கேட்பார் பேச்சு கேட்காதீர்கள் | Motivational Story

யார் யாரைப் பற்றி எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பும் பழக்கம் உங்களிடம் உள்ளதா ? அப்படியெனில், இந்தக் கதை உங்களுக்காக.

முன்னொரு காலத்தில், அழகான மலைக்கிராமம் இன்று இருந்தது. அந்தக் கிராமத்தில், ஒரு பாடகர் வசித்து வந்தார். ஏனோ, தெரியவில்லை. அந்த ஆண்டு அந்த ஊரின் தட்பவெட்ப சூழ்நிலை சரியாக அமையவில்லை. அதனால், பயிர்களும் விளையவில்லை. வறட்சி எட்டிப்பார்த்தது.

இந்தப் பாடகருடைய  குடும்பமும் வறுமையில் வாடவே, பாடகர் இப்போது, வேறு ஏதாவது செழிப்பான நாட்டிற்குச் சென்று  செல்வத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவரும் தன்னுடைய குடும்பத்தினரைப் பிரிந்து வேறொரு ஊருக்கு பிரயாணம் செல்லலானார். 

அப்படி அவர் வந்து சேர்ந்த நாடு, மிகவும் செழுமை வாய்ந்த நாடு. அஃது வீரம் மிகுந்த அரசர் ஒருவரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. 

'நாம் அந்த மன்னரைச் சென்று பார்த்தால், அவர் நமக்கு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தருவார். அல்லது நாம் பாடினால், அவர் சன்மானம் தருவார்' என்று நம்பிக்கை கொண்டார் இந்தப் பாடகர்.

ஆனாலும், ஒரு நாட்டின் அரசரை அவ்வளவு எளிதில் நேரில் சந்தித்துவிட முடியுமா என்ன !! அதனால், தனது கண்ணில் தென்பட்டவர்களிடமெல்லாம் "அரசரை நேரில் சந்திக்க வழியேதும் உண்டா ?" என்று கேட்டுக் கொண்டே வந்தார் பாடகர்.

இது மாதிரி கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவர் கண்ணில் இரண்டு இசைக்கலைஞர்கள் பட்டார்கள். அவர்களிடம் சென்று "இந்த நாட்டு அரசர் எப்படிப்பட்டவர் ? அவரை நான் சந்திப்பதற்கு வழி சொல்லுங்களேன்", என்று கேட்டார் பாடகர். 

இதைக் கேட்ட அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

"ஐயா! இந்த நாட்டு அரசருக்கு இசையில் பெரிய அளவு ஈடுபாடெல்லாம் கிடையாது. இந்த நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் எங்களுக்கே, அவர் தக்க மரியாதை செய்ததில்லை. இதில், ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்த உங்களுக்கு அவர் எப்படி மரியாதை செய்வார் ? வேறு வேலை உண்டென்றால் போய்ப் பாருங்கள்" என்று தங்கள் வருத்தத்தையும் பரிமாறிக் கொண்டார்கள்.

இந்தப் பாடகருக்கு இதைக் கேட்டதும், சற்று வருத்தமாக இருந்தது. ஆயினும், இன்னொரு முறை முயற்சி செய்வதற்காக, அவர் நேராக அரண்மனையின் வாசல் வரை சென்று, வாயிற்காவலரை சந்தித்தார். 

"நான் ஒரு இசைக்கலைஞர்;  தூர தேசத்திலிருந்து வருகிறேன். அரசரை சந்தித்து நான் பாடலொன்று பாட விழைகிறேன்", என்று கூறினார்.

விழுந்து விழுந்து சிரித்தார் அந்த வாயிற்காப்பாளர். "

பாடகரே !! உங்களது பாடல் திறமையை காட்டுவதற்கு, உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா? இந்த நாட்டு அரசருக்கு இசையிலெல்லாம் ஈடுபாடே கிடையாது. அதில் ஆர்வம் கொண்டு அதைக் கற்றுவந்த எங்கள் நாட்டு இளவரசியையே, இப்போது பாடல் வகுப்புகளிலிருந்து அவர் நிறுத்திவிட்டாரென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவரிடம் சென்று, நீங்கள் பாடி, பரிசு வாங்கி !! போங்களைய்யா வீட்டுக்கு", என்று மிகவும் சலிப்புடன் அவரது சிரிப்பிற்குப் பின்னிருந்த காரணத்தையும் சொன்னார்.

இதைக் கேட்ட பாடகருக்கு வருத்தமாகிப் போனது. 

"என்னடா இது !! அரசரை சந்தித்துவிட்டால், நமது வறுமையெல்லாம் மறையுமென்று நினைத்தால், அரசருக்கு இசைக்கான மரியாதையே கொடுக்கத் தெரியாது என்கிறார்கள். என்ன தான் செய்வதோ !!" 

இப்படி யோசித்துக்கொண்டே, கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார் அவர். சற்று நேரத்திலெல்லாம்,  அவருடைய உடல் சோர்வடைந்தது. அருகிலிருந்த கோவிலுக்கு அருகிலிருந்த ஒரு மண்டபத்தில் சென்று அமர்ந்து கொண்டார். தன்னுடைய தம்புராவை எடுத்து, சோகமான ஒரு இராகத்தை இசைத்து, அதனை விட சோகமான குரலில் ஒரு பாடல் பாடவும் ஆரம்பித்தார். அவ்வளவு வருத்தமான குரல் அது. ஆயிலும், கொஞ்சம் கூட ராகம் தவறவில்லை. 

இப்படி அவர் பாடிக் கொண்டிருக்க, திடீரென்று ஒரு கை அவருடைய தோள் மீது பட்டது. திரும்பிப் பார்த்தால், அங்கு நின்று கொண்டிருந்தது அரசர்.

ஆமாம்! பாடகர் பாடிக்கொண்டிருந்த அந்தப் பாடல், அதே நேரத்தில் கோவிலில் பிரார்த்திக்கொண்டிருந்த அரசரின் காதில் விழுந்திருக்கிறது போலும். பாடலிலிருந்த சோகம், அரசரை ஏதோ செய்திருக்கிறது. கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிய, அந்தப் பாடகரிடம் "ஐயா, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இது என்ன பாடல்? இந்தப் பாடலில் ஏன் இவ்வளவு சோகம் ?" என்று கேள்விகளையும் அடுக்கினார் அவர். 

அந்தப் பாடகரும் தன்னுடைய நிலைமையை எடுத்துரைக்க, அரசர் கழுத்திலிருந்த முத்து மாலை இப்போது பாடகருக்குப் பரிசளிக்கப்பட்டது. 

பாடகருக்கோ, ஆச்சரியம் தாங்கவில்லை.  

'இந்த அரசரையா இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொன்னார்கள் !!' 

அரசரிடமே அந்தக் கேள்வியையும் கேட்டுவிட்டார். "அரசரே !! இந்த ஊரிலுள்ள அனைவரும் உங்களுக்கு இசையைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னார்களே !! உங்கள் வாயிற் காவலன்கூட, நீங்கள் உங்கள் இளவரசியை பாட்டு வகுப்பிலிருந்து நிறுத்தி விட்டீர்கள் என்று சொன்னாரே !! ஆனால், இங்கோவெனில் நீங்கள் என் பாடலை ரசித்ததோடு மட்டுமல்லாமல், இதற்குப் பரிசையும் தருகிறீர்களே !! எனக்கு ஒன்றுமே புரியவில்லையே !!" என்று அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து வந்தன அந்த வார்த்தைகள். 

அரசரும் அதற்கு ஒன்றுமே பதிலளிக்காமல், "பாடகரே !! உங்கள் முகவரி என்ன ?" என்று கேட்டார்.

அதை வாங்கிக்கொண்டு, "தக்க சமயத்தில் இதற்கான பதில் உங்களுக்கு தெரிய வரும்", என்று சொல்லி  அந்தப் பாடகரை அனுப்பி வைத்தார். 

இந்த பாடகர் தனது ஊரைச் சேர்ந்தடைந்த இரண்டே மாதங்களில், அந்த அரசரின் நாட்டில் மிகப்பெரிய போர் ஒன்று நடந்தது. அந்தப் போரில், மிகவும் போராடித்தான் வெற்றி பெற்றார் அரசர். அதன் பின், தன வெற்றியைக் கொண்டாட ஒரு விழாவும் எடுத்தார். அந்த விழாவிற்கு மலைக்கிராமத்திலிருந்த அந்தப் பாடகருக்கும் கூட அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. 

பாடகரும் வந்தார். விழாவும் விமர்சையாக நடைபெற்றது. இவை எல்லாவற்றுக்கும் பிறகு, அரசர் அந்தப் பாடகரை மேடை மீது ஏற்றி ஒரு கேள்வியைக் கேட்டார்.

"பாடகர் !! அன்றொரு நாள், நீங்கள் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டீர்களல்லவா !! அதை இப்போது கேளுங்கள்" என்று.

நீண்ட நாட்களாகத் தனது மனதை அரித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை இப்போது அரசனிடம் கேட்டார் அந்தப் பாடகர். 

முதல் கேள்வி - "எதனால் அரசே, உங்கள் நாட்டிலுள்ள இசைக் கலைஞர்கள், நீங்கள் இசை கலைஞர்களுக்கு சரியான மரியாதை தரவில்லையென்று சொன்னார்கள் ?" என்பது.

இரண்டாவது கேள்வி - "எதனால் அரசே, இளவரசியாரைத் தாங்கள் பாடல் வகுப்பிலிருந்து பாதியிலேயே நிறுத்தினீர்கள் ?" என்பது.

இந்த இரண்டு கேள்விகளுக்குமே பொதுவாக அரசர் சொன்ன பதில், என்ன தெரியுமா? 

“போர்” 

ஆம், போர்.

அந்த நாட்டில், போர் மூளப்போகிறது என்று அரசருக்கு சில நாட்கள் முன்பாகவே தெரியும். அந்த நேரத்தில் இசைக் கலைஞர்கள் சிலர் சேர்ந்து, ஒரு விழா எடுக்க வேண்டுமென கேட்டபோது, பாதுகாப்புக் கருதி,  அதனை நிராகரித்திருந்தார் அரசர். அது அவர் மீது அவர்களுக்கெல்லாம் ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல, ஒருவேளை போரின்போது அரசருக்கு ஏதாவது ஆபத்தென்றால், அவருக்கு பதில் அந்தப் போரை வழிநடத்த வேண்டிய நபர், இளவரசியார் தான். அதனாலேயே, அவர் இளவரசியாரை சிறிது நாட்களுக்குப் பாடல் வகுப்பிலிருந்து நிறுத்திவிட்டு, போர்க் கலைகளைப் பயிலும்படி சொல்லியிருந்தார்.
அது அந்த வாயிற்காப்பாளருக்கு  அரசர் மீது தவறான ஒரு அபிப்ராயத்தைள் கொடுத்திருக்கிறது. 

ஆக மொத்தத்தில், அந்த இசைக்கலைஞர்களாகட்டும் அரசவைக் காவலர்களாகட்டும், அன்று அந்த இசைக் கலைஞரிடம் கூறியது, அவர்களுடைய அபிப்பிராயத்தை மட்டுமே !! தவிர, அஃது உண்மை கிடையாது. 

அதுவும் அந்த அபிப்பிராயம் பாருங்கள், சூழ்நிலை புரியாமல், நிலைமை புரியாமல், உண்மை தெரியாமல், அரசரைப் பற்றி தவறாக எதையோ புரிந்துகொண்டு, தவறாக உருவான ஒரு அபிப்பிராயம். அதையும் வேறு அவர்கள் ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். 

இதெல்லாம் தெரிந்ததும், அந்தப் பாடல் கலைஞருக்கு ஏதோ ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

எதேர்ச்சையாக, அவர் கோவிலில் அமர்ந்து பாட, அரசர் அதைப் பார்க்க, அவருக்குத் தேவையான சமயத்தில் தேவையான உதவி கிடைக்கப் பெற்றது. ஒருவேளை அவர் அதை பார்க்காமல் போயிருந்தால், இவரும் அந்த அரசரைத் தவறாக தானே நினைத்திருப்பார்!!

ஆக, இந்தக் கதையில் வந்தது போலத் தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருடைய சூழ்நிலையையும் புரிந்து கொள்ளாமல், உண்மை எது, பொய் எது என்று ஆராயாமல், நம்முடைய இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததையெல்லாம், சொல்லிக் கொண்டு திரிகிறோம். யாரையாவது பற்றி யாராவது சொன்னால், அதையும் நம்புகிறோம். 

மொத்தத்தில்  நஷ்டம் யாருக்குத் தெரியுமா? யார் எதைச் சொன்னாலும் நம்புகிற அந்த நபருக்கும், எந்தத் தவறுமே செய்யாமல், மற்றவர்களின்‌ வெறுப்பை சுமக்கின்ற அந்த நபருக்கும் தான்.

அதனால், தயவுசெய்து இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தக் கதை உங்களுக்கு உதவியாக இருக்கட்டும்.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post