ஒரு ராஜ நர்த்தகியின் கதை | Story of a Raja Narthagi from Rajasthan

எல்லோருக்குமே ராஜநர்த்தகிகளைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. இன்று நாம் ஒரு ராஜநர்த்தகியின் கதையைத் தான் பார்க்கப்போகிறோம். இவள் ராஜஸ்தானிய மண்ணில் வாழ்ந்த ஒரு ராஜநர்த்தகி. வீரன் ஒருவனால் காதலிக்கப்பட்ட ராஜநர்த்தகி.

இவளைப் பற்றி விரிவான தகவல்கள் ஏதும் தெரியவில்லை. ஆனால், தோராயமாக அதன் அடிநாதத்தை மட்டும் சொல்கிறார்கள். அதையொற்றி சில எழுத்தாளர்களும் கூட, காதல் கதைகள் எழுதியுள்ளார்கள். அவ்வரிசையில் என்னுடைய கற்பனையையும், 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்ற சித்தாந்தத்தையும் சேர்த்து, சமூக மாற்றத்திற்கான ஒரு விதையாக இந்தக் கதையை உங்களுக்குத் தருகிறேன். வாருங்கள் வாசிக்கலாம்.


சில நூற்றாண்டுகளுக்கு முன், இன்றைய குஜராத் பகுதி 'முஹம்மது ஷா' என்றழைக்கப்படும் முகலாய மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

அதே காலகட்டத்தில், ராஜஸ்தானில் ஒரு அழகி வாழ்ந்து வந்தாள். அவளது பெயர் மயூரி. மயூரி மிகவும் புத்திசாலி, பேரழகி, ஈடு இணையில்லாத நாட்டிய மங்கை. அவளது நடனத்தைக் காணவே, பல நாட்டு மன்னர்களும் தவம் கிடந்தார்கள். அவளைத் தங்கள் ஆசை நாயகியாக்க, துடி துடிதார்கள்.

ஆனால், அவளோ தனது வாழ்வில் யாருக்குமே இடம் தராது, நடனமும் தானுமாக வாழ்ந்து வந்தாள்.

அப்படியிருக்க, ஒருநாள் மன்னர் முகம்மது ஷாவின் பார்வை மயூரியின் மீது விழுந்தது. அழகியான அவளைப் பார்த்து, அவரது கவனம் பறிபோனது. அதனால், அவர் அவளைத் தன் அரண்மனைக்கே அழைத்து வந்தார். ராஜ நர்த்தகியாகப் பதவியும் கொடுத்தார்.

"என்னடா இது ? இந்தக் கதை கொஞ்சம் சந்திரமுகி சாயலில் இருக்கிறதே !!", என்று யோசிக்கிறீர்களா ?ஆனால், இது அதிலிருந்து வித்தியாசமானது. எப்படியென்பது போகப் போகத் தெரியும். இப்பொது நாம் தொடரலாம்.

மயூரி அரண்மனைக்கு வந்த நாளிலிருந்தே, அவளது மொத்த நிம்மதியும் பறிபோனது. ஒரு பக்கம், அவள் மீது ஆதிக்கம் செலுத்தும் முகம்மது ஷா. இன்னொரு பக்கம், ஒரு தேவதாசிக்கென்று பல விதிமுறைகள் வாய்த்த அன்றைய சமூகம். இப்படிப் பிரச்சனைகள் சூழச் சூழ, அவளுக்கு அவன் வாழ்க்கையே பிடிக்காது போயிற்று.

"பிறப்பை வைத்து என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சொல்ல இவர்கள் யார் ? விரும்பினவர்களெல்லாம் என்னைப் பயன்படுத்திக் கொள்வதற்கு, நான் என்ன ஜடமா ?", என்று அவள் கோபத்தில் கொப்பளித்தாள்.

ஆனால், கோவப்பட்டு மட்டும் என்னதான் பிரயோஜனம் ? விரக்தியைத் தவிர வேறொன்றுமில்லை.

அப்படியிருக்க, ஒரு பவுர்ணமி நாளன்று மயூரியை வந்து சந்தித்தார் முகம்மது ஷா.

"இரண்டே வாரங்களில் ஒரு முடிவைச் சொல். என் ஆசைக்கு இணங்குகிறாயா ? இல்லையா ?இணங்கினால், ஆசை நாயகி. இல்லையென்றால், அவ்வளவு தான்", என்று கர்ஜித்து அவ்விடம் அகன்றார்.

'இனி, வேறு வழியே இல்லை' என்று முடிவு செய்து. தற்கொலைக்கு முயற்சித்தாள் மயூரி. குஜராத்துக்கும் ராஜஸ்தானுக்கும் இடைப்பட்ட ஒரு ஆற்றுக்குச் சென்று, அந்த ஆற்றினுள் குதித்தாள்.

ஆனால், அவ்வேளையில் அவளை ஒரு கரம் வந்து காப்பாற்றியது. அந்தக் கரத்தின் சொந்தக்காரன் தான் கேஹர் ராஜ்குமார். ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரசாங்க அதிகாரியான அவன், முகம்மது ஷாவுக்குக் கப்பம் கட்டிவந்த ஒரு சமஸ்தானத்தைச் சேர்ந்தவன். இரக்க குணம் மிகுந்தவன்.

அவன் மயூரியின் பிரச்சனைகளைக் கேட்டான். அவள் மீது இரக்கம் கொண்டான்.அவளுக்காக, முஹம்மது ஷாவைத் தான் எதிர்ப்பதாக வாக்குக் கொடுத்தான்.

முதலில். அவர்கள் இருவரும் நண்பர்களானார்கள். பின்னர், காதலர்களானார்கள். காதலில், முதிர்ச்சியடைந்தார்கள். விரைவில், அவர்கள் காதல் முஹம்மது ஷாவின் காதுக்கும் எட்டியது.

சும்மா இருப்பாரா, முகம்மது ஷா ?

கோபத்தில், கொதித்துப் போனார். தடாலடியாக ராஜ்குமாரை சிறை பிடித்தார். சிறையிலேயே சித்திரவதை செய்தார். வெறும் இடைக்கச்சையோடு மட்டும் அவனை நடமாட வைத்து, மயூரியை அவ்வப்போது அவனைப் பார்வையிடச் செய்தார்.

அந்தக் கோலத்தில், வலுவிழந்தவனாக அவனைப் பார்த்தால், அவளுக்கு அவன் மீதான மரியாதையே போய்விடுமாம். அவனைக் கோழையென்று இகழ்ந்து அவள் வெறுத்து விடுவாளாம்.

ஆனால், அவர் நினைத்தது எதுவும் அங்கு நடக்கவில்லை. மயூரிக்கு அவர் மீது கோபம் வந்தது தான் மிச்சம்.

ஆம், அவள் வெகுண்டு போனாள். முகமது ஷாவுக்கு தக்க பாடம் கற்பிக்க நினைத்தாள். சிறைக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தாள். ராஜ்குமாரைத் தப்பிக்க வைத்தாள்.

இப்படியாகத் தப்பித்துப் போன கேஹார் ராஜ்குமார், மன்னருக்கு எதிரான புரட்சியாளர்களிடம் தஞ்சம் புக, அவர்கள் அவனை நன்றாக வளர்த்து விட்டார்கள். அவன் தலைமையில். மன்னரின் பல ராணுவ தளபாடங்கள் தகர்க்கப்பட்டன. நாட்டில், ராஜ்குமாரின் வீரத்தைப் பற்றிய பேச்சு அதிகரித்தது.

சினமுற்ற முஹம்மது ஷாவோ, கோபத்தின் உச்சிக்கே சென்றார். ராஜகுமாரைக் கண்ட இடத்திலேயே அவன் தலையை சீவும்படி, காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவன் தலைக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்து, அவன் சுதந்திரமாக நடமாடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சரியாக இந்த சமயத்தில், சுதாரித்துக் கொண்டால் மயூரி. அவள் தானாகவே வலியப் போய் மன்னரை சந்தித்தாள். அவரிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கினாள். "தப்பித்து விட்டு என்னைக் கைவிட்ட அந்த ராஜ்குமாருக்கு, நீங்கள் எவ்வளவோ மேல். நான் உங்களோடே வாழ்ந்து விடுகிறேன். உங்கள் ஆசை நாயகியாகவே, இருந்து விடுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை" என்றாள்.

அந்த நிபந்தனைப்படி, அவளுக்கென்று அவர் ஒரு மாளிகையை ஏற்பாடு செய்ய வேண்டும். அரண்மனையிலிருந்து திருமணம் போன்று ஒரு ஊர்வலம் நடத்தி. அந்த ஊர்வலத்தில் தான் அவளை அம்மாளிகைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு வாழ்ந்து கொண்டு தான், அவள் அவருக்கு ஆசை நாயகியாக இருப்பாள்.

முகமது ஷாவுக்கு அது ஒரு சுலபமான நிபந்தனையாகத் தோன்றியது. அவரதை ஏற்றுக் கொண்டார். மாளிகைக்கு ஏற்பாடு செய்தார். ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்தார். அவளை அடையும் நாளுக்காகக் காத்திருந்தார்.

இப்படியிருக்க கேஹர் ராஜ்குமாருக்கு ரகசியமாக செய்தி அனுப்பினாள் மயூரி. கூட்ட நெரிசல் அதிகமான அந்த ஊர்வலத்தில், அவனும் கலந்து கொண்டு அவளைக் காப்பாற்ற வேண்டுமென்று அவனிடம் கோரிக்கை வைத்தாள். அவனுக்காக நம்பிக்கையோடு காத்திருந்தாள்.

ஆனால், அவள் அனுப்பிய செய்தி அவனுக்கு சரியான நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை. மாறாக, அவள் மன்னரின் ஆசைக்கு இணங்க சம்மதித்ததும், ஒரு ஊர்வலத்தில் மாளிகைக்குச் செல்லவிருப்பதும் மட்டும் அவன் காதுக்குத் தெரிய வந்தது.

அவனோ, அவற்றையெல்லாம் நம்பவில்லை. அவள் அவனுக்குத் துரோகம் செய்வாள் என்று நினைத்தும் பார்க்கவில்லை.

ஆக மொத்தத்தில், ஊர்வலம் நடக்கும் அந்த நாளும் வந்தது. முகமது ஷாவும் மயூரியும் ஒரு பல்லக்கில் ஏறிக்கொள்ள, அரண்மனையிலிருந்து மாளிகைக்கு அந்த ஊர்வலமும் தொடங்கியது. "எப்படியும் ராஜ்குமார் வருவான். தன்னை இந்த நரகத்திலிருந்து காப்பாற்றுவான்" என்று யோசித்துக் கொண்டே, மன்னரின் அருகே அமர்ந்திருந்தாள் மயூரி.

"என்ன மயூரி, யாரையும் எதிர்பார்கிறாயா ? யாராவது உன்னைத் திருமணம், கிருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னார்களா ? அது சரி, ஒரு தேவதாசியைத் திருமணம் செய்ய யார் தான் முன்வருவார்கள் ?", என்று அவள் காதில் கிசுகிசுத்தார் மன்னர் முகமது ஷா.

அவள் கண்கள் கலங்கின. கால்கள் நடுங்கின. அவர் சொல்லிய வார்த்தைகள் அவள் காதில் இடிபோல் முழங்கின.

சரியாக அதே சமயத்தில், "அவள் தேவதாசி மட்டுமல்ல. என் காதலியும் கூட" என்று சொல்லிக் கொண்டே, பல்லக்கினுள் நுழைந்தான் ஒரு விளக்கு தூக்கி.

"குலத்தை வைத்து ஒரு பெண்ணை அவமானப்படுத்த நீர் யார் ? கடவுளா ? கடவுளாகவே இருந்தாலும், என் மயூரியைப் பற்றித் தவறாகப் பேச, உனக்கு எந்த உரிமையும் இல்லை" என்று கூறிவிட்டு தனது வேஷத்தையும் கலைத்தான்.

அது வேறு யாராக இருக்கும் ? எல்லாம் கேஹர் ராஜ்குமார்தான்.

அப்படியே அவன் மயூரியின் கையைப் பிடிக்க, அவன் அழைத்துவந்த புரட்சியாளர்கள் முகம்மது ஷாவைத் தாக்க, அங்கிருந்து தப்பித்துச் சென்றார்கள் ராஜ்குமாரும், மயூரியும்.

அதன் பின், அவர்களுக்கு என்னவாயிற்று என்பது பற்றித் தகவல் கிடைக்கவில்லை. ஆயினும், அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கதையை முடிக்கிறேன். எப்படி காதல் ஒரு சமூக அநீதியை எதிர்த்துப் போராடியிருக்கிறது என்று பார்த்தீர்களா ? இது தான் காதலின் சக்தி.

Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post