அவரவர் தங்கள் பலம், பலவீனம், திறமையை அறிந்து முயற்சிகளைத் தொடர வேண்டுமென்பதையும், வேறொருவரைப் பார்த்து உங்கள் முயற்சிகளைத் தளர்த்தக்கூடாது என்பதையும் விளக்க நான் எழுதிய குட்டிக் கதை இது. This is an imaginary story. But the Science Facts are true only.
எனது மகள் ஒரு பல்லுயிர் காதலி. உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவளுக்காக, நானும் கொஞ்சம் மெனக்கிடுவேன். அப்போது நான் தெரிந்துகொண்ட சில பல தகவல்களோடு கற்பனையைக் கலந்து இந்தக் கதையை எழுதியுள்ளேன். குட்டி மானும் அம்மா மானும் பேசினால், எப்படியிருக்கும் ? என்ற கற்பனையை உங்களுக்கொரு கதையாக எழுதுகிறேன்.
ஆப்பிரிக்காவில் இருக்கிற சவானா புல்வெளிகளில், நிறைய வித்தியாசமான மான் வகைகள் உண்டு. அதில் ஒரு வகையான மானுடைய பேரு கெரேனெக் (Gerenuk) . அங்கிருக்கும் மான் வகைகளிலேயே இந்த கெரேனெக் வகை அம்மாக்களைத் தான், சிறந்த அம்மாக்கள் என்று சொல்வார்கள்.
ஏனென்றால், கேரேனெக் மான் வகையின் அம்மக்கள் தங்களுடைய குட்டிகளை மிக மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும். குட்டிகள் தங்களுடைய வாழ்க்கையைத் தனியாக வாழ ஆரம்பிப்பதற்கு முன்னர்,
நிறைய நிறைய பயிற்சிகளும் கொடுக்கும்.
இப்படிப்பட்ட இந்த கெரெனக் மான் வகையில், ஒரு அம்மா மானும் அதன் குட்டி மானும் இருந்தார்கள். ஆரம்பத்தில், இந்த அம்மா மான் தன்னுடைய குட்டிமானை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொண்டது. அது பிறந்த பின், பல மாதங்களுக்கு குட்டிக்கான உணவைத் தானே கொண்டுவந்து கொடுத்தது. எப்போதாவது உணவு தேடுவதற்காகத் தனது குட்டியை அழைத்துச் சென்றாலும், குட்டி மான் வேடிக்கைப் பார்ப்பதோடு சரி.
இப்படியே சில நாட்கள் சென்ற பின்னர், ஒருநாள் தன்னுடைய குட்டிக்குப் பயிற்சிகள் கொடுக்க ஆரம்பிக்கலாமென்று முடிவு செய்தது, அந்த அம்மா மான்.
முதல் நாள், தான் வழக்கமாகப் போகிற அக்கேசியா என்ற மரத்துக்குப் பக்கத்தில், இந்தக் குட்டி மானைக் கூட்டிச் சென்றுவிட்டு, அந்த மரத்தின் ஒரு கிளையைக் காட்டி, "குட்டி மானே, இப்போது நீ உன் முன்னங்கால்களை மேலே தூக்கி, அந்தக் கிளையின்மீது வை. பின்னங்கால்களில் மட்டும் நில்" என்று சொன்னது அந்த அம்மா மான்.
குட்டி மானும் சரியென்று சொல்லிட்டு, முயற்சி செய்து பார்த்தது. முன்னங்கால்களில் பயங்கர வலி ஏற்படவும்,
"என்னால் முடியவில்லையம்மா. வலிக்கிறது. நான் ஏன் இப்படி கஷ்டப்பட்டு அந்தக் கிளையிலிருக்கிற இலையைச் சாப்பிட வேண்டும் ? கீழே சில புற்களும், எனக்கு எட்டும் கிளைகளில் சில இலைகளும் இருக்கின்றனவே !! அவற்றை நான் சாப்பிட்டுக் கொள்கின்றேனே !!", என்று தன்னுடைய அம்மாவிடம் சொன்னது.
அம்மா மானும் ரொம்பப் பொறுமையாக, "இல்லையடா ராஜா. மரத்தின் மேலேயிருக்கிற இலைகள்தான் நீர்ச்சத்தோடு மிகவும் சுவையாக இருக்கும். கீழே, அந்த அளவுக்கு நல்ல இலைகள் கிடையாது. நீ கொஞ்சம் மட்டும் முயற்சி செய். தொடர்ந்து முயற்சி செய்தால், எம்பி ஏறுவது சுலபமாகிவிடும்", என்று அறிவுரை சொன்னது.
குட்டி மான் மறுபடியும் முயற்சி செய்து பார்த்தது. அதனால் முடியவில்லை. எனவே, தனது அம்மாவைப் பார்த்து "நான் உன்னுடன் வரும்போதெல்லாம் பார்த்திருக்கிறேன். இம்பாலா என்று வேறொரு வகை மான்களும் இதே மரத்துக்கு வரும். ஆனால், அவையெல்லாம் இப்படி காலை மேலே தூக்கி ஏறிக்கொண்டெல்லாம் இருக்காது. அவற்றின் உயரத்துக்கு எட்டும் இலைகளை மட்டும் சாப்டுட்டுவிட்டுப் போய்விடும். அப்படியென்றால், அந்த இலைகளும் நன்றாக இருக்கின்றன என்று தானே அர்த்தம். ஆகவே, நானும் என் உயரத்துக்கு எட்டுகிற இலைகளை மட்டும் சாப்ட்டுக் கொள்கிறேன் ", என்று சொன்னது.
அம்மா மான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. "சரி சாப்பிடு" , என்று சொல்லி விட்டுவிட்டது.
இந்த உணவு தேடும் வேலையெல்லாம் முடிந்து, இந்த மான்களெல்லாம் தங்களுடைய தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தபின், இந்தக் குட்டி மானுக்கு ஒரே தாகம். தாகம் தாங்க முடியாமல், தன்னுடைய அம்மாவிடம் வந்து, தாகம் அடிக்கிறதென்று சொன்னது.
அம்மா மான், எந்தப் பதற்றமும் இல்லாமல், சிரித்துக்கொண்டே "ஒன்றும் பிரச்னையில்லை ராஜா . நீ காலையில் சொன்னாயல்லவா இம்பாலா மான்கள், அவையெல்லாம் சேர்ந்து இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஒரு நீர்நிலைக்குச் செல்லும். நீயும் அவற்றோடு சேர்ந்து போய், தண்ணீர் குடித்து வா" , என்றது.
இந்த குட்டி மானுக்கோ, பயங்கர அதிர்ச்சி. ஏனென்றால், பொதுவாக சிங்கம் புலியெல்லாம், மான்களைத் தண்ணீர் குடிக்க வரும் இடத்தில் வைத்துதான் தாக்கும். இம்பாலா மான்கள், அதிக வேகத்தில் ஓடக்கூடியவை. ஆனால், இந்த கெரேனக் வகை மான்களாலோ, வேகமாக ஓடவே முடியாது. அப்படியென்றால், சிங்கமோ புலியோ துரத்தினால் என்ன ஆகும் ?
இதையெல்லாம் நினைத்து கேள்விக்குறியோடு தனது அம்மாவைப் பார்த்து, "அதெப்படியம்மா சரிப்பட்டு வரும் ? ஒருவேளை தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, சிங்கம், புலி ஏதாவது எங்களைத் தாக்க வருமே !! அப்படி வரும்போது, இம்பாலா மான்களை வேகமாக ஓடித் தப்பித்துக் கொள்ளும். நான் என்ன ஆவேன் ?" என்று அந்த குட்டி மான் கேட்க, மறுபடியும் சிரித்தது அந்த அம்மா மான்.
பிறகு அது சொன்னது , "என் குட்டி மானே. இன்றைய உணவுத் தேடலின்போது நீ கேட்ட கேள்விக்கான பதிலும் இதுதான். நமக்கு அந்த இம்பாலா மான்களைப் போல வேகமாக ஒடித் தப்பித்துக் கொள்ளும் தகவமைப்பை இயற்கை தரவில்லை. ஆனால், அதே இயற்கை தான் நமக்கு மிக வலுவான பின்னங்கால்களைத் தந்துள்ளது. கொஞ்சம் முயற்சி செய்து, எம்பி, எம்பி அந்த அக்கேசியா மரத்தினுடைய மேல் கிளையை மட்டும் நாம் எட்டிவிட்டால் போதும். மேல் பகுதியிலுள்ள நீர்ச்சத்து மிகுந்த இலைகளை சாப்பிட்டுத் தயக்கமின்றி வாழ்ந்து விடலாம்.
ஆனால், அதை விட்டுவிட்டு அந்த இம்பாலா மான்களைப் பார்த்து, அதை மாதிரியே நானும் கீழே கிடைக்கும் புல்லையும், வாய்க்கெட்டும் இலையையும் தின்பேன் என்றால், ஒன்று தாகத்தில் தவிக்க வேண்டும், இல்லையேல் சிங்கத்திடமோ புலியிடமோ மாட்டி, ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டும். எது உனக்கு வசதி ?" , என்று.
இன்று நம்மில் பலரும் கூட அந்தக் குட்டி மானைப் போலத் தான் இருக்கிறோம். நம்முடைய பலம், நம்முடைய பலகீனம், நம்முடைய திறமையின் அடிப்படையில் நமது குறிக்கோளை அமைத்துக்கொள்வதில்லை. சம்பந்தமேயில்லாமல், வேறு யாரவது ஒருவருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்கிறோம். பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறோம்.
அப்படிப்பட்டவர்களுக்கு, நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வேறு. ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் சவால்களும் வேறு. அந்த சவால்களை சந்திப்பதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்படும் திறமைகளும் வேறுதான்.
அதனால், ஒருபோதும் ஒருவரோடு ஒருவர், ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர், உங்கள் குறிக்கோளைத் தளர்த்திக்கொள்ளாதீர்கள். உங்கள் பலம், உங்கள் பலவீனம், உங்கள் திறமையை மட்டும் உணர்ந்துகொண்டு, வாழ்வில் வெற்றி காணுங்கள்.