சாலமிக்கு என்ன ஆச்சு ? - சிறுகதை (Short Story)



"ஒங்க அக்கா ஹேமால்லாம், அந்த மினு பிள்ளைய மாசமா இருக்கும்போது, நான் என்ன குடுத்தாலும் தின்னுருவாத் தெரியுமா ? நீயென்னன்னா, செத்தோல கிண்ணத்துல ரெண்டு கிண்ணம் கஞ்சி குடிக்கிறதுக்கு மூக்கால அழுற. இந்தா, இந்த ரெண்டு மடக்கையும் குடிச்சிரு" என்று சொல்லிவிட்டு, மீண்டும் இரண்டு கரண்டி உளுந்தங்கஞ்சியை எனது கிண்ணத்தில் ஊற்றினாள் சொர்ணாச்சி.

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..


நானோ, பெயருக்கு ஒரு மடக்கு மட்டும் குடித்துவிட்டு, கஞ்சி மிச்சமிருந்த அந்தக் கல் மரவையை எட்டிப்பார்த்தேன். அரை மரவை கஞ்சி, அப்படியே மிச்சமிருந்தது. 'அப்போ, பிரச்னையில்ல. இதையும் மிச்சம் வச்சிறலாம்' , என்று நினைத்துக்கொண்டு மறுபடியும் அடம்பிடிக்க ஆரம்பித்தேன்.

"ஆச்சி. போதும். எனக்கு வாமிட் வர்ற மாதிரியிருக்கு"

"இந்த காலத்து பிள்ளையளுக்கு வேற வேலையே கெடையாது. ஒரு நல்லது பொல்லது செஞ்சிக் குடுத்தா, தொண்டையில எறங்குதா பாரு. இதே, லட்டு, ஜிலேபி, முருக்குன்னா ஊருக்கு முன்ன காலியாயிரும்"

புலம்பியபடியே, எனது கையிலிருந்த கிண்ணத்தை பிடுங்கிக்கொண்டு, கஞ்சி மரவையின் அடிப்பகுதியை கைப்பிடித் துணியால் சுற்றி, தனது இடுப்பில் இடுக்கிக் கொண்டு, வேகமாக சமையல்கட்டுக்குள் நுழைந்தாள் சொர்ணாச்சி.

"மாசமா இருக்கியே, குறுக்குக்கு பலமேன்னு உளுந்து போட்டு கஞ்சி தந்தா, குடிக்கியதுக்கு முன்னையே வேண்டாம்னாச்சு. இரி, இன்னும் பத்து நாள்தான். ஒங்க அம்மெ வந்ததும் உன்ன ஏப்பிச்சிட்டு நாம்பாட்டுக்கு உக்காந்துருவேன்" , சமையல் மேடையை சுத்தம் செய்தபடியே அவள் முனங்கிகொண்டிருந்தது, என் காதுக்கும் கேட்டது.

அவளும் பாவம் தான். சீமந்தம் முடிந்து, நான் அவள் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து, என்னை ஒரு குழந்தை போல கவனித்துக் கொள்கிறாள். கல்யாணிச் சித்தி தோட்டத்திலிருந்து முருங்கைக் கீரை, கோமத்தை வீட்டிலிருந்து பசும்பால், மேலக்கூரை வீட்டிலிருந்து கோழி முட்டை என்று ஒவ்வொன்றையும் தேடித் தேடி, வாங்கி வருகிறாள். 'உடம்புக்கு இது நல்லது, அது நல்லது' என்று இந்த வயதிலும் பக்குவமாக சமைத்துக் கொடுக்கிறாள்.

இப்படியிருக்க, அவள் கொடுக்கும் சாப்பாடு எதையாவது, நான் வேண்டாமென்று அடம் பிடித்தால், அவளுக்குக் கோபம் வராதா என்ன !! அவள் இந்த அளவுக்குப் பொறுமையாக இருப்பதே ஆச்சரியம் தான்.

இவ்வளவு நேரம் நான் சொன்னதிலிருந்து, நான் கர்ப்பமாக இருப்பதும், இப்போது வளைகாப்பு முடிந்து எங்கள் சொர்ணாச்சியின் வீட்டிலிருப்பதும், உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

"யார் இந்த சொர்ணாச்சி ? "

"வளைகாப்பு முடிஞ்சா உங்க அம்மா வீட்டுக்குப் போகாம, அவங்க வீட்டுல ஏன் வந்து உக்காந்துருக்க ? " என்றோ, உங்களில் ஒருசிலருக்கு கேள்விகளும் எழுந்திருக்கலாம். அதனால், சின்னதாக ஒரு கிளாரிஃபிகேஷன் கொடுத்து விடுகிறேன்.

சொர்ணாச்சி வேறு யாருமில்லை. என் அம்மாவின் அம்மா தான். அம்மா அரசாங்கத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பதாலும், தற்போது மதுரையிலிருந்து பணியிட மாற்றலாகி வேறொரு ஊருக்குச் சென்றிருப்பதாலும், "முன்ன பின்ன தெரியாத ஊருல எப்புடி பிரசவம் பாக்க முடியும் ? நம்ம ஊர்ல, நமக்குத் தெரிஞ்ச டாக்டர்ட பாக்குறதுதான் சரி வரும். சீமந்தம் முடிச்சு அவள இங்கயே கொண்டுவந்து விட்டுரு. நாள் நெருங்கும்போது, நீ லீவு போட்டுட்டு வந்தாப் போதும்" , என்று சொர்ணாச்சியும் சித்திக்களும் சேர்ந்து, தானாகவே வலிய வந்து, எனது பிரசவத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டதாலும், நான் இப்போது வள்ளியூருக்கு, அதாவது எங்கள் சொர்ணாச்சியின் ஊருக்கு வந்தாகிவிட்டது. அவ்வளவுதான்.

"ஆச்சி, சாரி. நான் என்ன வேணும்னா குடிக்காம இருந்தேன் ? " , அவளை சமாதானப்படுத்தும் நோக்கில், நான் சமையலறைக்குள் நுழைந்தபோது, அவள் ஆறேழு மிளகாய் வற்றல்களை ஒரு சீஞ்சட்டியில் போட்டு வறுத்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் ஒரு தட்டில், ஏற்கனவே வறுக்கப்பட்டிருந்த வரைமல்லியும் இருந்தது.

"ஏ சொர்ணாச்சி. உன்கிட்டத்தானே பேசிட்டு இருக்கேன்.. ஒரு கஞ்சிய குடிக்காததுக்கு இவ்ளோ கோவமா ? "

அவள் முறைத்தாள்.

"ஓ.. வீணாப் போகுதேன்னு யோசிக்கிறயா. கவலப்படாத. நான் அத சாயங்காலம் போல குடிச்சிக்கிறேன். க்கு.. க்கு"

"நீ முதல்ல வெளில போ. மசாலாக்கு வருத்துட்டிருக்கேன்லா. கமருது பாரு" , புடவைத் தலைப்பால் தனது மூக்கைப் பொத்தியபடியே சொன்னாள்.

எனக்கும் கமரத்தான் செய்தது. புகை கொஞ்சம் அதிகமானதும், இருமலும் வந்தது. நானும், கொடியில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு துணியை எடுத்து என் மூக்கைப் பொத்திக்கொண்டேன்.

"அந்தக் கஞ்சிய என்ன பண்ணுவ ?? கொட்டவாப் போற ?? க்கு.. க்கு.."

"அழகுபோல இருக்கு. அத எதுக்கு கொட்டணும் ? நான் சூட்டோடவே, சாலமிக்கு குடுத்துருவேன். நீ முதல்ல ஹாலுக்குப் போ. புகையில நின்னு லொக்கு லொக்குன்னு இருமிட்டு"

"சாலமி" , இந்தப் பெயரைக் கேட்டதும் , அதன் பின்னர் ஆச்சி என்னிடம் சொன்ன எதுவுமே என் காதில் விழவில்லை.

'ச்சே, நான் எப்படி அவளை மறந்தேன் ? இங்கே வந்த பின், ஒப்புக்கு ஒரே ஒருமுறை கூட அவள் பற்றிய சிந்தனை எப்படி வராமல் போனது ? இந்த ஊரிலிருக்கும் ஏதாவது ஒன்று, யாரவது ஒருவராவது எனக்கு அவளை நினைவுபடுத்தியிருக்க வேண்டாமா !! ஒருவேளை செல்போனையே நோண்டிக் கொண்டிருந்ததில், மறந்துவிட்டேனோ !! இதுவே எங்கள் ஹேமாக்காவாக இருந்திருந்தால், நிச்சியம் மறந்திருக்க மாட்டாள்' , இப்படிப் பலதும் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

"ஆச்சி, சாலமியா கேரளாவுக்கோ எங்கேயோ அனுப்பி வச்சிருந்தாங்கல்ல. இப்போ, திருப்பி கூட்டிட்டு வந்துட்டாங்களா ? அவ இப்ப எப்படியிருக்கா ? ஏன் இத்தன நாள் இந்தப் பக்கம் வரவேயில்ல ? " , ஒரு தவிப்பு கலந்த எதிர்பார்ப்புடன் நான் கேட்க,

"ஆங்ங்... அவ இங்கதான் இருக்கா தங்கம். ஆனா, அவ அம்மா இப்போ, முன்னமாதிரி அவள வெளில விடுறதில்ல. நம்ம வீட்டுக்கே எப்பவாச்சுத் தான் கூட்டிட்டு வருவா", என்று சுரத்தில்லாமல் பதில் சொல்லிவிட்டு, வருத்தவற்றையெல்லாம் சேர்த்து மசாலா அரைக்கத் தொடங்கினாள் சொர்ணாச்சி.

சாலமியைப் பற்றிய சிந்தனை என்னை ஆட்கொண்டது.

'நான் சாலமியை முதன் முதலாக என்றைக்குப் பார்த்தேன் ? அப்பொழுது எனக்கு என்ன வயதிருக்கும் ?' , என்பதெல்லாம் எனக்கு சரியாக ஞாபகமில்லை. ஆனால், நிச்சியம் அது ஒரு கோடை விடுமுறையாகவே இருக்கும்.

ஏனெனில், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும், நாங்கள் வள்ளியூரிலிருக்கும் எங்கள் சொர்ணச்சியின் வீட்டுக்குத் தான் வருவோம். அப்படி ஒருமுறை வந்து இங்கு தங்கியிருக்கும் பொழுதுதான், தெருவிலிருந்த சிறுவர்கள் சிலர் ஒல்லியான ஒரு பெண்ணைச் சுற்றி நின்றபடி, தங்கள் நோட்டுப் பேப்பரை துண்டு துண்டாகக் கிழித்து அவள் தலையில் போட்டு விளையாடிக் கொண்டிருப்பது என் கண்ணில் பட்டது.

"லேய், இதென்ன விளையாட்டு ? இந்தப் பயக்களுக்கு வேற வேலையே கிடையாது" , என்று கத்தியபடி ஒரு வயதானவர் அவர்களைக் கலைத்து விட்டுவிட்டு, அவள் தலையிலிருந்த பேப்பர் துண்டுகளைத் தட்டி விடவும், "தாத்தா, அண்ணே முட்டாயி தரல" என்று அவர்களை நோக்கிக் கையைக் காட்டினாள் அந்தப் பெண்.

அந்தப் பெரியவர், "என்ன, முட்டாய் வாங்கித் தாரேன்னு சொன்னானுவளாக்கும் ? ஒங்கிட்ட அந்தப் பயக்க சொல்லதையெல்லாம் கேக்கக்கூடாதுன்னு சொல்லிருக்கேம்லா. ஒங்க அம்மைய எங்க ? பிள்ளைய இப்புடித் தெருவுல வுட்டுட்டு எங்க போனா ? " , என்று அவளிடம் கடிந்துகொண்டாலும், பக்கத்துக்குக் கடையிலிருந்து சில தேங்காய் பர்பிக்களை வாங்கி, ஒரு பேப்பரில் மடித்து அவளிடம் கொடுத்துவிட்டுத் தான் போனார்.

நான் இதையெல்லாம் எங்கள் ஹேமாக்காவிடம் சென்று சொல்ல, அவளுக்கென்னவோ அந்தப் பெண்ணின்மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டாயிற்று. தன் கண்களை அகல விரித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டு, "ஐ ஹவ் ரெட் சோ மெனி நாவல்ஸ். பட், நேர்ல இப்போத்தான் இப்படி ஒருத்தங்கள பாக்கப் போறேன். இன்டெரெஸ்ட்டிங்" என்று சொல்லி, அவள் அந்தப் பெண்ணை அதிகமாக நோட்டம் விட ஆரம்பித்தாள். அவளோடு கொசுறு போல சேர்ந்துகொண்டு, நானும்.

ஆண்கள் அணியும் மேற்ச்சட்டை, நாடா வைத்துக் கட்டப்படும் சீட்டிப்பாவாடை, அழுக்குப் படிந்த சிவந்த தேகம், அங்கங்கே பழுப்பு நிறமேறிய தலைமுடி, அதில் அவள் வைத்திருக்கும் காய்ந்துபோன பூச்சரங்கள், இப்படித்தான் காட்சியளித்தாள் அந்தப் பெண். கொஞ்சம் அருகில் சென்றால், அவள் மீது ஒரு லேசான புளித்த வாடையும் வீசுயது. வெள்ளந்தியான ஒரு சிரிப்பு அவள் இதழில், எப்போதுமே ஒட்டிக்கொண்டிருந்தது.

அவ்வப்போது, அந்தத் தெருவிலிருந்த சுடலைமாடன் கோவிலின் மதில் சுவரில், அவள் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதும், மாலை வேளைகளில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்து அவளை அழைத்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்தது. அதிலும், வெள்ளி, செவ்வாய்களில் நிச்சியமாக அவளை அங்கு பார்க்கலாம்.

அவள் பெயர்... சாலமி.

ஒருநாள் வேகமாக ஓடிவந்து, "கண்டுபிடிச்சிட்டேன் தங்கம். ஸலோமி... அதுதான் அவங்க உண்மையான பேரு. இந்தத் தெரு ஆளுங்கதான், கூப்பிடத் தெரியாம, சாலமின்னு மாத்தி வச்சிருக்காங்க. வா, ஆச்சி கிட்டேயோ, சித்தி கிட்டேயோ போயி அவங்களப் பத்தி நம்ம கேக்கலாம்", என்று சொன்னாள் ஹேமாக்கா.

"ஆச்சி, சாலமி பிறந்ததுல இருந்தே இப்படித்தானா ? இல்ல இடையில ஏதாவது...."

"அவளுக்கு எத்தன வயசு ? அவ எப்பவாச்சு குளிப்பாளா ? மாட்டாளா ?"

"நாங்க அவகிட்ட பேசலாமா ? பேசக்கூடாதா ? பேசுனா.. ஒண்ணும் தப்பில்லல்ல ?" , அவளைப்பற்றி தினுசு தினுசாகக் கேள்விகள் கேட்டோம்.

"அவள சின்னப் பிள்ளைலல்லாம் நான் பாத்தது கெடையாது. எப்புடி மண்டைக்கு வழியில்லாமப் போச்சுன்னும் தெரியல. அவ மாப்புள, அவளுக்கு ஏற்கனவே பைத்தியம், இவங்கதான் ஏமாத்தி கெட்டிக் குடுத்துட்டாங்கன்னு சொல்லுறான். அவ அம்மையா, அவன் கண்ணு முண்ணு தெரியாம அடிச்சதுல தான், இவ இப்படி ஆயிட்டான்னு சொல்லுறா. எது நிஜமோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

ஆனா, சாலமி பாவமே பாவம். வாயில்லாப் பூச்சி" , என்று எங்கள் ஆச்சி சொன்னபோது, எங்களுக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது. அதிலிருந்து எங்கள் ஹேமாக்காவுக்கு சாலமியின் மீது, அதிக கரிசனை உண்டாயிற்று. அவளுடன் நட்பு பாராட்ட வேண்டுமென்ற ஆவலும் ஏற்பட்டது.

அடுத்த கோடை விடுமுறைக்கு வள்ளியூருக்குச் சென்றிருந்தபோது, ஒருநாள் சாலமியை அழைத்து எங்கள் வீட்டு முற்றத்தில் உட்கார வைத்துக்கொண்டு, அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். சாலமி சிரித்தாளே ஒழிய, வாயையே திறக்கவில்லை. ஆனால், ஆவலோடு அடுத்தநாளும் வீட்டுக்கு வந்தாள்.

இதை நான்கைந்து நாட்கள் பார்த்துவிட்டு, "ஏட்டி, ரொம்ப ஓவராத்தான் போய்ட்டுருக்க. அவ மேல அடிக்குற வாடைக்கு யாரவது அவள வீட்டுல ஏத்துவாவளா ?", என்று கீதாச் சித்தி திட்டவும், ஒரு ரெக்சோனா சோப்பை அவள் அம்மாவிடம் கொடுத்து, அவளைக் குளிப்பாட்டிவிடும் படியும் சொன்னாள் ஹேமாக்கா.

ஆரம்பத்தில் சாலமி கேட்கவில்லையென்றாலும், ஒரு சில நாட்களுக்குப் பிறகு, சிரமப்பட்டு குளித்து முடித்துவிட்டு எங்கள் வீட்டுப்பக்கம் வந்தாள்.

"யாரிது ? சாலமியா ? குளிச்சி முடிச்சி, தலையெல்லாம் கட்டுனதும், ஆள் அடையாளமே தெரியலையே !! சினிமா நடிக தோத்துப் போயிருவாப் போ" , என்று கீதாச் சித்தி அவளைக் கிண்டல் செய்ய, அன்றுதான் முதன்முதலாக சாலமி வெட்கப்படுவதையே நாங்கள் பார்த்தோம். அதன் பின்னர், சாலமியும் அவ்வப்போது குளித்து முடித்து எண்ணெய் வைத்து தலைசீவிக்கொண்டாள்.

வழக்கமாக, மத்தியான வேளைகளில் நாங்கள் எங்கள் ஆச்சி வீட்டு வராண்டாவில், ஒரு துணியை விரித்து உட்கார்ந்து கொள்வோம். கோடையில், மல்லிகை, பிச்சி, இரண்டுமே சீசன் என்பதால், சித்திகள் நான்கைந்து உழக்கு வாங்கிப் போடுவார்கள். நான் பூக்களை இரண்டு இரண்டாகப் பிரித்துக்கொடுப்பேன். என் அக்காவும், மூத்த சித்தியின் மகளும் பூக்கட்டுவார்கள். சித்தியின் பெண்களில் வேறு யாரவது ஒருவர், சிறுவர் மலரிலோ, தங்க மலரிலோ வெளிவந்திருக்கும் சிறுவர் கதைகளை சத்தமாக வாசிப்பார்கள். கதைகளைக் கேட்டுக்கொண்டே, எங்களது பூக்கட்டும் வேலை வேகமாக நடக்கும்.

கட்டி முடித்த பூவை, மற்றவர்கள் யாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் முன், சாலமிக்கு ஒரு முழத்தை ஒதுக்கிக்கொண்டு, அவளைத் தேடிப்பிடித்து, எப்படியாவது அதை அவளிடம் கொடுத்தும் விடுவாள் ஹேமாக்கா. சாலமி, அதைத் தலையில் வைத்தவுடன், அதன் ஒரு பகுதியை மட்டும் காதுப் பக்கம் இழுத்து, நுகர்ந்து பார்த்துவிட்டு, ஒரு மாதிரி தனது தலையைச் சிலுப்பிக் கொள்வாள். வழக்கமாக, கோவிலில் சுடலை மாடனுக்கு சாற்றிய பின், வீசி எறியப்படும் பழைய மாலைகளையும் சரங்களையும் எடுத்து தலையில் சூடிக்கொள்ளும் அவளுக்கு, அந்த பிரெஷான சரங்களின் வாசமும், குளிர்ச்சியும், என்ன மாதிரியான பரவசத்தைக் ஏற்படுத்தியிருக்கும் என்பது அந்த சிலிர்ப்பிலேயே தெரியும்.

பொதுவாக வெள்ளிக் கிழமைகளில், மத்தியான நேரம் எங்கள் தெருவுக்கு ஒரு டபராக்காரர் வருவார். ஒரு அகன்ற தட்டால் மூடப்பட்ட பெரிய அலுமினிய டபாராவில், பருப்பு வடை, காரவடை, ஜாங்கிரி, போளி எல்லாம் வரிசையாக அடுக்கி வைத்து அதைத் தலையில் வைத்துக்கொண்டு.

"வடேய், ஜாங்ரி, போலே", என்று கூவியபடியே நடந்து போவார்.

அவரது சத்தமும், அந்த டபராவில் அவர் வைத்திருக்கும் தின்பண்டங்களின் வாசமும், யாரை வேண்டுமானாலும் சுண்டி இழுத்துவிடும். அது என்ன மாயமோ தெரியவில்லை. அவர் அதைத் திறக்கும்போது, யார் யாருக்கு எந்தெந்த தின்பண்டம் பிடிக்குமோ, அவரவர்க்கு அந்தந்த வாசமும் அதிலிருந்து வரும்.

அவர் வருகின்ற ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்காகவும், அந்த வாரம் முழுதும் எங்கள் ஆச்சியையும் சித்திக்களையும் தொந்தரவு செய்து, காசு வாங்கி சேர்த்து வைத்துக்கொள்வோம். ஹேமாக்கா தான், யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென்று லிஸ்ட் போடுவாள். அவர் வந்ததும் அவற்றை வாங்கி, பங்கு பிரித்துக் கொடுப்பாள். நாங்களெல்லாம் அதை அடித்து பிடித்துக்கொண்டு சாப்பிடும்பொழுது, அவள் மட்டும் சாலமிக்கும் அதில் ஒரு பங்கை எடுத்துவைத்து, அவளைத் தெருவில் பார்த்தால் அவளிடமோ, இல்லையென்றால் அவள் அம்மாவிடமோ கொடுப்பாள்.

ஒருநாள் ஹேமாக்கா கொடுக்கும்போது, "ஹேமாக்கா, ஜாங்கிரி தா. இன்னொண்ணு" , என்று சாலமி கேட்டதும் , "ம்ம்ம்... கண்டுபிடிச்சாச்சு. சாலமியோட பேவரைட் ஸ்வீட் ஜாங்கிரி, பேவேரைட் பிளவர் ஜாஸ்மின், பேவரைட் பெர்சன்... இந்த ஹேமா தானே " , என்று சொல்லிவிட்டு எங்கள் அக்கா சிரித்ததும், இன்றும் பசுமையாக என் ஞாபத்திலிருக்கிறது.

ஆக மொத்தத்தில், சாலமியையும் எங்கள் கோடை விடுமுறையையும் அவ்வளவு எளிதாகப் பிரித்துவிட முடியாது.

கடைசியாக, நாங்கள் அவளை எப்போது பார்த்தோம் தெரியுமா ? ம்ம்ம்ம்.. எங்கள் ஹேமாக்காவின் பிளஸ் ஒன் விடுமுறையின்போது. ஹேமாக்கா பிளஸ் ஒன் என்றால், நான் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதுக்குச் சென்ற சம்மர் ஹாலிடேஸ் அது. எனக்குத் தெரிந்தவரை அதுதான், வள்ளியூரில் நாங்கள் கழித்த கடைசி கோடை விடுமுறையும் கூட.

அப்போது ஒருநாள், திருவிளக்குப் பூஜைக்காகக் முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில், இருட்டிப்போன ஒரு முக்கிலிருந்த அடிபம்புத் திண்டைச் சுற்றி, ஆறேழு ஆண்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடையே விழுந்திருந்த இடைவெளி வழியாகப் பார்த்தபோது, ஒரு நாய்க்குட்டியைத் தடவிக் கொடுத்தபடி, ஒரு பெண் அந்தத் திண்டில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

"பப்பி, பப்பி, பிஸ்கட்டு இந்தா"

"சாலமி..."

எங்கள் ஹேமாக்கா கூட்டத்தை விலக்கிவிட்டுப் பார்த்தாள். சாலமிதான் அங்கு உட்கார்ந்து ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அவளருகே, ஒரு நடுத்தர வயது ஆள் உட்கார்ந்து பிஸ்கட் பாக்கெட்டை நீட்டியபடி, அவளை ஒரு மாதிரி அசூசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று அவள் அமர்ந்திருந்த வாகு, கொஞ்சம் கூடச் சரியில்லை. அவள் பாவாடை லேசாக விலகி தொடைவரை தெரிந்தது. அவள் அணிந்திருந்த மேற்சட்டையின் இரண்டாவது பட்டன் அறுந்திருந்தால், அவள் மார்புக்கு மத்தியிலுள்ள கோடு தெரிந்து கொண்டிருந்தது. அவளைச் சுற்றியிருந்த கூட்டத்தில் நின்ற ஆண்களில், ஒருசிலரின் கண்கள் இந்த விரிசல்களின் வழியே பாய்ந்து, வெளியே தெரிந்த பகுதிகளை மேய்ந்து கொண்டிருந்தன.

எங்களுக்கு உடம்பெல்லாம் கூசியது. அங்கிருந்தவர்கள் யாரைப் பார்த்தாலும், ஒரு மாதிரி அருவெறுப்பாக இருந்தது.

"ஸ்டுபிட் பீப்பிள் வாட்சிங் அன் இன்னொசென்ட் கேர்ள்ஸ் ப்ளட்டி ஸ்கின்.. ஏ சாலமி.. இங்க என்ன பண்ணுற ? வா" , அவள் கையைப் பிடித்து இழுத்து, நகர்த்தினாள் ஹேமாக்கா. நாங்களும் அவளுடன் சேர்ந்து அவளை இழுத்தோம்.

"ம்ம்ம்ம்க்கும்.. பப்பிக்கு பசிக்கி.. பிசுக்கட்டு குடுக்கணும்.. ம்ம்ம்ம்.. க்க்க்க்... ம்ம்ம்ம்..", அவள் கையில் வைத்திருந்த அந்த நாய்க்குட்டிக்கு, பிஸ்கட் கொடுக்காமல் வர முடியாதென்று அடம்பிடித்தாள் சாலமி. இன்னும் பலத்தை கூட்டிக்கொண்டு, அவளை வலுக்கட்டாயமாக இழுத்தோம். எங்களைப் பார்த்து பயந்து, அவள் வைத்திருந்த அந்த நாய்க்குட்டி தாவிக்குதித்து, ஒரே ஓட்டமாக ஓடியது.

"ஆஆங்.. பப்பி.. பப்பி.. ஹேமாக்கா ச்சீ.. ஹேமாக்கா பிடிக்கல.. பப்பி.. பப்பி..", அவள் அதன் பின்னாலேயே ஓட எத்தனித்தாள்.

நாங்கள் அவளை விடுவதாக இல்லை. பிடித்துக் கொண்டோம். இந்தக் களேபரத்தில், அவளைச் சுற்றி நின்றிருந்தவர்களில், ஒரு சிலர் விலகியிருந்தார்களே ஒழிய, அவள் மீது விழுந்த பார்வைகள் விலகவில்லை. அந்த பிஸ்கட் ஆசாமி, எங்களைப் பார்த்து முறைத்தான்.

"அவதான் வரமாட்டேங்கால்லா.. ஒங்களுக்கு என்ன ??"

அதற்குள், யார் மூலமாகவோ தகவல் தெரிந்து, அவள் அம்மா அங்கு வந்து சேர்ந்தாள். "படுக்காலிப் பயக்க. மண்டைக்கு வழியில்லாத பிள்ளையக் கூட எப்புடிப் பாக்கானுவ பாரு" , என்று புலம்பிக்கொண்டே, சாலமியை அழைத்துச் சென்றாள்.

அன்றைய நாளுக்குப் பின், எங்களால் சாலமியை ஒருபோதும் பார்க்க இயலவில்லை. விசாரித்தபோது, அவள் அம்மா அவளை ஏதோவொரு சிகிச்சைக்காக கேரளாவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

அந்த வருடத்தில், எங்கள் அம்மாவுக்குக் கிடைத்த பணியிட மாற்றம், அக்காவின் கல்லூரிப் படிப்பு, திருமணம், பின் எனது கல்லூரிப் படிப்பு, திருமணம் என்று எங்கள் வள்ளியூர் வரத்தும் குறைந்து போனது. அவளைப் பற்றி கேட்கும்போதெல்லாம் "அவ அம்மைய இந்த ஊர்ப்பக்கம் பாத்தே நாளாவுது. கேரளாவுல இருப்பான்னு நெனைக்கேன்" என்னும் பதிலே தொடர்ந்ததால், அவளை விசாரிப்பதும் குறைந்து போனது.

இப்போது, வயிற்றிலிருந்த என் குழந்தை எட்டி உதைக்கவே, சுயநினைவுக்கு வந்தேன்.

"ஆச்சி, சாலமிய நான் இப்போ பாக்க முடியுமா ? ", நான் சொல்லி முடிக்கவும், எங்கள் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

"அவளாத்தான் இருக்கும்னு நெனைக்கேன்"

சமையல்கட்டிலிருந்து வேகமாக வராந்தாவுக்கு விரைந்து, வாசற்கதவைத் திறந்தேன். என் கண்முன்னே, சாலமி தான் நின்றிருந்தாள்.

காதருகேயிருந்த முடி நரைத்திருந்தது. அவள் உடல் பூசினாற்போல் இருந்தது. முகம் வெளிறியிருந்தது. வயிறு, புடைத்திருந்தது. அது வளர்ந்து குவிந்திருந்த விதம், 'அவள் கருவுற்றிருக்கிறாள்' என்றும் காட்டியது.

அதிர்ந்து போனேன்.

"பாப்பா.. என் வயித்துல பாப்பா இருக்கு.. வயித்துக்குள்ளையே விளையாடும். அது வெளிய வந்ததும், நானும் பாப்பாவும் சேர்ந்து விளையாடுவோமே !!"

நான் எந்தவொரு பதிலும் சொல்லவில்லை.

அவள் குனிந்து, என் வயிற்றைப் பார்த்தாள். பூரித்தபடியே, " ஒன் வயித்துலையும் பாப்பா இருக்கா ? அதுவும் வயித்துக்குள்ளையே விளையாடுமா ? ", என்றாள்.

நானோ, இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. எனக்குள்ளே ஏகப்பட்ட கேள்விகள். ஏகப்பட்ட உணர்ச்சிகள். அதிர்ச்சி, கோபம், பரிதாபம், என்னல்லாமோ !!

"ஏட்டி, நான் வாரத்துக்கு முன்னாடியே நீ ஓடி வந்துட்டியா ? அவியள சிறபடுத்தக் கூடாதுன்னு சொல்லிருக்கேம்லா" , கத்திக்கொண்டே ஓடி வந்தாள் அவள் அம்மா.

என்னைப் பார்த்தவுடன், "போன வருஷம் வந்த காய்ச்சல்ல, இவளுக்கு பித்தம் முத்திப்போச்சு தங்கம். வீட்டுலயே அடங்கல. சொல்லக் சொல்லக் கேக்காம, வெளில திரிஞ்சா. எந்த வாடாவழிப் பயலோ தெரியல, இந்த கதியாக்கிட்டானே ", என்று சொல்லிவிட்டு பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

"போலீஸ்ல சொல்லலையா ?"

"என்னன்னு சொல்ல தங்கம் ? இல்ல யாரென்னு கையக் காட்ட ? கிறுக்கச்சி பேச்ச யாரு கேப்பா ? நம்ம ஊராளுங்க கூட, தப்பு பண்ணுனது யாருன்னு கேக்கல. வயித்தக் கழுவு, வாயக் கழுவுன்னுதான் சொன்னாவ. ஆனா, அதுக்கும் கூட மாசம் தப்பிப் போச்சு. இப்ப சாலமியோட சேர்த்து, அவ வயித்துல இருக்கதுக்கும் நான்தான் காவல்.

ம்ம்ஹூன்... எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணுனனோ. இப்புடி ஒரு பொறப்பு", என்று சொல்லிவிட்டு, சொர்ணாச்சி கொடுத்த சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, சாலமியையும் அழைத்துச் சென்றாள்.

"கஞ்சி குடிக்யணும்னா, வடையும் வேணும். வாங்கித் தாறியா ?", என்று கேட்டபடியே அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு போனாள் சாலமி.

அவள் சத்தத்தைக் கேட்டு, மறுபடியும் வயிற்றிலிருந்த என் குழந்தை எட்டி உதைத்தது. இந்தமுறை, சற்று பலமாக.

இந்த சமுதாயத்தின், மிக அருவெறுப்பான ஒரு பக்கத்தைக் கண்டு, மண்ணில் கால்கூட வைக்காத அந்தக் குழந்தைக்கும் கோபம் வந்திருக்கிறது போலும்.

பின்குறிப்பு: இந்தக் கதையை முழுதாக பசித்தவர்களுக்கு, "கடைசியில் சாலமிக்கு என்ன ஆச்சு ? அவளுக்கு குழந்தை பிறந்ததா ? அவள் இப்போது எப்படியிருக்கிறாள் ?", என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.

ஆம், சாலமிக்கு குறைப் பிரசவத்தில், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே, அது இறந்தும் பிறந்தது.

அதுவரை, மலர்களுக்காக மட்டும் ஏங்கிக் கொண்டிருந்த சாலமி, பின்னர், ஒரு குழந்தைக்காகவும் ஏங்க ஆரம்பித்தாள். தெருவில் உள்ள சிறுவர்களுக்கெல்லாம் தொந்தரவு கொடுத்ததால், ஊர்மக்கள் அவளை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்க்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். அவளும், ஏர்வாடியில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள். இதுதான் சாலமியின் முடிவு.

**STORY ENDS**

My other Tamil Short Stories, எனது பிற சிறுகதைகள் 

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..


If you are looking for some Tamil Stories for Reading or Tamil Stories Online, please visit APPLEBOX frequently. 

You have a lot of 
  • Tamil Stories with Moral, 
  • Tamil Stories for Kids, 
  • Enathu Sirukathaigal and Publicized Tamil Sirukathaigal 
  • Short Stories Tamil and 
  • Short Tamil Stories with Moral. 


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post