Motivational Stories in Tamil | Aristotle's Advice to Alexander | ஒரு குட்டிக் கதை


அது கிமு 4-ஆம் நூற்றாண்டு. கிரேக்க நாட்டை இரண்டாம் பிலிப் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய மகன்தான் அலெக்சாண்டர். மன்னர் பிலிப்பிற்கு மிகவும் பிடித்த மகனும் அலெக்சாண்டர்தான்.


அதனால், 'அலெக்சாண்டர்தான் தங்களது நாட்டின் அரசியல் வாரிசு' என்ற யூகம் எல்லோருக்குமே இருந்தது. இதில் என்ன பிரச்சனை என்று நினைக்கிறீர்களா ?


பிரச்னை இருந்தது.அலெக்சாண்டருடைய தந்தையும் தாயும், வேறு வேறு இனத்தைச் சார்ந்தவர்கள். அந்தக் காலத்து கலப்புத் திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.


இந்த காரணத்தால், கிரேக்க அரசாங்கத்தைச் சார்ந்த பல நிர்வாகிகளுக்கு அலெக்சாண்டரைப் பிடிக்காது. கிரேக்க நாட்டுக்கு அவர் ஒரு முறையான வாரிசு இல்லை என்றே அவர்கள் கருதினார்கள். சிறுவனென்றும் பாராமல், பலமுறை வார்த்தைகளாலும் செயல்களினாலும் அவரைக் காயப்படுத்தினார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் வெறுப்பைக் காட்டினார்கள்.


என்னதான் மனதளவில் உறுதியா இருந்தாலும், அலெக்ஸ்சாண்டர் ஒரு சிறுவன்தான். எவ்வளவு வெறுப்பைத்தான் தாங்க முடியும் ? கொஞ்சம் கொஞ்சமாக, அந்த வெறுப்பு அலெக்சாண்டரை பாதித்தது. மனக்குழப்பதையும் உருவாக்கியது. சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தவித்துக் கொண்டிருந்தார்.


அப்படியிருக்கும்போது, அவரது தந்தையான, மன்னர் இரண்டாம் பிலிப்பிற்கு புதிதாக ஒரு திருமணம் நடந்தது. பலதார மனம் வழக்கிலிருந்த காலம் அது. அந்த திருமணத்தில், தம்பதிகளை வாழ்த்திய நிர்வாகி, "இனியாவது இந்த தேசத்திற்கு முறையான வாரிசுகள் பிறக்கட்டும்" ,என்றார்.


இதைக்கேட்ட அலெக்சாண்டர் மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைந்தார். அது தனக்கும், தன் தாய்க்கும் ஏற்பட்ட அவமானமாகக் கருதினார். தன்னுடைய அம்மா மற்றும் சகோதரர்களை அழைத்துக்கொண்டு அந்த 
அரண்மனையைவிட்டே வெளியேறினார். தனியான ஒரு இடத்தில் வாழ ஆரம்பித்தார்.


மன்னர் பிலிப், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தனது நண்பர்களையும், நலம்விரும்பிகளையும் அனுப்பி, அலெக்சாண்டரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், யார் அழைத்தும் அலெக்சாண்டர் திரும்பிவரவில்லை. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார், மன்னர் பிலிப்.


இந்த சூழ்நிலையில் தான், அலெக்சாண்டர் இருந்த இடத்திற்கே வந்து, அவரை சந்தித்தார், அவருடைய ஆசிரியரான அரிஸ்டாட்டில். உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும், தத்துவமேதையான அரிஸ்டாட்டில்தான்
அலெக்ஸாண்டருடைய ஆசிரியர் என்பது.

ஆசிரியரை வரவேற்ற அலெக்சாண்டரிடம் "நீ எதற்காக இப்படி தனியாக வந்து உட்கார்ந்திருக்கிறாய் ?" , 
என்று கேட்டார் அரிஸ்டாட்டில் .


"ஏன் ? தங்களுக்குத் தெரியாதா ? நான்தான் முறையான வாரிசு இல்லையே !! அங்கே, எல்லாரும் என்னை வெறுக்கத்தான் செய்கிறார்கள். நான் அங்கே இருந்து என்ன செய்யப் போறேன் ? எனக்கு மரியாதை இல்லாத இடத்தில், எனக்கென்ன வேலை ?" என்று குமுறினார், அலெக்சாண்டர்.


அந்த 13 வயது வாலிபனுடைய மனநிலை, அரிஸ்டாட்டிலுக்கு நன்றாகப் புரிந்தது. "இவனுக்கு அறிவுரை சொல்லிப் புரியவைக்கமுடியாது. செயல்பாட்டின்மூலம்தான், புரியவைக்க வேண்டும்" என்று தன் மனதுக்குள் முடிவு செய்துகொண்டார்.


அந்த ராத்திரியிலேயே , அலெக்சாண்டரை மாறுவேடம் போடவைத்து, தன்னுடைய நண்பர் ஒருவர் வீட்டு விருந்துக்கு அழைத்துச் சென்றார். பிரமாண்டமாக நடந்துகொண்டிருந்தது அந்த விருந்து.


அங்கே சென்றதும், தன் நண்பரை அழைத்துப் பேசிய அரிஸ்டாட்டில், "இந்த விருந்தில் என்ன சிறப்பம்சம் ? எதாவது விசேஷ உணவுப்பொருள் உண்டா ?" என்று கேட்டார்.

அந்த நண்பரும், "இந்தமுறை புதிதான ஒரு இனிப்புப் பதார்த்தத்தைச் செய்திருக்கிறோம். அரிதாகக் கிடைக்கும் அத்திப்பழங்களாலான இனிப்புவகை அது. இதோ நீயும் சுவைத்துப் பார்" , என்று அரிஸ்டாட்டிலிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினார்.


அரிஸ்டாட்டில், அதை சுவைத்துப் பார்த்தார். மிகவும் அருமையாக இருந்தது. உடனேயே, மாறுவேடத்தில் இருந்த அலெக்சாண்டரை அழைத்து, "இதை சுவைத்துப் பார்" என்றார். அலெக்சாண்டரும் சாப்பிட்டுப் பார்த்தார். தான் இதுவரை சுவைத்திறாத, ஆனால், நன்றாக இருந்தது.


இப்போது அரிஸ்டாட்டில், ஒரு அகன்ற தட்டை எடுத்து அலெக்சாண்டரிடம் கொடுத்தார். அந்த தட்டில் நிறைய கிண்ணங்களும், அந்த கிண்ணங்களில் அத்திப்பழ இனிப்பும் இருந்தன.


"இதை, இங்கிருக்கிற எல்லோருக்கும் கொண்டுபோய்க் கொடு" , என்று சொன்னார், அரிஸ்டாட்டில்.


தன் ஆசிரியர் சொற்படியே, அதை அந்த விருந்தில் கலந்துகொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் கொண்டுபோய்க் கொடுத்தார், அலெக்ஸாண்டர்.


ஒரு சிலர், ஆகா, ஓகோவென்று பாராட்டினார்கள். வேறு சிலர், "இது பார்ப்பதற்கே நன்றாக இல்லை. வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள். இன்னும் ஒரு சிலர், சுவைத்துப் பார்த்துவிட்டு "என்ன கண்ராவி இது !!" , என்றும்கூடச் சொன்னார்கள்.


கொடுத்து முடித்துவிட்டுத் திரும்பிவந்த அலெக்ஸாண்டரிடம் அரிஸ்டாட்டில், "எல்லாருக்கும் கொடுத்தாயிற்றா ?" என்று கேட்டார்.


"ஆம்" ,என்றார் அலெக்சாண்டர்.


"சரி. எல்லாருக்கும் அது பிடித்திருந்ததா ?", என்று மறுபடியும் கேட்டார், அரிஸ்டாட்டில்.


"அது எப்படி எல்லாருக்கும் பிடிக்கும் ? ஒரு சிலருக்கு பிடித்திருந்தது. வேறு ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை" , என்று பதிலளித்தார், அலெக்சாண்டர்.


"ஏன் பிடிக்கவில்லை ? எனக்கும் உனக்கும் பிடித்திருந்ததே !! அப்படியெனில், அந்த உணவு சுவையில்லாததா ? இல்லை இங்கிருப்பவர்களுக்கெல்லாம் நாக்கு செத்துப்போய்விட்டதா ? " , என்று கோபமாகக் கேட்டார், அரிஸ்டாட்டில்.


அரிஸ்டாட்டில் கோபக்காரர்தான். முன்னால் நிற்பவர் யாரென்றும் பாராமல், கடுமையான வார்த்தைகள் பேசுபவர்தான்.


அவர் கோபமறிந்து அலெக்சாண்டர், "அது எப்படி ஒரே உணவுப்பொருள் எல்லோருக்கும் பிடிக்கும் ? அவரவருக்கென்று ஒரு ரசனை இருக்கிறதல்லவா ? அதற்காக அந்த உணவுப்பொருள் மட்டமானதாக ஆகிவிடுமா ? " என்று பதிலளித்தார்.


உடனே அரிஸ்டாட்டில், அலெக்சாண்டருடைய இரண்டு கரங்களையும் பற்றிக்கொண்டு சொன்னார் " ஒரு உணவுப்பொருளையே எல்லாருக்கும் ஒன்றுபோலப் பிடிக்காதென்றால், ஒரு மனிதனைமட்டும் எப்படி எல்லாருக்கும் பிடிக்கும் ? உன்னை விரும்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறதென்றால், வெறுப்பதற்கு ஒரு கூட்டம் இருக்குமல்லவா ?


உன் பிறப்பைக் காரணம்காட்டி ஒரு கூட்டம் உன்னை வெறுக்கிறதென்றால், அது அந்த கூட்டத்துடைய தவறா ? உன்னுடைய தவறா ?


வா அலெக்சாண்டர், வா. உன்னுடைய நாடும், உன்னுடைய ராஜ்ஜியமும், உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறது.


போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். நீ வா, அலெக்சாண்டர்" என்று.


அன்று அவருடன் கிளம்பிவந்த அலெக்சாண்டர், தன்னுடைய தேசத்தை மட்டுமல்லாது, இந்த உலக வரைபடத்தில் பாதிக்கும்மேலாக வெற்றிகொண்டது, நம் அனைவருக்குமே தெரியும்.


இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களையும், யாரவது காரணமே இல்லாமல் வெறுத்து ஒதுக்கலாம். பிறப்பைக் காரணம் காட்டியோ, உருவத்தைக் காரணம் காட்டியோ, வசதிகளைக் காரணம் காட்டியோ, இழிவாய்ப் பேசலாம்.


முதலில், உங்கள்மீது என்ன தவறென்பதை யோசித்துப் பாருங்கள். நாம் நேர்மையாகத்தான் இருக்கிறோமா என்று சீர்தூக்கிப் பாருங்கள். நாம் சரியாகத் தான் இருக்கிறோம் என்று தோன்றினால், மாற்றவேண்டியது, உங்களை அல்ல.


இந்த வெருப்புகளாலும், குழப்பங்களினாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கவேண்டிய முடிவை, 
தவறாக எடுத்துவிடாதீர்கள்.


எல்லா நேரத்திலும், ஒரு அரிஸ்டாட்டில் வந்து உங்களை காப்பாற்ற முடியாது.


வெறுப்புகளை உதறித்தள்ளி, நேரான பாதையில் செல்லுங்கள். வெற்றி உங்களுடையதுதான்


I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,
Applebox Motivational
Motivational Stories Applebox, Kutty Stories Applebox,
Oru Kutty Kadhai Applebox and

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post