வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும்
சரித்திரத்தில் இடமுண்டு
ஆனால், அதை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்து
குறை சொல்பவர்களுக்கு
அங்கு எந்தவொரு இடமும் கிடையாது
இது ஒரு மிகப் பிரபலமான மேற்கோள்.
ஆனால், உண்மையில் நம்மில் பலரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும் நபர்களாகவே இருந்து விடுகிறோம். அதற்கு பல காரணங்கள் இருப்பினும், தலையாயதாக ஒரு காரணத்தைச் சொல்ல முடியும். அதைத் தான் நாம் ஒரு குட்டிக் கதையின் மூலம், நாம் அறிந்துகொள்ளப் போகிறோம். இது "What stops an Entrepreneur ? " என்ற எனது ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் ஒரு சிறு பகுதியாகும். தங்களுக்காக இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
கலிபோர்னியாவில், ஒரு பல்கலைக் கழகம் இருந்தது. அந்தப் பல்கலைக் கழகம் தொழில் முனைவோருக்கான பட்டப் படிப்பில், கைதேர்ந்த ஒரு பல்கலைக் கழகம். அங்கு எல்லா வருடத்தின் இறுதியிலும், ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வார்கள்.
அப்படி, ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு தலைப்பு, "கடந்த ஐந்து வருடங்களில், கலிபோர்னியாவைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களில், தொழில் முனைவோருக்கான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களில், எத்தனை பேர் உண்மையாகவே தொழில் தொடங்கியிருக்கிறார்கள் ? எத்தனை பேர் அதில் வெற்றி கண்டிருக்கிறார்கள் ? என்பது.
மாணவ மாணவிகளும், தங்கள் நேரத்தைச் செலவிட்டு வெற்றிகரமாக அந்த ஆய்வைச் செய்து முடிவுகளையும் கோப்புக்களையும் சமர்பித்தார்கள்.
அந்த முடிவுகளைப் பார்த்த பேராசிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்த ஐந்து வருடங்களில் பட்டம் பெற்றுச் சென்ற மாணவர்களில், வெறும் 15 சதவீதம் பேர் மட்டுமே, தொழில் தொடங்கியிருந்தார்கள்.
வேறு எதாவது பிரிவில் படித்துவிட்டு, இப்படியிருந்தால் பரவாயில்லை. இதுவே தொழில் முனைவோருக்கான பட்டப் படிப்பு. 'அதில் படித்துவிட்டும் கூட, மற்றவர்களுக்குத் தெரியாத நிறைய சூட்சமங்களைத் தெரிந்துகொண்டும் கூட, இவர்கள் ஏன் இப்படி ஏதும் செய்யாமல் விட்டுவிட்டார்கள் ?' , என்று கேள்வி, அடுத்து ஒரு ஆய்வுக்கு வழி வகுத்தது.
ஒரு வருடம் கடந்து அந்த ஆய்வு முடிவுகளும் வெளி வந்தன. அதில், குடும்பப் பிரச்சனை, கடன் தொல்லை, உடல்நிலை குன்றுதல் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு குறிக்கோளை அடைவதற்குத் தடையாக மூன்று முக்கிய காரணங்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டன.
அந்த மூன்றில் தலையாய காரணம் என்ன தெரியுமா ? அதீத சிந்தனைகள் மற்றும் கற்பனைகள். Over Thinking. நாம் விளையாட்டுக்கு சொல்லுவோம் "ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது" என்று. ஆனால், இந்த ஓவர் திங்கிங் எதற்குமே உதவாது.
ஒரு வியாபாரத்தைப் பொறுத்தவரைக்கும், இந்த அதீத சிந்தனை அதைத் தொடங்கவும் விடாது, தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் விரைவாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் ஒரு எதிரியாகவும் வந்துவிடும்.
போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரைக்கும், இந்த அதீத சிந்தனை நேரத்தை வீணடித்துவிடும்.
ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும், இந்த அதீத சிந்தனை எண்ணிலடங்காத பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இப்படிப் பட்ட சிந்தனையுடையவர்களிடம் யாருமே பழகி, நீண்ட காலம் உறவு வைத்துக்கொள்ள முடியாது. இவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் தங்களது கற்பனையால், சுற்றியிருப்பவர்களுக்கும் கூட பிரச்சனையை இழுத்து விட்டுவிடுவார்கள்.
இதையெல்லாம் கூட விடுங்க. இந்த அதீத சிந்தனை என்பது உடலையாகட்டும் மனதையாகட்டும் முழுவதுமாகப் பாதித்துவிடும்.
இந்த அதீத சிந்தனை என்ற பழக்கம் என்னிடம் ஒரு காலத்தில் இருந்தது. அப்போ எனக்கு ஒரு 23, 24 வயதிருக்கலாம். எனது பணியிடத்தில், அது எனக்கு ஒரு மிகப்பெரிய எதிரியாக இருந்தது. IBM-ல் நான் பணிபுரிந்தபோது என்னுடைய மேலாளர்களின் பெயர் செந்தில் மாறன், கார்த்திக். இரண்டுபேரும் எனக்கு இதை அடிக்கடி சொல்வார்கள். "உன்னிடம் நீ மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கம் இது மட்டும் தான். ஏனென்றால், அதீத சிந்தனை செய்பவர்களை யார் வேண்டுமானாலும் சுலபமாகக் குழப்பி விடலாம் அதனால், இதை மாற்ற வேண்டும்" , என்று.
ஆனால், பல இழப்புகளுக்குப் பின்தான் அதை மாற்றினேன். மிகவும் சிரமப்பட்டு. ஆனால், இன்றுவரையிலும் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாகத் தான் இருக்கிறது.
அதனால், தைரியமாக இதை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தப் பழக்கத்தை மற்ற இயலும். மாற்றிக் கொண்டு, உங்கள் குறிக்கோளை அடையுங்கள். அதற்கு எனது வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்.