் என்றொரு நாடு இருந்தது. இயற்கை வளங்களும் மலைகளும் சூழ்ந்து வலமாக இருந்தது அந்தக் கண்டீரம் . இன்று நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா மலைச்சிகரம் இருக்கிறதல்லவா !! அதன் சங்ககாலப் பெயர்தான் இந்தத் தோட்டி மலை. தோட்டி மலையின்கண் தான், கண்டீர நாடு அமைந்திருந்ததாக இலக்கியம் சொல்கிறது.

இப்படிப்பட்ட தோட்டி மலையின் காடுகள் வழியாக ஒருநாள் ஒரு புலவரும், அவரைச் சேர்ந்தவர்களும் ஒரு கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அதிக தூரம் அப்படியே நடந்து வந்தபடியால், அவர்களுக்கு மூச்சிரைத்தது. இது தொடர்ந்தால், நம்மால் இதற்கு மேல் நடக்க முடியாது என்று எண்ணி, அவர்கள் ஒரு பலா மரத்தின் நிழலில் இளைப்பாற முடிவு செய்தார்கள்.

அந்த வாலிபன் யார் ?

அவர்கள் அப்படி உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில், ஒரு குதிரை விரைந்து வருவது போன்ற சத்தம் அவர்களுக்குக் கேட்டது. அந்தக் குதிரை அருகில் வந்ததும் பார்த்தால், அதன் மீது மிக கம்பீரமான ஒரு இளைஞனும் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு, காட்டில் வேட்டைக்குச் சென்றுத் திரும்பி வருகிற இளைஞன் போலத் தெரிந்தான்.

இவர்களெல்லோரும் இளைப்பாறிக் கொண்டிருந்த அந்த மரத்தடியின் அருகில் வந்ததும், இவர்களைக் கண்டு, தனது குதிரையை அங்கு நிறுத்தினான். அதிலிருந்து இறங்கி வந்து, அவர்களுக்கு வணக்கம் செலுத்தி, "நீங்கள் யார் ?" என்றும் கேட்டான்.

அவர்கள் தாங்கள் இன்னாரென்றும், வெகு தூரத்திலிருந்து அந்த மலைக்குப் பிரயாணப்பட்டு வந்திருப்பதாகவும் சொன்னார்கள். அப்போது அவர்களது முகத்தைப் பார்த்தே, அவர்கள் களைப்போடிருக்கிறார்கள் என்று அறிந்து கொண்ட அவன், நொடிப்பொழுதில், சில சுள்ளிகளைப் பொருக்கி அவற்றிற்கு நெருப்பூட்டினான். தான் ஏற்கனவே வேட்டையாடிக் கொண்டுவந்திருந்த மான் துண்டங்களில், கொழுத்த கறியை எடுத்து நெருப்பில் வாட்டி, வெந்த இறைச்சியை அவர்களுக்குப் பரிமாறினான்.

அத்தனை நேரம், பசிக் கிறக்கத்திலிருந்த அவர்கள், நன்றாகச் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றார்கள். ஆனால், அவன் அவர்களை நிறுத்தி, "உங்களைப் பார்த்தால் புலவர்கள் போலத் தெரிகிறதே !! அரசர்கள் உங்களுக்குப் பொருள் கொடுப்பது வழக்கம். நானோ, ஒரு மலைவாசி. நானென்ன தருவது ? ஆனாலும், உங்களை வெறுங்கையோடு அனுப்பாது, என்னிடம் இருப்பதைத் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு, தனது கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலைகளையும், கைகளில் அணிந்திருந்த கடகங்களையும் கழற்றி, அவர்களிடம் கொடுத்தான்.

புலவர் வாங்க மறுத்தபோதிலும், "இதை வைத்துக் கொள்ளுங்கள்" என்று வற்புறுத்தினான்.

அந்த ஆபரணங்களைக் கண்ட புலவர், வியப்போடு அவனைப் பார்த்து, "உன்னைப் பார்த்தாலும் ஒரு அரசனுக்கு இணையான கம்பீரத்தோடுதான் இருக்கிறாய். நீ யார் ? உன்னுடைய தந்தை யார் ? உனது வீடு எங்கிருக்கிறது ?" , என்று வினவ, அவன் எந்தவொரு பதிலுமே சொல்லாமல் நின்றான்.

இதைப்பார்த்த அவர் அவனிடம், "சரி இதெல்லாம் கூட வேண்டாம். உனது பெயரையாவது சொல்" , என்று வினவ, அப்பொழுதும், அவனிடமிருந்து புன்னகையைத் தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.

புலவருக்கும் 'இவனிடமிருந்து பதில் வராது' என்பது புரிந்தபடியால், அவனிடமிருந்து விடை பெற்று, மறுபடியும் தோட்டி மலைக் காடுகள் வழியாகத் தனது குழுவோடு நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது தூரம் சென்ற பின், அங்கு சில மக்களைக் கண்டார். அவர்களிடம், தாம் முன்பு கண்ட அந்த இளைஞனின் அடையாளத்தைச் சொல்லி, அவன் யாரென்று கேட்டார்.

"அவன் ஒரு இளம் வாலிபன். வில் வைத்திருந்தான். பார்ப்பதற்கு ராஜ கம்பீரத்தோடு இருந்தான், எங்களுக்கு நாங்கள் கேட்காமலேயே நிறைய உதவிகள் செய்தான்" , என்று அவர் சொல்ல, அந்த மக்கள் ஆச்சரியமடைந்து "புலவர் பெருமானே, நீங்கள் பார்த்தது வேறு யாரையும் இல்லை. இந்த தோட்டி மலைக்கே சொந்தக்காரன், இந்தக் கண்டீரத்தின் அரசன், கோப்பெரு நள்ளியைத்தான்" , என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட புலவர், ஆச்சரியத்தோடு நின்று யோசித்துப் பார்த்தார். "நாம் கேட்காமலேயே நமக்கு உதவியும் செய்து, முத்து மாலைகளையும், கடகங்களையும் தந்துவிட்டு , தான் யாரென்ற அடையாளமும் கூடச் சொல்லாது சென்றது, வள்ளல் கோப்பெரு நள்ளியா ? இதற்குப் பெயர்தான், வலக்கை கொடுப்பது இடக்கைக்குக் கூடாது தெரியக்கூடாது என்பதோ !!" , என்று அங்கேயே ஒரு பாடல் பாடினார். அந்தப் புலவருடைய பெயர்தான் வன்பரணர்.

நள்ளியின் மனைவியின் ஈகை 

வன்பரணரை அடுத்து நிறைய புலவர்கள் நள்ளியைக் காண வந்து, அவனது கொடைத்திறத்தையும் வீரத்தையும் புகழ்ந்து, பாடல்கள் பாட ஆரம்பிக்க, அவன் புகழ் வானளவு எட்டியது.

வறுமையில் வாடுவோர் யாராகினும், தோட்டியைத் தேடி நம்பிக்கையோடு வந்தார்கள். வந்தவர்கள் யாருடைய முகமும் கோணாத வகையில், ஒருமுறை பொருள் வாங்க வந்தவர்கள் இன்னொரு முறை அவனிடம் வராதவாறு வற்றாது பொருள் கொடுத்தான் நள்ளி.

இப்படித்தான் ஒருநாள், வறுமையில் வாடிய ஒரு இரவலர், அவன் உதவியை நாடி அவனது வீடு தேடி வந்தார். அப்போது நள்ளி தனது வீட்டில் இல்லை. அவனது தம்பியான இளங்கண்டீரக்கோவும் கூட இல்லை.

"நான் வந்த வேளையில் நள்ளி இங்கில்லாது போய்விட்டானே !! ஒருவேளை அவன் இங்கிருந்திருந்தால், நான் மறுமுறை இங்கு வரவே தேவையில்லாத அளவுக்குக் கொடை தந்திருப்பானே !! இப்போது நான் என் செய்வேன் !!அவன் வீட்டுப் பெண்டிரிடம் நான் என்னவென்று பொருள் வேண்டுவேன் ??" என்று மனம் வாடி, அவனது வாசலில் நின்றார் அந்த இரவலர்.

அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நேரத்தில், நள்ளியின் வீட்டு வாசல் திறக்கப்பட்டது. நள்ளியின் மனைவியும் அவனது தம்பியின் மனைவியும் அவரை வரவேற்றார்கள். உணவு வழங்கி உபசரித்தார்கள். அதோடு நிறுத்தாது நகைகள் பூட்டப்பட்ட ஒரு பெண் யானையையும் கொடுத்து வழியனுப்பினார்கள். ஆம், நள்ளியின் மனைவியும் இளங்கண்டீரக்கோவின் மனைவியும் சேர்ந்து, தனது கணவன் இல்லாத காலத்தேயும் வந்த இரவலர் நோகாத வண்ணம் கொடை கொடுத்தார்கள்.

இதையெல்லாம் கண்டு, இதயம் கனிந்து, "நள்ளி மட்டுமல்ல. அவன் வீட்டுப் பெண்டிரும் உயர்ந்தவரே !!" , என்று போற்றினார் அந்த இரவலர்.

இப்படி பலரும் புகழும் வண்ணம், 'வலக்கை கொடுப்பது இடக்கைக்குக் கூடாது தெரியாது கொடுத்த', கண்டீரக் கோப்பெரு நள்ளியின் வரலாறு இதற்குமேல் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும், 'முட்டாது கொடுத்த முனைவிலங்கு தடைக்கையோன் - கண்டீரக் கோப்பெரு நள்ளியின் புகழும் ஓங்குக' என்று சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quiz


கடையேழு வள்ளல்களின் வரலாறு கதை வடிவில் 

Pari History in Tamil - வள்ளல் பாரி

Malayaman Kaari History in Tamil - வள்ளல் மலையமான் காரி

Valvil Ori History in Tamil - வள்ளல் வல்வில் ஓரி

Aai Andiran History in Tamil - வள்ளல் ஆய் அண்டிரன்

Adhiyaman History in Tamil - வள்ளல் அதியமான் 

Nalli History in Tamil - வள்ளல் நள்ளி 

Pegan History in Tamil - வள்ளல் பேகன் 

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post