வள்ளல் வல்வில் ஓரி வரலாறு - கடையேழு வள்ளல்கள்

பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நள்ளி, பேகன் - இந்த எழுவர் தான் கடையேழு வள்ளல்கள். இவர்கள் ஏழுபேரின் வரலாற்றையும் நாம் நமது சேனலில் பார்த்திருக்கிறோம். அதன் எழுத்து வடிவம் இங்கே.

SCRIPT BY - SABARI PARAMASIVAN (References Given)

எங்கிருக்கிறது இந்த கொல்லி மலை ?

கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கடைசி மலையாக இருப்பது கொல்லிமலையாகும். மூலிகைகளுக்கும், சித்தர்களுக்கும், பெயர்போனது இந்தக் கொல்லிமலை.

இப்போது இந்த மலை, நாமக்கல் மாவட்டதிலுள்ள ராசிபுரம் பகுதியில் இருக்கிறது. சங்ககாலம் தொட்டு, இந்த இடம் சிறப்புற்றிருந்தது என்றும், கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஓரி, இந்த மலையைச் சேர்ந்தவர் என்றும், நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் ?

அதைத் தெரிந்துகொள்ள, என்னுடன் பயணியுங்கள். நாம் இப்போது சுமார் ஈராயிரம் ஆண்டுகள், பின்னோக்கி பயணிப்போம்.

கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quiz

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


கானகத்தில் ஒரு காட்சி

கொல்லிமலையின் சங்ககாலப் பெயர், பய மலை என்பதாகும். பயமலையில், மூலிகைகளும் சந்தன மரங்களும் அடர்ந்து வளர்ந்திருக்கும். வீசும் காற்றில், அந்த சந்தன வாசம் கலந்திருக்கும். அருமையான அந்த சந்தன மணத்தை அனுபவித்தபடி, ஒருகூட்டம் பாணர்கள், தங்கள் இசைக்கருவிகளோடு, அந்த மலைப்பாதைகளில் நடந்து கொண்டிருந்தனர். அவர்களின் மனைவியரான விறலியர், தங்கள் மெல்லிய பாதம் நோகும்படி, அவர்களுடன் சேர்ந்து நடந்துகொண்டிருந்தனர்.

அவ்வாறு நடந்துசெல்லும்போது, அவர்கள் சில குமளி மரங்களைக் கண்டனர். அவற்றில், சிகப்பான குமளிப்பழங்கள் காய்த்து, பழுத்து, தொங்கிக்கொண்டிருந்தன. ஆப்பிள் பழத்தின் தமிழ்ப்பெயர்தான், குமளிப்பழம்.  பழுத்த சில குமளிப் பழங்கள், காற்றுக்கு அசைந்து கீழே விழுந்து கொட்டிக்கிடக்க, சிறிய மான்குட்டிகள் சில, அவற்றை ருசிபார்த்துக் கொண்டிருந்தன.அந்த குமளிப் பழங்களையும், குட்டி மான்களையும், வேடிக்கையாய்ப் பார்த்தபடி நடந்துவந்த விறலியர், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

"உனக்கும் வேண்டுமென்றால், எடுத்துக்கொள்" , என்றாள் ஒருத்தி.

"இல்லை, வேண்டாம். என் பசிக்கு இதுவெல்லாம் போதாது" , என்று சொல்லிவிட்டு சிரித்தாள், இன்னொருத்தி.

அவர்கள் சிரிக்கும்போது, அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகள், கிணிகிணியென்று ஓசை எழுப்பின. அந்த ஓசையுடன், ஒரு யானை பிளிறும் சத்தமும் சேர்ந்து, அவர்கள் காதில் விழுந்தது. அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும், சத்தம் வந்த திசையைநோக்கி, தங்கள் கவனத்தைச் செலுத்தினர். 

அவர்கள் இருந்த இடத்திற்கு சற்று தொலைவில், ஒரு பெரிய, கரிய, யானைத் தென்பட்டது பாதையின் இடப்புறம் தென்பட்ட அந்த யானை, மரங்களின் ஊடே நின்றுகொண்டு இருந்தது. பாதையின் வலப்புறம், ஒரு வேட்டை வீரன், தனது குதிரைமீது அமர்ந்தபடி வில்தொடுத்திருந்தான். அந்த 'யானைக்குக் குறிவைக்கிறானோ', என்று நினைத்துக்கொண்டு, அந்த யானையையும் அவனையும், மாறி மாறி பார்த்தனர், அந்த கூட்டத்தார். இமைப்பொழுதில், அவன் வில்லிலிருந்து அம்பு புறப்பட்டது.

அந்த அம்பு, அந்த வேழத்தைக் கீழே வீழ்த்தியது. அதன்பின், எவருக்கும் தெரியாதவாறு பதுங்கி நின்ற, புலியின் வாயைத் துளைத்தது. வாய்பிளந்து உயிர்விட்ட, அந்தப் புலியின் பின்னால் நின்ற மானையும் துளைத்ததுப் பாய்ந்து, மானுக்கு அடுத்து நின்றிருந்த பன்றியையும் துளைத்தது. அதன் பின்னும் நிற்காது பாய்ந்து, இறுதியில், ஒரு மரப்பொந்தில் போய்த் தைத்தது. அந்தப் பொந்தில், உடும்போன்று குடிகொண்டிருந்தது போலும். பொந்தில் தைத்த அம்பு, உடும்பையும் தைத்திருந்தது.

இப்படி ஒரே அம்பில், இத்தனை மிருகங்களையும் வேட்டையாடிய 'அந்த வில்லாளன் யார் ?' , என்று மறுபடியும் ஒருமுறை அந்த வேட்டைவீரனை வியப்போடு பார்த்தனர், அந்த கூட்டத்தார். அவன் தோற்றம், அவன் மார்பிலிருந்த முத்துமாலை, அவன் கைகளில் அணிந்திருந்த கடகம், இவையெல்லாம், அவன் யாரென்று சொல்லிற்று தெரியுமா ?

அவர்கள் முன்னாள் நிற்பது வேறு யாருமில்லை... கொல்லிமலைக் கோமகன், வில்வித்தையில் வல்லவன், வற்றாது கொடுத்த கொடைவள்ளல், வல்வில் ஆதன் ஓரி, என்று. இந்த கூட்டத்தார், அவனைப்பார்த்து "நீங்கள் ஆதனின் மகனான வல்வில் ஓரியா ?" , என்று கேட்டார்கள்.

அவன் பதிலேதும் சொல்லாமல், சிரித்தான். அவன் சிரிப்பில், அப்படி ஒரு கம்பீரம். பாணர்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த யாழ், முழவு போன்ற கருவிகளை இசைத்துப் பாடலானார்கள். அவனோ, அந்த இசையில் மெய்மறந்து நின்றான்.

"வல்வில் ஓரியின் புகழ் வாழ்க !!" , என்று அவர்கள் பாடியபோது, அவன் நாணினான்.

அப்படியென்றால், இவர் நிச்சயம் ஓரிதான், என்று புரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். அவர்கள் மகிழ்ச்சி, அவர்கள் பாடலில் வெளிப்பட்டது. அவனோ, அந்த பாடலை ரசித்துக்கொண்டே, தான் வேட்டையாடிய மானின் துண்டுகளை நெருப்பில் வாட்டி, பக்குவமாக்கி, அதை அவர்களுக்கு அளித்து பசியாறச் செய்தான். அவர்கள் தொண்டை வறண்டுவிடாதபடி, அவன் காட்டிலேயே சேகரிக்கப்பட்ட, 'நெய்' போன்ற தேனைக் கொடுத்தான்.

வயிறார உண்டவர்கள், வாயார வாழ்த்தினார்கள். உண்ட மயக்கத்தில், பாடுவதைக்கூட மறந்தார்கள். அவர்களை வெறும் கையோடு அனுப்பாது, பொன்னும் மணிகளும் கொடுத்து அனுப்பிவைத்தான், வள்ளல் ஓரி.

ஓரியின் அரண்மனையில், ஒரு நாள்

ஓரியிடம் பரிசுபெற்ற பாணர்கள், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும்போது, வல்வில் ஓரியின் புகழையும், அவன் கொடைச்சிறப்பையும் பற்றிப் பாட ஆரம்பித்தார்கள். அதைக்கேட்ட மற்ற பாணர்களும், கூத்தர்களும், புலவர்களும், தங்கள் வறுமையின்போது, அவனைத் தேடி, கொல்லிமலைக்கு வர ஆரம்பித்தார்கள். அப்படி வந்தவர்களுக்கு, வயிறார உணவும், நாவாற தேனும் கொடுத்து, அவர்கள் துயில்கொண்டு களைப்புரவும் ஏற்பாடு செய்திருந்தான், ஓரி. அவன் விருந்தோம்பலினால் அவர்கள், தாங்கள் எதற்கு வந்தோம் என்பதையே மறந்துபோனார்கள்.

அப்படி ஒரு புலவர், அவன் அரண்மனையில் தங்கியிருந்தபோது, ஓரியின் பணிப்பெண்கள் உட்கார்ந்து, மாலையொன்றைத் தொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். நீல மணிகளால் ஆன குவளைப்பூ போன்ற ஒன்றை, வெள்ளியினாலான நார்களைக்கொண்டு தொடுத்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள். அப்போதுதான் அவருக்கு, தான் அங்கு எதற்காக வந்தோம் என்பதே ஞாபகம் வந்தது. உடனடியாக, ஓரியைச் சென்று சந்தித்து, பாடலும் பாடி, அந்தக்காட்சியையும் தன் பாடலில் வைத்தார், அப்புலவர்.

பாடி முடித்த அவருக்கு, பாடலின் சுவையுணர்ந்த அவன், பொன் அணிகலன்கள் பூட்டிய யானைகளைப் பரிசாகத் தந்தான். இதற்கே வியந்தால் எப்படி ? இதற்கு முன்பு ஒருசிலருக்கு, தனக்குச் சொந்தமான சில ஊர்களைக் கூடப் பரிசாகத் தந்தானாம்.

"இப்படிக் கொடுத்தால், என்னவாகும் ? செல்வம் குறைந்துவிடாதா ?" என்று அந்த புலவர் வியந்தபோது, பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்களாம், "எங்கள் கொல்லிமலை வளங்களுக்கு முன்னால், இந்தப் பொருட்களெல்லாம், எம்மாத்திரம் ?" , என்று.

உண்மைதான். கொல்லிமலையில் எக்காலமும் கிடைக்கும் தேனுண்டு. சந்தன மரங்கள் உண்டு. குமளிப் பழங்கள் உண்டு. எங்கும் கிடைக்காத அரியவகை மூலிகைகள் உண்டு. அவற்றைப் பறித்து மருந்தாக்கத் தெரிந்தோரும் உண்டு. வேட்டையாடி உண்டுகொள்ள உயிர்கள் உண்டு. அதற்கென, அவற்றை ஒரேடியாக வேட்டையாடித் தீர்க்காதிருக்கும் அறம் பின்பற்றப்பட்டதால், பல்லுயிர் பெருக்கமும் உண்டு. 

அதன் சிறப்பறிந்த மக்களும் உண்டு. இவற்றையெல்லாம் காக்கும் அரசனும் உண்டு. இப்படிப்பட்ட வளம் மிகுந்த கொல்லிமலைக்கு, சற்றும் எதிர்பாராத முறையில், ஒரு ஆபத்து வந்தது.  

கொல்லிமலைக்கு வந்த ஆபத்து

அந்த காலகட்டத்தில், சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், குதிரை மலையை ஆட்சி செய்த, அதியர் கோமகன் நெடுமான் அஞ்சிக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருந்தது.

பின்னாளில், 'நெடுமான் அஞ்சி தனக்கு இணையாக வளர்ந்து விடக்கூடாது' , என்பதற்காகச் சேரமன்னன் ஒரு திட்டம் தீட்டினான். அத்திட்டத்தின்படி, குதிரை மலையைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிவும் செய்தான்.

குதிரை மலையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும், ஓலை அனுப்பப்பட்டது. பெரும்பாலானோர், ஓலையை ஏற்றுக்கொண்டு சேர மன்னனின் ஆட்சிக்குக் கீழ், தங்கள் பகுதிகளைக் கொண்டுவர இசைந்தார்கள். அதேமாதிரியான ஒரு ஓலை, வல்வில் ஆதன் ஓரிக்கும், அனுப்பப்பட்டது. அந்த ஓலையைக் கண்டு சீறி எழுந்தான், வல்வில் ஓரி. 

அவன் அப்படி சீறி எழுந்ததற்கு, காரணம் உள்ளது. ஏனெனின், அந்த எல்லைப்பகுதிகளைக் கைப்பற்றியபிறகு, சேர மன்னன் ஒன்றும் சும்மாயிருக்கப் போவதில்லை.அவன் அமைக்க விரும்பியது, அவனது படைத் தளவாடங்களை. எக்காலமும், நெடுமான் அஞ்சியை எதிர்க்கத் தயார் நிலையில் இருக்கும் தளவாடங்களை.

அப்படி தளவாடங்கள் அமைக்கப்பட்டால், தன் கொல்லிமலை என்னவாகும் ? அதன் வளங்கள் என்னவாகும் ? பட்டு மெத்தைபோல வளர்ந்த செடிகொடிகள் என்னவாகும் ? சந்தன மரங்கள் என்னவாகும் ? சிந்தும் தேனடைகள் என்னவாகும் ? இதைச் சிந்தித்துதான் வெகுண்டான், வல்வில் ஓரி.

"கொல்லிமலையைத் தர முடியாது" , என்று பதிலும் அனுப்பினான்.

"ஓ.. தராவிடில் ஒன்றும் பிரச்னையில்லை. மாவீரன் மலையமான் திருமுடிக்காரியின் தலைமையில் படைகள் அனுப்புகிறேன். முடிந்தால், உன் மலையைத் தந்து சரணடையலாம். இல்லையேல், செத்து மடியலாம்" , என்று பதிலனுப்பினான், சேர மன்னன்.

"என்ன செய்யலாம் ? காரியின் படையோ மிகப்பெரியது. மண்டியிட்டு, வாழ்நாள் முழுவதும் இழுக்கோடு வாழ்வதா ? இல்லை, போரிடுவதா ?" , குழம்பினான், வல்வில் ஓரி. அப்பொழுதும், இப்போதுபோல், இளைஞர்கள் முன்வந்தனர். 

"நாங்கள் வருகிறோம் போருக்கு. எங்கள் பயமலையைக் காப்பதில் எங்களுக்கு பயமேதுமில்லை" , என்றனர்.

படையின் அளவு சற்று பெரிதானது. வில்லுக்கு வித்தகனின், ஊர் மக்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா ? வில்வித்தையில் சிறந்தவர்கள்தான். எடுத்தனர் வில்லை. தொடுத்தனர் நாணை. பூண்டனர் போர்க்கோலம்.

கொல்லிமலையில் நடக்கும் போர்

வெகு விரைவிலேயே, போர் ஆரம்பித்தது.

பெயரைக் கேட்டாலே, நடுங்குமளவுக்கு ஒரு மாவீரன், திருக்கோவிலூர் மன்னன், மலையமான் திருமுடிக்காரி. தன் பெரிய படையுடன், கொல்லிமலை வந்து சேர்ந்தான். ஓரியின் படை அளவைப் பார்க்கும்போது, காரியின் படையின் அளவு, மிக மிகப் பெரியது. ஆயினும், அதைக்கண்டு ஓரியின் வீரர்கள் எவரும் அஞ்சவில்லை. வில்லின் வீரர்கள், வேலின் வீரர்களை எதிர்கொண்டனர்.

ஒருவருக்கொருவர், சளைக்காத போட்டிதான். யுத்தக்களம் சூடு பிடித்தது. ஓரியின் படையில் பலர் மாண்டனர். காரியின் படையிலும் சிலர் மாண்டனர். வல்வில் ஆதன் ஓரி, மலையமான் திருமுடிக்காரியை நேருக்கு நேர் சந்தித்தான். வல்வில் ஆதன் ஓரிக்கு கூற்றுவனை நேரில் கண்டதுபோல இருந்தது. ஆயினும், துளி அச்சம் இல்லை, அவன் கண்ணில்.

வீரனுக்கு அழகு, வீரனை வெற்றி கொள்வதுதான். காரியின் வேலும் ஆனந்தம் கொண்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கினர். கடுமையான அந்த போராட்டத்தில், பல வீரர்களையும் அரசர்களையும் துளைத்து, குருதியில் நனைவதையே தன் கருமமாகக் கொண்டிருந்த, காரியின் வேல், வில்லாளனின் மாரைத் துளைத்தது.

இதயத்தின் ரத்தம் மார்பில் கசிய, ஒரு கண்ணில் வானமும், மறுகண்ணில் கொல்லிமலையும் தெரிய, தன் மலையைக்காக்காது போகிறோமே, என்ற ஏக்கம் விரிய, உயிர்நீத்தான் வல்வில் ஓரி .

அந்தப்போர் முடிந்து, கொல்லிமலை சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் கொடுக்கப்பட்டது. வெற்றிக் களிப்போடு, தங்கள் வீதிகளில் வலம்வந்த காரியின் வீரர்களைப் பார்த்து, கொல்லிமலை மக்களிட்ட ஓலம், விண்ணையும் துளைத்தது. சந்தனவாசம் வீசும் அம்மலையில், சாம்பல் வாசமும் கலந்தது. 

இதுவே, வல்வில் ஓரியின் வரலாறு.

என்னைப் பொறுத்தவரை, வல்வில் ஓரி மறையவில்லை. கொல்லிமலையில் பசுமை உள்ளவரை, இயற்கையைக் காக்கும் எண்ணம் உள்ளவரை, வரையாது கொடுக்கும் கைகள் உள்ளவரை, தமிழ் உள்ளவரை, வல்வில் ஓரி மறையப்போவதுமில்லை.

கடையேழு வள்ளல்கள் - TNPSC Online Quiz


கடையேழு வள்ளல்களின் வரலாறு கதை வடிவில் 

Pari History in Tamil - வள்ளல் பாரி

Malayaman Kaari History in Tamil - வள்ளல் மலையமான் காரி

Valvil Ori History in Tamil - வள்ளல் வல்வில் ஓரி

Aai Andiran History in Tamil - வள்ளல் ஆய் அண்டிரன்

Adhiyaman History in Tamil - வள்ளல் அதியமான் 

Nalli History in Tamil - வள்ளல் நள்ளி 

Pegan History in Tamil - வள்ளல் பேகன் 

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


இது கொல்லி மலையை ஆண்ட வள்ளல் - வல்வில் ஆதன் ஓரியின் வரலாறு. பற்பல நூல்களில் இருந்து வல்வில் ஓரி பற்றியும், கொல்லிமலை பற்றியும் கருத்துக்களைத் திரட்டி, காட்சியமைப்புகள் கொடுத்து இந்த வரலாற்றை ஒரு சிறுகதைபோல எழுதியுள்ளேன். பாடல்களின் எண்ணும், நூல்களின் பெயரும், கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. திரு. ராஜா திருவேங்கடம் அவர்கள் எழுதிய கொல்லிமலை சித்தர்கள்
2. கி.வ.ஜா. அவர்கள் எழுதிய கடையேழு வள்ளல்கள்
3. கி.வ.ஜா. அவர்கள் எழுதிய அதிகமான் நெடுமான் அஞ்சி
4. பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் எழுதிய சங்ககால வள்ளலகள்
5. திரு. புலியூர் கேசிகன் அவர்கள் எழுதிய புறநானூறு - மூலமும் உறையும்
6. புறநானூற்றுப் பாடல்கள் - எண் 152, 153, 204
7. அகநானூற்றுப் பாடல்கள் - எண்
8. குறுந்தொகைப் பாடல் - எண்
9. நற்றிணைப்பாடல் எண் - 6, 265, 320

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post