வள்ளல் ஆய் அண்டிரனின் வரலாறு - கடையேழு வள்ளல்கள்


STORY SOURCE - Ki Va Ja ஏழு பெருவள்ளல்கள் ( With Modified Screenplay)

தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும், மிகச் சிறப்பு வாய்ந்த மலைதான், தமிழ் வளர்த்த பொதியமலை. அகத்திய முனிவர் வாழ்ந்த, அந்தப் பொதிகை மலைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரன் ஆட்சி செய்த மலை.

கூட்டம் கூட்டமாக யானைகளும், சந்தன மரங்களும், மூலிகைகளும் கொட்டிக்கிடந்த ஒரு மலை. இன்றைய தேதிக்கு தென்காசி, குற்றாலம், பாபநாசம் இந்தப் பகுதிகளில்தான் இந்த மலை, அன்றிருந்த அதே இயற்கை வளங்களுடன் இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, புறநானூறு இவற்றிலெல்லாம் இவரைப்பற்றி நிறைய பாடல்கள் இருக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு இவரைப்பற்றித் தெரியும் ? இன்று தெரிந்துகொள்ளலாம். இது கடையேழு வள்ளல்களுள் ஒருவரான, ஆய் அண்டிரனின் வரலாறு, கதை வடிவில்.

கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quiz

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


கதை வடிவில் வரலாறு 

முடமோசியாரின் பயணம்

அந்தக் காலத்தில், சோழ நாட்டுடைய தலைநகரம், உறையூராக இருந்தது. உறையூரில், ஏணிச்சேரி முடமோசியார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு ஒரு நெருங்கிய நண்பனும் இருந்தான். அந்த நண்பன், பொதியமலையில் இருந்தான். பல நாட்களாக அவனைப் பார்க்காததால், கண்கள் அவனைத்தேடியது முடமோசியாருக்கு. 

அதனால், உடனடியாக அவர் பொதிய மலைக்குப் புறப்பட்டார். அப்படிச் செல்லும்போது அவருடன், அவர் ஒரு சிறுவனையும் கூட்டிச்சென்றார். அந்தச் சிறுவன் தன்னுடைய கழுத்தில், ஒரு புலிப்பல் ஆபரணத்தை அணிந்துகொண்டிருந்தான். அந்தக்காலத்தில், அதன் பெயர் புலிப்பல் தாலி. இன்று  என்பது பெண்கள் மட்டுமே அணியும் ஆபரணமாக அன்றில்லை. ஆண், பெண் இருபாலரும் அணிந்துகொள்ளும் ஒரு நகை அவ்வளவே.

அந்தச் சிறுவனுடன் முடமோசியார், பொதிய மலைக்குப் போய்க் கொண்டிருக்கும்பொது, போகிற வழியில், இன்னொரு புலவரையும் சந்தித்தார். அந்தப் புலவரைப் பார்த்தாலே தெரிந்தது, அவர் மிகவும் வறுமையில் வாடிப்பியிருக்கிறார் என்று. அந்த வறுமையில் வாடிய புலவரிடம் முடமோசியார் சொன்னார், "நான் என்னுடைய நண்பனைப் பார்க்கச் செல்கிறேன். அந்த நண்பன் மிகவும் கொடைத் தன்மை வாய்ந்தவன். கேட்காமலேயே, வறியவருக்கும் புலவர்களுக்கும் நிறைய பொன்னும் பொருளும் தருபவன். அதனால் , நீங்களும் என்னுடன் அவன் அரண்மனைக்கு வாருங்கள்" என்று. மற்ற புலவரும் சம்மதிக்க, அவரையும் தன் நண்பனின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஆய் அண்டிரனின் அரண்மனை 

பொதிய மலையில் இருக்கும் ஆய்க்குடி என்ற ஊருக்குச் சென்றதும், அந்த ஊரிலிருக்கும் அரண்மனையைச் சென்றடைந்தார் முடமோசியார். ஏனென்றால், அவருடைய நண்பன் அவரை மாதிரி இன்னொரு புலவர் கிடையாது. அவர் ஒரு அரசர். அந்த அரண்மனையின் முன் சென்ற உடனேயே, முடமோசியாருக்கு பயங்கரமான ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அரண்மனை இப்பொழுது முன்பு போல் இல்லை. 

முன்பெல்லாம், அந்த அரண்மனைக்கு முன்னால், ஒரு பெரிய யானைப்பந்தி இருக்கும். அந்தப் பந்தி முழுவதும், யானைகளைக் கட்டி வைத்திருப்பார்கள். ஆனால், இப்பொழுது அந்தப் பந்தியில் ஒரு யானையைக் கூடக் காண இயலவில்லை. யானைகளைக் கட்டிவைக்கும் கம்பும் கயிறும்தான் மிச்சமிருந்தது. பற்றாக்குறைக்கு அரண்மனையும் பொலிவிழந்து கிடந்தது. அதைப் பார்க்கும்போதே தெரிந்தது, அந்த அரண்மனையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று. 

இந்த காட்சிகளையெல்லாம் அவருடன் வந்த இன்னொரு புலவர் பார்த்துவிட்டு, "முடமோசியாரே, நிறைய செல்வமெல்லாம் உங்கள் நண்பனிடம் உள்ளது என்று கூறி இங்கு என்னைக் கூட்டிக்கொண்டு வந்தீர்களே !!ஆனால் இந்த அரண்மனையைப் பார்த்தால் செல்வந்தரின் வீடு மாதிரி தெரியவில்லையே !! என்னதான் ஆயிற்று உங்கள் நண்பனுக்கு ? ஒருவேளை வரவுக்கு மீறி செலவு செய்து, இந்தச் செல்வமெல்லாம் தீர்ந்து போயிற்றோ ?" , என்று கேட்க, "என்னது நிறைய செலவு செய்ததால், வறுமை வந்ததா ? யாருக்கு ? என் நண்பனுக்கா ? என் நண்பன் ஆய் அண்டிரனுக்கா ?? ஆய் அண்டிரனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ??" , என்று சொல்லிவிட்டு அவனைப் பற்றி கதையாகச் சொல்ல ஆரம்பித்தார் முடமோசியார்.

யார் இந்த ஆய் அண்டிரன் ?

சங்ககாலத்தில், பொதிகை மலையை ஒரு வேளிர் மரபினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த வேளிர் மரபில் தோன்றிய ஒரு தலைசிறந்த மன்னன் தான் இந்த ஆய் அண்டிரன். ஆய் அண்டிரன் அரசனான பின்பு, அவன் தலைமை வகிக்க ஒரு அரண்மனை தேவைப்பட்டது. அந்த அரண்மனையை மலையில் கட்டிக்கொள்ளாது, மலைக்குக் கீழே சமதளப்பரப்பைத் தேடி, அங்கு ஒரு அரண்மனையை கட்டினான் ஆய் அண்டிரன். வேந்தனாகிய தான் மட்டும் சமதளப்பரப்பில் வாழ்ந்தால் போதுமா? தன்னுடைய மக்களும் வாழ வேண்டாமா? என்று எண்ணி, அரண்மனையைச் சுற்றி ஒரு ஊரையும் உருவாக்கினான். அப்படி அவர் உருவாக்கிய ஊர் தான் ஆய்க்குடி. (இன்றைக்கும் தென்காசி மாவட்டத்தில், ஆய்குடி என்னும் பெயருடன் அந்த ஊர் இருக்கிறது)

அந்தக் காலத்தில், பொதிகை மலையில் நிறைய யானைகள் இருக்குமாம் சமதளத்தில் அரண்மனையைக் கட்டிக் கொண்ட பின்பு, மலையில் இருக்கும் யானைகள் அனைத்தையும் தன்னுடைய அரண்மனைக்கு கூட்டி வந்து, ஆண் யானைகள் அனைத்தையும் போருக்கும்,  பெண் யானைகள் அனைத்தையும் வாகனமாக பயன்படுத்தவும், பயிற்சி கொடுத்தான். பயிற்சி கொடுக்கப்பட்ட அந்த யானைகள் பந்தி பந்தியாக அவனுடைய அரண்மனைக்கு முன்பு நிற்கும் காட்சி, பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பிறகென்ன, பொதிய மலையில் சந்தனம் இருந்தது. யானைகள் இருந்தன. வளம் கொழித்தது. அதனால், செழிப்பாக இருந்தது ஆய் அண்டிரனின் அரண்மனை. அவனும் இந்த செழிப்பையெல்லாம் தனக்கு மட்டுமென வைத்துக்கொள்ளாமல், தன் நாட்டு மக்களுக்கும், தன்னை நாடி வரும் வறியவர்கள் மற்றும் புலவர்களுக்கும் அள்ளிக் கொடுத்தான். 

ஆய் அண்டிரன் கொடுத்த விருந்து 

ஒருநாள், அவனுடைய சிறப்புகள் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்ட ஒரு புலவர் அவனை சந்திக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். வெகு தூரம் கடந்து அவனை சந்திக்கவும் வந்திதார். அப்படி வந்தவரிடம், சிறிது நேரம் இனிமைமாக பேசிக்கொண்டிருந்த ஆய் அண்டிரன் அவருக்கு ஒரு வித்தியாசமான விருந்தையும் அளித்தான். அது என்னவெனில், முள்ளம்பன்றியின் இறைச்சி. அந்தக் காலத்தில், முள்ளம்பன்றியின் இறைச்சி என்பது பொதிய மலையில் கிடைத்த ஒரு சிறப்பான உணவுப்பொருள். அந்த உணவைத் தன்னை நாடி வந்த அந்த புலவருக்குக் கொடுத்த ஆய் அண்டிரன். அவர்கள் சாப்பிட்டு முடித்து ஊருக்கு கிளம்பும்போது நிறைய பொன்னையும் பொருளையும் எடுத்து வந்து அந்தப் புலவரிடம் கொடுத்தான். அது மட்டுமின்றி, புலித்தோலில் போர்த்தப்பட்ட ஒரு பரிசையும் கொடுத்தான். 

பரிசு தரும் முறையில் ஒரு மரியாதை உள்ளது புலித்தோலில் போர்த்தப்பட்டு ஒரு பரிசைத் தருகிறார்கள் என்றால், அதிக மரியாதையுடன் அந்தப் பரிசைத் தருகிறார்கள் என்று அர்த்தம். தனக்கு அந்த மன்னன் கொடுத்த மரியாதையில் மகிழ்ந்து அதை அங்கு வைத்தே பிரித்துப் பார்த்தார் அந்தப் புலவர். அந்தப் பரிசில், அவர் விருப்பமாக சாப்பிட்ட முள்ளம்பன்றி இறைச்சியும், சந்தனக்கட்டைகளும், யானைத்தந்தமும் இருந்தன. அத்தோடு, அவருக்குக் கொடுத்த அந்தப் பொன்னையும் பொருளையும் தன்னுடைய அரண்மனை வாசலில் கட்டப்பட்டிருந்த ஒரு யானையை இழுத்துவந்து அதன்மீது வைத்து இந்தப் புலவருக்கு அதைக் கொடுத்தான் ஆய் அண்டிரன். 

இவற்றையெல்லாம் பார்த்து மனமுவந்து போன அந்த புலவர் அந்த இடத்தில் கூறுகிறார், " மன்னா! நான் சோழ நாட்டில் பிறந்தவன். எனக்கு எந்தவிதமான குறையும் கிடையாது. நான் உன்னை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றுதான் வந்தேன். உன்னுடைய சிறப்பம்சங்களைப் பற்றி நிறைய பேர் பாடியதால், நீ எப்படி இருப்பாய் என்று உன்னுடன் பழகிவிட்டுச் செல்லலாம் என்றுதான் வந்தேன் . எனக்கே நீ இவ்வளவு பொருள் கொடுத்துள்ளாயே !! அப்படியெனில், உண்மையில் வறுமையில் வாடி வருபவர்களுக்கு நீ எவ்வளவு பொருள் தருவாய் ??" , என்று.

"அந்த புலவர் வேறு யாருமில்லை. அது நான்தான்" , என்று அருகிலிருந்த புலவரிடம் கூறினார் ஏணிச்சேரி முடமோசியார். அவர் சொல்லிமுடிக்கவும், அருகிலிருந்த அந்த சிறுவன் தன்னுடைய கழுத்திலிருந்த புலிப்பல் தாலியைத் தடவி பார்க்கிறான். ஏனெனில், அந்த புலிப்பல் தாலியும் ஆய் அண்டிரன் அவனுக்குக் கொடுத்ததுதான்.

பொதுவாகவே,  நம்மில் பலர் தேவைக்கு மிஞ்சியதையோ, தேவைப்படாததையோ தான் பிறருக்கு தானமாகத் தருவோம். ஆனால், ஆய் அண்டிரன் தன்னுடைய் நாட்டின் சிறப்பம்சமான சந்தன கட்டைகளையும் யானையின் தந்தங்களையும் யானைகளையுமே தானமாக தந்தான்.

கொங்கர்களை வெற்றிகொண்ட ஆய் அண்டிரன் 

ஏணிச்சேரி முடமோசியார் கூறி முடித்ததும், பக்கத்திலிருந்த புலவருக்கு இன்னும் ஆய் அண்டிரனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்தது. அவருடைய ஆர்வத்தைப் பார்த்து, மேலும் சொல்ல ஆரம்பித்தார் முடமோசியார். 

ஒருமுறை கொங்குநாட்டைச் சேர்ந்த ஒரு புலவர் இந்த ஆய் அண்டிரனிடம் வந்து பரிசுகள் பெற்றுக்கொண்டு சென்றார். மேலும், இவரின் சிறப்புக்களைப் பற்றி கொங்கு நாட்டிற்குச் சென்று அவர் பாடல்கள் பாட, அதன்மூலமாக கொங்குநாட்டில் இருப்பவர்களுக்குப் பொதிய மலையின் வளங்கள் பற்றித் தெரிய வந்தது. குறிப்பாகக் கூட்டம் கூட்டமாக அங்கு வாழ்ந்த இருக்கும் யானைகள், சந்தன மரங்கள் ஆகியவை அவர்களின் கவனத்தை ஈர்த்தன. யானைகளைப் பிடித்து வந்தால் போருக்கும் மலைகளில் ஏறுவதற்கும் உதவுமே !! சந்தன மரங்களை எடுத்து வந்தால், நம் நாட்டில் விளைவிக்கலாமே !!  என்று எண்ணினார்கள் கொங்கர்கள். 

தமிழ் மன்னர்களைப் பொறுத்தவரை யாரிடமும் இரந்து எந்த விஷயமும் கேட்க மாட்டார்கள். அதனால் ஆய் அண்டிரன் மீது போர் தொடுத்து வந்தார்கள் கொங்கர்கள். அங்கு செல்லும் வரை கொங்கர்களுக்கு ஆய் அண்டிரன் எப்படிப்பட்ட மன்னன் என்பது தெரியாது. அங்கு சென்ற பிறகு தான், அவன் போரை எதிர்கொள்ளத் தன்னுடைய படைகளுடன் தயார் நிலையில் உள்ளான் என்பது தெரியவந்தது. மேலும், தன்னுடைய போர்வீரர்களுடன் அங்கு வந்த ஆய் அண்டிரன், கொங்கர்களை எதிர்கொண்டு, கடுமையான போருக்குப் பின், கொங்கர்கள் ஆய் அண்டிரனால் தோற்கடிக்கப்பட்டனர் .மேற்குக் கடற்கரை வரை கொங்கர்களை அவர் விரட்டியடித்தார் என்று பாடல்கள் சொல்கின்றன. இது மட்டுமல்லாமல், கொங்கர்கள் போட்டுவிட்டுச் சென்ற வேல்களையும் அம்புகளையும் எடுத்து அண்டிரன் தனது நாட்டின் எல்லையில் குவித்து வைக்க, அது பார்ப்பதற்கு மலை போல் தோன்றியதாம். கொங்கர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. வீரத்திற்கே பெயர் போனவர்கள். அவர்களிடமிருந்தே தன் நாட்டை காப்பாற்றிக் கொண்டதால், ஆய் அண்டிரனுடன் போர்த் தொடுக்க மற்ற பிறரெல்லாம் யோசித்தார்கள் என்று சொல்லிமுடிக்கிறார் முடமோசியார்.

ஆய் அண்டிரனும் விசித்திர நீலக் கலிங்கமும்  

இவையனைத்தையும் கேட்டபின், அந்த இன்னொரு புலவருக்கு ஒரே ஒரு கேள்விதான் மிச்சமிருந்தது. இவ்வளவு செழிப்பாகவும் வீரத்துடனும் கொடைத்தன்மையுடனும் இருந்த அண்டிரன், தனக்கும் வேண்டுமென்று, யோசித்துப் பொருள் கொடுத்திருக்கலாம் அல்லவா? அவ்வாறு கொடுத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதல்லவா?"  என்பதே அந்தக் கேள்வி. 

"யோசித்துப் பொருளைக் கொடுப்பதா ? அப்படியொன்று ஆய் அண்டிரனின் வரலாற்றிலேயே கிடையாது. இம்மையிலும் மறுமையிலும் எந்தவொரு பயனையும் எதிர்பார்க்காமல், கொடுப்பதின் பெயர் தான் கொடை. ஆய் அண்டிரன் அப்படிப்பட்ட கொடையாளி. அதனால் தானே அந்த அதிசயப்பொருளைக் கூட, அவன் தூக்கிக் கொடுத்தான்" என்று அவர் சொல்ல, 'அது என்ன அதிசய பொருள் ?' என்று அந்தப் புலவருக்கு கேள்வி எழும்பியது. 

இன்று வரை 'பொதிய மலை' என்பது விடை தெரியாத பல இரகசியங்களும், அதிசயப் பொருட்களும் கொட்டிக்கிடக்கிற மலை தான். அந்த அதிசயத்தில் ஒன்று நீலநிற நாகத்தின் சட்டை. அந்தப் பாம்பின் சட்டையைத் தன்னுடன் வைத்திருந்தால், தன்னிடம் செல்வம் சேரும் என்பதும், அந்த செல்வம் வற்றவே வற்றாது என்பதும் நம்பிக்கை. நிறைய பேர் அந்தப் பாம்பின் சட்டை தனக்கு கிடைக்க வேண்டுமென்று தவமாய் தவமிருந்தனர். தனக்குக் கிடைக்காதா என்று ஏங்கினர். ஆனால், ஆசைப்பட்ட பலருக்கும் கிடைக்காத அது, ஒரு முனிவருக்குக் கிடைத்தது. அந்த முனிவரோ, "நாமே இந்த வாழ்க்கை வேண்டாமென்று துறவரம் பூண்டிருக்கிறோம். நம்மிடம் இந்தப் பாம்பின் சட்டை கிடைத்திருக்கிறதே !! இதை நாம் உரியவரிடம் தரவேண்டும்" என்று யோசித்து அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.

இப்படியிருக்க ஒருநாள், அவர் கண்முன் ஒரு வாலிபன் தென்படுகிறான். அந்த வாலிபன் தன் கழுத்தில் சுரபுன்னை மலர்களின் கன்னிகளை மாலைகளாக அணிந்திருக்கிறான். சுரபுன்னை மலர்களைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தெரிந்துவிட்டது, நம் முன் நிற்பது ஆய் அண்டிரன் என்று. "ஆய் அண்டிரன் ஒரு கொடை வள்ளல். இந்த ஆடை அவனிடமிருந்தால் அவனுக்கு வறுமையே வராது. நிறைய செல்வம் சேரும். அவ்வாறு சேரும் செல்வத்தையெல்லாம் அவனும் நிறைய பேருக்குக் கொடுப்பானே !!" , என்று எண்ணி அந்த ஆடையை அவனிடம் கொடுத்தார் அந்த முனிவர். 

பொதுவாகவே வள்ளல்கள் என்பவர்கள் தான் எல்லோருக்கும் பொருள் கொடுப்பார்கள் ஆனால் யாரிடமிருந்தும் எதுவும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படியிருக்க, முனிவரிடமிருந்து அந்த ஆடையை வாங்கியதும் ஒரு ஆலமரத்தின் கீழே தென்பட்ட சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்துவிட்டான் ஆய் அண்டிரன். "சிவன்தான் இந்த உலகம் முழுவதும் படியளப்பவராயிற்றே !! அவரிடம் இந்த ஆடை இருந்தால்,  இந்த உலகம் முழுவதும் செழிப்பாக இருக்குமே" என்பது அவன் எண்ணம். 

ஆய் அண்டிரனுக்கு வறுமையா !!

"அப்படியெனில், தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாமல், இந்த மன்னன் கொடை கொடுத்ததால் தான் இந்த அரண்மனை இப்படியிருக்கிறதா ? யானைகள் கட்டப்படாமலிருக்கலாம், சுவர்கள் பொலிவிழந்து இருக்கலாம்,  ஆனால்,  இந்த அரண்மனை சிறந்தது. செல்வம் கொழிக்கும் பலரின் வீடுகளைவிட, இந்த ஆய் அண்டிரனின் அரண்மனை சிறந்தது" , என்று முடமோசியார் தன்னுடன் அழைத்து வந்த அந்தப் புலவர் பாடினார். அவர் வேறுயாருமில்லை, குட்டுவன் கீரனார். 

இப்பொழுது அந்த இருவரும் அவர்களோடு வந்த சிறுவனும் சேர்ந்து அரண்மனையின் உள்ளே செல்ல, அவர்களை எப்போதும்போல இன்முகத்துடன் வரவேற்று, நல்ல உணவளித்தான் ஆய் அண்டிரன். தன்னால் இயன்ற அளவிற்கு தன்னிடமிருந்த பொன்னையும் பொருளையும் கூட கொடுத்தான். அவர்கள் மறுத்தபோதும், வற்புறுத்திக் கொடுத்தான். அவர்களை வழியனுப்பிவிட்டு, தன்னுடைய அந்த யானைப்பந்தியைப் பார்த்தான். அங்கு ஒரு யானைகூட இல்லை. 

ஆய் அண்டிரனின் மரணம் 

"திரும்பிச் செல்பவர்கள் மனநிறைவுடன்தான் சென்றார்கள். ஆனால் அடுத்து நம்மை நாடி வருபவர்களுக்கு நாம் என்ன கொடுக்கப்போகிறோம் !! எப்படி சமாளிக்கப் போகிறோம் !! என்னை நாடி வரும் யாரேனும் ஒருவருக்குப் பொருள் கொடுக்கமுடியாது என்னும் நிலைமை எனக்கு வரவே கூடாது. அப்படியொரு நிலைமை எனக்கு வந்தால், என்னுடைய உயிர் என் உடம்பில் இருக்கவே கூடாது" என்று கூறி, அடுத்த சில நாட்களிலேயே தனது உயிரையும் நீத்தான் ஆய் அண்டிரன். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது மனைவியரும் அவனுடனேயே தங்கள் உயிரை நீத்தனர்.

முடமோசியாருக்கு இந்தச் செய்தி சொல்லப்பட்டபோது, அவருடைய கண்களில் நீர் பெருக்கெடுத்து கண்கள் சிவந்தது. அதே நேரம், வானத்தில் இடி இடித்து மழையும் பொழிந்தது. அப்பொழுது முடமோசியார் பாடினார், "இத்தனை நாள் இந்த பூமியில் கொட்டிக்கொடுத்த ஆய் அண்டிரன், இப்போது வானத்திற்கு வந்து சேர்ந்துவிட்டானா !! அதனால் தான் வானத்திலிருக்கும் மேகங்களெல்லாம் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் மழை பொழிகின்றனவோ !! " , என்று.

முடிவுரை 

இப்படி ஒரு தலைநகரையே தோற்றுவித்து, தன்னுடைய நாட்டையும் வளங்களையும் காப்பாற்றி, கடைசியாகத் தன்னால் ஒருவருக்குப் பொருள் கொடுக்க முடியவில்லை என்ற நிலை வந்ததும் தனது உயிரே தனக்கு வேண்டாமென்று உயிர்நீத்த வள்ளல்தான் ஆய் அண்டிரன். பல நூற்றாண்டுகள் கடந்தும், இந்த வள்ளலின் வாழ்க்கைக்குச் சான்றாக, தென்காசியில் பசுமையுடன் இருப்பதுதான் ஆய்குடி. இந்த வள்ளலில் வரலாற்றைச் சொன்ன பெருமிதத்தோடு இந்தக் கதையை முடிக்கிறேன். நன்றி.

கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quizகடையேழு வள்ளல்களின் வரலாறு கதை வடிவில் 

Pari History in Tamil - வள்ளல் பாரி

Malayaman Kaari History in Tamil - வள்ளல் மலையமான் காரி

Valvil Ori History in Tamil - வள்ளல் வல்வில் ஓரி

Aai Andiran History in Tamil - வள்ளல் ஆய் அண்டிரன்

Adhiyaman History in Tamil - வள்ளல் அதியமான் 

Nalli History in Tamil - வள்ளல் நள்ளி 

Pegan History in Tamil - வள்ளல் பேகன் 

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

  1. Ay kingdom- Ay dynasty ( tamil dynasty, refer Google and Wikipedia

    ReplyDelete
Previous Post Next Post