சுந்தரி அத்தை - சிறுகதை (Short Story)

"நான் சொன்னது ஞாபகம் இருக்கா ? இல்லையா ? இன்னைக்கு ராத்திரிக்குள்ள நீ இந்த ரூம காலி பண்ணனும். நாளைக்கு காலங்கார்த்தாலேயே, உன்னோட சுந்தரி அத்தை வந்துருவா" சம்மணம்கொட்டி உட்கார்ந்து, தனக்கு முன்னே கிடந்த பிச்சிப் பூக்களைத் தொடுத்துக்கொண்டே, ராஜியிடம் சொன்னாள், ரேணுகா.

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..



அது மத்தியானம் மூன்று மணி என்பதால், அந்தத் தெருவே, சப்தமில்லாமல் அடங்கிப்போயிருந்தது. அதனால், இவர்கள் பேசுவது துல்லியமாக, பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்குக் கேட்டது. சுந்தரி, வீட்டுக்கு வரப்போகிறாள் என்று தெரிந்ததுமே, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அத்தனைபேரும், இவர்கள் வீட்டில் நடப்பதை ரொம்பவே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

"அதுதான் நேற்றைக்கே சொன்னேனேம்மா. நான் உன் ரூமுக்கேல்லாம் வரல. அத்தைகூடவே தங்கிக்குறேன்"

"ம்ம்ஹ் ஹூம். உன் நல்லதுக்குத்தான் நான் சொல்லுறேன். அவளே பைத்தியக்கார ஆஸ்பித்திரிலேருந்து, பத்து வருஷம் கழிச்சி, இப்போதான் வீட்டுக்கு வர்றா. முழுசா குணமாச்சான்னுகூட எனக்குத் தெரியாது. நீ என்னடான்னா, அவகூட ஒரே ரூம்ல தங்கப்போறேன்னு சொல்லுற"

"அம்மா. அது பைத்தியக்கார ஹாஸ்பிடல் இல்ல. மனநலக் காப்பகம். அங்க முழுசா குணமானதுனாலதான், வீட்டுக்கே விடுறாங்க. நீ பாட்டுக்கு உன் வாயில வந்தத எல்லாம் பேசாத. படிச்சிருக்க தானே ? எப்படி பேசணும்னுகூடத் தெரியாதா ? " , கோபமாக பதில் சொன்னாள், ராஜி.

"அதுசரி. அவ வந்ததும், நடுராத்திரில எழுந்திரிச்சி 'வீல்ல்' ன்னு அலறுனான்னாத் தெரியும். சின்ன வயசுல, பாதி நாட்கள், நீ பயத்துல தூங்குனதே இல்ல. இப்போ, ஏதோ கண்டகண்ட புத்தகத்தையெல்லாம் படிச்சுக்கிட்டு, புத்திசாலி மாதிரி பேசிட்டுத் திரியுற.

இங்க பாருடீ. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. பேசாம எங்க ரூமுக்கு வந்துரு. உங்க அப்பாவை ஹால்லேயே படுக்கச் சொல்லிறலாம். ஏற்கனவே, சோபாவுலதான் சதாகாலமும் உட்கார்ந்துட்டு இருப்பாரு. இது ஒண்ணும் அவருக்கு கஷ்டமா இருக்காது "

ரேணுகா பேசுவது எதையும், ராஜி கண்டுகொள்ளுவதாகத் தெரியவில்லை. தனது அறையில் உட்கார்ந்து, ட்ராப்டரை வைத்து 'இன்ஜினியரிங் டிராயிங்' வரைந்து கொண்டிருந்தாள்.
இரவு, தன் கணவனிடம் மறுபடியும் கேட்டாள், ரேணுகா.
"என்னங்க.. பூரணமா குணமாயிடுச்சிதானே ?"

சோபாவில் உட்கார்ந்துகொண்டு முறைத்தார், ஹரிஹரன்.

"என்ன முறைக்காதீங்க. நான் ஒண்ணும் வேணும்னே கேக்கல. இன்னைக்கு சாயங்காலம், வாசல்ல கோலம் போடும்போதுகூட பக்கத்து வீட்டுல உள்ளவங்க எல்லாம், என்கிட்ட திரும்பத் திரும்ப கேட்டாங்க. பத்தாததுக்கு நம்ம மாடிவீட்டுல வாடகைக்கு இருக்குற பொண்ணுகிட்ட வேற, எதையோ சொல்லி வச்சிருக்காங்க போல. அந்தப்பொண்ணு பயந்துக்கிட்டு, என்கிட்ட வந்து கேக்குது" , என்று தன் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்தாள், ரேணுகா.

"இங்க பாரு ரேணுகா, நீ ஆயிரம் தடவை கேட்டாலும், என் பதில் இதுதான். அவ பூரணமா குணமாகிதான், வீட்டுக்கு வர்றா. அதே நேரத்துல, இந்த பத்து வருஷத்துல நடந்த நிறைய மாற்றங்களுக்கு அவ இன்னும் பழகல. சில நாட்கள் எடுக்கும். அதுவரைக்கும் அவள பாக்குறதுக்கு நமக்கு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தெரியும்.

யோசிச்சுப் பாரு. இந்த பத்து வருஷத்துல என்னல்லாம் மாறிடுச்சு. இது எல்லாத்தையும் அவ மனசு, ஒரே நாள்ல ஏத்துக்காதுல்ல"

"ஏன்.. ஏற்கனவே ஆஸ்பத்திரியில் இதெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுப்ப மாட்டாங்களா ?"

"அதெல்லாம் சொல்லிக் கொடுத்துருக்காங்க. அதையும்மீறி, ஒரு சில விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம், ஆஸ்பத்திரியிலேயே வச்சிருந்தா புரிய வைக்க முடியாதுன்னுதான் டாக்டர் சொன்னாரு. உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன். அவ வந்ததும், பழைய மாதிரியே அவளை கவனிச்சிக்கோ. இது ஒண்ணத்தான் நான் உன்கிட்ட எதிர்பாக்குறேன் "

அவரைப் பார்த்தாலும், பாவமாக இருந்தது. அவரும் என்னதான் செய்வார் ? ஏற்கனவே, சுந்தரிக்கு இப்படியானதில் இருந்து அவர் சிரித்துப் பேசுவதுகூடக் கிடையாது. அவள் மருத்துவச் செலவு, சிகிச்சைகள், ஊராரின் கேள்விகள், என்று அவர் உள்ளுக்குள்ளேயே கரைந்து கொண்டிருந்தார்.

தன் கணவனை மேலும் காயப்படுத்த, ரேணுகா ஒருபோதும் நினைத்ததில்லை. ரேணுகாவுக்கும் சுந்தரியை ரொம்பவே பிடிக்கும். ஆனால், அக்கம்பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள், சொந்தக்காரர்கள் போன் செய்து கேட்கும் கேள்விகள், என்று எல்லாவற்றுக்கும் அவள்தானே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதனால், அவளையறியாமலேயே அவள் மனம் கடினப்பட்டிருந்தது. வார்த்தைகளும்கூட, தடித்திருந்தன.

அதிகாலைப் பொழுதில், அந்தக் கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதன் பின்கதவைத் திறந்துவைத்து, சுந்தரியைக் கீழே இறங்கச் சொன்னார், ஹரிஹரன். அவளும் சிறிது நடுங்கியபடியே, கீழே இறங்கி, ஒருமாதிரியாக வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.

வீட்டினுள் இருந்து வாசலுக்கு வந்து, அவளுக்கு ஆரத்தி எடுத்தாள், ரேணுகா.

சுந்தரி, ஒரு மஞ்சள் நிற காட்டன் சேலையைக் கட்டியிருந்தாள். நன்றாக மெலிந்து, நிறம் குன்றிப் போயிருந்தாள். காரில் வரும்போது, ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாள் போலும். அவளது தலைமுடி கொஞ்சம் கலைந்திருந்தது. கண்களில், ஒரு மிரட்சி தெரிந்தது.

இப்போது ஹரிஹரன், சுற்றுமுற்றும் பார்த்தார். பக்கத்து வீட்டிலிருப்பவர்கள், ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பது தெரிந்தது. மாடிவீட்டிலிருக்கும் பெண்கூட, போர்டிகோவில் ஒரு ஓரத்தில் நின்று கீழே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவர்களின் பார்வையும் பேச்சும், இத்தனை நாள் ரேணுகாவை எப்படி பாதித்திருக்கும் என்பதை, அவரால், அந்தநொடியில் உணர முடிந்தது.

"சரி சரி.. சீக்கிரம் உள்ளே போகலாம். நீ இவளை உள்ளே கூட்டிட்டுப் போ. நான் டாக்ஸிக்கு சார்ஜ் குடுத்துட்டு வந்துர்றேன்" , என்று சொல்லி, அவர்களை உள்ளே அனுப்பினார்.

சோபாவில் உட்கார்ந்துகொண்டு, அந்த வீட்டை ஒருமாதிரி வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள், சுந்தரி.

ஏற்கனவே, அந்த பத்து வருடத்தில், அவள் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்தை மருத்துவமனையிலேயே சொல்லிப் புரியவைத்திருந்ததால், சுந்தரியால் அவர்களை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அவளது அப்பா அம்மாவின் மரணத்தைக் கூட, அவர்கள் அவளுக்கு உறைக்கும்படி சொல்லியிருந்தார்கள். அங்கே வைத்தே, அதற்கு அவள் அழுது புலம்பி ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணி, கடைசியில் அதை ஏற்றுக்கொண்டு விட்டாள்.

ஆனால், இப்போது திடீரென மாறியிருக்கும் தனது வீட்டின் வாசனை, தன்னோடு தயக்கமாகப் பேசும் அண்ணி, தனது அப்பா அம்மா இல்லாத அந்த வீடு, இதையெல்லாம் அவளால், உடனடியாக ஒத்துக்கொள்ள முடியவில்லை.

தலைசுற்றுவது போல இருந்தது.

அதே நேரத்தில், குளித்து முடித்து தலையில் டவல் கட்டியபடி, ராஜி பாத்ரூமிலிருந்து வெளியே வரவும், அவளைக் கண்ணிமைக்காமல் பார்த்தாள், சுந்தரி.

"சுந்தரி அத்தே.. வந்துட்டியா.. "

அந்த சோபியாவிலேயே, மயக்கம்போட்டு விழுந்தாள், சுந்தரி.

"எல்லாம் டாக்டர் சொன்னதுதான். முதலுதவி செய்தா சரியாகிடும்" என்று சொல்லி, முகத்தில் தண்ணீர் தெளித்து, அவளை ஓய்வெடுக்கும்படி செய்தார், ஹரிஹரன். அவளைப் படுக்கையில் படுக்கவைத்து, அவள் தலையைத் தடவிக் கொடுத்தபோது, தன அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டு,

"இப்போ உனக்கு ஒரு நாற்பத்தி அஞ்சு வயசு இருக்குமா ? முடியெல்லாம் நல்லா நரைச்சுப் போச்சு. ரொம்ப வயசானவன் மாதிரி ஆகிட்ட. எல்லாம் என்னாலதான், இல்லண்ணா !! நான் உனக்கு ரொம்ப பாரமாய்ப் போயிட்டேன்ல" ,என்று கண்ணீர் கசியக் கேட்டாள், சுந்தரி.

"இல்லடா.. அண்ணனுக்கு நீ எப்பவுமே பாரம் கிடையாது. நீ தூங்கு. இனி எல்லாம் சரியாகிடும். நான் இருக்கேன்ல" ,என்று சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவன் கண்கள் கலங்கியிருந்தன. இதைப்பார்த்து ரேணுகாவும் கண்கலங்கினாள்.

"எப்படி இருந்தவ இல்ல"

ஹரிஹரன், ஒன்றுமே பதில் சொல்லவில்லை.

"நான் காலையிலேயே முழிச்சதால தூக்கம் வருது. தூங்குறேன். நீ அவளைக் கொஞ்சம் பாத்துக்கோ. அவளுக்கு எதாவது தேவைப்பட்டதானா, கொடு. பாத்த இல்ல. அவ ரொம்ப சாதாரணமாத் தான், பேசுறா" , என்று சொல்லிவிட்டு, போய்ப் படுத்தான்.

கண்ணை மூடியபோது, சுந்தரியைப் பற்றிய பழைய நினைவுகளெல்லாம் வந்து போயின.

அது 2007. மிக அழகான நாட்கள்.

தன்னைவிட, பத்து வயது குறைவான தனது தங்கையை ஒரு மகள் போலவே நடத்தி வந்தான், ஹரி. பத்தாதுக்கு அவனுக்கு மனைவியாக வந்த ரேணுகாவும் அந்த குடும்பத்தை நன்கு புரிந்துகொண்டு அவர்களை அவனைவிட நன்றாக கவனித்து வந்தாள். ராஜிக்கு அப்போது ஐந்து வயது.

அவளைப் பெரும்பாலும் சுந்தரியே வைத்துக்கொண்டு திரிவாள். ஹரியும் ரேணுகாவும் ஹனிமூன் கப்புள் போல இருந்தனர். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 'சுந்தரி யாருடனோ காதலில் இருக்கிறாள்' என்று தெரியும்வரை.

"எல்லாம் இந்த செல்போன் வாங்கிக் கொடுத்ததாலதான். நான் அப்போவே சொன்னேன், வேண்டாம்னு. இப்போ பாரு. இதெல்லாம் தேவையா !! " ,என்று புலம்பினாள், ஹரியின் அம்மா.

பின்னர் ரேணுகாதான், "இப்போல்லாம் இது சகஜம்தானே. அவளோட படிச்ச சீனியர் பையன்தானாம். கூப்பிட்டு விசாரிச்சிப் பாருங்க" என்றாள்.

சுந்தரி காதலித்த மதனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அவனும் நல்ல பையனாகத் தெரிந்தான். ஆனால், பிரச்சனை அவன் அம்மாவின் ரூபத்தில் வந்தது. அவள் இந்தத் காதலை அறவே மறுத்தாள். தனது கணவனின் மரணத்துக்குப் பிறகு, தனக்கு ஒரே ஆதரவாக நின்ற சொந்தக்கார்களைப் பகைக்க விருப்பமில்லையாம்.

"அவர்களிடத்தில்தான் பெண்ணெடுப்பேன். என்னைப் புரிந்துகொள்ளுங்கள்" , என்றாள்.

"பாப்பா.. இவையெல்லாம், உனது வருங்கால வாழ்க்கையில் நிறைய குழப்பங்களை உருவாக்கும்" என்று ஹரி பலமுறை எடுத்துச் சொல்லியும், சுந்தரி கேட்கவில்லை. பிடிவாதம் பிடித்தாள். வீட்டில் யாரிடமும் பேசுவதைத் தவிர்த்தாள்.

மதனோ, சில நேரங்களில் வந்து நின்று, 'என் அம்மாவின் சம்மதமெல்லாம் தேவையில்லை, நான் இவளைத் திருமணம் செய்துகொள்கிறேன்' என்று சொல்வான். அடுத்த நாளே வந்து, வேறு மாதிரி சொல்லுவான்.

அவனும், தாயிடமும் காதலியிடமும் இருபக்கமாக மாட்டிக்கொண்டு போராடிக் கொண்டிருந்தான். என்ன செய்வது ? இதையெல்லாமா யோசித்து இந்த காதல் வருகிறது ? காதலிக்கும்போது, எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கிறது. திருமணத்துக்கு முயலும்போது, புதிதுபுதிதாக முளைக்கும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடிப் போராடி, அந்த தைரியமெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரம்போல் ஆகிவிடுகிறது

எது எப்படியோ !! சுந்தரி ரொம்பவே பாதிக்கப் பட்டிருந்தாள். சதா சர்வ காலமும், அழுதுகொண்டும், குழம்பியபடியுமே இருந்தாள். இந்த குழப்பத்தில், தனது கடைசியாண்டு பரீட்சையையும்கூட கோட்டைவிட்டாள். வாழ்க்கையையே இழந்தது போன்று இருந்தாள். யாரவது கேள்வி கேட்டால், "உங்களுக்கெல்லாம் உண்மையான காதலின் வலி புரியாது" என்பாள்.

அப்படியே, கன்னத்தில் ரெண்டு அப்பு அப்பி விடலாம்போல இருக்கும் ஹரிக்கு. ஆனாலும், அடிதாங்க மாட்டாளே. அதனால், அடிக்கவும் முடியாது. ஆக மொத்தில், அந்த மொத்த குடும்பத்தின் நிம்மதியும் போயிருந்தது.

ஒரு நாள், ஹரி தனது அலுவலகத்தில் இருக்கும்போது, ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. செய்திகேட்டதும், வேகமாக அந்த மருத்துவமனைக்கு விரைந்தான், அவன்.

சுந்தரி சிக்னலை கவனிக்காது சென்று, ஒரு விபத்தில் சிக்கியதாகவும், அவள் தலையில் அடிபட்டிருப்பதாகவும் சொன்னார்கள். மூளையில், ஒரு மிகச்சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். முதலில், ஆபரேஷன் பண்ணவேண்டுமென்று சொல்லி, பின்னர் மருந்து மாத்திரையிலேயே சிகிட்சையளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதிக வீரியம்கொண்ட மருந்துகள்தான் அவை.

சுந்தரி சிகிட்சையிலிருக்கும்போதே, திடீரென ஒருநாள், மதன் வந்து, "நம்ம நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் எங்க அம்மாவுக்கு சொல்லிப் புரியவைக்கிறேன்" என்று சொன்னான்.

சுந்தரியும் துளிகூட யோசிக்காமல், உடனேயே 'சரி' , என்றாள்.

"இதெல்லாம் எங்கப்போயி முடியப்போகுதோ தெரியல !! அந்தப் பையனோட அம்மாவும் பாவமில்லையா ?? பத்தாததுக்கு, நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் நம்மளப் பத்தி என்ன பேசுவாங்க ??" என்று கதறினாள், ஹரியின் அம்மா. ரேணுகாதான் சமாதானம் செய்தாள்.

எல்லோருமே, சுந்தரியிடம் பேசிப் புரியவைக்கப் பார்த்தனர். ஆனால், அவள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. ஆனால், சுந்தரி எதையும் கேட்பதாகத் தெரியவில்லை.

அடுத்தநாள், ஆசை ஆசையாகப் புடவைக்கட்டி, பூவைத்துக்கொண்டு, திருமணத்துக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

ஹரி எதிர்பார்த்ததுபோலவே, அன்று மதன் வரவில்லை. "எங்க அம்மா தற்கொலைக்கு முயற்சி பண்ணிகிட்டாங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னு புரியல. நான் அப்புறமா வர்றேன். புரிஞ்சிக்கோங்க" ,என்று ஒரு போன் மட்டும் வந்தது.

சுந்தரி, ரொம்ப சாதாரணமாகவே அதை ஏற்றுக்கொண்டாள். வீட்டில் உள்ள அத்தனைபேருக்கும் அது மிகவும் வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

ஆனால், அந்த அந்தநாளின் இரவிலேயே, வீறிட்டு அலறினாள் சுந்தரி. சத்தமென்றால், அப்படி ஒரு சத்தம். குய்யோ முய்யோவென்று அவள் கத்தியதில், திக்கென்று எழுந்துகொண்டாள் குழந்தை ராஜி.

அதன் பின், எல்லா இரவுகளிலும், சுந்தரி வீறிட்டு அலறுவதும், பகல்பொழுதில் யாருடனும் பேசாமல் மௌனம் சாதிப்பதும் தொடர்ந்தது. ஒவ்வொரு இரவிலும், சுந்தரியின் அலறல் கேட்டு, குழந்தையாக இருந்த ராஜி, எழுந்துகொண்டு அழுவது மிகவும் வேதனையாக இருந்தது.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் தங்களுக்கு இந்த திடீர் அலறல், ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை என்றும் சொன்னார்கள். ஒழுங்காக ஒரு பெண்பிள்ளையை வளர்க்கத் தெரியாமல், அந்தத் தெருவுக்கே தொந்தரவு கொடுப்பதாக, அரசல் புரசலாகப் பேசிக்கொண்டார்கள்.

நீண்ட யோசனைக்குப்பின், சுந்தரியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றான், ஹரி. சுந்தரியின் மனநிலை பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அதற்கு பல காரங்கள் இருக்கலாமென்றும் மருத்துவர் கூறினார். அந்த விபத்தோ, அதனால் எடுத்துக்கொண்ட ஹை டோஸ் மருந்துகளோ, இல்லை தொடர்ந்து ஏற்படும் மன உளைச்சலோ, எதுவாக வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம்.

ஆனால், இதற்குமேல் சுந்தரியை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல என்பதைமட்டும் தெளிவாகச் சொன்னார்கள். மீறி வைத்திருந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும்கூடச் சொன்னார்கள்.

"இப்பொழுதே சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தால், ஓரிரு ஆண்டுகளில் குணமாகிவிடுவாள்" , என்று அவர்கள் சொல்லிய ஒரே காரணத்தால், அவளை மனநலக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவளோடு சேர்ந்து, அந்த குடும்பத்தின் சந்தோஷமும் மொத்தமாகச் சென்றது.

இதையெல்லாம் யோசித்தபடியே, தூங்கிப் போனார் ஹரிஹரன்.

அந்த மாலை, தன்னுடைய அறைக்குள்ளிருந்த அத்தையிடம் வந்து, "அத்தை.. இந்த பூவ வச்சுக்கோயேன். உனக்கு பிச்சிப்பூ ரொம்ப பிடிக்கும்ல. அதனாலதான், அம்மாவும் கட்டி வச்சிருக்கா" , என்றாள் ராஜி.

பதில் சொல்லாமல், கட்டிலின்மேல் உட்கார்ந்திருந்தாள் சுந்தரி. சற்றும்கூட அசையாமல் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் ராஜியைப் பார்த்து, "உன்கிட்ட போன் இருக்கா ?"

"என்ன அத்தை ?"

"போன் இருக்கா ?"

தனது போனை எடுத்து சுந்தரியிடம் கொடுத்தாள், ராஜி. சுந்தரிக்கு, ஆண்ட்ராய்டு போனை இயக்கத் தெரியாது. வேகவேகமாக அவள் எண்களைச் சொல்ல, ராஜி டயல் செய்தாள்.

எதிர்முனையில், யாரும் எடுக்கவில்லை. இன்னொரு முறையும், அழைத்துப் பார்த்தார்கள். யாரும் எடுக்கவில்லை.

"அத்தை.. நீ மதன் மாமாவுக்கா போன் பண்ணுற ?"

"...." , சுந்தரி பதில் சொல்லவில்லை.

"நான் ஏன் கேக்குறேன்னா, மதன் மாமா இங்க இல்ல. அவர் லண்டன்ல இருக்காரு"

இதற்கும் சுந்தரி எதுவும் பதில் சொல்லவில்லை. சற்றுநேரம் அண்ணார்ந்து பார்த்து யோசித்துவிட்டு, மேஜை மேலிருந்த லாப்டாப்பைப் பார்த்தாள்.

"ஆர்குட், பேஸ்புக் இப்பவும் இருக்கா ? இல்ல அதுமாதிரி எதாவது...."

"இல்ல அத்தை, பேஸ்புக் இருக்கு. இதோ ஒரு நிமிஷம்" , என்று சொல்லிவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தைத் திறந்து கொடுத்தாள், ராஜி.

படபடப்போடு அதை வாங்கிப்பார்த்து, மதனின் பெயரைத் தேடிப்பார்த்தாள், சுந்தரி.

தனது பக்கத்தில், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சிரித்தபடி நின்றிருந்தான், அவன்.

"நீ மெண்டல் ஹெல்த் சென்டருக்குப் போனதுல இருந்து, ஒரு மூணு வருஷம் இருக்கும். அப்போவே, மதன் அங்கிளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவருக்கு இஷ்டம் இல்லென்னும், அவங்க அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம இருந்ததால, அவங்க சொந்தக்காரப் பொண்ண கல்யாணம் பண்ணிவச்சதாகவும் சொன்னாங்க. நம்ம வீட்டுக்குக்கூட வந்து, பத்திரிக்கை.."

சுந்தரியின் மனத்துக்குள், ஒரு பாரம் அழுத்தியது. கல்லால், இதயத்தை யாரோ அடித்ததுபோல இருந்தது. தனது வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். இரண்டு கைகளாலும், தனது கன்னத்தைத் தாங்கிப் பிடித்து அழுத்தினாள். அவளுக்கு வேர்த்தது.

திடீரென்று மறுபடியும், "வீல்ல்ல்ல்ல்ல்ல" , என்ற அலறல்.

"உன்ன யாரு இந்த வேலையெல்லாம் பாக்கச் சொன்னது ? அவள நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன். நீ என்னடான்னா, மறுபடியும் குழப்பத்தை உருவாக்கப் பாக்குற. இவ்ளோ படிச்சிருக்கேன்னு பேரு. எத சொல்லணும் எத சொல்லக்கூடாதுன்னு தெரியாதா ? அறிவில்லையா ? ", கொஞ்சம் அதிகமாகவே திட்டினார் ஹரி.

ராஜி, பதில் சொல்லாமல் நின்றிருந்தாள்.

அன்று இரவு, ராஜிக்கு அந்த அறையில் தங்கிக்கொள்ள, பயமாக இருந்தது. சுந்தரி ஒருவேளை, மறுபடியும் அலறினால் ? எனினும், ரேணுகாவிடம் இப்போது சென்று, இதைச் சொல்ல முடியாது. அதனால், பல்லைக் கடித்துக்கொண்டு சுந்தரியின் அருகில் படுத்துக் கொண்டாள்.

நடு இரவில், தன்னையும் அறியாமல், சுந்தரியின் மீது கைகளைப் போட்டு, அவளைக் கட்டிக்கொண்டாள் ராஜி. பல வருடங்களுக்குப் பின்னரும், தன் அத்தையை கட்டிக்கொண்டபோது, அவளுக்கு அந்த அதே பழைய உணர்வு ஏற்பட்டது.

சற்று நேரத்தில், தன்பிடியிலிருந்த சுந்தரி, குலுங்கி அழுதுகொண்டு இருப்பது தெரிந்தது.

எழுந்து உட்கார்ந்து, "என்ன அத்தை இது ? என் இப்படி அழுற ? என்ன ஆச்சு ?" , என்றாள்.

"ம்ஷ்ம்ம்.. இல்ல.. ஒண்ணுமில்ல.. ஒரு நொடிதான் இல்ல.. எல்லாமே போச்சு.. ஒருவேளை, அந்த விபத்து நடக்காம இருந்திருந்தா.. இந்த காதல் சரிவராதுன்னு நான் அப்போவே உணர்ந்திருந்தா.. ஒருவேளை காதலிக்காமலே இருந்திருந்தா.. என்னல்லாமோ தோணுது..

ஆனா, இப்போ யோசிச்சு ஒண்ணும் ஆகப்போறது இல்ல.. அது தான், எல்லாம் போச்சே" குமுறினாள், சுந்தரி.

"உண்மைதான் அத்தை. யாருக்கு என்ன போச்சோ எனக்குத் தெரியாது. ஆனா, எங்களுக்கு ஒரே நொடியில, எங்க சுந்தரியத்த எங்களை விட்டுப் போய்ட்டா.

தலநிறைய பூ வச்சிக்கிட்டு, சிரிச்சி சிரிச்சி எனக்கு கிச்சிலம் காட்டிகிட்டு, வாட்டர் கலர் வச்சி பெயிண்ட் அடிச்சிக்கிட்டு, அந்த பெயிண்ட என் கன்னத்துல தடவிகிட்டு.. இந்த வீட்டையே சுத்தி சுத்தி வந்த, அந்த சுந்தரியத்த போயிட்டா.

அவ போன பின்னாடி, இந்த வீடு எப்பவும் மாதிரி இல்ல. அப்பா, சிரிச்சி நான் பார்த்ததே இல்ல. அம்மா, ஒருநாள்கூட பிச்சிப்பூ வாங்குனது இல்ல. தாத்தாப் பாட்டியும் நிம்மதியா சாகல. மொத்தத்துல, உன் வாழ்க்கைல மட்டும் இல்ல, எங்க வழக்கையிலயும் பத்து வருடங்கள் சேர்ந்து போயிருச்சு.

நேத்துகூட, நீ வருவேன்னுறதால, அம்மா ஆசை ஆசையா பூ கட்டி வச்சிருந்தா. அம்மா கடுகடுன்னு பேசுவா. ஆனா, அவளுக்கு உன்ன ரொம்பப் பிடிக்கும். நீ என்னடான்னா, வந்ததும் வராததுமா, உன் காதலனைப் பத்திதான் தேடுற.

அதுக்குன்னு நான் காதல் தப்புன்னு சொல்லல. ஆனா, அது கொஞ்சம் இயல்பு வாழ்க்கைக்கும் ஒத்துவருதான்னு யோசிக்கணும். காதல் மாதிரியே, அன்பு, பாசம் எல்லாம்கூட உணர்வுகள்தானே. ஒரு உணர்வுக்காக, இன்னொரு உணர்வை காயப்படுத்துறது என்ன விதத்துல நியாயம் ?"

பெருமூச்சுவிட்டாள், சுந்தரி.

என்ன ? நம்மளவிட சின்னப்பொண்ணு நமக்கு அட்வைஸ் பண்ணுதேன்னு யோசிக்கிறயா ?? எனக்குகூட இப்போ உன் வயசுதான், பாத்துக்கோ. உனக்கு 24, எனக்கு 20. ஒன்னும் பெரிய வித்யாசம் இல்ல. முதல்ல உன் ட்ரெஸ்ஸிங் சென்ஸ மாத்தணும்"

சிரித்துக்கொண்டே, சுந்தரியை கட்டிப் பிடித்தாள்.

பல நாட்களுக்குப் பிறகு, அந்த மிகுதியான அன்பின் வெளிப்பாட்டால் அழுதாள், சுந்தரி.

அடுத்தநாள், காலையிலேயே எழுந்து, தனக்குப் பிடித்தமான ஒரு சுடிதாரைப் போட்டுக்கொண்டு, சமையலறைக்குள் நுழைந்தாள்.

"அண்ணி.. பிரிட்ஜுல பிச்சிப்பூ இருக்கா ? இல்லைன்னா ஒண்ணும் பிரச்னையில்லை. வண்டிக்காரர் வந்தா, மத்தியானம் வாங்குங்க. நானே, கட்டித் தர்றேன்"

சுந்தரியை இமைக்காது பார்த்தாள், ரேணுகா. அந்தப் பத்துவருட வலியையும் மறந்து, புன்னகைத்தாள். அவள் கண்கள், நிரம்பியிருந்தன.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் ஆர்வலர் 
புன்கண்ணீர் பூசல் தரும்

**STORY ENDS**

My other Tamil Short Stories, எனது பிற சிறுகதைகள் 

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..


If you are looking for some Tamil Stories for Reading or Tamil Stories Online, please visit APPLEBOX frequently. 

You have a lot of 
  • Tamil Stories with Moral, 
  • Tamil Stories for Kids, 
  • Enathu Sirukathaigal and Publicized Tamil Sirukathaigal 
  • Short Stories Tamil and 
  • Short Tamil Stories with Moral. 


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post