உங்கள் எதிர்காலத்தைக் குறித்து பயம் வேண்டாம் | Motivational Story

ஒரு ஊரில் ஒரு ஆசிரியருக்கும் அவருடைய மாணவன் ஒருவனுக்கும் இடையே ஒரு வாக்குவாதம். "

"நமக்கு வரும் பிரச்சனைகள் தான் நம்முடைய வாழ்வையே தீர்மானம் செய்கின்றன. பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்போது, மனிதர்களின் எதிர்காலமும் பாதிப்படைகிறது", என்று கூறினான் மாணவன்.

"நீ கூறுவது தவறு. பிரச்சனைகள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை. நாம் அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே, நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது" என்றார் ஆசிரியர்.

"நான் கூறுவது தான் சரி",  "இல்லை, நான் கூறுவது தான் சரி", என்று ஆசிரியரும் மாணவனும் மாறி மாறி வாக்குவாதம் செய்தார்கள். இப்படி ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்ததில், நிலைமை கைமீறிச் சென்றது.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், தான் கூறுவதைப் புரிய வைப்பதற்காக, ஆசிரியர் அந்த மாணவனுக்கு ஒரு விடுகதையை கூறினார். விடுகதைக்கு பதில் தெரியும் நேரத்தில், 'அவர் கூறுவது தான் சரி' என்று மாணவன் தானாகவே ஏற்றுக் கொள்வான் என்பது ஆசிரியரின் நம்பிக்கை.

ஆசிரியர், இப்படியாக ஒரு விடுகதையை சொல்லத் தொடங்கினார்.

ஒரு ஊரில், மலைக்கோவில் ஒன்று இருந்தது. இந்த மலைக்கோவிலுக்கு 'பாத யாத்திரை' செல்ல வேண்டுமென்று நான்கு பெண்கள் ஆசைப்பட்டார்கள். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, பயணத்தையும் தொடங்கினார்கள்.

பாத யாத்திரை என்றாலே சிறிது கடினம் தான் அல்லவா !! 

இருப்பினும், நடக்கத் தொடங்கிய நேரத்தில் அவர்களுக்கு அதனுடைய கடினம் தெரியவில்லை. ஏனென்றால் கால நிலை, தட்ப வெப்பமெல்லாம் அதற்கு எதுவாக இருந்தன. ஆனால், நேரம் செல்லச் செல்ல, சூரியன் உச்சிக்கு ஏற ஏற, அந்த நான்கு பெண்களுக்குமே சிரமம் ஏற்பட ஆரம்பித்தது. 

அதிலும் அந்த நான்காவது பெண்மணிக்கு தலை சுற்றி, மயக்கமே வந்துவிட்டது. உடனிருந்த மற்ற மூவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

 
அதில், முதல் பெண்மணி பதற்றத்தில், "ஐயோ, ஐயோ", என்று தன்னைத்தானே அடித்துக்கொண்டார். தனது தலையிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சுற்றியிருப்பவர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தினார். 

இரண்டாம் பெண்மணி வசைபாடத் தொடங்கினார். "உடல்நிலை சரியில்லையென்றால் இவர் எதற்காகப் பாத யாத்திரை வரவேண்டும் ? சரியாக சாப்பிடுவதில்லை, சாப்பிடு என்றால் கேட்பதும் இல்லை, தண்ணீர் குடிப்பதில்லை. இந்தக் காட்டுவழிப் பாதை வேறு, மிகவும் கடினமாக இருக்கிறது", "இது பிரச்சனை", "அது பிரச்சனை", என்று எல்லாவற்றையும் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால், மூன்றாவது பெண்மணியோ, இவ்வளவு குழப்பங்களுக்கு இடையிலேயும், நன்றாக சிந்தித்து, ஓட்டமும் நடையுமாக எங்கோ சென்று, இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தார். இப்போது அவர் கையில், 
ஒரு தண்ணீர் குடுவை, சோடா பாட்டில், விசிறி - என்று அனைத்தும் இருந்தன.

அடுத்ததாக விழுந்துக் கிடந்த அந்தப் பெண்மணியின் முகத்தில், தண்ணீர் தெளிக்கப்பட்டது. அவர் மெதுவாக தனது கண்களைத் திறந்து பார்க்க, "பயப்படாதே !! உனக்கு ஒன்றும் ஆகவில்லை" என்று சொல்லி ஒரு சோடாவும் கொடுக்கப்பட்டு, விசிறியும் வீசப்பட்டது. 

சற்று நேரத்தில், நான்காவது பெண்மணியின் நிலைமை இயல்புக்குத் திரும்பியது.

இப்போது, இந்தக் கதை முழுவதையும் தனது மாணவனிடம் சொல்லிவிட்டு, "அந்த நான்காவது பெண்மணி உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டுமானால், மற்ற மூவரில், அவர் யாருக்கு தனது நன்றியைச் சொல்ல வேண்டும் ?", என்று கேள்வியும் கேட்டார் அந்த ஆசிரியர்.

அந்த மாணவனிடம் மட்டுமல்ல, யாரை அந்தக் கேள்வியைக் கேட்டாலும், மூன்றாவது பெண்மணிக்குத் தான் அந்த நான்காவது பெண்மணி தனது நன்றியைக் கூற வேண்டும்" என்றே பதில் சொல்வார்கள்.

ஏனெனில், அவர் தானே அத்தனை குழப்பங்களுக்கு இடையிலேயும் நிதானமாக சிந்தித்து சரியான முடிவை எடுத்து அவரைக் காப்பாற்றினார்.

அதே பதிலைத் தான் மாணவனும் ஆசிரியரிடம் கூறினான்.

அப்போது சொன்னார் அந்த ஆசிரியர், "மாணவனே, இறுதியில் நான் சொன்னதையே நீயும் ஏற்றுக்கொண்டாய் பார்த்தாயா ?" என்று.

மாணவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்போது அந்த விடுகதைக்கான விளக்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 

நாம் இந்தக் கதையில் பார்த்த நான்காவது பெண்மணி தான் நம்முடைய வாழ்க்கை. 

எவ்வாறு காலநிலை மாறியவுடன் அவருக்கு  மயக்கம் ஏற்பட்டதோ, அதுபோல நமக்கும் நம் வாழ்க்கையில் சிறிது நேரம், காலம் போன்றவற்றில் மாற்றம் ஏற்படும்போது, பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

அப்போது, அந்த முதல் பெண்மணியைப் போல பதற்றம் கொண்டு தன்னைத் தானே அடித்துக் கொண்டாலோ, இரண்டாவது பெண்மணியைப் போல எதையாவது குற்றம் சாட்டி தப்பித்துக் கொண்டாலோ, நம்மால் நமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலாது. 

அவ்வளவு பதற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடையிலேயும், அடுத்து என்ன செய்வது என்று நிதானமாக சிந்தித்து, அவர் அருகில் கடைகள் எதுவும் இல்லையென்றாலும் ஓடிசென்று வேறிடத்தில் பொருட்கள் வாங்கிவந்து மயக்கமடைந்த அந்தப் பெண்மணியைக் காப்பாற்றிய மூன்றாவது பெண்மணியைப்போல, "அடுத்து என்ன செய்யலாம்" என்பதை யோசித்தால் மட்டும், ஒருவரால் தனது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும்.

ஆம், நண்பர்களே !! 

தயவு செய்து, பிரச்சனைகள் தான் வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்றோ, பிரச்சனைகளால், உங்கள் எதிர்காலம் வீணாகிவிடும் என்றோ, நீங்களாகவே முடிவு செய்து கொள்ளாதீர்கள்.

என்ன நடந்தாலும், உங்களால் என்ன செய்ய முடியும், அதை மாற்றுவதற்கான உங்கள் பங்கு என்ன ? என்பதை மட்டும் எப்போதும் சிந்தியுங்கள். அந்த யோசனை, அந்த முயற்சி - உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றும். மாற்றட்டும்.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post