'நளதமயந்தி கதை' - ஒரு மகாபாரத கிளைக் கதையாகும். தமிழில் புகழேந்திப் புலவர் அவர்கள் இதை நளவெண்பாவாக இயற்றியுள்ளார். இந்த நளதமயந்தியின் கதையைக் கேட்பவர்களுக்கு சனிபகவானின் பாதிப்பு குறையும் என்றொரு நம்பிக்கை உண்டு. அப்படிப்பட்ட இந்தக் கதையை நாமும் இன்று கேட்கலாமா ?
நன்றி பாராட்டல்
1. புகழேந்திப் புலவரின் நளவெண்பா
2. சகோதரி ரெஜி அவர்கள் எழுதிய கட்டுரை
3. ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட நாடகக் கட்டுரை
4. செ.அருட்ச்செல்வப் பேரரசன் அவர்களது கதை வடிவம்
5. நளனின் முற்பிறவி பற்றிய விகடன் கட்டுரை
6. சகோதரி கோமதி அவர்கள் எழுதிய Summarization
இவையே, நான் எடுத்துக்கொண்ட மேற்கோள்களாகும். எனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள எனக்கு உதவியாக இருந்த இவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதை தொடங்குகிறது
மகாபாரத வன பருவத்தில், நள தமயந்தியின் முற்பிறவியோடு ஆரம்பிக்கிறது இந்தக் கதை. முனிவர் ஒருவர் பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கு இந்தக் கதையை எடுத்துச் சொல்ல, அவர் அதைக் கேட்கலாகிறார்.
நளதமயந்தியின் முற்பிறவிக் கதை
ஒரு அடர்ந்த காட்டிலிருந்த குகை ஒன்றில், ஒரு வேட்டுவத் தம்பதியர் வசித்து வந்தார்கள். அந்த வேடனின் பெயர் ஆகுகன். அவனுடைய மனைவியின் பெயர் ஆகுகி. அவர்கள் இருவரும், பரஸ்பரம் அன்பும் காதலும் நிறைந்த தம்பதியர்.
ஒரு நாள், அவர்கள் வாழ்ந்த அந்த காட்டுப் பகுதிக்கு முனிவர் ஒருவர் வருகை தந்தார். ஆகுகனும் ஆகுகியும் அவரை நன்கு உபசரித்தார்கள். அந்த நாள் சீக்கிரமே முடிந்துபோக, அன்றிரவு முனிவர் அவர்களுடனேயே தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
வெளியிலோ பயங்கர குளிர். ஆனால், அவர்கள் வாழ்ந்த குகையோ, மிகவும் சிறியது. அதில், இருவர் மட்டுமே தங்க இயலும். ஆதலால், ஆகுகன் தனது மனைவியைத் தன்னுடன் வெளியே வைத்திருக்க இயலாமல், குகையின் உள்ளே அந்த முனிவர் இருந்தாலும் பரவாயில்லையென்று எண்ணி, "நீ இந்த ஓரத்தில் தூங்கலாம்" என்று அவளை உள்ளே உறங்கச் செய்தான்.
காலையில் கண்விழித்த முனிவர், "எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தனது மனைவி மீது இவ்வளவு நம்பிக்கை வைத்தவன் எவனுமே இல்லை" , என்று சொல்லி அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்தார்.
ஆனால், கர்ம வினையோ என்னவோ, சில நாட்களில் மிருகத்தால் அடித்துக் கொல்லப்பட்டான் ஆகுகன். துன்பம் தாங்காத ஆகுகியும், அவனுடனேயே இறந்து போனாள்.
இந்த ஜென்மம் இப்படியே முடிந்து போக, அடுத்த ஜென்மத்தில் ஆகுகன் ஒரு நாட்டின் இளவரசனான நளனாகவும், ஆகுகி ஒரு நாட்டின் இளவரசியான தமயந்தியாகவும் பிறந்தார்கள். முனிவரோ அன்னப் பறவையாகப் பிறந்தார்.
அதன் பின், இந்த 3 பேருக்குள்ளும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது ?
அந்த ஜென்மத்தில் நளனும் தமயந்தியும் எப்படி காதலர்களானார்கள் ?
அவர்கள் வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளெல்லாம் வந்தன ?
அதை அவர்கள் எப்படியெல்லாம் சமாளித்தார்கள் ?
இது தான், இந்த நளதமயந்தியின் கதை.
நளன் மற்றும் தமயந்தியின் காதல்
நிடத நாட்டு மன்னனின் மகன்தான் நளன். நளன் ஒரு நாள் தனது நந்தவனத்தில் நடந்து கொண்டிருக்கும்போது, அழகான அன்னப் பறவை ஒன்றைப் பார்த்தான். அந்த அன்னப் பறவையை காவலாளிகளின் உதவியோடு பிடித்து பக்கத்தில் வைத்துப் பார்க்க, அந்தப் பறவை நளனிடம் பேசியது.
"நீ மிகவும் அழகா இருக்கிறாய். அறிவாக இருக்கிறாய். இந்த நாட்டு மக்கள் மீது பாசமாகவும் இருக்கிறாய். உனக்கென்று ஒரு மகாராணி வந்தால், அவளும் அழகாக இருக்க வேண்டும். அறிவாக இருக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் மீது பாசதோடும் இருக்க வேண்டும். அல்லவா !!", என்றது அன்னம்.
"ஆம்", என்றான் நளன்.
"அதே தான். அப்படிப்பட்ட பெண்ணொருத்தி இருக்கிறாள். நான் உனக்கு அவளைப் பற்றி சொல்லவா ?", என்று சொல்லி தமயந்தியின் அழகு, அறிவு அனைத்தையும் மன்னனிடம் வர்ணித்தது அன்னம்.
இதைக் கேட்ட நளனுக்கு தமயந்தியைப் பார்க்காமலேயே அவள் மீது காதல் வந்துவிட்டது.
பின்னொரு நாளில், "நள ராஜா, நான் இப்போது தமயந்தியிடம் தூது சொல்லவா ? சென்று, உனது அருமை பெருமைகளை எடுத்துரைக்கவா ?" என்று அன்னம் கேட்க, நளனும் அதற்கு சம்மதித்தான். உடனேயே, பறந்து சென்று தனிமையிலிருந்த தமயந்தியை சந்தித்தது அன்னம். நளனின் அருமை பெருமைகளை ஓரு பாடலாகப் பாடியது.
இதனால், தமயந்திக்கும் நளன் மீது காதல் வந்தது.
இப்படி இந்த அன்னத்தின் மூலம், நளனும் தமயந்தியும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலைப் பரிமாறிக் கொண்டார்கள்.
தமயந்தியின் சுயம்வரம்
இவையெல்லாம் தமயந்தியின் தந்தைக்குத் தெரியதில்லையா ? அதனால் ஒருநாள், அவளது தந்தையான வீமன் அவளுக்கு சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த சுயம்வரத்திற்கு பல நாட்டு அரசர்களும், இளவரசர்களும், அவர்களோடு போட்டியிட்டுக் கொண்டு தேவர்களும் கலந்துகொள்ள வந்தார்கள். இதில் சில தேவர்களுக்கு தமயந்திக்கும் நளனுக்கும் மத்தியிலுள்ள காதல் தெரியவர, அவர்களெல்லோரும் நளனுடைய உருவத்திலேயே மாறி வந்தார்கள். அதில், சனிபகவானும் ஒருவர்.
ஆக மொத்தத்தில், சுயம்வரத்தில் நளனை அடையாளம் கண்டு அவன் கழுத்தில் மாலையைப் போடும் நம்பிக்கையோடு வந்த தமயந்திக்கு ஒரு குழப்பம் உருவானது. அந்த இடத்தில், கிட்டத்தட்ட 6 பேர் அன்னப்பறவை வர்ணித்த நளனைப் போலவே இருந்தார்கள் . இதில் உண்மையான நளன் யாரென்று யோசித்துப் பார்க்கும் போது, "தேவர்கள் என்பவர்கள் உருவம் மாற வல்லவர்கள். ஆனால், மனித உருவுக்கு மாறினாலும், அவர்களது கண்ணிமைகள் மட்டும் இமையாது", என்று அவளது ஆசிரியர்கள் சொன்னது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
இதன் மூலம், நளனைக் கண்டுபிடித்து அவனுக்கு மாலையிட்டாள் தமயந்தி. அவர்களது திருமணமும் இனிதாக நடந்து முடிந்தது.
சனி பகவானின் கோபம்
இந்தத் திருமணத்திற்குப் பின், நளன் தமயந்தியோடு தனது நாடான நிடத நாட்டுக்கு வர, சுயம்வரத்திற்கு வந்து ஏமாந்துபோன அத்தனை தேவர்களுக்கும் கோபம் கொப்பளித்தது. சனிபகவானுக்கு கோபம் கொஞ்சம் அதிகமே !! ஆதலால், அவர் நளனைத் துன்பப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.
இப்படியிருக்க, நளனது தந்தை நளனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை மகாராஜாவாக அறிவித்தார். நளனும் செங்கோல் செலுத்தி ஆட்சியைத் தொடங்கினான். நல்ல மன்னன் என்று பெயர் வாங்கினான்.
இத்தோடு, நளதமயந்தியின் இல்லற வாழ்க்கையும் இனிதே நடக்க, அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் இந்திரசேனா, இந்திரசேனன் என்று அழைக்கப்பட்டார்கள்.
இன்னொரு பக்கம் சனி பகவானோ, நளனைத் தீண்ட தக்கதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.
சனிபகவானுக்கு என்று ஒரு நியதி உண்டு. அவர் தனது கடமையிலிருந்து தவறாத ஒரு மனிதனைப் பிடிக்க மாட்டார். இப்படியிருக்க, கடமையில் தவறாத நளனைப் பிடிக்க முடியாதல்லவா !! ஆகவே தான் தாமதம்.
இந்நிலையில், ஒருநாள் கோயிலுக்குச் சென்ற நளன் தனது கால்களை சரியாகக் கழுவாமல் விட, "இவ்வளவு பெரிய மன்னனுக்கு காலைக் கூட ஒழுங்காகக் கழுவத் தெரியாதா ? அப்படியென்ன அவசரம் ? அவசர புத்தி, நாட்டு மக்களை நீதி நெறி வழுவாமல் ஆட்சி விடுமா என்ன ?", என்று சொல்லி கழுவாத கால் வழியாக நளனைப் பிடித்துக் கொண்டார்.
நளனின் வீழ்ச்சி
எல்லாருடைய வீழ்ச்சிக்குப் பின்னும், நேரம், காலம் என்பதை விட, அவர்களிடமிருக்கும் கெட்ட பழக்கமே காரணமாக இருக்கும். நல்ல நேரம் இருக்கும் வரைக்கும், அந்த கெட்டப் பழக்கம் துன்பத்தைத் தருவதில்லை. ஆனால், கெட்ட நேரம் வரும்போது, அந்த கெட்டப் பழக்கமே வீழ்ச்சிக்குக் காரணமாகிறது.
அது மாதிரி, நளனுக்கும் ஒரு கெட்டப் பழக்கமும் இருந்தது. அதுதான் சூதாடும் பழக்கம். மகாபாரதத்தில் எந்த சூதாட்டம் பாண்டவர்களைத் தெருவில் நிறுத்தியதோ, அதே சூதாட்டம்தான் இந்த நளனையும் தெருவில் நிறுத்தக் காத்திருந்தது.
அதன்படி, நளனது அமைச்சரான புட்கரன் ஒருநாள் நளனை சூதாட அழைத்தான். சூழ்ச்சியின் மூலம், அந்த சூதாட்டத்தில் நளனைத் தோற்கடித்தான். நளனது நாட்டையும் ஆட்சியையும் பெற்றுக்கொண்டு, அவனைக் காட்டுக்கு வனவாசம் போகும்படி பணித்தான். நாடிழந்த நளன், வேறு வழியின்றி தனது நாட்டை விட்டு வெளியேறத் தயாரானான்.
நளனும் தமயந்தியும் வனவாசம் செல்லல்
இப்போது நளன் தனது குடும்பத்தோடு வனவாசம் மேற்கொள்ள வேண்டும். யாருடைய கண்ணிலும் படாமல் எங்காவது போய் வாழவேண்டும். இப்படி, தனது அடையாளத்தைத் தொலைத்து வாழும் சூழ்நிலையில், தமயந்தி தன்னுடைய 2 குழந்தைகளையும் அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்தாள். அவள் மட்டும் நளனைப் பின்தொடரலானாள்.
இப்படி காட்டுக்குச் சென்ற நளனும் தமயந்தியும் அங்கு அரும்பாடு பட்டனர். இருவருக்கும் சரியான சாப்பாடு கிடையாது. தண்ணீர் கிடையாது. சோர்ந்து மட்டுமே மிஞ்சியது. இந்நிலையில், ஒருநாள் மயங்கியே விழுந்தாள் தமயந்தி. இதைப் பார்த்த நளன், அவளை அவனது தந்தையான வீமனின் நாட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினான். அவள் அதற்கு மறுப்பு தெரிவித்தாள். துன்பத்தில் அவனைப் பிரியேன் என்றாள்.
இதனால், வருத்தமுற்ற நளன் ஒருநாள் தமயந்தி நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிக்கும் போது , அவளை விட்டு நீங்கி தான் மட்டும் நடந்தான். அவன் அவ்வாறு எழுந்து சென்றதற்கு காரணம் வேறென்ன ? தான் போய்விட்டால், காட்டில் தமயந்தி தனியாகக் கஷ்டப்படாமல், அவளது தந்தை வீட்டுக்கே சென்று விடுவாள் என்ற எண்ணம் தான்.
ஆனால், தமயந்திக்கோ சடுதியில் ஒரு ஆபத்து வந்தது. தூக்கத்திலிருந்து அவள் கண்விழித்துப் பார்க்கையில், அவளை ஒரு மலைப்பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது. அவள் பயந்து கதறினாள். அவள் அலறல் கேட்டு, ஒரு வேடன் வந்து அவளைக் காப்பாற்றினான். காப்பாற்றியவனுக்கு அழகுச் சிலை போன்ற தமயந்தியின் மீது ஆசை ஏற்பட்டது. அவன் அவளை அடைய நினைத்தான். தமயந்தி பயந்து ஓட, அவளைத் துரத்தினான்.
தமயந்தி ஓடினாள், ஓடினாள், காட்டின் எல்லை வரை ஓடினாள். காட்டைத் தாண்டி, சேதி நாட்டு எல்லைக்குள் கால் வைத்தாள். வேஷம் போட்டுக்கிட்டு, அந்த நாட்டு அரண்மனையில் ஒரு பணிப்பெண்ணாக வாழ ஆரம்பித்தாள். அதே சமயம், அவளது தந்தையான வீமன் அங்கு விருந்துக்கு வர, தனது மகளை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.
"மகளே, என்ன இது ? தந்தை நானிருக்கு உனக்கு ஏன் இந்தக் கோலம் ?", என்று கடிந்து கொண்டு அவளைத் தன்னுடைய நாட்டுக்கே அழைத்துச் சென்றார். நீண்ட நாட்களுக்குப் பின், தனது குழந்தைகளை சந்தித்து இளைப்பாறினாள் தமயந்தி.
பின், நளனுக்கு என்னவாயிற்று ?
ஆக, இப்போது நளன் நினைத்தபடியே அவளது அப்பா வீட்டில் குழந்தைகளுடன் அடைக்கலமாகி விட்டாள் தமயந்தி. ஆனால், தமயந்தியைப் பிரிந்து சென்ற நளனுக்கு என்ன நேர்ந்தது ? பார்க்கலாமா ?
தமயந்தியைப் பிரிந்த நளன், அடர்த்தியான காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான். அப்போது "என்னைக் காப்பாற்றுங்கள் !! காப்பாற்றுங்கள் !!" என்று அவனுக்கு ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் வந்த திசையை நோக்கிப் பார்க்கும் போது, அங்கு ஒரு மரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பாம்பும் மாட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பாம்பே தன்னைக் காப்பாற்றும்படி கத்திக்கொண்டிருந்தது. அதன் பெயர் கார்க்கோடகன். விசேஷ சக்திகள் வாய்ந்த பாம்பும் கூட.
ஆக, அந்த சத்தத்தைக் கேட்ட நளன் அந்தப் பாம்பின் அருகே சென்றான். அதைக் காப்பாற்றவும் செய்தான். அந்தப் பாம்போ மாறாக அவனைக் கொத்தியது. அதன் விஷம் அவன் உடம்பில் ஏறியதும், கூன் விழுந்த கிழவன் போலானான் நளன்.
"அட கார்கோடகா .. என்ன இது ? உனக்கு உதவியதற்கு கைமாறா ?", என்று அவன் கேட்க
"உனக்கு உதவும் நிமித்தமாகவே உன்னைக் கொத்தினேன். இந்த உருவம், எதிரிகளிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்", என்றது பாம்பு. மேலும், அவனிடம் ஒரு அழகிய உடையைக் கொடுத்து "நளராஜா !! உனது அழகான உருவம் உனக்கு எப்போது வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்போது இந்த உடையை அணிந்துகொள். உன் உருவம் மீண்டும் பழைய நிலைக்கு மாறும்" என்று கூறி அங்கிருந்து விலகியது.
இப்படியாக கார்கோடகனிடமிருந்து மந்திர உடையைப் பெற்ற நளன், அயோத்தி நாட்டைச் சென்றடைந்தான். அங்கு ஓர் அரசனுக்குத் தேரோட்டியாகப் பணியாற்றினான். அவனுக்கு மிகவும் வேகமாகத் தேர் ஓட்டத் தெரியும். அவன் அந்த வித்தையை மன்னனுக்குக் கற்றுக்கொடுக்க, மன்னனும் ,'ஒரு மரத்திலிருக்கும் இலைகளை எப்படி வேகமாக எண்ணுவது ?' என்னும் கலையை நளனுக்கு சொல்லிக் கொடுத்தான்.
தமயந்தியின் இரண்டாம் சுயம்வரம்
இந்த சமயத்தில், தமயந்திக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "நளன் எங்கே இருக்கிறான் ? அவனை எப்படி இங்கு மறுபடி வரவழைப்பது ?" என்பதே அந்த சந்தேகம். அதற்கு விடைகாண எண்ணிய அவள் நளனை எப்படியாவது தன்னைத் தேடி வரும்படி செய்ய வேண்டும் என்பதற்காக, தந்திரமான திட்டத்தையும் தீட்டினாள்.
அதாவது, தனது தந்தையிடம் சொல்லி தனது இரண்டாவது சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள். பாருங்கள் அந்த காலத்திலேயே ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணத்தின் அவசியத்தைப் புரிந்து வைத்துள்ளார்கள். அதனால், பல நாட்டு அரசர்களும் விதர்ப நாட்டுக்கு விரைந்தார்கள். அவர்களுள், அயோத்தி நாட்டு மன்னனும் ஒருவன். அப்படியெனில், அவனது தேரோட்டியான நளன் ? இதிலென்ன சந்தேகம் ? தமயந்தியின் திட்டம் சரியானதுதான். அயோத்தி மன்னனின் தேரோட்டியாக நளனும் அங்கு வந்திருந்தான். நளனுடைய பாதம் அந்த இடத்தில் பட்ட உடனேயே, தமயந்தியின் உள்ளுணர்வு அவளைப் பாடாய்ப் படுத்த, அவளது கண்கள் நளனைத் தேடின.
அதே நேரத்தில், சுயம்வரமும் ஆரம்பித்தது. எல்லா மன்னர்களும் வந்து உட்கார்ந்திருக்க, அரங்குக்குள் நுழைந்தாள் தமயந்தி. அதே சமயத்தில், சனிபகவான் நளனைப் பிடித்து ஏழரை ஆண்டுகள் முடிவடைய, அவரும் அவனை விட்டு நீங்கினார். எத்தனை தொந்தரவுகள் கொடுத்தும், நேர்மை தவறாத நளனை ஆசிர்வதித்தார்.
ஆக, நளன் மறுபடியும் தனது தோற்றத்தை மாற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தான். தமயந்திக்கு சுயம்வரம் நடக்கும் காட்சியை பார்த்த மாத்திரத்தில், கார்கோடகன் கொடுத்த அந்த உடையை அணிந்து மீண்டும் அழகிய உருவம் பெற்றான். ஏற்கனவே, உள்ளுணர்வால் நளன் அங்குதான் இருக்கிறான் என்று நினைத்திருந்த தமயந்தியின் முன்னால் சென்று நின்றான். தமயந்தி மறுபடியும் நளனுக்கே மாலை சூட்ட மறுபடியும் அவர்கள் இருவரும் வாழ்வில் ஒன்றிணைந்தனர்.
நளன் மீண்டும் ஆட்சியைப் பெறுதல்
இந்த திருமணத்திற்கு பிறகு, தமயந்தியின் தந்தையான வீமன் நளனிடம் " நான் உங்களுக்கு என்ன சீர்வரிசை தர வேண்டும் ?" என்று கேட்க, அதற்கு நளன் "உங்கள் படையுதவி வேண்டும். இழந்த எனது நாட்டை நான் மீண்டும் கைப்பற்ற வேண்டும்" என்றான்.
வீமனும் நளன் கேட்ட படைகளை கொடுக்க, அதுவரை நிடத நாட்டில் கொடூரமாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த புட்கரனைத் தோற்கடித்து மறுபடியும் ஆட்சியைப் பிடித்தான் நளன். மீண்டும், செங்கோல் செலுத்தி ஆட்சிபுரியவும் ஆரம்பித்தான்.
நளதமயந்தியின் வேண்டுதல்
இப்படியாக, அனைத்து துன்பங்களும் நீங்கிய பின்னர், நளனும், தமயந்தியும் கோயிலுக்குச் சென்று வழிபடும் போது சனி பகவான் அவர்களுக்குக் காட்சியளித்து, "நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்கு கொடுத்த துன்பம் தவறு. ஆதலால், உங்களுக்கு ஏதாவது ஒரு வரத்தை நான் தர விரும்புக்கிறேன்" என்று கேட்டார்.
அந்த சமயத்தில், நளன் தனக்காக எதுவும் கேட்கவில்லை. "பகவானே !! நான் பட்ட கஷ்டத்தை இந்த உலகத்தில் யாருமே படக்கூடாது. நாடிழந்து, வீட்டிழந்து , அடையாளமிழந்து வாழும் நிலை எந்தவொரு மனிதனுக்கும் வரக் கூடாது.
அதே போல, என்னுடைய மனைவி பட்ட கஷ்டத்தை வேறு எந்தவொரு பெண்ணும் படக்கூடாது. தனது கணவனைப் பிரிந்து தாய் தந்தையரின் வீட்டுக்குச் சென்று உட்காரும் நிலைமை எந்தவொரு பெண்ணுக்கும் வரக் கூடாது. அதனால், எங்கள் கதை அதாவது இந்த நளதமயந்தியின் கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் உங்களுடைய பாதிப்பிலிருந்து நீங்கள் விடுவிப்பு கொடுக்க வேண்டும்", என்று மட்டுமே கேட்டானாம்.
அதனாலேயே, இந்த நளதமயந்தி கதையைக் கேட்டால், சனியின் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கை பலர் மத்தியிலும் உண்டு.
இந்த நம்பிக்கை உண்மையா, பொய்யா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த கதையில் வருவது போல, நாடிழந்து, வீடிழந்து , அடையாளம் இழந்து திரிபவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் நல்லதொரு வாழ்க்கை அமையட்டும் என்று இறைவனை வேண்டி இந்தக் கதையை முடிக்கிறேன். நன்றி,
Tags:
purana kathaigal