செம்புலியை அழைத்தார்கள் - சிறுகதை (Short Story)



 "லெட்சுமியக்கா, செம்புலி எப்போ வருவா ?" என்று கேட்டாள், வேம்பு.

'அதானே, இவளாவது சும்மா வருவதாவது' என்று மனத்துள் நினைத்துக்கொண்டு, "வர்ற நேரந்தான், வேம்பு. என்ன விஷயம் ?" என்றாள், லட்சுமி.

"அது.. எங்க வீட்டுல வர்ற வெள்ளிக்கிழமை அன்னைக்கி நிச்சயதாம்பூலம் வச்சிருக்கோம்ல.. நிறைய வேல கெடக்கு. ஆனா, துணைக்கு ஒருத்தரும் இல்ல. அதுதான், நம்ம செம்புலிய கூப்பிடலாம்னு வந்தேன்.

ரெண்டு நாள் மட்டும் வந்து நின்னான்னா போதும். சாப்பாடு, காப்பி, எல்லாம் குடுத்து, ரூவாயும் குடுத்துருவேன்", என்று சொல்லிவிட்டு யோசனையோடு கடிகாரத்தைப் பார்த்தாள், வேம்பு.

அவள் நினைத்திருந்தால், நேரே செம்புலியின் வீட்டிற்கே சென்றிருக்கலாம். இப்படி இங்குவந்து காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், அவள் போகமாட்டாள். செம்புலியின் வீடு அமைந்திருந்த இடம் அப்படி.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், இவர்கள் இருக்கும் இந்தத் தெருவுக்கு சற்றே தள்ளி, ஒரு குப்பைமேடு இருக்கிறது. அதைத்தாண்டி ஒரு பழைய சினிமா தீயேட்டரும், அதையொட்டி ஒரு முடுக்கும், அந்த முடுக்கில் நான்கைந்து ஒற்றைக்கட்டு வீடுகளும் இருக்கின்றன. அந்த நான்கைந்தில் ஒன்றுதான், செம்புலியின் வீடு.

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..



அந்த முடுக்கிற்குள் நுழையும்போதே, ஒரு மாதிரியான துர்நாற்றம் வீசும். அங்கேயே வாழ்பவர்களுக்கு, அது பழகியிருக்கலாம். ஆனால், வேம்பு மாதிரி ஆட்களுக்கு நிச்சயமாக சரிப்பட்டு வராது.

'எப்படியும், செம்புலி லட்சுமியின் வீட்டிற்கு வருவாள்' என்பது அவளுக்கு தெரிந்திருந்ததால், அங்கேயே வந்துவிட்டாள், வேம்பு.

நிச்சயதார்த்தத்தைப் பற்றிய சங்கதிகளை லட்சுமியும் வேம்புவும் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டு காம்பௌண்ட் கேட் திறக்கப்படும் "க்ரீச்.." சத்தம் கேட்டது.

"யக்கா..." , என்று வந்து நின்றாள் செம்புலி.

ஐந்தடிக்கும் சற்றே குறைவான உயரம். மெலிந்த தேகம். தேங்காய் எண்ணெய் வைத்து, வழித்து வாரப்பட்ட சுருண்ட தலைமுடி. அதில், கொஞ்சம் மரிக்கொழுந்து. சிறிய நெற்றியில், அதைப்பாதி மறைக்கும் அளவுக்கு பெரிய வட்டப்பொட்டு. ஒரு பக்கமாக எடுத்துச் சொருகப்பட்டிருக்கும் நைலான் சேலை. கையில் ஒரு வொயர் கூடை. இப்படித்தான், செம்புலியைக் காட்சிப் படுத்தமுடியும்.

நாற்பது வயதாகும் செம்புலியை அந்தத் தெருவிலிருக்கும் பெருசுகள் முதல் பொடிசுகள் வரை எல்லோரும் 'செம்புலி' , என்று மட்டுமே அழைத்தனர்.
உண்மையில், அவளது பெயர் செண்பகவல்லி. அழகான அந்த பெயரைச் சுருக்குகிறேன் என்ற பெயரில், 'செம்புலி' என்று ஆக்கி வைத்திருந்தது, அந்த கம்பராமாயணத் தெரு.

அவர்கள் செய்த இந்த அநியாயத்திற்கு பதிலாக, அவளும் அந்தத் தெரு ஆட்களுக்கு ஒரு தண்டனை கொடுத்து வந்தாள்.
பத்து வயதுக்கு மேல், அந்த தெருவில் இருக்கும் அத்தனை பெண்களையும், அவள் அழைப்பது 'யக்கா....' , என்றுதான். ஒருவேளை, ஆணாக இருப்பின் 'யண்ணே....'

குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கு. அவர்களை ‘தங்கம்’ என்று மட்டுமே அழைப்பாள். அதிலும், கொஞ்சம் அதிகமாகச் சேட்டை செய்யும் சிறுவர்களை 'திருவளர்த்தான்', என்று அழைப்பாள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவளது பேச்சும், அவள் பேசும் தொனியும் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும். அதனாலேயே, அவளைப் பார்த்தால் அந்தத் தெருவின் சிறுவர்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வரும்.

சில நேரங்களில், எங்காவது மறைவான இடங்களில் ஒளிந்து கொண்டு 'செம்புலி' என்று கூப்பிடுவார்கள். அவளும் சுற்றுமுற்றும் தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, 'ஏதோ, திருவளர்த்தான் வேலைதான்.. ஏலேய்,, திருவளர்த்தான்..' என்று கூப்பிட்டுவிட்டு, யாரையும் காணமுடியாமல், மறுபடியும் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையைத் தொடருவாள்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, விசேஷ வீடுகளுக்கு வேலைபார்த்துத் தருவது, பிரசவம் நடந்த வீடுகளில் எடுபிடியாக இருப்பது, கோவில்களைக் கூட்டிப் பெருக்குவது என்று அந்தத் தெருவுக்காக மாடுபோல் உழைத்துக் கொண்டிருந்தாள், செம்புலி. அந்தத் தெருவில் இருக்கிற ஆட்கள், அவர்கள் வீடுகளில் வேலைபார்ப்பதற்கென்றே பிறப்பெடுத்த ஒரு பிறவி போல, அவளை நடத்தி வந்தார்கள்.

அவளும் எதையும் கண்டும் காணாமல், கருமமே கண்ணாக உழைத்துக் கொண்டிருந்தாள். இவ்வளவுக்கும் மூன்று வேளை உணவும், சில பழைய துணிமணிகளும் தவிர வேறு எதுவும் கிடைக்காது, என்றுகூட அவளுக்குத் தெரியும்.

எல்லாம், உடலில் தெம்பு இருந்த வரைதான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், அவளுக்கு கொஞ்சம் சுகமில்லாமல் போனது. அந்த நேரத்தில், யாரும் அவளை சீண்டக்கூட இல்லை. எதேச்சையாக, அவள் வீட்டுக்குச் சென்று பார்த்த லட்சுமிக்கு தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது. இத்தனை நாள் பழகிய பழக்கத்துக்கு, செம்புலிக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

அதன் பின்னர், தனது வீட்டிலும், தனது நெருங்கிய தோழியான அழகம்மையின் வீட்டிலும் மட்டும், சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒரு ஆளாக, செம்புலியை அமர்த்திக் கொண்டாள். இருவரும் அவளுக்குத் தரும் சம்பளத்தை ஒரு வங்கிக் கணக்கில் போட்டு, லட்சுமியே அந்த பாஸ்புக்கையும் வைத்திருந்தாள்.

மற்றபடி செம்புலியின் தேவையென்பது, மூன்று வேளை சாப்பாடு, இரண்டோ மூன்றோ காப்பிகள், வருடத்திற்கு நான்கு புடவைகள், கொஞ்சம் பழைய துணிமணிகள். லட்சுமியும், அழகம்மையும், செம்புலியின் தேவைக்கு அதிகமாகவே இவற்றையெல்லாம் கொடுத்தார்கள்.

அதனால் செம்புலியின் சம்பளப் பணம், அந்த வங்கிக் கணக்கில் சேர்ந்துகொண்டே வந்தது. எப்பொழுதாவது, தனக்கு தேவைப்பட்டாலோ, உடல்நிலை சரியில்லாமல் வந்தாலோ, லட்சுமியிடம் கேட்டு அந்தப் பணத்தை வாங்கிக் கொள்வாள் செம்புலி.

லட்சுமி இப்படிச் செய்ததில், அந்தத் தெரு ஆட்கள் நிறைய பேருக்கு, அவள் மீது கோபம் எழுந்தது. பின்னே, இலவசமாகக் கிடைத்த வேலைக்காரியை, இழந்துவிட்ட ஆற்றாமை அவர்களுக்கு. அரசல் புரசலாக லட்சுமியைப் பற்றி தவறாகப் பேசிக்கொண்டார்கள். செம்புலியைக் கூப்பிட்டு ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லியும் கொடுத்தார்கள்.

யார் என்ன சொன்னாலும், லட்சுமி சட்டை செய்வது கிடையாது. செம்புலியும், தன் காதில் வாங்கிக் கொள்வது கிடையாது. ஆனாலும், அவ்வப்போது அந்தத் தெரு ஆட்கள் ஏவும் வேலைகளை செய்துகொடுத்தபடிதான் இருந்தாள்.

"செம்புலி.. வீட்டுல நிச்சயதாம்பூலம் வச்சிருக்கோம். வர்ற வெள்ளிக்கிழமை. யாருமே துணைக்கு இல்ல. ஒரு ரெண்டு நாள் மட்டும் வந்து நின்னுட்டுப் போறியா ?" என்று வேம்பு கேட்க , "வந்துட்டாப் போச்சுக்கா. நான் இருக்கேன். ஒண்ணும் கவலைப்படாத", என்று உற்சாகமாகச் சொன்னாள், அவள்.

நிலத்தைப்பார்த்து பெருமூச்சுவிட்டு, தன் தலையைக் கோதிக்கொண்டு, பின் செம்புலிக்கு தன் கண்களால் ஏதோ சொல்ல முயன்றாள், லட்சுமி. ஒரு ப்ரயோஜனமுமில்லை. செம்புலி இருந்த உற்சாகத்தில், இதையெல்லாம் கவனிக்கும்படியாக இல்லை.

வேம்புவின் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.

"முன்னூறு ரூவா தாரேன்ட்டீ. நேரத்துக்கு வந்துருன்னா" ,என்று வேம்பு சொல்ல,

"போக்கா.. ரூவாயா முக்கியம்.. ரூவா.. பெரிய ரூவா.. நான் வந்துருவேன்க்கா.. நான் வந்துருவேன்" , என்று மறுபடியும் உறுதியளித்தாள், செம்புலி.

"லெட்சுமி, நான் வாரேன்ன. வீட்டுல தலைக்கு மேல வேல கெடக்கு. செம்புலி சரின்னு சொல்லவும்தான், மூச்சே வருது" , என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள், வேம்பு.

அவள் அங்கிருந்து செல்வதை உறுதி செய்துகொண்டு, செம்புலியைப் பார்த்து முறைத்துக்கொண்டு,

"ஏட்டி, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ? அவளப்பத்தி உனக்கு தெரியும்தானே. ரெண்டு நாளும் உன்னப் புளிஞ்சி எடுத்துருவா. எடுக்குற எடுப்புக்கு ஐநூறு ரூபா குடுக்கக்கூட அவளுக்கு மனசு வரல. நீ என்னன்னா, காசுல்லாம் வேண்டாம்னு சொல்லுற" , என்றாள் லட்சுமி.

"விடுக்கா, விடுக்கா.. காசையா கொண்டு போகப்போறோம் ? போட்டும்.. போட்டும்.."

"காச, நாம கொண்டுபோகல செம்புலி. காசுதான், நம்மள கொண்டு போகுது. உடம்புல தெம்பு இருக்கும்போதே, சேர்த்தாதான் உண்டு. இவ்ளோ உழைச்சிட்டும், வயசுக்காலத்துல கஞ்சிக்கு வக்கத்து கிடக்குறதுல்லாம் , கொடூரம். பார்த்துக்கோ.."

"சரிக்கா.. விடு, விடு.. வீட்டுல இன்னைக்கு என்ன ? கருவாட்டுக் குழம்பா ? நல்ல வாசம்" ,என்றாள் செம்புலி.

"ம்ம்ம்.. ஆமா, உழுந்தஞ்சோறும் கருவாட்டுக் குழம்பும்.. உனக்கு தனியா எடுத்து வச்சிருக்கேன். வந்து சாப்டுறு. எப்படியும், நான் என்ன சொன்னாலும் நீ கேக்கபோறது இல்ல. சாப்பிடவாவது செய் ..

சப்புக்கொட்டி சாப்பிட்டுவிட்டு, லட்சுமியின் வீட்டிலும், அழகம்மையின் வீட்டிலும் வேலையை முடித்தபின், அவர்கள் கொடுத்த காப்பியைத் தூக்குவாளியில் ஊற்றி, சாப்பாட்டை சம்படங்களில் அடைத்து, தான் கொண்டுவந்திருந்த வொயர் கூடையில் வைத்தாள்.

நேரே, அங்கிருந்து கிளம்பிய செம்புலி, முக்குப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து , ஏழுக்கு ஏழு புள்ளியில் கோலமும் போட்டாள். பூசை முடிந்தவுடன் அங்கு கொடுக்கப்பட்ட நெல்பொரியை ஒரு தாளில் மடித்துக்கொண்டு, கொசுருக்குக் கிடைத்த மரிக்கொழுந்தை அதே வொயர் கூடையில் வைத்தாள்.

மதியம் ஒரு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியவள், மாலை ஏழுமணிக்குத்தான் மறுபடி வீடு வந்து சேர்ந்தாள்.

ஒரு ஊன்றுகோலின் உதவியுடன் மட்டுமே, எழுந்து நடமாடும் தன் அம்மாவிற்கு, செய்யவேண்டிய பணிவிடைகளை செய்துவிட்டு, மிச்சம் கொண்டுவந்திருந்த கருவாட்டுக் குழம்பை, நீச்சத் தண்ணீர்விட்ட சோற்றுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டாள்.

இரவு தூங்கச் செல்லுமுன், திருநீற்றுப் பட்டையிட்டுக் கொண்டு, சாமி படத்துக்கு முன்னால் இருந்த அந்த போட்டோவை எடுத்துப் பார்த்துக்கொண்டாள்.

அவள் அப்பா, அம்மாவுடன், அவளும் சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் அது. ஸ்டுடியோவுக்குச் சென்று அதை எடுத்தபோது, அவளுக்கு பதினாலு வயசு இருக்கும். பதினாலு வயசுப் பெண்ணை, தனது மடியில் வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார், அவள் அப்பா.

அதைப் பார்க்கும்போதெல்லாம், செம்புலியின் கண்கள் கலங்கும். சிறுவயது நிகழ்வுகள் எல்லாம், ஞாபகத்துக்கு வரும். தனது அப்பாவின் விழிவழியாக மட்டுமே, இந்த உலகத்தைப் பார்த்த அந்த நாட்கள். சதா காலமும், அவர் அன்பு அவளுக்குத் தந்த கதகதப்பு. எல்லாமே, அவள் கண்களில் நீரை வரவழைக்கும். பொங்கிவரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தூங்கிவிடுவாள்.

செம்புலிக்கு பதினாறு வயதிலெல்லாம் திருமணம் ஆனது. பள்ளிக்குச் செல்வதில், ஆர்வமில்லாத செம்புலிக்கு திருமணம் என்பது, தன்னை பள்ளிக்கூடங்களிலும், தேர்வுகளிலுமிருந்து காப்பாற்றும் ஒரு மகத்தான விஷயமாகவே பட்டது.

ஆனால், ஆண்டுகள் உருண்டோடி, குழந்தை இல்லாதததால் கணவன் மற்றும் சொந்தகாரர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானபோதுதான், குடும்ப பாரத்தின் சுமையே புரிந்தது.

'குழந்தையில்லாததற்கு, ஒரு பெண் மட்டுமே எப்படி காரணமாவாள் ? ' , என்பது செம்புலிக்கும் உரைக்கவில்லை, அவள் கணவனுக்கும் உரைக்கவில்லை.

ஒரு கட்டத்துக்குப் பிறகு, செம்புலியின் கணவன்வீட்டார், ஊர்த் தலைவர்களோடு பேசி அவளைத் தீர்த்து ஒதுக்கினார்கள். அதாவது, விவாகரத்து செய்தார்கள்.

அவள் வீட்டுக்கு வந்து உட்கார்ந்த அடுத்த வாரமே, செம்புலியின் அப்பாவும் இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, ஓரளவுக்கு நடமாடிக்கொண்டிருந்த அவள் அம்மாவும், நொடிந்து உட்கார்ந்தாள். அடுத்த சில நாட்கள், அந்த ஒற்றைக் குச்சிக்குள்ளேயே ஒடுங்கிபோனாள், செம்புலி.

அவள், தன்னையும் மீறி, குழம்பிப் போயிருந்தாள். கணவனின் நிராகரிப்பு, தான் அனுபவித்த கொடுமைகள், அப்பாவின் மரணம், என்று எல்லாமே அவளை நிலைகுலையச் செய்திருந்தன. உலை வைக்கக் கூட, மனம் வரவில்லை.

சில நாட்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவள் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டும், சாப்பாடு கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக, அது நின்று போனது.

ஆற்றாமை, துக்கம், குழப்பம் - இதெல்லாம் வயிற்றுக்குத் தெரியுமா என்ன ?
வயிறு கத்தும்போது, கவலையாவது மண்ணாவது. எழுந்திரித்து, தலைக்குக் குளித்து, ஒரு பழஞ்சிலையைக் கட்டிக்கொண்டு, தனக்குப் பரீட்சயப்பட்ட கம்பராமாயணத் தெருவில், வீட்டுவேலை தேடி அலைய ஆரம்பித்தாள். எழுத்துக்கூட்டி மட்டுமே வாசிக்கத்தெரிந்த செம்புலிக்கு, அதைத்தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை.

ஆனால், அதிலும் ஒரு சிக்கலிருக்கத்தான் செய்தது. ஓரளவுக்கு லெட்சணமாக இருந்த, அந்த இருபத்தி ஆறு வயது பெண்ணை, யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. வீட்டில் சேர்த்துக்கொள்ளத் தயங்கினார்கள்.

புரிந்து கொண்ட அவள், வேறு வழியில்லாது, தன் உருவத்தை மாற்றிக்கொண்டாள். வயதானவர்கள் போல, தன் நடை, உடை, பாவனை, பேச்சு, எல்லாவற்றையும். இயற்கையாகவே, அவள் பேச்சு கொஞ்சம் அப்படிதான் இருந்தது. அதனால், பெரிய அளவில் சிரமம் இருக்கவில்லை.

ஆரம்பத்தில், சில வித்யாசமான எண்ணங்களெல்லாம் தோன்றும். அவ்வப்போது, 'ஏன் இந்த கோலம் ?' என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொள்வாள். ஆண்டுகள் செல்லச்செல்ல, இதுதான் செம்புலி என்பது நம் மனதில் பதிந்ததைப் போல, அவளுள்ளும் அந்த பிம்பம் பதிந்தது. அவளையறியாமலேயே, அதை அவள் ஏற்றுக் கொண்டிருந்தாள்.

நிச்சயதாம்பூல வீட்டில், பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தாள், செம்புலி. வேலையாக, அங்கங்கே நடமாடிக் கொண்டிருந்தாலும், சாப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பதார்த்தங்களைப் பார்க்கும்போது, அவளுக்கு ஆசை ஆசையாக வந்தது. குறிப்பாக, பளபளவென்று இருந்த அந்த ப்ரூட் அல்வாவின் நிறமும் மணமும், அவளைச் சுண்டி இழுத்தது.

லெட்சுமி, செம்புலியைப் பற்றி நன்கு அறிந்திருந்ததலால், தன்னுடனேயே, வந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு அழைத்தாள். ஆனால், செம்புலிக்கு நன்றாகத் தெரியும். தனக்கான இடம், எதுவென்று.

கடைசி பந்தி வரைக்கும் காத்திருந்து, இலையின்முன் உட்கார்ந்து, அதில் விழுந்த ப்ரூட் அல்வாவை எடுத்து விழுங்கியபோது, தொண்டைக்கு இதமாக இருந்தது. இன்னும் இரண்டு வாய், தேவைப்படும்போல் தோன்றியது.

பரிமாறும் பையனிடம், "ஏ.. திருவளர்த்தான் ,, அந்த பழக்கேசரி கொஞ்சம் வைய்யேன்.." என்று கேட்டு, இன்னொரு முறை வாங்கிக்கொண்டாள். அந்தப் கேட்டரிங் பையனும், "எக்கா, அது கேசரி இல்ல. ப்ரூட் அல்வா" என்று சொல்லிவிட்டு, சிறிதளவு வைத்துப் போனான்.

பந்தியெல்லாம் முடிந்து, மீண்டும் வேலை செய்யத் தொடங்கி, இரவு பதினோரு மணிக்குத்தான் வீடு திரும்பினாள், செம்புலி.

நிச்சயதாம்பூலம் முடிந்தபின்னர், மிச்சமிருந்த சொந்தக்காரர்களிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தாள், வேம்பு.

"சாப்பாடு நல்லா இருந்ததா மையினி ?"

"அதெல்லாம், ரொம்ப நல்லா இருந்துது. ப்ரூட் அல்வாவும், பிரியாணியும் டாப் கிளாஸ், வேம்பு. மிச்சமிருக்கா ?" , என்றாள் அந்த பெண்மணி.

"எல்லா ஐட்டமும், கொஞ்சம் கொஞ்சம்தான் மிச்சம் வந்துது மையினி. எல்லாத்தையும் வேலபாத்தவங்களுக்கு குடுத்து விட்டுட்டேன். ப்ரூட் அல்வாவும், பிரியாணியும் மட்டும் எடுத்து வச்சிருக்கேன். நாளைக்கு சூடு பண்ணிட்டு சாப்பிடலாம்ல"

இடையில், அங்கிருந்த கிழவி ஒருத்தி "செம்புலிக்கு எதாவது கொடுத்து அனுப்புனியா? அவளுக்கு சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும் ", என்று கேட்டாள்.

"அதெல்லாம் குடுக்காம இருப்பேனா ? அவ பாத்த வேல லெச்சணத்துக்கு, பந்தியிலேயே ரெண்டு மூணுதடவ வாங்கி வாங்கி சாப்பிட்டாச்சு. ஆனாலும், நான்தான் இருக்குறத ஒரு சம்படத்துல போட்டு குடுத்துருக்கேன். இதுல பத்தாததுக்கு முன்னூறு ரூவா வேற குடுத்திருக்கு. என்ன செய்ய !! கல்யாணம்னாலே செலவுதான் " , என்று சிலாகித்துக் கொண்டாள், வேம்பு.

இரண்டு பெரிய வாளிகள் நிறைய பிரியாணியும், ஒரு நடுத்தர டபரா நிறைய பழ அல்வாவும், குளிசாதனப் பெட்டிக்குள் துயில்கொண்டிருந்தன.

இங்கே தனது வீட்டில், அந்த வொயர் கூடையிலிருந்த சம்படங்களை ஆசையோடு திறந்து, அதில் தனக்கு மிகவும் பிடித்திருந்த 'ப்ரூட் அல்வாவோ', அல்லது பிரியாணியோ, இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ஏமாற்றத்தோடு பெருமூச்சு விட்டுக்கொண்டாள், செம்புலி.

‘வறியார்க்கொன் றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து!'

**STORY ENDS**

My other Tamil Short Stories, எனது பிற சிறுகதைகள் 


இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..


If you are looking for some Tamil Stories for Reading or Tamil Stories Online, please visit APPLEBOX frequently. 

You have a lot of 
  • Tamil Stories with Moral, 
  • Tamil Stories for Kids, 
  • Enathu Sirukathaigal and Publicized Tamil Sirukathaigal 
  • Short Stories Tamil and 
  • Short Tamil Stories with Moral. 

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post