இரண்டு கிராமங்களின் கதை - A Motivational Story in Tamil

'காரணம் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை' என்று சொல்வார்கள். நம்மில் பலரது வளர்ச்சியைத் தடுக்கும் காரணியாக உள்ளது இந்த 'காரணம் சொல்லும் பழக்கம்'.

இதைக் கதையாகப் பார்த்தால் நன்கு மனதில் பதியும் என்பதால், அதை ஒரு கதையாகவே பார்த்துவிடலாம்.



கதையின் மூலம்: விவரித்து எழுதப்பட்ட ஒரு போஜராஜன் கதை

அவர் ஒரு அமைச்சர். ஒரு பரந்து விரிந்த நாடு மொத்தத்துக்கும் ஆலோசனை சொல்லக்கூடிய பொறுப்பிலிருந்த திறமைசாலியான அமைச்சர்.

ஒருநாள் அந்நாட்டிலிருந்த இரண்டு வெவ்வேறு கிராமங்களுக்கு நிர்வாகத் தலைவர்களாக இருந்தவர்கள் அவரை சந்திக்க வந்தார்கள். தங்கள் நிலையைச் சொல்லி விளக்கிய கையேடு, அவரிடம் ஒரு கோரிக்கையும் வைத்தார்கள்.

"அமைச்சரே !! இந்த வருடம் பெய்த மழையின் அளவு குறைவு. அதனால், எங்கள் கிராமத்தில் விளைந்த விளைச்சலும் குறைவு. ஆகவே, அரசரிடம் பேசி எங்கள் கிராமத்துக்காக 50 மூட்டைகள் நெல்லை சலுகையாக வாங்கித் தாருங்கள்" என்பது அவர்கள் வைத்த கோரிக்கை.

அமைச்சர் அதை ஏற்றுக்கொண்டார். அரசரிடம் சொல்லி நெல்லை வாங்கித் தந்தார். கூடவே, அவர்கள் கிராமத்தின் நீர் வளத்தை பெருக்குவதற்கான ஆலோசனையும் சொன்னார்.

அந்த ஆலோசனைப்படி, அவர்கள் தங்கள் கிராமத்திலிருக்கும் ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும். அருகே ஓடும் ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டி அவற்றை நிரப்ப வேண்டும். சிக்கனமாகப் பாசனம் செய்து விளைச்ச லைப் பெருக்க வேண்டும்.

அவர்களும் சம்மதித்தார்கள். ஆளாளுக்கு 50 மூட்டை நெல்லை வாங்கிக்கொண்டு தத்தம் கிராமங்களுக்கு திரும்பிச் சென்றார்கள்.

ஒரு வருடம் கடந்து சென்றது.

மறுபடியும் அமைச்சரிடம் அவ்விருவரால் அதே கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தமுறை "அப்படியெனில், நீங்கள் நான் சொன்ன ஆலோசனையை செயல்படுத்தவே இல்லையா ?" என்றார் அமைச்சர்.

"இல்லை அமைச்சரே !! முடியவில்லை. எங்கள் கிராம இளைஞர்கள் யாரும் அப்பணிகளைச் செய்ய முன்வரவில்லை", என்றார் முதல் தலையாரி.

"மன்னிக்கவும் அமைச்சரே !! இனி இப்படி வந்து நிற்க மாட்டேன்" என்று மன்னிப்பு மட்டும் கேட்டார் இரண்டாவது தலையாரி.

அமைச்சர் அவர்கள் இருவரையுமே மன்னித்தார்.

"சரி, இம்முறை ஐம்பதுக்கு பதில் அறுபது மூட்டையாக நெல் தருகிறேன். அதைக் கூலியாக கொடுத்தாவது சொன்ன யோசனையை செயல்படுத்துங்கள்", என்று சொல்லி நெல்லோடு அவர்களை அனுப்பி வைத்தார்.

அடுத்த வருடமும் கடந்து சென்றது

மறுபடியும் அமைச்சரிடம் அவ்விருவரால் அதே கோரிக்கை வைக்கப்பட்டது.

இம்முறை வெகுவாகக் கோபம் கொண்டார் அமைச்சர். "என்னதான் பிரச்சனை உங்களுக்கு ? ஆலோசனை கொடுத்தாச்சு. கூலிக்கு நெல் கொடுத்தாச்சு. எல்லாம் கொடுத்தும் சொன்னத செயல்படுத்த முடியலையா ? இன்னும் என்னதான் வேண்டும் ?" என்று அவர்களைக் கேள்வியும் கேட்டார்.

"நான் என்ன பண்றது ? என் கிராமத்து இளைஞர்கள் நான் நினைத்ததை விட மோசமா இருக்காங்க. கொடுத்த கூலியெல்லாம் கொசுருக்கும் காணல. மறுபடி, மறுபடி இங்கேயே வந்து நிக்கிறேன்", என்றார் முதல் தலையாரி.

"மன்னிக்கவும் அமைச்சரே !! அடுத்த முறை இப்படி நிச்சயமாக நடக்காது" என்று தீர்க்கமாகச் சொன்னார் இரண்டாவது தலையாரி.

அமைச்சரோ, முதல் தலையாரியை அவரது பொறுப்பிலிருந்து நீக்கம் செய்தார். இரண்டாவது தாயாரிக்கோ நெல் கொடுத்து அனுப்பிவைத்தார்.

இதைக் கண்டு முதல் தலையாரிக்கு ஆதங்கம். "இருவரிடமும் பாரபட்சமாக நடந்துகொண்டாரே !!" என்று அமைச்சரின் மீதே கோபம். இறுதியில், கொடுத்தார் ஒரு வழக்கை. அரசர் அதை விசாரிக்க, விவரித்தார் நடந்த எல்லாவற்றையும்.

அரசருக்கும் கூடஅமைச்சரின் இந்த நடவடிக்கை குழப்பமாகத்தான் இருந்தது. 'இரண்டு தலையாரிகளும் செய்த காரியம் ஒன்றுதானே !! ஆனால், ஒருவருக்கு உதவி, இன்னொருவருக்கு தண்டனையா ?' என்று கேள்விக்குறியாக இருந்தது.

அதனால், அவர் அமைச்சரிடமே கேள்வி கேட்டார். "உங்களிடம் முறையான விளக்கம் இருக்கிறதா ?", என்றார்.

அமைச்சர் தான் புத்திசாலியாயிற்றே !! காரணமின்றி அதைச் செய்திருப்பாரா என்ன ? தாமதமேயின்றி அவர் பதிலளித்தார். "அரசர் பெருமானே !! இவர்கள் இருவரும் உதவிகேட்ட விதம் வேண்டுமானால் ஒன்றுபோலத் தெரியலாம். ஆனால், இவர்கள் எனது ஆலோசனையை செயல்படுத்திய விதம், ஒன்று கிடையாது.

நானும் இவர்கள் இருவரின் கிராமத்தையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் வருகிறேன். நான் சொன்ன ஆலோசனைகளை செயல்படுத்த, இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

அதன் மூலம், நன்றாகத் தெரியும். அந்த இரண்டாவது தலையாரி எத்தனை தடைகள் வந்தாலும் நான் சொன்ன ஒவ்வொரு யோசனையையும் அவன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். மிக மிக மோசமான சூழ்நிலையில் மட்டுமே என்னிடம் உதவியும் கேட்கிறான்.

ஆனால் முதல்வனோ, எந்த யோசனையையும் செயல்படுத்தவும் இல்லை. தன் பொறுப்பிலிருக்கும் கிராமத்தை முன்னேற்றவும் இல்லை. அதனால் தான், அவனுக்கு நெல்மூட்டையும் இவனுக்கு தண்டனையும். மற்றபடி, இந்தப் பாரபட்சமும் இல்லை" என்று.

அந்த விளக்கத்தைக் கேட்டு, "அமைச்சர் செய்தது, சரிதான்" என்று தீர்ப்பளித்து முடித்தார் அரசர்.

இன்று இந்தக் கதையில் வந்த அமைச்சர் சொன்னது போல, "காரணங்கள் சொல்லியே சமாளிப்பவர்கள் எந்தக் காரியத்தையும் ஒழுங்காகச் செய்வதில்லை. அவர்கள் ஏதேனும் காரணம் சொல்லியே தங்கள் வேலையைத் தள்ளி வைக்கிறார்கள். காரணம் சொல்லியே தோல்வியை நியாயப்படுத்துகிறார்கள். காரணம் சொல்லியே, முன்னேறாமல் இருக்கிறார்கள்.

ஆனால், ஆயிரம் காரணங்கள் தடையாக வந்தாலும் அவற்றை முன்னிறுத்தாது உழைப்பவர்கள் தங்கள் குறிக்கோளை மட்டும் முழுவதுமாக கவனித்து, முன்னேறி உயர்ந்த நிலையை அடைகிறார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை போலவே இருங்கள்.

இதை இந்த கதை உங்களுக்கும் உணர்த்தியிருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோன்று வேறு ஒரு கதையுடன் நாம் மீண்டும் சந்திப்போம்.

Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள்
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX

This is a motivational story in tamil to encourage students to learn more and learn arts, crafts too. You can see a lot of Tamil Motivational Videos and Tamil Motivation Stories in this website. For more Motivational Stories in Tamil, Kutty Stories and Historical Stories, please continue reading APPLEBOX.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post