எல்லாரும் நாடகம் பார்க்க வாங்க !! Kids Drama Tamil



எனது வாசக மகா ஜனங்களுக்கு வணக்கம்..

இதனால் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், நீங்கள் இப்போது ஒரு நாடக கோஷ்டியைப் பார்க்கப் போகிறீர்கள். இது எங்கே உருவான கோஷ்டி தெரியுமோ ? அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் உருவான கோஷ்டி.

வாசக நண்பர்களே !! எனக்கு சிறுவயதிலிருந்தே இந்த நாடகம் போடுறதுன்னாப் பிடிக்குமுங்கோ. பள்ளிக்கூடம் தொடங்கி இன்றுவரைக்கும் சுமார் 26 நாடகங்களை இயக்கி அரங்கேற்றியாச்சு. மேடையிலேயே உருண்டு புரண்டதில் ஆரம்பித்து, வகுப்புகளைக் கட்டடித்து வாங்கிக் கட்டிக்கொண்டது வரை எல்லாமே பசுமையான அனுபவங்கள். கடைசியாக, ஐபிஎம் ஆடிட்டோரியத்தில் ஒரு ஒற்றை க்ளையண்டுக்கு விபூதியடிக்க, ஒன்பதுபேர் சேர்ந்து நாடகம் போட்டது ஹைலைட். அப்புறம் அவ்வளவு தான். ஒரு நீநீநீநீண்ட இடைவெளி.

“தேரா மன்னா செப்புவதுடையேன்”, என்று தொண்டை கிழிய வசனம் பேசுவதுமில்லை. “வா வாத்தியாரே வூட்டாண்ட”, என்று ஜாடை செய்வதுமில்லை.

அவ்வப்போது யாரேனும் ஸ்கிரிப்ட் கேட்பார்கள். இயக்கித் தரச் சொல்வார்கள். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் வாடகை இயக்குனராக இருப்பேன். பணம் தருவார்கள். சிரித்துக்கொண்டே மறுத்துவிடுவேன். அவ்வளவே !!

மற்றபடி நாடகத்துக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. விவாகரத்து, காதல் ரத்து மாதிரி, இது இடைக்கால நாடக ரத்தோ என்னவோ !!

ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன் ஒருநாள், குபீரென்று வந்தது ஆர்வம். திறந்ததும் பொங்கும் கோலா பாட்டில் போல, அடித்துப் புரண்டு கொண்டு வெளியே கொட்டியது நாடக வேட்கை.



“எப்படியாச்சு ஒரு நாடகம் போடணும்பா. மறுபடியும், ஒரு நாடகம் போடணும்”, இது மட்டும் தான் சிந்தனை.

அதே நேரத்தில், நாங்கள் வசிக்குமிடத்தில் இயங்கிவந்த ஒரு தமிழ்ப் பள்ளியில் கலைவிழாவும் அறிவிக்கப்பட, ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு முண்டியடித்தேன் நான்.

அது சரி.. ஸ்கிரிப்ட் ரெடி.. இயக்க நானும் ரெடி.. ஆனால், நடிகர்கள் ??

“ஐயோ மவனே !! அத மறந்துட்டேனே !!”, என்பது போல மறந்தே விட்டேன்.

திடீரென்று, நடிப்பதற்கான ஆட்களை எங்கே போய்த் தேடுவது ? தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம். ஆனால், வலியச் சென்றால் மரியாதையே இருக்காது. அசால்ட்டாக பல்பு கொடுப்பார்கள். அப்புறம் நாடகக் கனவை மூட்டைக்கட்ட வேண்டியது தான்.

அதனால், ஒரு முடிவு செய்தேன்.

அந்தப் பள்ளிக்கென்று தனியாக இருக்கும் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் அறிவிப்புக் கொடுத்தேன். “யாரு வர்றாங்க பார்ப்போம்”, என்று காத்திருந்தேன். வந்தார்கள்.

சரி, பதினாலு பதினைந்து வயதில் யாரேனும் வருவார்களென்று பார்த்தால், வந்த எல்லாமே நண்டு சிண்டுக்கள்.

யாரென்று பாருங்களேன்.

  1. அத்விக், வயது (7)
  2. தர்ஷத், வயது (7)
  3. இனியன், வயது (8)
  4. ப்ரத்திகா, வயது (8)
  5. விதுனா, வயது (8)
  6. மிதிலன், வயது (8)
  7. தனிஷா, வயது (9)

இவர்களோடு 12 வயது விதுன் ராமும், எனது மகளான 11 வயது ரேஷ்மியும்.

எப்படி ? ஒரு குட்டி நர்ஸரிப் பள்ளி போன்று இருக்கிறதா ? இதில் பாதி டிக்கெட்டுக்கும் மேல், அமெரிக்காவிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்த கூட்டம். மீதி, அதிகமாகத் தமிழ்பேசாத கூட்டம்.

சத்தியமாகச் சொல்கிறேன். இது மாதிரியான ஒரு குழுவை வைத்து நாடகம் நடத்திய அனுபவமெல்லாம் எனக்குக் கிடையவே கிடையாது. ஆக, பொன்னியின் செல்வனும், டெம்பெஸ்டும் நடத்திய ஆள், இப்போ ராஜா, ராணி நாடகம் போடணும். கை காலெல்லாம் சிலிர்த்துப் போச்சு.

ஆனால், இவர்களின் பெற்றவர்கள் காட்டிய ஆர்வம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. குழந்தைகளுடனான ஆரம்பக்கட்ட பேச்சு, நம்பிக்கையளித்தது. முயன்று பார்க்கும் ஆர்வத்தைத் தந்தது. ஸ்கிரிப்டை மாற்றினேன். இவர்களுக்கு ஏற்றாற்போல, வசனங்களை மாற்றினேன். நகைச்சுவை கலந்தேன். பயிற்சிக்குத் தயாரானோம்.

நான் எதிர்ப்பார்த்த சவால், இக்குழந்தைகளின் வயதும் பேச்சுத் திறனும். காத்திருந்த சவாலோ, இல்லாத மைக்கும், கொட்டிய பனியும், முந்தைய நாடகங்களைப் பெரிதும் ரசித்திராத பார்வையாளர்களும். மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது.



ஆனால், இந்தப் பிஞ்சுகளின் இதழ் உதிர்த்தக் கொஞ்சுத் தமிழின் அழகோ, எல்லாம் தாங்கும் நெஞ்சுரம் தந்தது. ஒவ்வொருவரைப் பற்றியும், ஓரிரு வார்த்தைகள் சொல்கிறேன், கேளுங்களேன்.

மந்திரி அணிலனாக நடித்த அத்விக், வயது (8)



இவன் உயரமானவன். எப்போதும் துருதுருவென்று இருப்பவன். தமிழ் சரளமாக வருவதில்லை. ஆனால், தன் வசனத்தை ஞாபகம் வைத்து உச்சரிப்பதிலும், தன் பகுதியை சிறப்பாகச் செய்வதிலும் கவனமாக இருந்தான். இவனுக்கு மைக்கே தேவையில்லை. அத்தனை நல்ல குரல்வளம். Our Curious Champ.

மந்திரி நவிலனாக நடித்த தர்ஷத், வயது (7)



இவன் சிரித்துக்கொண்டே இருப்பவன். கொஞ்சினாலும் சிரிப்பான். அதட்டினாலும் சிரிப்பான். சிரித்தே மயக்கிவிடுவான். தமிழில் சரளமில்லையென்றாலும், பழக்கிக் கொண்டான். பேசிப் பேசிப் பயிற்சியெடுத்தான். மேடையில் எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தான். Our Smiling Prince.

ஊர்க்காரராகவும், உரையாளராகவும் நடித்த இனியன், வயது (8)



சின்சியாரிட்டியில், இவனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. பிஞ்சுக் குரலில், மழலையாய்ப் பேசுவான். அஞ்சு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால், ஐம்பது ரூபாய்க்கு நடிப்பான். எப்படிப்பட்ட வேடம் கிடைத்தாலும், தனது பங்கைத் தான் சிறப்பாகச் செய்தால், அசால்ட்டாகப் பாராட்டுப் பெற முடியுமென்பதற்கு எடுத்துக்காட்டு இவன். Our Sincere Actor

ராணியாக நடித்த ப்ரத்திகா, வயது (8)



நான் பார்த்து வியந்த ஒரு அதிசயம் தான் இந்தச் சுட்டிப் பெண். தமிழ்நாட்டுக்கு வெறும் மூன்றே மாதங்கள் மட்டும் வந்திருக்கிறாள் போலும். ஆனால், கிளி போலப் பேசுகிறாள் தமிழை. எள்ளென்றால் எண்ணெயாக நிற்பதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இவளிடம் தான் அதை நேரில் பார்த்தேன். மொத்த சமர்த்து. Our Talking Parrot.

ஊர்க்காரியாகவும், உரையாளராகவும் நடித்த விதுனா, வயது (8)



கோடு போட்டால், ரோடையே போடுவாள் இவள். தன் மொத்த நாட்களையும் அமெரிக்க மண்ணிலேயே கழித்திருந்தாலும், ஒழுங்கான உச்சரிப்போடு தமிழ் பேசுகிறாள். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, வேலையென்று வந்து விட்டால் கவனத்தைக் குவிக்கிறாள். இவளுக்கு இருக்கும் கவனத்தில், பாதியிருந்தால் போதும். நாமெல்லாம் எங்கோ போய்விடுவோம். Our Proactive Princess

அறிவிப்பாளராக நடித்த மிதிலன், வயது (8)



குழந்தைப் பையனுங்க இவன். ஆனால், தலைப்பைக் கொடுத்துக் கட்டுரையும் கொடுத்தால், முத்து முத்தாகப் பேசுகிறான். சாதாரணமா வேற ஆளு. பேச்சுன்னு வந்தா வேற ஆளு. என்ன !! கடைசி டிக்கெட்டாக வந்து சேர்ந்தனால், அதிக வசனங்களைக் கொடுக்க இயலவில்லை. ஆனால், தன் பங்கை நன்றாகச் செய்தான். Our Little Charm.

மூதாட்டியாக நடித்த தனிஷா, வயது (9)



“ஆன்டீ, எனக்கு நாடகம் நடிக்க விருப்பமே இல்ல.. எங்கம்மா தான் கம்பல் பண்ணுறாங்க !!”, இப்படிச் சொல்லிவிட்டு எங்களிடம் வந்து சேர்ந்தவள் இவள். அவள் சொன்னதைக் கேட்டு எனக்கே வயிற்றில் புளியைக் கரைத்தது. சந்தேகத்தோடு சேர்த்துக்கொண்டேன்.

ஆனால், களத்தில் இறங்கிப் பேசினாளே பார்க்கணும். யாருமே இவளுக்கு எதுவும் சொல்லித் தர வேண்டாம். இவ எல்லாரையும் தூக்கி சாப்ட்டுருவா !! தயங்காமல் பாட்டி வேடத்தில் நடித்தாள். சுணங்காமல் சிரித்துக் கொண்டாள். என்றுமே, தெய்வீகமான முகம், கதகதப்பான அணைப்பு - இரண்டையும் காட்ட மறப்பதில்லை Our Rocking Princess Girl.

ராஜாவாக நடித்த விதுன்ராம், வயது (12)



பார்ப்பதற்கு சாதுபோல இருப்பான். எல்லாம் தெரியும். ஆனால், எதிர்த்துப் பேச மாட்டான். இருப்பதிலேயே அதிக வசனங்கள் இவனுக்குத் தான் என்பதால், இவனை நான் ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறேன். ஆனால், பொறுமையோடு இருப்பான்.

12 வருடங்களுமே வெளிநாட்டில் தான் இருக்கிறானாம். ஆனால், தமிழ்ப்பற்றும் அதிகம். பண்பும் அதிகம். நாடகத்தில் அரசருக்கு உயிர் தந்தான். Our Royal King.

ராணியாக நடித்த ரேஷ்மி, வயது (11)



இவள் என் மகள். ஆரம்பத்தில் இவள் பேசிய வசனங்களைக் கேட்டு, அதிர்ந்து போனேன். அப்படியொரு கோளாறான உச்சரிப்பு.

“என்ன ரேஷ்மி இது !!”, என்று வருந்தினேன். சட்டெனத் திருத்திக் கொண்டாள்.

அரசியோ, பணிப்பெண்ணோ, வேறு எதுவுமோ, பாரபட்சமின்றி ஏற்றுக்கொண்டாள். ராணியின் தோழியாக நடித்ததால், ஆடைநேர்த்தி, ஆபரணமென்று எல்லாவற்றையும் குறைக்கச் சொன்னேன். ஆசையிருந்தும் கூடக் குறைத்துக் கொண்டாள். பாராட்டோடு, நன்றி தான் சொல்லத் தோன்றுகிறது. My All-Time Saviour .

ஆக மொத்தத்தில், இவர்கள் எல்லோரும் சேர்ந்தது தான், எங்கள் நற்றிணை நாடகக் குழு. கிடைக்கின்ற நேரத்திலெல்லாம் பயிற்சியெடுத்தோம்.

கடைசி நேரத்தில், ஒரு பிரதான சிக்கலை எதிர்கொண்டோம். மொத்தம் 2 மைக்குகளை வைத்துக்கொண்டு, 9 பேர் கொண்ட அணி நாடகம் நடத்த வேண்டும் என்று. கஷ்டம். குழந்தைகளால், மைக்கைக் கைமாற்றிக் கொண்டே இருக்க இயலாது. மாற்றினால், நேரம்பிடித்து பார்வையாளர்களுக்கு ரசிக்காது. நாங்கள் வாங்கி வைத்த 8 மைக் அமைப்பானைப் பயன்படுத்தவும், அந்த அரங்கத்தில் அனுமதி கிடையாது. “என்னடா இது !! இனி இந்த நாடக பிஸனசே வேண்டாம்”, என்று சலிப்படித்தது எனக்கு.

அப்போது தான், ஏற்கனவே நிறைய நாடகங்கள் நடத்திய அனுபவமுள்ள ரம்யா ராஜேந்திரன் ஒரு அறிவுரை தந்தார். அதன்படி, எங்கள் நாடகத்தைப் பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாக (recorded play) மாற்றினோம். குழந்தைகளின் வசன ஒலிப்பதிவுகளை வாங்கி, voice editing செய்தேன். 9 குழந்தைகள் என்பதால், குரல் நேர்த்தி மற்றும் ஒலியொற்றை சரி செய்யவே 6 மணிநேரம் பிடித்தது. அத்துடன் இசையும், அவர்கள் காட்சிகளின்போது வந்து செல்வதற்கான நேர இடைவெளியும் சேர்த்து, 5 காட்சிகளையும் துல்லியப்படுத்தினேன். அதன் பின்னர், எல்லோருமாக சேர்ந்து குழந்தைகளைப் பயிற்றுவித்தோம். கடைசி நேரத்தில், குழந்தைகளைப் பயிற்றுவித்தோம்.



ஆனால், நன்றாகப் பேசி நடிப்பவர்களை குரலுக்கு வாயசைத்து ‘டப் ஸ்மாஷ்’ செய்யச் சொன்னால் எப்படி ? திணறினார்கள்.

அதன்பின், “நீங்க எப்பவும்போல பேசுங்க.. குரலையும் பின்பற்றிக்கோங்க.. அவ்வளவு தான்” என்றோம். வாண்டுகள் அதற்கும் சம்மதித்தார்கள். “எதச் சொன்னாலும் செய்யுறடா.. நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா !!”, என்று தோன்றியது எனக்கு.

பயிற்சி தொடர்ந்தது.

நாடகம் அரங்கேறும் நாளும் வந்தது. “இப்போ, அப்போ”, என்று சொல்லி படபடப்போடு மேடை ஏறினோம்.

அடுத்து 9 நிமிடங்கள். எப்படிப் போனதென்றே தெரியாது. அரங்கத்தில் கேட்ட கரவொலி மட்டுமே, இன்று எங்கள் காதில் ஒலிக்கிறது. மாயமந்திரக்காரர்கள் போல, மாயம் செய்துவிட்டார்கள் எங்கள் குழந்தைகள்.



தன்னைத் தானே இயக்கிக் கொண்டு, தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, பேசி நடித்து, கதாப்பாத்திரம் சுமந்து, என் கற்பனையை நிஜத்தில் அவர்கள் ஓடவிட்ட அந்தத் தருணம், இத்தனை வருடங்களாய் நான் தவறவிட்ட மேடைகளையும் ஒன்றாய்ச் சுருட்டிக் கையில் கொடுத்து, இந்தக் கலையே என்னை வாழ்த்தினாற்ப் போன்ற உணர்வு எனக்கு.

பெருமைக்கும் பெயருக்கும் மேடையேறாது, கலைக்காக மேடையேறும் ஒவ்வொரு கலைஞனுக்கும், என் உணர்வு புரியும். நான் நேசிக்கும் தமிழும் கலையும் கதைகளும், அவற்றைத் தந்த இறைவனும், என்னை ஒருபோதும் கைவிடுவதில்லையென்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் புரியும்.

அதற்கென, இதில் என் பங்கு மட்டுமல்ல. சொல்லப் போனால், என் பங்கு குறைவே !! எனக்குத் தோள் தந்துதவியது, பெற்றோரின் உழைப்பே !!



தன் முன்னனுபவத்தால், நிறைய அறிவுரைகள் தந்தார் ரம்யா ராஜேந்திரன். நீங்கள் அவரிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்டதைக் கொடுக்கும் ‘ஜீ பூம்பா’ பூதம் போல, “இதோ ஆலம்பனா!!” என்று அதைத் தந்து விடுவார். ராஜாவின் அலங்காரத்தை அவரே பார்த்துக்கொண்டார்.

ஒரு சமயம் அவரிடம் விளையாட்டாக, “ஒரு யானை வேண்டும்” என்றேன். “அப்படியா ? என்ன உயரத்தில் வேண்டும் ? சொல்லுங்க கொண்டு வர்றேன்”, என்றாரே பார்க்கணும். அட பொம்மை யானையைத் தாங்க. “யானை வேண்டுமா ? குதிரை வேண்டுமா ?” என்று கேட்டு வியக்க வைத்து, அரங்கப் பொருட்களுக்கும்கூட அவரே பொறுப்பெடுத்தார்.

ஆடை வடிவமைப்பை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து, பார்த்துப் பார்த்து மேடையை ஜொலிக்க வைத்தார், ப்ரியா ரஞ்சித். ஆள் பாதி ஆடை பாதி’ என்பார்கள். ஆனால், முழுவதுமே கைக்கொடுத்தது அவரது ஆடை வடிவமைப்பு. ‘தமிழ் மன்னர்களும் அவரது அவையும் வேண்டும்’ என்றேன். வேண்டியது வேண்டிய வண்ணமே தந்தார். அவர் திறமைக்கு சபாஷ் போடணும். அவர் செய்த தலைப்பாகை மற்றும் கொட்டுபறையை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

அத்துடன், இந்தியாவிலிருந்து எங்களுக்குத் தேவைப்பட்ட சில பொருட்களை வாங்கி, சரியான நேரத்துக்கு அனுப்பி வைத்து, மறைமுகப் பங்களிப்புத் தந்தார் என் அம்மா. நான் நாடகத்தில் நடிப்பதே அவருக்குப் பிடிக்காது. “என்ன, வேஷம் போட்டுக்கிட்டு ?”, என்பார். இப்போது பேத்திக்கு ஆர்வம் காட்டுகிறார். எ‌‌ன்ன கணக்கோ தெரியவில்லை.

அடுத்து, அந்த நிகழ்ச்சி முழுவதிலும் கூடவே இருந்து கையைப் பிடித்து வழிநடத்தாத குறையாக வழிநடத்தினார், லில்பர்ன் தமிழ்ப் பள்ளியில், ஆசிரியையாக இருக்கும் ப்ரியதர்ஷினி காசிநாதன்.

அப்புறம் பாருங்கள். கைக்குழந்தையுடன் பல மைல் தூரங்களுக்குப் பயணித்து வந்து, ஒவ்வொரு பயற்சிக்கும் துணை நின்றனர் திவ்யா ப்ரதீப், சபரி பாபு மற்றும் மஞ்சு ப்ரீத்தி ஆகியோர். திவ்யாவின் முழுநேர ஒத்துழைப்பு, சபரியின் உடனடி உதவிகள், மஞ்சுவின் ஒளிப்பதிவுத் திறன் - எல்லாமே எங்களுக்கு ஒரு ப்ளஸ் தான்.

இவர்களோடு, விழா நாளன்று எண்ணெயிலிட்ட கடுகாக இருந்த என்னைக் கூலாக வைத்துக்கொள்ள, அரும்பாடுபட்டார் மாதவி கார்த்திக். நன்றிகள்.

மேலும், பயணத்துக்காக ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டதும், வீடு தந்து, ஹால் புக் செய்து கவனித்துக்கொண்டதும், தவறாமல் ஒரு சிற்றுண்டியோடு வழியனுப்பி வைத்ததும், மறக்கமுடியாத இனிய நினைவுகள்.

நான் தான் அடிக்கடி டென்ஷனடித்தது. அவ்வப்போது யாரிடமாவது குரலை உயர்த்தியது. “என்ன பண்ணப் போறோம் ? ஒழுங்கா வருமா ?”, என்று பதறியது. அவர்கள் தான் மன்னிக்க வேண்டும். நான் திருத்திக்கொள்ள வேண்டும்.

மற்றபடி, எல்லாம் சுபமே !! என்ன, எங்கள் மைக்கைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருந்தால், நேரடியாகவே அவர்கள் பேசுவதைக் கண்டு இன்னும் வியந்திருக்கலாம். பரவாயில்லை. இதுவும் சிறப்புத் தான்.

மேலும் பல நல்ல குழுக்களில், மேலும் பல நல்ல நாடகங்களில், இந்தக் குழந்தைகள் பங்குபெற்று மேலும் வளர எனது வாழ்த்துக்களுடன் இந்த மடலை முடிக்கிறேன்.

“சபரி, எல்லாம் சொன்னீங்களே !! அப்படி எந்தக் கதையைத் தான் நாடகம் போட்டீங்க ?”, என்று கேட்பவர்களுக்காக எங்கள் நாடகத்தின் காணொளி, முன்னோட்டக் காணொளி, போஸ்டர் ஆகியவற்றை இணைக்கிறேன்.

Full Drama Video


Promotional Video


கதை - நம்ம ஆப்பிள்பாக்ஸில் ஏற்கனவே சொன்ன கதை தாங்க. ஆனால், அது இயற்றமிழ், இது நாடகத் தமிழ்.

பாருங்கள். வித்தியாசத்தை உணருங்கள். குழந்தைகளையும் வாழ்த்துங்கள். நன்றி.

மேலும், உங்கள் பள்ளி நாடகத்துக்கான ஸ்கிரிப்டோ, பயற்சியோ தேவைப்படுமாயின், தெரியப்படுத்துங்கள். எனக்கு அலுவலகப் பணியும் இருப்பதால், எனது நேரத்தைப் பொறுத்து செய்து தருகிறேன். என் தாய்மொழியாகிய தமிழோடு சேர்த்து, ஆங்கிலம், மலையாளம் - ஆகிய மூன்று மொழிகளில் எழுதி இயக்குவதில் ஆர்வமுண்டு. mail ID : sabarisankari88@gmail.com ,, நன்றி.

13 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

  1. Dear chubby girl, I always remember our magic pot drama. Nee maarave illa pola. Ippovum athe tension. Athe mathiri ellarukkum credits kuduthurkka. Positive negative rendum irukku. Ok paravalla.
    Naan life la once aavathu unna marupadiyum meet pannanum Sabari. After you left from our school naanga thiruppi dramave podala. You are my sweet heart. I am Jhansi. Gyabagam irukka ?

    ReplyDelete
  2. தங்கமே, நம்ம சின்ன வயசு ஞாபகங்கள அப்படியே கண்ணு முன்னாடி நிறுத்திட்ட. அந்த steps கீழ நின்னு அடிப்போமே கூத்து. சான்ஸே இல்லடி. இது எதையுமே விட்டுறாத. நல்லா இரு.

    ReplyDelete
  3. Devika - Child JesusJanuary 28, 2025 at 9:17 AM

    Akka naan Devika. I don’t know whether you remember me. I am the rosette in your Romeo Juliet play. Do you remember me pouring a bottle of foundation on your court just a few minutes before the play ? Akka I still remember when I do make up for my kid. Now, I am in Chicago Akka. Pls visit me when you come here Akka.

    ReplyDelete
  4. Excellent write up Sabari ji

    ReplyDelete
  5. முருகன்January 28, 2025 at 9:27 AM

    நல்லது சபரி. நீ சாண் டியாகோவிலேயே இருந்திருக்கலாம். மேலும் பல நல்ல நாடகங்களைக் கண்டிருப்போம். நான் மருத்துவர் முருகன். ஞாபகம் இருக்கிறதா ? நீ என் வீட்டுக்கு வந்திருக்கிறாய். பேட்டி எடுக்க.

    ReplyDelete
  6. School group la Jesudha miss ponnu forward panniruntha di. We were discussing that you should write like this for all our old dramas. We have a lot of cute moments la. Pls give your current number di. I will join you and share our old pictures. We missed you a lot after you left the school.

    ReplyDelete
  7. As usual, rocking 🔥🔥

    ReplyDelete
  8. Always you get the best team or else you make it better. There is some kind of blessing 😉😉

    ReplyDelete
  9. ഇന്ദുകാലJanuary 28, 2025 at 9:42 AM

    All the best ma

    ReplyDelete
  10. The kids look so great in the attire ♥️ As you said, selection of costumes is outstanding.. Kudos

    ReplyDelete
  11. Touchwood to the kids

    ReplyDelete
  12. அஞ்சுகம் அறிவுடைநம்பிJanuary 28, 2025 at 9:46 AM

    மேலும் வளர வாழ்த்துகிறேன்.. உங்கள் குழு 🙏🏻🙏🏻

    ReplyDelete
Previous Post Next Post