முன்னுரை
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான ஆனைமலையில் ஆறு முகடுகள் உள்ளன. அதில் ஒரு முகடுதான் பழனி மலை.
இன்றளவும் எண்ணற்ற அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு, சங்ககாலத்தைச் சேர்ந்த நெல்மணிகள், கண்ணாடி மணிகள், கல்த்திட்டைகள் என்று பலவவற்றை அள்ளிக்கொடுக்கும் ஒரு பொக்கிஷமாகவே இந்தப் பழனி இருந்து வருகிறது.
இதே பழனி மலைதான், சங்ககாலத்தில் பொதினி மலை என்றும் அழைக்கப்பட்டது. சீர்மிகு பொதினி மலையில் நிறைய நீரூற்றுகள் இருந்தன. வற்றாது தேன் கிடைக்கும் தேன்கூடுகள் இருந்தன. சீர்மிகு ஆவியரும் அங்கு வாழ்ந்து வந்தனர். அதனால், அவர்கள் வாழ்ந்த இடம், ஆவியர் குடி அல்லது ஆயர் குடி என்றும் அழைக்கப்பட்டது.
கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quiz
இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video
யார் இந்தப் பேகன் ?
இப்படிப்பட்ட பொதினியை ஆட்சி செய்தவன் தான் கடையேழு வள்ளல்களுள் ஒருவனான பேகன். இவனை ஆவியர் குலத்தினைச் சார்ந்தவன் என்றும் பாரியைப்போல ஒரு வேளிர் என்றும், ஆவியர்களுக்குத் தலைவனானதால் "வையாவிக் கோப்பெரும் பேகன்" என்று அழைக்கப்பட்டார் என்றும் குறிப்புகள் சொல்கின்றன.
இத்தகைய பேகன் ஆண்ட பொதினி மலையில் ஒரு நாள், பரணர் என்ற புலவர் தமது நண்பர்களோடு சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, பொன்னாலாகிய தாமரை மலர்களை அணிந்துகொண்டு, ஒரு கூட்டம் பாணர்களும் விறலியரும் மகிழ்ச்சியோடு மலையில் இளைப்பாறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அருகே, அவர்கள் பயணித்து வந்திருந்த தேர் நிற்க, குதிரைகள் இளைப்பாறிக்கொண்டிருந்தன.
இதைக் கண்ட புலவர் அவர்களிடம் "நீங்கள் யார் ?", என்று கேட்டார்.
அப்போது அவர்கள், "நாங்கள் பாணர்கள். இந்த மலையில் ஏறும்போது, உம்மை விடவும் வறுமையில் இருந்தவர்கள். ஆனால், எப்போது அந்த வள்ளல் பெருமான் பேகனைக் கண்டோமோ, அப்போதே எங்கள் வறுமை நீங்கியது. அவர் தாம் எங்களுக்கு இந்தப் பொற்றாமரை மலர்களையும், குதிரைகளையும், வற்றாத செல்வத்தையும் வழங்கியவர். நீங்களும் அவரைச் சென்று சந்தியுங்கள். குளிரில் நடனமாடிய மயிலின் சிறகுகளின் சத்தம் கேட்டு, அது குளிருக்கு நடுங்கியதாக எண்ணி தனது போர்வையைத் தந்தவர் அவர். அப்படியிருக்கும்போது, தாம் பெரிதும் மதிக்கும் தங்களை போன்ற புலவர்களுக்கு மரியாதை செய்ய மாட்டாரா ?" , என்று கூறினர்.
சிரித்தபடியே பரணரும் விடை பெற்றுக்கொண்டார். பேகனை சந்தித்துப் பாடல்கள் பாடினார். அவர் பாடலுக்காகப் பரிசு தந்ததோடு நிறுத்தாமல், அவரைத் தனது மலையில் சில காலம் தங்கிச் செல்லும்படியும் சொன்னான் பேகன்.
மகிழ்வோடு, அவரும் அங்கு தங்கி அவனது மலை வளம் கண்டார்.
போர்கள் வரும் காலத்தே, அவன் யானையின்மீது அமர்ந்து வேல் தங்கிச் செல்லுதல் கண்டு, இவன் கொடை கொடுப்பதில் மட்டுமல்லாது, வீரத்திலும் சிறந்தவனே என்று அறிந்து கொண்டார். அவனை மழைக்கு ஒப்பிட்டு பாடல்களும் பாடினார்.
பேகனின் மனைவியின் வருத்தம்
சில காலம் சென்றபின், புலவர் தனது ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பேகனைக் காண பொதினிக்கு வந்தபோது, அவன் அவனது இல்லத்தில் இல்லை. அவனது மனைவியாகிய கண்ணகி மட்டும், கண்ணீர் சிந்தி அழுதபடி அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் சிவந்து, தேகம் மெலிந்து, அந்த வீடே களையிழந்து போயிருந்தது.
காரணம் கேட்டபோது, அவள் சொன்னாள் "எனது கணவனாகிய பேகன், ஒரு விரலியின் ஆடல் பாடலில் மயக்கம்கொண்டு, அவளை இந்த மலையிலேயே தங்கிவிடச் சொன்னான். முதலில், பொன்தந்து, பின் பொருள் தந்து, இறுதியில் தன்னையும் தந்தான். நான் அதை அறிந்துகொண்டு ஏனென்று கேட்க, இப்போதெல்லாம் அவன் வீட்டுப்பக்கம் வருவதேயில்லை. என்னைப் போன்ற இந்நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது" என்று.
புலவருக்குக் கோபமும் வருத்தமும் மேலிட்டது. உடனடியாக பேகனைக் காண விரைந்தார். பேகன் எப்போதும்போல, அவரை வரவேற்று உபசரிக்க முயன்றான். ஆனால், அவர் அவனது உபசரிப்பை ஏற்பதாக இல்லை.
நம் தமிழ்ப் புலவர்கள் என்ன பொன்னுக்கும் பொருளுக்கும் வேண்டி பாட்டெழுதி, புகழாரம் சூட்டுபவர்களா ? எதிரே நிற்பவர் எத்தனை பெரியவராயினும் இடித்துரைக்கும் மாண்பினராயிற்றே !!
உணர்ச்சிபொங்க, "மலைநாடா, உன்னைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் வாயால், அறிவுரை சொல்லும்படி வைத்துவிட்டாயே !! உன்னைப் புகழ வேண்டிய எங்கள் வாயால், உன் மனைவியின் கண்ணீருக்கு பதில் சொல்லும்படி எங்களைப் பணித்து விட்டாயே !!" , என்று பாட்டிலேயே பேகனை இடித்துரைத்தார் பரணர். பேகனின் மனம் குழம்பியது. ஆனால், அவன் தனது இல்லம் திரும்பவில்லை.
பரணருக்கும் இச்செய்தி தெரிய வந்தது. அந்தக் காலத்தில் பரணரும் கபிலரும் நெருங்கிய நண்பர்கள். ஆதலால், இருவரும் சந்தித்த வேளையில் பேகனின் கதையைப் பரிமாறிக்கொள்ள, கபிலரும் பொதினிக்கு விரைந்தார்.
கடந்த முறை கபிலர் அங்கு சென்றிருந்தபொது, பொதினியின் நீர்வளம் கண்டு மெய்சிலிர்த்துப்போனார். ஆய்ச்சியர் குரவையைக் கண்டுகளித்து மனமுவந்து திரும்பி வந்தார். இந்த முறை அவற்றையெல்லாம் நினைவுகூர்ந்துவிட்டு, "யானையின் கண் அமர்ந்து போர் புரியும் திறனுடையவனே, இந்தமுறை நான் உன்னையோ, உனது நாட்டையோ கண்டு பாடல் பாடிச் சிறப்பிக்க இங்கு வரவில்லை. வற்றாத கண்ணீரோடு உன் வீட்டு வாசலில் ஒரு பெண் நிற்கின்றாளே, அவளுக்கு நீதி செய்யென்று வேண்டவே வந்தேன்" என்றும் கூறினார். பேகனுக்கு அவர் இடித்துரைத்து புரிந்தது . ஆயினும், அவன் அந்த விறலியை விலகவில்லை.
பின்னர், அரிசிற் கிழார், பெருங்குன்றூர்க் கிழார் ஆகியோரும் அவ்வண்ணமே வந்து பாடல் பாடினார். தங்களுக்குப் பரிசில் எதுவும் வேண்டாமென்றும், அதற்குப் பதில் கண்ணகியின் கண்ணீர் துடைத்து , அவள் முகத்தின் புன்னகையையும், கூந்தலில் அழகிய மலர்களையும் தருமாறும் வேண்டினர்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா !! அவ்வண்ணம், பேகனின் மனமும் கரைந்தது. 'நமது மலை வளத்தையும், மக்கள் வளத்தையும், கொடை குணத்தையும், வீரக் கரத்தையும் வானளவு புகழ்ந்த புலவர் பெருமக்கள் இன்று இடித்துரைத்தலையே சிரம் மேற்கொண்டு செய்கின்றனரே. அதைவிட, தங்கள் வறுமையின் கொடுமையிலும், நம்மிடம் பொருள்பெற மறுக்கின்றனரே. அப்படியெனில், நாம் எத்தனை பெரிய தவறு செய்தோம்' என்று உணர்ந்து, மனைவி கண்ணகியிடத்துக்கே திரும்பினான்.
கண்ணகியின் கண்ணீர் மறைந்தது. இன்பம் நிறைந்தது. சீரோடும் சிறப்போடும் அவன் ஆட்சி தொடர்ந்தது. கொடையும் வீரமும் மீண்டும் தளைத்தோங்கியது.
இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் தன்னுளே அடக்கி, அவனது வாழ்வுக்குச் சான்றாய் "பழனி" என்ற ஊர் இன்றும் அவனது பெருமை தாங்கி நிற்கிறது.
கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quiz
கடையேழு வள்ளல்களின் வரலாறு கதை வடிவில்
Pari History in Tamil - வள்ளல் பாரி
Malayaman Kaari History in Tamil - வள்ளல் மலையமான் காரி
Valvil Ori History in Tamil - வள்ளல் வல்வில் ஓரி
Aai Andiran History in Tamil - வள்ளல் ஆய் அண்டிரன்
Adhiyaman History in Tamil - வள்ளல் அதியமான்
Nalli History in Tamil - வள்ளல் நள்ளி
Pegan History in Tamil - வள்ளல் பேகன்
இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video
குறிப்பு: கீழே காணும் மேற்கோள் நூல்களையும், பாடல் விளக்கங்களையும் கோர்வையாக்கி சொந்தநடையில் எழுதப்பட்ட கட்டுரை இது. மேலும், இதில் ஒரு சில கற்பனைக் கட்சிகளும், புனைவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள புவியியல் தொடர்புகளும், தொல்லியல் ஆராய்ச்சிக் குறிப்புகளும் இந்தக் கட்டுரையை மேலும் மெருகேற்றும் என்று நான் நம்புகிறேன்.