முடிவெடுக்கத் திணறியவனின் கதை - A Motivational Story on Decision Making

உங்கள் வாழ்க்கை நன்றாக அமைவது, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தான் இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு சரியான முடிவுகள் எடுக்கத் தெரியவில்லை என்றால் ? இதுவரைக்குமே நீங்கள், அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டுத் தான் முடிவை எடுக்கிறீர்கள் என்றால் ?அது எவ்வளவு பெரிய தவறு !!

அதை உணர்த்தும் கதையைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்தக் கதையோடு சேர்த்து, முடிவெடுப்பதற்கான முக்கியமான மூன்று வழிகளையும் நான் உங்களுக்குச் சொல்லித் தரப் போகிறேன்,

ஒரு காலத்தில், விவசாயத்திற்குப் பெயர் போன 'பஞ்ச சமுத்திரம்' என்ற கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில், பந்து மித்திரன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் அடிப்படையிலேயே ஒரு பிரச்சனை.

அவன் சுயமாக எதுவும் யோசிக்கவும் மாட்டான். யோசித்து முடிவெடுக்கவும் மாட்டான். எப்போது பார்த்தாலும், யாராவது நாலைந்து பேரிடம் அறிவுரை கேட்டு, அந்த அறிவுரையில் எது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறதோ அதன்படி தான் அவன் முடிவெடுப்பான். அந்த முடிவுகள் சரியாக இருந்தாலும் சரி. தவறாக இருந்தாலும் சரி.

இப்படியாக பந்துமித்ரன் வாழ்ந்து வந்த அந்த பஞ்சசமுத்திரத்தில், ஒருமுறை ஒரு பெரிய பஞ்சம். குளிக்க, குடிக்க, விவசாயம் செய்ய என்று எதற்குமே தண்ணீர் போதவில்லை. மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

புதிதாகத் தோண்டப்பட்ட கிணறுகளிலும் ஊற்றெடுக்காததால், கூடிய சீக்கிரத்தில் நம்பிக்கை இழந்தார்கள். நீங்கள் முதலில் பார்த்த பந்துமித்திரனும் கூட இப்படி நம்பிக்கை இழந்தவர்களில் ஒருவர்தான்.

ஏனென்றால், அவனுடைய கிணறும் இப்படித்தான். அதிலும், ஊற்றெடுக்கவில்லை. ஆனாலும் பந்து மித்திரனும் அவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அந்தக் கிணற்றை மொத்தமாகக் கைவிடவில்லை. எப்போதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைத்ததோ, அப்போதெல்லாம் அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று ஏதேனும் முயன்று கொண்டே இருந்தார்கள்.

அதுபோன்று ஒரு இருள் சூழ்ந்த இரவு பொழுதில், இந்த பந்து மித்ரன் அந்தக் கிணறைத் தோண்டப் போக, அந்த இடத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அவருடைய கிணற்றிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது.

அதுவரை தனியாக நின்று தோண்டிக் கொண்டிருந்த பந்துமித்திரன் அரண்டு போனான். பக்கத்திலிருந்த ஒரு அகலமான மரத்தின் பின் சென்று ஒளிந்து கொண்டு, லேசாக எட்டிப் பார்த்தார்.

பூதமோ அவரை மிகவும் பாசமாகப் பார்த்தது. "பந்து மித்ரா, பயப்படாதே !! நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். நீ என்னை இந்தக் கிணற்றிலிருந்து விடுதலை தான் செய்திருக்கிறாய். எனக்கு ஒரு உதவி தான் செய்திருக்கிறாய். அதனால் நான் உனக்கு ஒரு வரத்தைத் தருகிறேன். இயற்கைக்கு புறம்பல்லாத எந்த வரத்தையானாலும் கேள்", என்று மிகவும் பணிவாக சொல்லிற்று.

பந்து மித்ரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'இயற்கைக்குப் புறம்பெல்லாத வரமென்றால், என்ன ?' என்று அவன் அதனிடம் கேட்டான்.

பூதம் சொல்லிற்று "மாயாஜாலமாக எதுவும் இல்லாமல், அதாவது ஒரே நாளில் கோடீஸ்வரனாக வேண்டும் வீடு முழுவதும் தங்கத்தால் நிறைய வேண்டும் என்பது போல் அல்லாமல், ஏதேனும் இயற்கையாக நடக்கும் ஒன்றை வரமாக கேள்" என்று.

ஆனால், அவனுக்குத் தான் சுயமாக யோசிக்கவே தெரியாதே !! யாரிடமாவது கேட்டுக் கேட்டுத் தானே முடிவையே எடுப்பான். அதனால், அந்த இடத்தில் அவனுக்கு என்ன கேட்க வேண்டுமென்பதே விளங்கவில்லை.

முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு, பூதத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்தான்.

"பூதமே எனக்கு நேர அவகாசம் கொடு. நான் யாரிடமாவது சென்று ஆலோசனை கேட்டு வருகிறேன்", என்று.

பூதமும் அதற்கு சம்மதித்தது. ஆனால், "ஒரு நாழிகைக்குள் நீ வந்து வரத்தை கேட்க வேண்டும்" என்று நிபந்தனையும் வைத்தது. ஒரு நாழிகை என்றால், 24 நிமிடங்கள். இந்த 24 நிமிடங்களுக்குள் வந்து மித்ரன் வேகமாகச் சென்று யாரிடமாவது அறிவுரை பெற்றுத் திரும்ப வேண்டும்.

அதனால், மிகவும் வேகமாக, ஓட்டமும் நடையுமாக கிளம்பி போனான் அவன்.

இந்த மாதிரி சென்ற பொழுது, முதன்முதலாக அவன் கண்ணில் பட்டது யாரென்றால், அவனுடைய அண்ணன். அந்த அண்ணன் ஊருக்கே தலைவர். உரைப்பற்றி அதிகமாக யோசிப்பவர். அதனால் அவரிடமே முதலில் ஆலோசனை கேட்கலாம் என்று முடிவு செய்கிறான் பந்து மித்ரன். ஆலோசனையும் கேட்கிறான்.

அண்ணனும் ஆலோசனை சொல்கிறார். "நமது ஊரே தண்ணீர்ப் பஞ்சத்தால் சிரமப்படுகிறது. அதனால் யார் யாரெல்லாம் கிணறு தோண்டி வைத்துள்ளார்களோ, அவர்கள் எல்லோர் கிணற்றிலும் ஊற்றெடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள் வை. இந்த வரம் நமது ஊர் மொத்தத்தையும் செழிக்க வைக்கும். மேலும், அது ஒரு இயல்பான வரமும் கூட" என்று.

பந்து மித்ரனுக்கு அந்த அறிவுரை மிகவும் சிறந்த அறிவுரை என்று தோன்றியது. அதனால், அவன் உடனேயே திரும்பி பூதத்தை நோக்கி நடந்தான்.

அந்த சமயத்தில், வேறொருத்தி அவன் முன்னால் வந்தாள். அவள் அவனது சகோதரி. அவளுக்கு அவன் மீது பாசம் அதிகம். அவனுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று அவள் எப்போதும் நினைப்பாள். அதனால், அவளிடமும் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தான் அவன். அவளிடமும். எல்லாவற்றையும் சொல்லி ஆலோசனை கேட்டான்.

அவளும் அவருக்கு ஒரு அறிவுரை சொன்னாள்.

"அண்ணா, அந்த பூதம் என்ன எல்லாருடைய கிணற்றிலுமா வந்தது ? உனது கிணற்றில் தானே வந்தது. அப்படியென்றால், நீ உனக்காக மட்டும் வரத்தை கேட்டால் தானே அது இயல்பான வரமாகும். இல்லாவிட்டால், இயற்கைக்குப் புறம்பாகிவிடுமே !! அதனால், நீ அந்த பூதத்திடம் உனது கிணற்றில் தண்ணீர் ஊற வேண்டும் என்று மட்டும் கேள்", என்று.

பந்து மித்ரன் யோசித்துப் பார்த்தான். அவள் சொன்னதும், அவனுக்கு சரியென்று பட்டது. ஆனாலும், ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வதால், 'மனைவியிடமும் ஒரு வார்த்தை கேட்டு விடலாம். இல்லையென்றால் தவறாகிவிடும்' என்று நினைத்துக் கொண்டான்.

வேகமாக நடந்து தனது மனைவியை சந்தித்தான். அவளும் எல்லாவற்றையும் நன்றாக கேட்டுக் கொண்டாள். அவளும் ஆலோசனை வழங்கினாள்.

"ஊர் மொத்தமும் தண்ணீர்ப் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருக்கும் போது, நமது கிணற்றில் மட்டும் நீர் ஊற வேண்டுமென்று வேண்டினால், அது நியாயமாகுமா ? அதனால், அப்படியெல்லாம் வேண்ட வேண்டாம். மொத்தமாக எல்லாருடைய கிணற்றிலும் தண்ணீர் ஊற வேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுங்கள். ஆயினும், நம்முடைய கிணற்றிலிருந்து ஒரு புதையல் பானையும் வரவேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்" என்று.

பந்து மித்ரனுக்கு அந்த அறிவுரை தான் மிகச்சிறந்த அறிவுரை என்று தோன்றியது. அதையே பூதத்திடம் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு, மறுபடியும் நடக்க ஆரம்பித்தான்.

அப்படி அவன் நடக்க ஆரம்பித்த சமயத்தில், அந்த ஒரு நாழிகையில் அதாவது 24 நிமிடங்களில் வெறும் நான்கு நிமிடங்கள் தான் பாக்கியிருந்தன. அப்படியெனில் வேகமாக ஓடித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் பூதம் சென்றுவிடும். அதனால் வேகவேகமாக, ஓட்டமும் நடையுமாக பூதத்தை நோக்கித் திரும்பினான் அவன்.

அப்படி ஓடி அவருடைய கிணற்றுக்கு பக்கத்தில் அவர் போய் நின்ற பொழுது, ஓடியோடி மூச்சு வாங்கியதால், அவரது தொண்டை வறண்டு விட்டது. கேட்க வந்த வரத்தை அவனால் கேட்க இயலவில்லை.

பூதமோ, அவசரப்படுத்தியது. "ம்ம்ம்.. சில வினாடிகள் தான் பாக்கி. சீக்கிரம் வரத்தை கேட்டு விடு" என்றது.

அவளோ வாயையே திறக்கவில்லை. திறக்க அவனால் முடியவில்லை. பூதம் கேட்டது, "என்னாச்சு ? ஏன் இப்படி சிரமப்படுகிறாய் ? என்ன வேண்டும் ? குடிக்கத் தண்ணீர் வேண்டுமா ?" என்று.

அவருடைய தலை தன்னையும் அறியாமல் மேலும் கீழுமாக "ஆமாம்" என்று அசைந்தது.

உடனே, அதையே அவன் கேட்ட வரமாக நினைத்துக் கொண்டு, ஒரு பானை நிறைய தண்ணீரை அவனிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டது பூதம்.

பார்த்தீர்களா ? இன்றைக்கு இந்தக் கதையில் வந்த பந்து மித்ரன், தனக்குத் தானாக அமைந்த வாய்ப்பையும் கெடுத்துக் கொண்டான்.

எல்லாம் அவன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாததால் தான். அவன் வருடக் கணக்காகவே தன்னுடைய முடிவுகளை பிறரைக் கேட்டு எடுத்து வந்தான். அவனிடம் முடிவெடுக்கும் பழக்கமே இல்லை.

சரி, அப்படி இருக்கும் பட்சத்தில் யாரிடமாவது கேட்பது தவறு கிடையாது. ஆனால், குறைவான நேரமே இருக்கும் பொழுது, யாரிடம் கேட்க வேண்டும் என்ற தெளிவாவது அவனுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் அவனுக்கு இல்லை.

இதனால் தான், அவன் அவனுக்குக் கிடைத்த வாய்ப்பையும் தவற விட்டான்.
இன்று ஒரு வேளை நாமும் இதே தவறை செய்து கொண்டிருப்போமானால், நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுயமாக முடிவெடுக்கப் பழக வேண்டும். ஆலோசனை கேட்கும் பட்சத்தில், சரியான நபர்களிடம் மட்டும் ஆலோசனை கேட்க வேண்டும். இதை இந்த கதை உங்களுக்கு உணர்த்திருக்கும் என்று நினைக்கிறேன் மற்றொரு கதையோடு நாம் சந்திப்போம்.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post