அவர்கள் தான் குருநாதரின் சிஷ்யர்கள் ஆயிற்றே. இல்லையென்றா சொல்ல முடியும் ?
எனவே, "ஆமாம், ஆமாம். அவையனைத்தும் பல்லிகளே தான்" என்று பதில் சொன்னார்கள்.
இப்போது அந்த ஆசிரியர், அந்த சந்தைக்கு வந்து செல்பவர்களில் ஒருசிலரையும் கூப்பிட்டு, அதே கேள்வியைக் கேட்க, அவர்களும் அந்த மீன்களையெல்லாம் பல்லிகளே என்று ஒப்புக்கொண்டார்கள்.
பிறகு.. படித்த ஆசான் சொல்வதற்கு மாறாக அவர்கள் எதையாவது கூறினால், அவர்களை முட்டாள்கள் என்று யாரேனும் நினைத்து விடுவார்களோ, என்ற பயம் அவர்களுக்கு.
ஆக மொத்தத்தில், சரோஜாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
"ஆசானே !! நீங்கள் மீனும் வாங்க வேண்டாம். ஒன்றும் வாங்க வேண்டாம். இந்த இடத்தை விட்டு முதலில் நகருங்கள்", என்று அந்த ஆசிரியரை பார்த்து கூறினாள் அவள்.
ஆனால், ஆசிரியர் அதற்குத் தயாராக இல்லை. சரோஜா அந்த மீன்களையெல்லாம் 'மீன்களே கிடையாது அவை பல்லிகள் தான்' என்று ஒப்புக் கொள்ள வேண்டுமாம். அந்த ஆசிரியருக்கு அப்படி ஒரு பிடிவாதம்.
இதை பார்த்துவிட்டு, அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் கூறினார்.
"ஏம்மா, சரோஜா. நாங்க தான் இத்தனை பேர் சொல்றோமே !! இதெல்லாம் மீனில்ல பல்லின்னு. நீயும் அதையே சொல்லிட்டு வித்துட்டுப் போக வேண்டியது தானே? என்று.
"யார் சொன்னா எனக்கென்ன ? எனக்குத் தெரியுமில்ல !! இதெல்லாம் மீன்கள் தான்னு. இத எப்படி பல்லின்னு சொல்ல விற்க முடியும் ?"
கோபத்தில் சீறினாள் சரோஜா.
அப்போதுதான், இந்த ஆசிரியர் அவளிடம் கேட்டார்.
"அம்மாடி, அந்த மீன் மீது உனக்கிருக்கும் நம்பிக்கை கூட, உன் மேல் உனக்கு இல்லையா ?" என்று.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த சமயத்தில், ஆசிரியர் சொன்னார்.
"இன்றைக்கு இத்தனை பேர் இதைப் பார்த்து பல்லியென்று சொல்லியும், உன் கருத்தில் உறுதியாக இருந்த நீ, ஏனம்மா, உன்னைப் பற்றி இந்த ஊர் அவதூறு தூற்றிய போது மனமுடைந்து போனாய்?"
அவள் கண்களெல்லாம் குளமாயின. ஆனால், அவள் மனதிலிருந்த பாரம் இறங்கவில்லை.
"நான் செய்யாத குற்றத்த, ஊசி மாதிரி குத்துற இந்த வார்த்தைகள, நான் எப்படி ஆசானே ஏத்துக்க முடியும் ?"
கேட்டுவிட்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அப்போது கேட்டார் பாருங்கள் அந்த ஆசிரியர்.
"அம்மாடீ, நீ இந்த வேடிக்கையை பார்க்கவில்லையா? கொஞ்சம் கூட யோசிக்காமல், நான் கூறுவதற்கு ஜால்ரா போட்டு, மீன்களை பல்லியென்று சொல்லிய மக்கள் தானம்மா இவர்கள். இவர்கள் பேசுவதா, உன்னை இத்தனை தூரம் பாதிக்கிறது ?" என்று.
அதோடு மாறியது சரோஜாவின் மனநிலை. அவள் நிமிர்ந்து பார்த்து, "அட எந்த மாதிரியான நபர்கள் சொல்லுவதை நினைத்து, நாம் இத்தனை நாட்கள் இப்படி வருந்தியிருக்கிறோம் ?" என்ற எண்ணம் அவளுக்கு சிரிப்பையும் வேதனையும் ஒரே சமயத்தில் கொடுத்தது.
ஆம், நண்பர்களே !!
இந்த உலகத்தில் இருப்பதிலேயே மிகவும் சுலபமான விஷயம், அடுத்தவர்களை விமர்சிப்பது தான். அதனால் தான் போகிற போக்கில், பலரும் அதையே செய்கிறார்கள். நாம் அவர்கள் ஒவ்வொருவரையாகப் பிடித்து, அறிவுரை சொல்லி, திருத்த முடியுமா என்ன !!"
நிச்சயம் முடியாது. ஆனால், நம்மை நாமே மாற்றிக் கொள்ள முடியும். ஒவ்வொரு முறை நம்மீது விமர்சனம் வரும்போதும் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள முடியும். தவறு இருந்தால் திருத்திக் கொள்ள முடியும்; தவறு இல்லையென்றால், நம் மீதான நம்பிக்கையை உயர்த்தி, அந்த விமர்சனத்தைக் கடந்து வரவும் முடியும்.
இந்தக் கருத்தைக் கற்றுக் கொடுக்கவே இந்தக் கதை. இனி அடுத்த கதைக்குப் போகலாமா ?