குண்டலகேசியின் கதை - Aimperum Kappiyangal


STORY SOURCE - Tamilnadu Stateboard Syllabus ( With Modified Screenplay)

நூற்குறிப்பு 

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமயத்தைச் சார்ந்த நூலாகும். இதை இயற்றியவர் நாதகுத்தனார். இதற்கு குண்டலகேசி விருத்தம், தர்க்கநூல் ஆகிய வேறு பெயர்களும் உண்டு.

நூல் முழுதும் கிடைக்கப் பெறாததால், மேற்கோள் நூல்களின் மூலமே இதன் கதையை அறிய முடிகிறது. வீர சோழிய உரை, புறத்திரட்டு, நீலகேசி ஆகிய நூல்களில் குண்டலகேசி பற்றிய குறிப்புகள் உள்ளன.  


இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video

கதைச்சுருக்கம்

முன்னுரை

பல நூற்றாண்டுகளுக்கு முன், சோழவள நாட்டில் காவேரிப்பூம்பட்டினம் என்றொரு ஊர் இருந்தது. அங்கு செல்வந்தரான வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் பத்திரை அல்லது பத்தாதீசா. நாம் பத்திரை என்றே வைத்துக்கொள்வோம். 

இந்த பத்திரை சிறுவயதிலேயே தனது தாயை இழந்து விட்டாள். அதனால், அவள் கேட்கும் எதையுமே அவள் தந்தை மறுத்தது கிடையாது. நாட்கள் கடந்து செல்ல, பத்திரை கன்னிப் பருவத்தையும் அடைந்தாள். 

பத்திரையின் காதல்

இப்படியிருக்கும்போது  காவிரிப்பூம்பட்டினத்தில் ஒருநாள், ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்தது.

அதாகப்பட்டது, சோழ மன்னனின் காவலர்கள் ஒரு வழிப்பறித் திருடனை விலங்கிட்டு தெருவழியாக அழைத்துச் சென்றார்கள். அவனது பெயர் சத்துவான். எவராலும் பிடிக்கவே இயலாத திறமையான வழிப்பறித் திருடன். பல நாட்கள் முயற்சி செய்து அரும்பாடுபட்ட பின்னரே, காவலர்களின் கைக்கு அகப்பட்டிருந்தான். 

அதனால், மன்னரும் அவனுக்கு கழுவேற்றம் என்ற தண்டனை வழங்கி, அதை நிறைவேற்றும் முன்னர், அவனை விலங்கு பூட்டி ஊர்த் தெருக்களில் அழைத்து வரவேண்டும் என்று சொல்ல, அதற்காகவே அவனை அப்படி அழைத்துச் சென்றார்கள்.

இந்த சமயத்தில், தனது வீட்டின் மேல்மாடத்தில் நின்று தோழிகளோடு உரையாடிக் கொண்டிருந்த பத்திரையின் பார்வை அந்தக் கள்வன் மேல் பட்டது. அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவள் இதயமும் பறிபோனது.

"யாரிந்தக் கள்வன் ? என் மனதையும் கொள்ளை கொண்டானே !!", என்று தனது தோழிகளிடம் கூறினாள் பத்திரை. தோழிகள் அதிர்ந்து போனார்கள். 

"பத்திரை, உனக்கென்ன பைத்தியமா ? அவன் யாரென்று தெரியாதா ? வழிப்பறித்த திருடன். பிரயாணம் போகிறவர்களை அடித்து வதைத்து அவர்களிடமிருந்து பொருள் கொணர்பவன். அவனையா நீ காதலிக்கிறேன் என்கிறாய் ? வேண்டாமம்மா", என்று எடுத்துரைத்தார்கள்.

பத்திரையின் பிடிவாதம் 

ஆனால், பத்திரையோ இதையெல்லாம் கேட்பதாக இல்லை. தனது தந்தையிடம் சென்று தன் விருப்பதைத் தெரிவித்தாள். தோழிகள் போலவே தந்தையும் அதிர்ந்து போனார். "நான் ஒருக்காலும் சம்மதியேன். அவன் உனக்கு வேண்டாம்" என்றார். 

பத்திரை விடுவதாக இல்லை. பிடிவாதம் பிடித்தாள். "அன்பால் அவனைத் திருத்திக் கொள்வேன்" என்றாள். உண்ணாமல் உறங்காமல் அரற்றலானாள். 

தன் மகளின் நிலையைக் கண்டு கலக்கமுற்ற அவள் தந்தையும், வேறு வழியேதுமின்றி அவளது விருப்பத்துக்கு சம்மதித்தார். நேரே மன்னரிடம் சென்று முறையிட்டார். 

மன்னரும் அமைச்சர்களும் கூட, சத்துவானின் குறைகளை எடுத்துரைக்க, அவையேதும் பத்திரையின் மனதை மாற்றுவதாக இல்லை. அவர்களிடமும் கூட, தனது அன்பு சத்துவானை திருத்தும் என்றாள் அவள். ஆகவே, ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து, சத்துவானை விடுவிக்க முடிவு செய்தார் மன்னர். 

திருமணமும் சத்துவானின் கோபமும் 

பத்திரையின் தந்தை யானையோடு பொன்னையும் பொருளையும் மன்னருக்குப் பரிசளித்து, சத்துவானை தனது இல்லத்துக்கு அழைத்து வந்தார். பத்திரைக்கும் அவனுக்கும் திருமணமும் செய்து வைத்தார். அந்த காவேரிப் பூம்பட்டினத்தில், அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை இனிதே துவங்கினார்கள். 

நாட்கள் கடந்து சென்றன. பத்திரை தனது கணவன் மீது பக்தியும் தீராத அன்பும் கொண்டிருந்தாள். அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தாள். சத்துவானுக்கும் கூட பத்திரையை பிடிக்கத் தான் செய்தது. 

ஆனால், ஒருநாள் விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடியது. ஒரு மாலைப் பொழுதன்று மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த பத்திரை தனது சொற்களில் கவனமில்லாது போனாள். சத்துவானைப் பார்த்து விளையாட்டாக, "நீ ஒரு திருடன் தானே !!" என்றாள்.

அந்த வார்த்தை, சத்துவானின் இதயத்தை முள்ளாகத் தைத்தது. "அப்படியெனில், நீ இந்த நினைப்புடன் தான் என்னுடன் பழகுகிறாயா !!" என்று மனதுக்குள் கனன்றான். "உன்னை நிச்சயம் பழி தீர்ப்பேன்" என்று சபதமும் பூண்டான்.

சத்துவானின் சூழ்ச்சி

அடுத்து வந்த நாட்களில், அதற்காகத் திட்டமிட்டு யோசித்துவிட்டு, ஒருநாள் பத்திரையை நயமாகப் பேசினான்.

"பத்திரை, கொலைக்களம் செல்லவிருந்த எனது உயிர் காப்பாற்றப் பட்டதல்லவா !! அன்று நான்  வேண்டிக்கொண்டேன். குலதெய்வத்தினைத் தரிசிக்க வேண்டுமென்று. அதனால், நான் எனது குலதெய்வத்தின் கோவிலுக்குச் செல்ல வேண்டும். என்னுடன் வருகிறாயா ?" என்று அழைத்தான்.

கணவனை முழுவதுமாக நம்பிய பத்திரையும் அதற்கு சம்மதிக்க, ஒரு நன்னாளில் அவர்கள் இருவரும் பயணம் மேற்கொண்டனர். மலையிலிருந்த குல தெய்வத்தை தரிசித்துவிட்டு மலைவளத்தையும் காணச் சென்றனர். சற்று தூரத்தில், ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதி வந்தது. 

அந்த நேரத்தில், "பத்திரை உனது நகைகளைக் கழற்று" என்று சற்று தடித்த குரலில் சொன்னான் சத்துவான். 

அவன் பார்வையும் வார்த்தைகளும் கடுகடுப்பைக் காட்ட, "உங்களுக்கு என்மீதே ஏதேனும் கோபமா ?" , என்று மென்மையாகக் கேட்டாள் பத்திரை. 

அவன் இடிமுழக்கம் போலச் சிரித்தான்.

"கோபமா ? வன்மம் பத்திரை. வன்மம். என்ன சொன்னாய் அன்று ? நான் திருடன் என்றா ? திருடன் என்ன செய்வான் என்று தெரியுமா உனக்கு ? இதோ இப்போதே காட்டுகிறேன். பார், பெண்ணே பார். முதலில், கழற்று உன் நகைகளை" என்றான்.

பத்திரை அதிர்ந்து போனாள். 

"இவ்வளவு தான் காதலா !! இவ்வளவுதான் அன்பா !! ஒரு வார்த்தையை விளையாடாகச் சொல்லியதற்கு இப்படி ஒரு மாற்றமா ?? என்னை என்ன செய்யப் போகிறான் இவன் ??", என்று ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் ஓடின. 

ஆனால், அந்த சமயத்தில் அவள் சமயோஜிதமாக யோசித்தாள். "இவன் திருந்தப் போகிறானா என்ன ?? இன்று என்னை வஞ்சித்தான். நாளை வேறொருத்தியை வஞ்சிப்பான். அதனால், இவனுக்கு முதலில் பாடம் கற்பிக்க வேண்டும். இவனை சும்மா விடக்கூடாது", என்று நினைத்துக்கொண்டு ஒன்றை மட்டும் முடிவு செய்து கொண்டாள். 

பத்திரையின் சமயோஜிதம்    

தனது நகைகளைக் கழற்றி, சத்துவானிடம் தந்தாள். பின்னர், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, "கணவரே, நீங்கள் என்னைக் கொல்லப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சாகுமுன் எனக்கு உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். நான் தங்கள் திருவடிகளை வணங்க வேண்டும். அதுவும் மூன்று முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். அதன் பின்னர், நான் நிம்மதியாக செத்து விடுவேன். எனக்கு தங்கள் திருவடிகளை வணங்க அனுமதி தாருங்கள்", என்று கேட்டாள்.

சத்துவானுக்கு அது வேடிக்கையாக இருந்தது. "சரி" என்று சம்மதித்தான்.

அவளும் அவனை சுற்றி வந்தாள். ஒன்று, இரண்டு, மூன்று என்று அந்த மூன்றாவது சுற்றின் முடிவில், அவன் பாதத்தைத் தொட்டு வணங்கினாள். பின், தனது முழு பலத்தையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, அவனை ஒரேடியாக பின்னே தள்ளினாள். நிலைதடுமாறிய சத்துவான் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தான். மரணமும் அடைந்தான்.

அதன் பின்னர், அதே மலையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டு, குமுறிக் குமுறி அழுதாள் பத்திரை. "எல்லோரும் சொன்னார்களே !! அந்தக் கள்வன் வேண்டாம் என்று. யார் சொல்வதையாவது கேட்டேனா நான் ? எனது அன்பு அவனைத் திருத்தும் என்று நம்பினேனே !! இன்று எல்லாம் பொய்த்து அவனால் வஞ்சிக்கப் பட்டேனே !! யாரிடம் போய்ச் சொல்ல என் வேதனையை ??", என்று அரற்றினாள்.

பத்திரை குண்டலகேசியானாள் 

ஆனால், அவளுக்கு ஆறுதல் சொல்லவோ, அவள் கண்ணீரைத் துடைக்கவோ அங்கு யாருமில்லை. அவளுக்கு மறுபடியும் காவேரிப் பூம்பட்டினம் செல்ல விருப்பமும் இல்லை. கால் போன போக்கில் நடந்தாள். விரக்தியில், தனது தலை முடியை பனை மட்டையால் சிரைத்துக் கொண்டாள். அதன் பின்னர், அவள் கூந்தல் சுருள் சுருளாக வளர, குண்டலகேசி என்று அழைக்கவும் பட்டாள்.

இப்படியாக தனது கால் போன போக்கில் நடந்த குண்டலகேசி, வழியில் சில புத்த மதத் துறவிகளை சந்தித்து அவர்களின் போதனைகளை கவனிக்க, அவளுக்கு புத்தரின் மீதும் புத்த சமயத்தின் மீதும் பற்று உண்டாயிற்று. அதனால், அந்த மதத்தைப் பின்பற்றி துறவறம் பூண்டாள். அது மட்டுமல்லாது அந்த சமயம் சார்ந்த தர்க்கங்களிலும் ஈடுபட்டு, அதிலும் சிறந்து விளங்கினாள். இப்படியே அவள் வாழ்க்கையும் முடிந்தது.

முடிவுரை

ஆக, காதலால் திருத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஒரு கள்வனை மணந்து கொண்டு, அதே காதல் வெறுத்துப் போக, புத்த மதத்துக்குத் துறவறம் சென்ற ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் காப்பியம்  தான் "குண்டலகேசி"மற்ற காப்பியங்களின் கதைகள், Aimperum Kappiyangal 

Silapathikaram Story in Tamil - சிலப்பதிகாரம் 

Manimegalai Story in Tamil - மணிமேகலை 

Seevaga Sinthamani Story in Tamil - சீவக சிந்தாமணி 

Kundalakesi Story in Tamil - குண்டலகேசி 

Valaiyapathi Story in Tamil - வளையாபதி 


இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post