ஆட்டுப் பந்தயம் நடக்கும் தீவு - Motivational Story



நீ வெற்றிபெறும் வரை, இந்த உலகம் 

உன்னைத் தனது கால் தூசிக்குக் கூட மதிக்காது..

எங்கே இந்த உலகம், 

'உன்னைக் கேலி செய்து விடுமோ' என்ற பயத்தில், 

உனது முதல் முயற்சியை நீ ஒத்திவைத்தால்,

இங்கே, உன்னை விட ஒரு முட்டாள்,

வேறு எவரும் இருக்க மாட்டார்கள். 

"நல்லாருக்கே.. இத யார் சொன்னாங்க ?", என்று யோசிக்கிறீர்களா ? வேறு யாரு ? நான் தான். பின்னே, பல வருடங்களாக இந்த உலகத்தின் கால் தூசிக்குக் கூடப் பெறாமல் இருந்த அனுபவம் எனக்கு உண்டல்லவா !! 

அதனால், இதைச் சொல்லும் உரிமையும் கடமையும் தார்மீகமாகவே எனக்கு வந்து விட்டன. சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் நமது கதைக்கு வருவோம்.

உங்களுக்கு ஆட்டுப் பந்தயம் பற்றித் தெரியுமோ ? அட, நான் கிண்டலெல்லாம் செய்யல மக்களே !! உண்மையாகவே 'ஆட்டுப் பந்தயம்' என்று ஒன்று இருக்கிறது. அதற்கு ஒரு விசித்திரமான வரலாறும் இருக்கிறது. கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், முயற்சி செய்யத் தயங்கும் நபர்களை ஊக்குவிக்கக் கூடிய வரலாறு அது. 

இணையத்தில், அது குறித்து நிறைய தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், சில சுற்றுலாக் குறிப்பேடுகளைக் குடைந்தத்தில், ஓரளவுக்கு அடிப்படை ஐடியா கிடைத்தது. அப்புறம் என்ன ? அதையே ஒரு குட்டிக் கதையாக மாற்றி எழுதியாச்சு ?

கதையை வாசிக்கலாமா ??

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


தென் அமெரிக்காவில் வெனிசுலா என்றொரு நாடு இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வெனிசுலா நாட்டுக்கு வட கிழக்கில் தான் 'கரீபியன் தீவுக் குழுமம்' இருக்கிறது. நிறைய குட்டிக் குட்டித் தீவுகளாலான அந்தக் குழுமத்தில் இருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான், 'டோபகோ'

இந்த டோபகோவிலிருக்கும் 'புக்கோவ்' என்ற கிராமத்தில், ஒவ்வொரு ஈஸ்டர் பண்டிகைக்கு அடுத்த நாளும் நடக்கும் குதிரைப் பந்தயம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகப் மிரபலம். அப்படி சுற்றுலாப் பயணிகளுக்கு பேவரையாகிப் போன ஈஸ்டர் குதிரைப் பந்தயம், அது நடக்கும் இடத்துக்கு அருகிலேயே இருந்த 'புக்கோவ்' கிராமத்து வாசிகளுக்கு மட்டும் எட்டாக் கனியாகிப் போனது. காரணம் வேறென்ன ? பணம் தான்.
 
ஆம், மக்களே !! 'குதிரைப் பந்தயம்' என்பது செல்வந்தர்களுடைய விளையாட்டு. அதைப் பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கவோ, இல்லை அதில் கலந்துகொள்ளவோ, சாதாரண கிராமவாசிகளிடம் பணம் இருக்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடந்த அந்த ஈஸ்டர் குதிரைப் பந்தயம் அவர்களை சலிப்படையச் செய்தது. 

விளைவு ? "எங்களுக்கும் இது போன்று ஒரு போட்டி வேண்டும்", என்று அந்த கிராமத்தின் நிர்வாகக் குழுவிடம் கேட்டார்கள் சில கிராம வாசிகள். 


"என்னது பந்தயத்துல கலந்துக்கணுமா ? அதுக்கு முதல்ல குதிரைங்க வேணும். நம்ம யாராவது ஒருத்தர்கிட்டயாவது குதிரைன்னு ஒண்ணு இருக்கா ? சொல்லுங்க பார்ப்போம்" என்று நிர்வாகக் குழுவினர்கள் சிரிக்க,

"ஏன் முடியாது ? நம்ம கிட்ட குதிரைங்க இல்லாமப் போனா என்ன ? ஆடுகள் இருக்குல்ல. அத வச்சி நம்ம பந்தயம் நடத்துவோம்" , என்றார் கூட்டத்தில் ஒருவர்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

"அட, ஆடுகள வச்சிப் பந்தயமா ? சரி, குதிரைப் பந்தயத்துல குதிரைங்க மேல உக்காந்து சவாரி பண்ணுவாங்க . ஆட்டுப் பந்தயத்துல எப்படி ? ஆடுகள் மேல உக்காந்து சவாரி பண்ணுவீங்களா ? அப்படிப் பண்ணுனா, ஆடு செத்துறாது ? ஹா, ஹா, ஹா"

"நீங்க சொல்லுற மாதிரி ஒண்ண நம்ம நடத்துனோம்னு வைங்களேன்.  இந்தத் தீவு மொத்தமுமே, நம்மளப் பாத்து கைகொட்டி சிரிக்கும்"  

இப்படிப் பலவாறு கேலியும் கிண்டலும் எழுந்தது.

ஆனாலும், அந்த கிராமத்து நிர்வாகிகள் குழுவிலிருந்து சிலருக்கு மட்டும், ஆடுகளை வைத்துப் பந்தயம் நடத்தும் ஐடியா சரிப்பட்டு வருமென்று தோன்றியது. 

"வர்றவங்க வாங்க. வராதவங்க வீட்டுல இருங்க. ஆனா, நாங்க இந்த வருஷம் ஒரு ஆட்டுப் பந்தயம் நடத்தத் தான் போறோம்" என்று சொல்லி ஏற்பாடுகளை ஆரம்பித்தார்கள். 

அந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில், வழக்கம்போல ஒரு பக்கம் ஈஸ்டர் குதிரைப் பந்தயம்  நடக்க, அதற்கு அடுத்த நாள், முதன்முறையாக ஆட்டுப் பந்தத்தையமும் நடந்தது. 



அது தான் முதல் முறை என்பதால், ஏகப்பட்ட குளறுபடிகள். பாதி ஆடுகள் ஓடாமல் நிற்க, மீதி ஆடுகள் புற்களைத் தின்ன, ஓட ஆரம்பித்த ஆடுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓட, ஒரே கூத்தாக இருந்தது. 

ஏற்கனவே விமர்சனம் செய்தவர்களை இப்போது கேட்கவா வேண்டும் !! 

"இந்தப் பைத்தியக்கார கோஷ்டிக்கு வேற வேலையுமில்ல, சோலியுமில்ல" என்று சொன்னார்கள். 

பங்குகொண்டவர்களோ, "இவங்கள நம்பி வந்ததுக்கு நல்லா வச்சி செஞ்சிட்டாங்க" , என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். 

குதிரைப் பந்தயக்காரர்களும், வேடிக்கைப் பார்த்தவர்களும் விழுந்து விழுந்து சேர்த்தார்கள். 

இந்த நிர்வாகக் குழுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. "
அவ்ளோதான், இனி இந்தப் பந்தயமே வேண்டாம்" , என்று முடிவெடுத்து களைந்து சென்றார்கள். 

நாட்கள் உருண்டோடின. அடுத்த வருட ஈஸ்டருக்கான நாளும் நெருங்கியது. பண்டிகைக்கு ஒரு மாதமே  மிச்சமிருந்த சமயத்தில், சிறுவன் ஒருவன் இந்த ஆட்டுப் பந்தயக் குழுவிடம் வந்தான். "இந்த வருஷம் பந்தயம் நடக்குமா ? நான் என்னோட ஆட்டை அந்தப் பந்தயத்துக்காகப் பழக்கி வச்சிருக்கேன்" என்றான். 

அவனைப்போல, வேறு சில சிறுவர்களும் கூட அப்படியே சொன்னார்கள். 

அந்தக் குழுவினருக்கு மெய்சிலிர்த்துப் போனது. 

"இவர்களுக்காகவாவது இந்த வருஷமும் பந்தயம் நடத்துவோம்" , என்று தோன்றியது. அந்த வருடம், சில மாற்றங்களோடு, மறுபடியும் அந்தப் போட்டியை நடத்தினார்கள். குளறுபடிகளே குறைந்தன.  

" பணக்காரங்களுக்கு குதிரை பந்தயம்னா, ஏழைகள் நமக்கு ஆட்டுப்பந்தயம்" என்று சிலர் சொல்வதும், அவர்கள் காதில் விழுந்தது.

அடுத்தடுத்த வருடங்களில், விதிமுறைகள் பட்டை தீட்டப்பட்டு, தொடர்ச்சியாகப் பந்தயம் நடத்தப்பட்டது. முந்தைய வருடங்களை விட, அதிகமான பேர் பந்தயத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.


"குதிரைப் பந்தயத்த எங்க வேணும்னாலும், பாக்கலாம்பா. ஆனா, ஆட்டுப்பந்தயம் அப்படியில்லையே", என்று சொல்லிக்கொண்டு, பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஈஸ்டரின்போது அந்தத் தீவுக்கு வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதனால், அந்த கிராமத்தின் பொருளாதாரமும் கூட அதிகரித்தது. 

இப்படி, ஒரு காலத்தில் வேடிக்கையாகவும் முட்டாள்தனமாகவும் பார்க்கப்பட்ட அதே ஆட்டுப் பந்தயம்,  இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, தொடர்ந்து இன்று வரையிலும் கூட, நடந்து கொண்டே தான் இருக்கிறது. 

அந்தத் தீவில் மட்டுமல்லாது, உகாண்டா, அமெரிக்கா, லண்டன் என்று பல நாடுகளிலும் கூடப் பரவியது. 

இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். 

உங்களது எத்தனை முயற்சிகளை இந்த உலகம் வேடிக்கையாகப் பார்த்துவிடுமோ என்ற பயத்தில், நீங்கள் தொடங்கவேயில்லை ?

உங்களது எத்தனை முயற்சிகளை இந்த உலகம் வேடிக்கையாகப் பார்க்கிறது என்ற விரக்தியில், நீங்கள் பாதியிலேயே நிறுத்திவிட்டேர்கள் ? 

உங்களது எத்தனை முயற்சிகளை இந்த உலகம் மதிக்காததால், உங்களை ஒரு செல்லாக் காசுபோல எண்ணுகிறீர்கள் ?

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிபெறும் வரை, இந்த உலகம் உங்களைத் தனது கால் தூசிக்குக் கூட மதிப்பதில்லை. எங்கே இந்த உலகம் உங்களைக் 'கேலி செய்து விடுமோ' என்ற பயத்தில், உங்களது முதல் முயற்சியை நீங்கள் ஒத்திவைத்தால், உங்களை விட ஒரு முட்டாள், வேறு யாருமில்லை.

ஆகவே, தைரியத்தோடு உங்கள் முதல் முயற்சியைத் தொடங்குங்கள். அது வெற்றிகரமாக அமையட்டும் என்று சொல்லி, இந்தக் கதையை முடிக்கிறேன். நன்றி.

Check these stories also from APPLEBOX

உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 

தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

Grandma's Question - An interesting Moral Story in Tamil

This section in APPLEBOX is exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

In YOUTUBE, you can search for Applebox Motivational Stories, Kutty Stories Applebox and Kutty Kadhai Applebox. Both my channel and website has a good collection of motivational stories in Tamil. Those Stories include Stories of
Successful People in Tamil
Motivational Video in Tamil for Students
Motivational Video in Tamil for College Student
Moral Stories in Tamil and Kutty Stories.

இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க, 


1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post