ஓடிப்போயிட்டாக - சிறுகதை (Short Story)“எங்க அப்பா, ஓடிப்போயிட்டாக டீச்சர் !!"

சுதந்திரக்கொடி கூறியதைக்கேட்டு, அந்த மொத்த வகுப்பறையும் விழுந்து விழுந்து சிரித்தது.

"என்ன புள்ள சொல்லுற ? யோசிச்சு சொல்லு.." என்று மறுபடியும் கேட்டாள், ஜெயந்தி டீச்சர்.

"சரியாத்தான் சொல்லுறேன் டீச்சர். எங்க அப்பா ரெண்டு வருஷம் முன்னாடி ஓடிப்போயிட்டாக !!"

ஜெயந்திக்கு சற்று குழப்பமாக இருந்தது.

"சரி, உங்க அம்மா என்ன புள்ள பண்ணுறாக ?" , என்று கேட்டாள்.

"எங்க அம்மா, சண்முகம் மாமாவ ரெண்டாவது கல்யாணம் கெட்டிகிட்டாக, டீச்சர்!!" என்று மறுபடியும், ஒரு விசித்திரமான பதிலைச் சொன்னாள் சுதந்திரக்கொடி

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..


புத்தி பேதலித்து தத்துபித்தென்று பதில் சொல்வதற்கு, சுதந்திரக்கொடி ஒன்றும் சாதாரண ஆளெல்லாம் கிடையாது. பள்ளியிலேயே சுட்டிப்பெண். படிப்பு, விளையாட்டு, வாய்ச் சாமர்த்தியம் என்று எல்லாவற்றிலும் கில்லி. இப்பொழுது சில நாட்களாக, ஏனோ தெரியவில்லை, அவள் கொஞ்சம் கவனக்குறைவாக இருக்கிறாள். ஆனாலும், இப்படியொரு பதிலைச் சொல்கிறாள் என்றால், யோசிக்கத்தான் வேண்டும். 

“இந்த விஷயத்தை இதற்குமேல், வகுப்பறையில் வைத்துக்கொண்டு பேசுவது சரியில்லை” , என்று நினைத்துக்கொண்டாள் ஜெயந்தி டீச்சர்.  ஏற்கனவே, மாணவர்கள் கிசுகிசுக்கத் துவங்கியிருந்தனர்.

"சரி, சரி. புள்ளைகளா, அவ சும்மா ஏதோ விளையாட்டுக்குச் சொல்லுறா. நான் அவள தனியா வைதுக்கிறேன். இப்போ நம்ம பாடத்துக்குப் போலாம்", என்று மொத்த வகுப்பின் கவனத்தையும் திசை திருப்பினாள்.

ஆனாலும், கொடியைப்பற்றிய கவலை அவளை அதிகமாகப் பற்றிக்கொண்டது.

அரசுப்பள்ளிகளில், பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களே படிக்கிறார்கள். அதில் பலரது கஷ்டங்கள் மிகவும் எமோஷனலாக இருக்கும். பத்து வருடங்களாக அரசாங்க டீச்சராக இருக்கும் ஜெயந்திக்கு இதெல்லாம் பழகிப்போனதுதான். ஆனாலும், இந்த கதை கொஞ்சம் "சொல்வதெல்லாம் உண்மை" வகையில் இருந்தது .

சுதந்திரக்கொடி நன்றாகப் படிக்கும் மாணவி. "நான் கண்டிப்பா கலெக்டரா ஆவேன் டீச்சர் !!" , என்று மிடுக்குடன் சொல்லித்திரியும் அந்த மான்குட்டியின் குடும்பத்தில், ஏதோ பெரிய குழப்பம் இருக்கிறது. தன்னால் முடிந்தவரை எதாவது செய்து, அதைத் தீர்த்துவிடவேண்டும் என்று தோன்றியது, ஜெயந்திக்கு.

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, கொடியின் வீட்டுக்கே சென்றாள், ஜெயந்தி டீச்சர்.

சற்று தயக்கத்துடன் கதவைத் தட்ட, வாசல் கதவு திறக்கப்பட்டது. அதைத் திறந்தது, கொடியின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும். நல்ல உயரம், மஞ்சள் நிறம், லட்சணமான முகம். எட்டுவயது பெண்ணின் அம்மா என்றெல்லாம் சொல்லமுடியாது. சாதாரண காட்டன் சேலையிலும் மிகவும் அழகாக இருந்தாள். 

"நீங்க ஆரு ?", என்றாள்.

அதற்குள், உள்ளேயிருந்து தாவிக்குதித்து வந்த கொடி, இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள். ஜெயந்தியை உள்ளே அழைத்துப்போய் அந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்தாள், கொடியின் அம்மா.

ஹாலோடு சேர்ந்த சமையலறையும், ஒரு சின்ன படுக்கையறையும் கொண்டு, ஓரளவுக்கு சுத்த பத்தமாக இருந்தது, அந்த வீடு. 

ஒரு ஓரத்தில், கொடியின் புத்தகங்கள் இறைந்து கிடந்தன. அநேகமாக, அவள் எதையோ படித்துக்கொண்டிருப்பாள் போலும். அதனருகே, கொடியின் தம்பி உட்கார்ந்து, ஸ்லேட்டில் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தான்.

"என்ன டீச்சர் ? அவ ஏதாச்சும் எடக்கு பண்ணிட்டாளா ? இப்படி திடுப்புன்னு வந்து நிக்கிறீகளே !!", என்று பதற்றத்தோடு கேட்டாள், கொடியின் அம்மா.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்", என்று ஜெயந்தி சொல்லவும் எதையோ யூகித்துக்கொண்டவளாய், கொடியையும் அவள் தம்பியையும் வெளியே அனுப்பினாள், மற்றவள்.

"கொடி, டீச்சருக்கு வடையும் டீயும் வாங்கிட்டு வர்றியா ? நமத்துப் போனதா வாங்கிட்டு வந்துறாத. புதுசா, சுடச்சுடப் போட்ட வடைய வாங்கு. நேரம் ஆனாலும் பரவாயில்ல. அப்புறம், கொடைய எடுத்துட்டுப் போ !! மோடமா இருக்குல்ல !!"

கொடியும், அவள் தம்பியும், ஒரு சின்னக் கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பினர். சற்று நேரத்தில், அவர்கள் தலை மறைந்தபின்,

"சொல்லுங்க டீச்சர், என்ன விஷயம் ?", என்றாள் கொடியின் அம்மா.

"அது வந்து !! கொடியோட அப்பா ", கொஞ்சம் இழுக்கத்தான் வேண்டியிருந்தது. எதையாவது கேட்கப்போக, மூஞ்சிலடித்தாற்போல் பதில் சொல்லிவிட்டால். அதனால், ரொம்பவே பதுவிசாகக் கேட்டாள், ஜெயந்தி.

"ஓடிப்போயிட்டாக டீச்சர்"

"என்ன இப்படி சொல்லுறீக !!"

"வேற எப்படி சொல்லணும் டீச்சர் ? ஓடிப்போனவன, ஓடிப்போனவன்னு தானே சொல்லமுடியும். அந்த ஆளுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்ல. குடி, சிகிரெட்டு, சூதாட்டம்னு எல்லாம். ஒருவேலைக்கும் போறது கிடையாது. ஊரச்சுத்தி லச்சக்கணக்குல கடன். 

ஒருநாள், எல்லாத்தையும் என் தலைல கட்டிட்டு, ஓடிப்போயிட்டான், டீச்சர். ஓடிப்போயிட்டான். நானும், திரும்பி வருவான்னு நினச்சேன். நம்புனேன். காத்திருந்தேன். 

அப்புறம்தான், தெரிஞ்சிது. அவன் என்ன மொத்தமா, அடகு வச்சிட்டு ஓடிப்போயிட்டான். மொத்தமா, அடகு வச்சிட்டு.." , குமுறி விட்டாள்.

ஜெயந்திக்கு என்னவோ போலிருந்தது. தன்னால் முடிந்தவரை ஆறுதல் கூறிவிட்டு, அவளது இரண்டாவது திருமணம் பற்றியும், கொடி அதைச் சரியாகப் புரிந்துகொண்டாளா, என்பது பற்றியுமான பேச்சைத் தொடர்ந்தாள். 

ஏனென்றால், இந்தக் குழப்படியில் 'கொடியின் மனநிலையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது' , என்பது மட்டுமே, ஜெயந்தியின் நோக்கமாக இருந்தது.

"டீச்சர், அது கல்யாணமே இல்லை. அவன் என் புருஷனுமில்ல. இந்த சண்முகம், அந்த ஓடுகாலிக்கு கடன் கொடுத்தவுகள்ல ஒருத்தன். இவன்தான், இப்போதைக்கு என்னைய வச்சிக்கிட்டு இருக்கான்", என்று சொன்னாள் கொடியின் அம்மா.

ஜெயந்திக்கு தூக்கிவாரிப்போட்டது. தன்னையும்மீறி, கோபம் கொப்பளித்தது.

"தப்பு பண்ணுறீகளே !! பெத்தவளே, தப்பு பண்ணுனா புள்ளைக என்ன பண்ணும் ?? கொஞ்ச நாளாவே, கொடி எப்புடி குழம்பிப்போய் கெடக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு ? பிள்ளைகளப் பத்தி யோசிக்கவே மாட்டீகளா ?", மனதின் ஆழத்தில் இருந்து வந்தன அந்த வார்த்தைகள். 

அழுதுகொண்டு இருந்த கொடியின் அம்மா, இப்போது ஜெயந்தியின் கண்களைப் பார்த்தாள்.

"நான் என்ன பண்ணறது டீச்சர் ?? அந்த ஓடுகாலி, போன மறுவாராமே அவனுக்கு கடன் கொடுத்தவன்லாம் எம்பூட்டு வாசல்ல வந்து நின்னு கத்த ஆரம்பிச்சிட்டானுவ. வட்டி குட்டின்னு போட்டு, மலை மாதிரி இருந்துது அவன் வாங்கிவச்சிருந்த கடன். 

அடைக்கமுடியாம, நாங்களும் எங்கயாவது ஓடிப்போயிரலாம்னா, கடன் குடுத்தவம்பூரா காவகாத்துட்டுக் கிடந்தானுவ. 'நீ வா' , 'உன் புள்ளய அனுப்பு' ன்னு அசிங்க அசிங்கமாப் பேசுனானுவ. 

காலுல விழுந்து கதறுனேன். ஊருல ஒருத்தங்கூட உதவல. கடைசியா, போலீஸ்கிட்டப் போனோம். அவுகளும்  பஞ்சாயத்துப் பண்ணி, நாங்க இருந்த அந்த ஒத்தக்கட்டு வீட்டையும், விக்கச் சொன்னாக. அந்தப் பணத்தவச்சி, பாதி ஆட்களுக்குப் பைசல் பண்ணுனோம். மீதி பேரச் சமாளிக்க முடியல. 

கொஞ்ச அவகாசம் குடுங்க. எந்த வேலையானாலும் பாத்து, கடன அடைச்சிருவேன்னு சொன்னேன். அதுக்குக்கூட விடமாட்டேன்னுட்டானுவ"

ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் அழுதாள். அவள் முகம் சிவந்தது.

"இப்படியே டார்ச்சர் பண்ணுனா, உங்க பேருல லெட்டர் எழுதிவச்சிட்டு, நாங்க மூணுபேரும் செத்துப்போயிருவோம்னு சொன்னேன். கலெக்டர் ஆபீஸ் முன்னாடியே, ஒருத்தன் கருகிச் செத்தான், குழந்தையோட. பேப்பர்ல, செத்தவம்பேரு வந்ததே தவிர, கடன் குடுத்தவம்பேரு வரலயேன்னு, எகத்தாளம் பேசுனானுவ !!"

உதட்டை ஒருபக்கமாக இளித்து, இளக்காறமாகச் சிரித்தாள்.

"வாடகைக்கு யாரும் வீடு தரல. ஒரு கொட்டாயிலே, புள்ளைகள வச்சிகிட்டு, வாரக்கணக்கா இருந்தேன். பெரியவ பரவால்ல, சின்னவன் பசியில அழுதான். சகிக்க முடியாம, ஒரு நாள் செத்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன், டீச்சர். 

அந்த நேரம் பாத்து, சுதந்திரக்கொடி ரேங்க் கார்ட கொண்டாந்து நீட்டுச்சி. நீங்க சொன்னீகளாமே, இப்படிப்  படிச்சா கலெக்டர் ஆயிரலாம்னு. அது கண்ணுல ஆயிரம் கனவு. அதக் கொல்ல, எனக்கென்ன உரிமையிருக்கு ?"

மூக்கை உறிந்துகொண்டு, விட்டத்தைப் பார்த்தாள்.

"யோசிச்சிப் பாத்தேன் டீச்சர். இவனுவல்லாம் காசுக்காகவா, இப்பிடி மொச்சிகிட்டுக் கெடக்கானுவ ?? அவனுவளுக்கே தெரியும். இந்தக் கட்டையால, இருபது வருஷம் ஓடா உழைச்சாக்கூட, இவ்வளவு காச அடைக்க முடியாதுன்னு. 

கேவலம், இந்த தோலுக்கும் உடம்புக்கும் அலந்துபோயி, இப்புடி அடிச்சிட்டு கெடக்காணுவ. இதப் பிச்சித்  திங்காம, இந்தக் கழுகுக்கூட்டம் போகாதுன்னு புரிஞ்சிது. அதுக்குன்னு, எல்லாருக்கும் பிச்சிப்போட மனசு வரல. 

இந்த சண்முகம் மட்டும், கொஞ்சம் வித்தியாசம். இவனுக்குப் பொண்டாட்டி கிடையாது. எல்லாரு கடனையும், தானே அடைச்சிடுறதா சொன்னான். சொன்னத செஞ்சும்புட்டான். தலையாட்டிகிட்டு அவனுக்கே வைப்பாட்டியா உக்காந்துட்டு இருக்கேன்"

இதைச் சொல்லும்போது, அவள் தலை குனிந்தாள். வீட்டின், ஒரு மூலையை வெறித்துப் பார்த்துக்கொண்டு, மறுபடியும் பேச ஆரம்பித்தாள்.

"கணக்கு எழுதிட்டு இருக்கேன் டீச்சர் !! எம்பூட்டுப் புள்ள, பெரியவளா ஆவுறதுக்குள்ள, இந்த சாக்கடைய முழுகிட்டு கண்காணாத ஊருக்குப் போயிருவேன். கால் வயித்துக்குன்னாலும், உழைச்சி கஞ்சி குடிப்பேன். நல்லாப் படிச்சி, எம்புள்ள எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும், என்னோட ஒவ்வொரு நாள் பாவத்தையும் கழுவும். நான் நம்புறேன்"

நிமிர்ந்து, ஜெயந்தியின் கண்ணோடு கண்பார்த்து, சொன்னாள்.

"எம்புருஷனுக்கு, பாட்டில் பாட்டிலா சாராயம் வித்த அரசாங்கத்துக்கு இல்லாத மானம், என்னைய அடகுவைச்சிட்டு ஓடிப்போன அந்தக் குடிகாரனுக்கு இல்லாத மானம், ஒண்ணுமில்லாத ஒரு பொம்பள சதைக்கு ஆசப்பட்டு பிச்சிப்புடுங்குன இந்தக் கூட்டத்துக்கு இல்லாத மானம், பொது இடத்துலயே, கடனோட கொடுமையாலத்  தீயில கருகுனக் குழந்தையப் பாத்து, கைகட்டி நின்னுட்டு, அடுத்த நாளே அத மறந்தும் போன, உங்க எல்லாருக்கும் இல்லாத மானம், எனக்கு மட்டும் எதுக்கு டீச்சர் ?? எனக்கு மட்டும் எதுக்கு ?? 

நான் மானமில்லாதவளாவே இருந்துட்டுப் போறேன். உங்க எல்லாரு முன்னாலயும், நான் மானமில்லாதவளாவே இருந்துட்டுப் போறேன்..." , ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்..

அந்த எதார்த்தத்தைக் கண்டு, நிலைகுத்திப்போய் உட்கார்ந்திருந்தாள் ஜெயந்தி டீச்சர் !!!

**STORY ENDS**

My other Tamil Short Stories, எனது பிற சிறுகதைகள் 

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, Please click the play button here..


If you are looking for some Tamil Stories for Reading or Tamil Stories Online, please visit APPLEBOX frequently. 

You have a lot of 
  • Tamil Stories with Moral, 
  • Tamil Stories for Kids, 
  • Enathu Sirukathaigal and Publicized Tamil Sirukathaigal 
  • Short Stories Tamil and 
  • Short Tamil Stories with Moral. 


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post