ஒரு வியாதியின் கதை - An Inspirational Story

எந்தப் பிரச்சினையைப் பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்களோ, அதே பிரச்சனையைத் தான் வேறு சிலர் தைரியமாக எதிர்கொள்கிறார்கள். எந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவே முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதே பிரச்சனைக்குத் தான் வேறு சிலர் தைரியமாக தீர்வும் காண்கிறார்கள்

அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ? எதனால், அவர்களால் முடிவது உங்களால் முடியவில்லை ? அதைத் தெரிந்து கொள்ள ஒரு கதையைப் பார்க்கலாம்.


இது ஒரு போஜராஜன் கதையிலிருந்து வெறும் இரண்டே வரிகளைத் தூண்டுகோலாக எடுத்துக்கொண்டு நான் எழுதிய கதையாகும். வாருங்கள் கேட்கலாம்.

ஒரு காலத்தில், விஜயநகர சாம்ராஜ்யத்தில் கைதேர்ந்த வைத்தியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எத்தனைக் கொடூரமான வியாதிக்கும் அவரால் மருந்து சொல்ல முடியும். எத்தனைத் தீவிரமாக அது இருந்தாலும், அவரால் குணப்படுத்த இயலும். நாடு முழுவதும் புகழ்பெற்று விளங்கினார் அந்த வைத்தியர்.

இப்படியிருக்க, விஜயநகரத்திற்கு நட்பு நாடாக இருந்த ஒரு நாட்டின் அரசருக்கு ஒரு விசித்திரமான வியாதி வந்தது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய அந்த வியாதி, அடுத்து கொப்பளங்களும் உடல் சோர்வாகவும் மாறி, பின்னர் அந்த மன்னரை படுத்த படுக்கையாக்கிற்று.

உடல் முழுவதும் பரவிய தழும்புகள், மூச்சுத் திணறல் என்று திணறிக் கொண்டிருந்தார் மன்னர்.

அந்த நாட்டுக்காரர்களும் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். பல நாடுகளிலிருந்தும் வைத்தியர்களை வரவழைத்தார்கள். அபூர்வமான மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் பார்த்தார்கள். இரவு பகலாக சிகிச்சை செய்தார்கள். ஆயினும், எந்தப் பிரயோஜனமும் இல்லை.

வியாதியின் காரணத்தைக் கண்டறியவும் இயலவில்லை. அரசரின் உடல் நிலையைத் தேற்றவும் முடியவில்லை. அடுத்து அண்டை நாடுகளுக்கெல்லாம் இந்தச் செய்தி சொல்லப்படுகிறது. நாம் ஏற்கனவே பார்த்த, விஜயநகரத்து வைத்தியருக்கு மனதை காப்பாற்றும் படி அழைப்பும் விடுக்கப்படுகிறது.

'நாடு விட்டு நாடு செய்தி வருகிறதென்றால், உண்மையிலேயே கொடூரமான வியாதியாகத் தான் இருக்கும்' என்று நினைத்துக் கொண்டார் அந்த வைத்தியர். மன்னரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கோடு, சிகிச்சைக்கான உபகரணங்கள், மூலிகைகள் என்று எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அந்நாட்டுக்கு பயணமாகவும் புறப்பட்டார்.

அவர் சென்ற வழியெல்லாம், மக்கள் மத்தியில் ஒரே பேச்சுத் தான். "மன்னருக்கு வந்திருப்பது பெரும் வியாதி, அதற்குத் தீர்வே கிடையாது. அது பெரும் வியாதி. அதற்குத் தீர்வே கிடையாது" என்று.

அதைக் கேட்டு வைத்தியருக்கும் கூட, மலைப்பாகத்தான் இருந்தது. அரண்மனைக்குச் சென்று மன்னரைப் பார்த்த பிறகு, அந்த மலைப்பு இன்னும் விஸ்வரூபமெடுத்தது.

ஏனென்றால், அப்படியொரு பரிதாபமான நிலைமையில் இருந்தார் அரசர். உடல் முழுவதும் கொப்பளங்கள், எலும்பும் தோலுமாக மெலிந்த உடல், மூச்சு விடக் கூட சிரமப்பட்டு கொண்டு. ஐயோ !! அதைச் சொல்வதே வேதனை தான்.

ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மன்னரின் உடல் நிலையை சோதித்தார் வைத்தியர். வியாதிக்கான காரணம் அவருக்கும் பிடிப்படவில்லை. அந்த சமயத்திலே, அரசாங்க அதிகாரிகள் அவரிடத்தில் கேட்டுக்கொண்டார்கள். "வைத்தியரே !! உங்களிடம் இருப்பதிலேயே மிகச்சிறந்த மருந்தை மிகக் கொடிய வியாதிக்கான மருந்தை எங்கள் அரசருக்குத் தாருங்கள்" என்று.

வைத்தியரும் அதற்கு சம்மதித்தார். அப்படியே செய்து இரவும் பகலுமாக மன்னரை கவனித்துக் கொண்டார் ஆனாலும், வியாதி முற்றிப் போய் மன்னர் மரணம் அடைந்தது தான் மிச்சம்.

அதன் பிறகு அந்த வைத்தியர் அந்த நாட்டில் இருக்கவில்லை. கனத்த இதயத்தோடு தனது விஜயநகரத்திற்கே திரும்பிவிட்டார். ஆயினும், "அது என்ன வியாதி ? அதற்கான மருந்து என்ன ? அதை ஏன் தன்னால் குணப்படுத்த இயலவில்லை ?" என்று அவர் சிந்திக்காத நாளே இல்லை.

நாட்கள் கடந்து சென்றன.

இறந்து போன மன்னருடைய நாட்டில், அவருக்கு பதில் அவரது மகன் ஆட்சிக்கு வந்தார். அரியணை ஏறிய சில நாட்களிலேயே, அவரும் தனது தந்தைக்கு வந்த அதே வியாதியால் பாதிக்கப்பட்டார்.

இந்த முறையும் விஜய நகரத்து மக்களுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் சொல்லப்பட்டன. இந்த முறையும், அந்த கைதேர்ந்த வைத்தியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், வைத்தியருக்கோ அங்கு செல்ல தைரியமே வரவில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த வியாதி தீர்க்கவே முடியாத ஒரு பெரு வியாதி. அதற்கு மருந்தே கிடையாது. "இப்படியிருக்க அங்கே போய் நம்மால் என்ன செய்ய முடியும் ? எதற்காக அங்கு செல்ல வேண்டும் ? அந்த இளம் வயது அரசனும் மடிவதை பார்ப்பதற்கா?" என்று நினைத்துக் கொண்டு அவர் அங்கு செல்வதைத் தவிர்த்தார்.

இப்படிப்பட்ட சமயத்தில் தான், "தந்தையே !! நான் இந்த காரியத்தை கையில் எடுத்துக் கொள்கிறேன். நான் சென்று, அந்த அரசனை சுகப்படுத்துகிறேன்", என்று சொல்லி அந்த நாட்டுக்குச் சென்று வைத்தியம் பார்க்க முன் வந்தாள் வைத்தியரின் மூத்த மகள்.

ஆம், அந்த வைத்தியருக்கு ஒரு மகள் உண்டு. அவளுக்கும் வைத்தியம் தெரியும். அந்த வைத்தியரளவுக்கு நன்றாகத் தெரியாவிட்டாலும், அடிப்படை வைத்தியம் நன்றாகவே தெரியும். அதன் கூடவே, அந்த வியாதி தன் தந்தையால் கூடத் தீர்க்க முடியாத ஒரு பெரு வியாதி என்பது மிக நன்றாகத் தெரியும்.

ஆனாலும், தனது பங்குக்கு முயற்சி செய்து பார்க்க விரும்பினாள் அவள். வைத்தியரும் அனுமதி கொடுக்க, நட்பு நாட்டுக்குப் பிரயாணமும் செய்து போனாள்.

நாட்கள் நகர்ந்து போயின.

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் வைத்தியரின் மகள் பிரயாணம் செய்து போன வண்டி மட்டும், திரும்பி வந்தது.

அவரது வீட்டு வாசலில் வந்து நின்ற அந்த வண்டியிலிருந்து, நட்பு நாட்டைச் சேர்ந்த இரண்டு அரசு அதிகாரிகள் இறங்கி வந்தார்கள். வைத்தியரை சந்தித்து அவரிடம் சொன்னார்கள், "வணங்குகிறோம் வைத்தியரே !! நீங்கள் அனுப்பிய பெண் வைத்தியர் வந்தார். வந்து மன்னரை சுகமாக்கினார். மன்னர் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமாம். எங்களுடன் வாருங்கள்", என்று.

வைத்தியருக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. ஆச்சரியம் தலைக்கேறியது. தன்னைப் போன்ற அனுபவம் மிகுந்த வைத்தியர்களால் முடியாதது, அனுபவத்தில் குறைந்தவளான தனது மகளால் மட்டும், எப்படி இயன்றது ?" என்ற கேள்வி மேலோங்கியது.

கேள்வியோடையே பக்கத்து நாட்டுக்குப் பயணித்துச் சென்றார் அவர். அங்கு ராஜ உபச்சாரங்களோடு தங்க வைக்கப்பட்டிருந்த அவரது மகளை சந்தித்து வாழ்த்தி, பின்னர் அவளிடம் கேள்வியும் கேட்டார்.

"மகளே, எப்படி முடிந்தது ? எப்படி உன்னால் மட்டும் முடிந்தது ? தீராத வியாதியென்று எல்லோரும் பட்டம் கட்டிய வியாதிக்கு உன்னால் மட்டும் எப்படி மருந்து கண்டுபிடிக்க இயன்றது ?"

மகள் சொன்னாள், "தந்தையே !! நீங்கள் எல்லோரும் வைத்தியம் பார்த்ததற்கும் நான் வைத்தியம் பார்த்ததற்கும் ஒரேயொரு வித்தியாசம் தான். அந்த வித்தியாசம் தான் இந்த வியாதியை குணப்படுத்தியது"

வைத்தியர் குழப்பத்தோடு கேட்டார், " அது என்ன வித்தியாசம், மகளே !!"

மகள் சொன்னாள். "தந்தையே நீங்கள் உட்பட மற்ற எல்லா வைத்தியர்களும், வியாதி வந்த அரசருடைய உடலில் மட்டும் கவனத்தை செலுத்தி வியாதிக்கான மருந்தைத் தேடினீர்கள். நானோ, அவரது உடலுக்கு வெளியேயும் கவனத்தை செலுத்தி மருந்தைத் தேடினேன். அரசனின் உடலை தாண்டி வெளியே, அவர் தங்கியிருந்த அறையில், அவர் அணிந்திருந்த உடைகளில், அவர் உட்காரும் அரியணையில், இப்படி அவர் தொடர்புடைய மற்றவற்றிலும் கவனத்தை செலுத்தி, வியாதிக்கான மருந்தைத் தேடினேன்.

அப்பொழுதுதான், அரசர் பொதுவாக தங்குகிற அறையில், மறைவான ஒரு இடத்தில், அடைகட்டி வாழ்ந்து வந்த ஒரு விஷப்பூச்சியின் கூடு, என் கண்ணில் பட்டது.

அந்தப் பூச்சி எப்படிப்பட்ட பூச்சி தெரியுமா ? இரவு நேரங்களில் மட்டும், மனிதர்களைத் தாக்கக்கூடிய பூச்சி. தாக்கிய எந்தத் தடமுமின்றி, வெறும் பாதிப்பை மட்டும் ஏற்படுத்தக்கூடிய பூச்சி. அரசர் அந்த அறையில் தங்கியபடியால், அது அவரைக் கடித்திருக்கிறது. அவரைத் தவிர, அங்கு யாரும் நுழைவதில்லை என்பதால், யாரது கண்ணிலும் படாமலும் இருந்திருக்கிறது.

நான் அந்த பூச்சியைப் பார்த்தேன். அது தான், இந்த வியாதிக்குக் காரணமாக இருக்குமென்று நினைத்தேன். அதற்கான மருந்தைக் கொடுத்தேன். அதுவும், அது வெறும் அடிப்படை வைத்தியம் தான். அரசருடைய உடல்நலம் தேறிற்று. நான் கொடுத்தது பெரிய மருந்தெல்லாம் இல்லை. அதுவே, இந்த வியாதிக்குப் போதுமானதாக இருந்தது" என்று.

வைத்தியர் வாயடைத்துப் போனார்.

தான் தவறிய அந்த இடத்தை 'வியாதி வந்த உடலைத் தாண்டி, வேறு எதையுமே சிந்திக்காததை' புரிந்து கொள்ளவும் செய்தார்.

இன்று இந்தக் கதையில் வந்த அந்த வைத்தியரைப் போலத் தான், நாம் அனைவருமே சில நேரங்களில் நடந்து கொள்கிறோம். பிரச்சனைகள் ஏற்படும்போது, பிரச்சனைகளைத் தாண்டி வேறு எதையுமே சிந்திப்பதில்லை. அதையே யோசித்து, அதை பார்த்தே பயந்து, அதற்குள்ளேயே மூழ்கி, அதற்கான விடையைத் தேடுகிறோம்.

மாறாக பிரச்சனையை தூரத்தில் வைத்துப் பார்த்து, அதற்கான காரணத்தைத் தேடுவதில்லை. அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து, சிந்திப்பதில்லை. தீர்வுகாண்பதில்லை. இதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றிக்கொண்டால் வாழ்வும் மாறுமென்று சொல்லி, இந்தக் கதையை முடிக்கிறேன். நன்றி.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post