பாட்டியின் கேள்வியும் மன்னனின் பதிலும் - Motivational Story

 இருப்பதிலேயே சுலபான வேலை எது தெரியுமா ? தெரியாவிட்டால், அதற்கான பதிலையும் அதை விளக்கும் அழகான குட்டிக் கதையையும் இப்பொழுது வாசிப்போம்.


 AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN

பல காலங்களுக்கு முன்னர், வசந்த புரம் என்றொரு நாடு இருந்தது. அந்த நாட்டை வசந்த ராஜன் என்ற அரசர் ஆட்சி செய்து வந்தார். அவர் தனது மக்களின் மீது அதீத அக்கரை கொண்டு நிறைய நலத்திட்டங்களை ஏற்பாடு செய்து, அவற்றைத் துரிதமாகச் செயல்படுத்தவும் செய்தார். புதிய சாலைகள் போடப்பட்டன. நிறைய மரங்கள் நடப்பட்டன. குளங்கள் தூர்வாரப்பட்டன. கல்விச்சாலைகளும் நிறுவப்பட்டன. 

இப்படி எல்லாம் செய்து முடித்த பின்னர், “நமது நாடு இப்போது எப்படி இருக்கிறது ? குறிப்பாக நமது மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ?” என்ற கேள்வி அரசருக்கு எழுந்தது. 

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


அதனால், ஒரு இரவுப்பொழுதில் தனது நாட்டைப் பார்வையிட மாறுவேடத்தில் சென்றார் அரசர். அப்படிப் பார்த்தபோது, அவரைப் பொறுத்தவரையில் அந்த நாடு அவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விடவும் நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. சாலைகள் சீராகவும், குளங்கள் நீர் நிறைந்தும், மக்கள் செல்வா வளங்களோடும், மகிழ்ச்சியாகவும் இருப்பதையும் அவரால் பார்க்க முடிந்தது. அது அவருக்குப் பெருமகிழ்ச்சியையும் அளித்தது. 

ஆயினும், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. ஏனெனில், அடுத்த சில நிமிடங்களிலேயே, மக்களுள் சிலர் அவரது ஆட்சியைப் பற்றி குறை கூறுவதை அவர் கேட்க நேர்ந்தது. சிலர் அவரை ஏமாளி அரசரென்றும், சிலர் அவர் நடிக்கிறார் என்றும், சிலர் அவரைக் கோழையென்றும், கஜானாவை வாரி இறைக்கிறார் என்றும், ஏதாவது ஒரு வகையில் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். 

இதெல்லாம் அவர் காதில் விழுவும், அவர்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்த அவருக்கு அது வேதனையை அளித்தது. அப்படி மனமுடைந்து போன அரசர், கண்ணீரோடு அங்கிருந்து வெளியேறி, நகர எல்லையில் அமைந்திருந்த மண்டபம் ஒன்றில் வந்து உட்கார்ந்துகொண்டு, முகத்தைப் பொத்திக்கொண்டு குமுறி அழுதார்.

அப்பொழுது, "என்னப்பா இது ? என்ன பாரம் உனக்கு ? இப்படி கப்பல் கவிழ்ந்ததுபோல் உட்கார்ந்திருக்கிறாயே ?" என்று அசரீரி போல ஒரு குரல் கேட்டது.

அரசர் நிமிர்ந்து பார்த்தபோது, அங்கே ஒரு மூதாட்டி நின்றிருந்தார். அரசருக்கென்னவோ அந்த மூதாட்டியைப் பார்த்ததும் தனது கவலையைப் பகிர வேண்டும் போலிருந்தது. எனவே, அவரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, தனது மனக் குமுறலையும் வெளிப்படுத்தினார். அந்த மூதாட்டியோ, ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு, "இவ்வளவுதானா ? இதற்கு என்னிடம் ஒரு சிறந்த தீர்வு உள்ளது. ஆனால், அதை நான் சொல்லவேண்டுமென்றால், நீ எனக்கொரு வேலை தர வேண்டும்" என்றார்.

"வேலை தானே !! தந்தால் போச்சு", என்று அரசர் சொல்ல , "அரசரே. நானோ, வயதான மூதாட்டி. கடினமான எந்தவொரு வேலையும் என்னால் செய்ய இயலாது. அதனால், இருப்பதிலேயே சுலபமான வேலையைத்தான் நீர் எனக்குத் தர வேண்டும். அப்பொழுதுதான் நான் அந்தத் தீர்வைக் சொல்வேன். இது எனது நிபந்தனையும் கூட" , என்று கெடு வைத்தார் அந்த மூதாட்டி. 

"பிரச்சனையே இல்லை பாட்டி. சுலபமான வேலை தானே. நிச்சயம் தருகிறேன்" , என்று அவரது நிபந்தனைக்கு  ஒப்புக்கொண்டு, அந்த மூதாட்டியைத் தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றார் அரசர்.

அரண்மனையில் அந்த மூதாட்டிக்கு ஒரு பெரிய அறை ஒதுக்கப்பட்டது. நான்கைந்து பணியாட்கள் நியமிக்கப்பட்டனர். நல்ல உணவு கொடுக்கப்பட்டது. 'அந்த அறையிலேயே உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டும்' என்ற வேலையும் கொடுக்கப்பட்டது. அதன்படியே, அந்த மூதாட்டியும் அங்கு உட்கார்ந்து ஓய்வெடுத்தார். 

நேரம் கடந்து சாயங்காலப்பொழுதும் வந்தபோது, அரசர் அவரை வந்து சந்தித்து , "என்ன பாட்டி, எப்படி நான் கொடுத்த வேலை. சுலபமாக இருக்கிறது தானே ?" என்றும் கேட்டார். 

அந்த மூதாட்டியோ, "ஆங். அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலையா இது ? சும்மா உட்கார்ந்து உட்கார்ந்து முதுகெல்லாம் வலிக்கிறது. கால் வலிக்கிறது. இந்தப் பணிப்பெண்களை வேலை வாங்குவதும் கூட சிரமமாக இருக்கிறது. இனி இந்த வேலை வேண்டாம். எனக்கு வேறு எதாவது சுலபமான வேலையைக் கொடு" , என்று அரசரிடம் கேட்டார்.

அரசருக்கோ, ஆச்சரியமாகிப் போனது. ஆயினும், யோசித்துவிட்டு அடுத்த நாளில் அந்த மூதாட்டிக்கு வேறு ஒரு வேலையைக் கொடுத்தார். அதாவது அந்த மூதாட்டி அவருக்குக் கொடுக்கப்பட்ட அறையிலேயே தங்கி ஓய்வெடுக்கலாம். ஆனால், காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் மட்டும் அரண்மனை நந்தவனத்துக்குச் சென்று அங்கிருந்து பூக்கள் பறித்துவர வேண்டும். அவ்வளவுதான். 

இந்த வேலைக்கும் அந்த மூதாட்டியும் சம்மதித்து, அதன் படியே செய்தார். அந்த நாள் முடியும்போதும், அரசர் அந்த மூதாட்டியை வந்து சந்தித்தரர். " இந்த வேலை சுலபமாக இருக்கிறதா ?" , என்று கேட்டார். ஆனால், இந்த மறையும் மூதாட்டியிடம் திருப்திகரமான பதில் வரவில்லை. 

"நல்லா வேலையைக் கொடுத்தீர்களப்பா. பூக்களைப் பறித்துப் பறித்து என் விரல் நுனியெல்லாம் சுருங்கிவிட்டது. இதில் அந்த நந்தவன வண்டுகளின் ரீங்காரம் வேறு. எங்கே காதுக்குள் நுழைந்து விடுமோ என்று பயந்தே போனேன். இது சுலபமான வேலையா ?" , என்று குறைபட்டுக் கொண்டார். 

அரசருக்கோ, என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆயினும், அடுத்து வந்த நாட்களிலும், அடுத்தடுத்து  தனக்குத் தெரிந்த சுலபமான வேலைகளை அவர் அந்த மூதாட்டிக்குக் கொடுக்க, அவை எல்லாவற்றையுமே "இது சுலபமானது இல்லை. அது சுலபமானது இல்லை" , என்று சொல்லி நிராகரித்தார் அந்த மூதாட்டி.

ஒரு மாதமாக சளைக்காமல் முயற்சி செய்த அரசருக்கு ஒரு நாள் பயங்கர கோபம் வந்துவிட்டது. "என்ன பாட்டி இது. எந்த வேலையைக் கொடுத்தாலும், குறை சொல்லுகிறீர்கள். குறை சொல்வது தான் இருப்பதிலேயே ரொம்ப சுலபம். கொஞ்சம் விட்டால், அதையே கூட வேலையாக செய்வீர்கள் போலவே"  என்று குரலை உயர்த்த, இடிமுழக்கம் போன்று சிரித்துவிட்டு, 

"பலே, பலே. கண்டுபிடித்து விட்டாயே !! நீ சொன்னது போல, இருப்பதிலேயே சுலபமான வேலை குறைசொல்வது தான். அதனால் தான் அரசே, அன்று உனது மக்களில் சிலரும் அதையே செய்தார்கள். அதற்குப் போய் அன்று குமுறி அழுது, உபகாரத்துக்கு இந்தக் குழவியிடம் தீர்வையும் கேட்டாயே !!" , என்று சொன்னார் அந்தப் பாட்டி.

"அட. இதை உணர்த்தத்தான் இந்தப் பாட்டி இப்படிச் செய்தாரா ?" என்று நினைத்துச் சிரித்துவிட்டு, அவரைப் பாரட்டிப் பரிசளித்தும் அனுப்பினார் அந்த அரசர்.

இந்தக் கதையில் வந்த அரசனைப் போலத்தான், நம்மில் பலரும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மைப் பற்றிச் சொல்லும் குறைகளுக்காக வருத்தப்பட்டு நமது உடல்நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்ட ஒருவராக நீங்கள் இருந்தால், நான் உங்களுக்குச் சொல்கிறேன். 

ஒருவர் உங்களைக் குறைசொல்லும்போது, உண்மையிலேயே உங்கள் பக்கம் தவறு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். அப்படியேதும் இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். இல்லையா ? அப்படியெனில், இந்தக் கதை உங்களுக்கு ஞாபகத்துக்கு வரட்டும். 

அதே போல, நீங்களும் சுலபமாக இருக்கிறதே என்று நினைத்து யாரையும் குறை சொல்லாதீர்கள். இதுவே இந்தக் கதை மூலம் நான் உங்களுக்குத் சொல்ல நினைத்தது.


Check these stories also from APPLEBOX

உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 

தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.

If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,Applebox Motivational, Motivational Stories Applebox, Kutty Stories Applebox and Oru Kutty Kadhai Applebox

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, Motivational Video in Tamil for College Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post