கப்பலில் இருந்து திருடப்பட்ட புதையல் - A Motivational Story

நம் எல்லோருக்குமே ஏதாவதொரு குறிக்கோள் இருக்கும். நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும். பிடித்த வேலைக்குச் செல்ல வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும். வீடு கட்ட வேண்டும். பிடித்த துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும். இது மாதிரி ஏதேனும் ஒரு குறிக்கோள்.

ஆனால், குறிக்கோள் எப்படிப்பட்டதானாலும் அதை அடைவதற்கு மூன்று முக்கியமான யுக்திகள் உள்ளன. அதைத்தான், நாம் இந்தக் கதையில் பார்க்கப் போகிறோம்.

அது ஒரு மிகப்பெரிய சரக்கு கப்பல். அதிலும், புராதானப் பொருட்களை விலை உயர்ந்த பொருட்களை மட்டும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஏற்றிச் செல்லும் சிறப்புவாய்ந்த சரக்குக் கப்பல்.

அந்தக் கப்பலுக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. அதிலிருக்கும் பொருட்களைப் பாதுகாப்பதற்கு, திறமையான அணியும், அந்த அணியோடு கூட பாதுகாப்பு அதிகாரிகளும் உண்டு. இப்படிப்பட்ட அந்தக் கப்பலில், ஒரு நாள் ஒரு பிரச்சனை. ஒரு புது விதமான நூதனமான கும்பலொன்று அந்தக் கப்பலுக்குள் புகுந்து, அதிலிருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷங்கள் சிலவற்றைத் திருடிச் சென்று விட்டது.

கப்பல் முழுவதும் ஒரே பதற்றம். கப்பல் தனது பயணத்தை நிறைவு செய்யும் முன்னால், கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் எப்படியாவது மீட்டுவிட வேண்டுமென்று ஒரு நெருக்கடி.

இப்படியிருக்க, அந்தக் கப்பலின் பாதுகாப்பு அதிகாரி அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு அறிவிப்பு கொடுக்கிறார். "இந்தச் சம்பவம் நமது இத்தனை வருட விசுவாசத்துக்கும், இத்தனை வருட திறமைக்கும் பெரிதான ஒரு சவால். நாம் எப்படியாவது அந்தக் கொள்ளையர்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவர்கள் எடுத்துச் சென்ற பொருட்களை மீட்டும் ஆக வேண்டும். அதற்கு உங்கள் யாரிடமாவது ஏதேனும் திட்டம் இருந்தால், இப்போதே சொல்லுங்கள்" என்று அந்த அறிவிப்பிலும் சொல்கிறார்.

அடுத்து ஒரு ஒரு மணி நேரம் இருக்கும். அந்தக் கப்பலில் முதன்மைக் காவலர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை வந்து சந்திக்கிறார். "என்னால் உங்களுக்கு உதவ இயலும். என்னால், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்து, அவர்கள் இப்போது எங்கிருப்பார்கள் என்பதைக் கண்டறிந்து சொல்ல இயலும்" என்று சொல்லிவிட்டு தடையங்களை வைத்து கொள்ளையர்களின் அடையாளத்தை கண்டறிந்து சொன்னார்.

பாதுகாப்பு அதகாரிக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் முதன்மைக் காவலரை நன்கு பாராட்டி, "சபாஷ் !! நீங்கள் தான் இதற்கு சரியான ஆள். உடனேயே ஒரு குழுவைத் தயார் செய்யுங்கள். உடனேயே அவர்களை அழைத்துச் சென்று பொருள்களை மீட்டு வாருங்கள்" என்று அவரிடம் சொன்னார்.

மிகவும் ஆர்வமாக அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார்.

ஆனால், அவர் சொன்னபடி ஒரு சிறு படகில், கொள்ளையர்கள் இருந்த இடத்துக்குப் புறப்பட்ட காவலராலோ பாதி தூரம் கூட ஒழுங்காகச் செல்ல இயலவில்லை. நடுவில் ஏற்பட்ட ஒரு சூழலால் அவரது பயணம் பாதியிலேயே நின்று போக, அவர் தப்பித்து கப்பலுக்கே திரும்பி வந்தது தான் மிச்சம்.

பாதுகாப்பு அதிகாரிக்கு வருத்தம் அதிகமாயிற்று. அவர் மறுபடியும் அறிவிப்பு விடுத்தார்.

"இதோ பாருங்கள். இப்பொழுது நமக்கு கொள்ளையர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கு செல்ல வழியும் தெரியும். ஆயினும், இடையிலுள்ள சுழலால், நம்மால் அவ்விடம் சென்று சேர இயலவில்லை. உங்களில் யார் ஒருவரால் சுழலைத் தாண்டி, கப்பலைச் செலுத்த முடியுமோ, அவர்கள் இங்கு வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு குழுவைத் தருகிறேன். நீங்கள் சென்று, பொருள்களை மீட்டு வாருங்கள்", என்று.

இந்த சமயத்தில், அதற்கு முன்வந்தது ஒரு இரண்டாம் நிலை காவலர். அவரால் எப்படிப்பட்ட சுழலையும் தாண்ட இயலுமாம். அதைக் கேட்டு நிம்மதியுற்ற பாதுகாப்பு அதிகாரி, அவருக்கும் ஒரு குழுவை தர, மிக எளிதில் அந்த சுழலைக் கடந்து கொள்ளையர்களின் கப்பலை அடைந்தார் அந்த இரண்டாம் நிலை அதிகாரி.

ஆனால், அந்தக் கொள்ளையர்களை நோட்டம் பார்த்த பின்னர் தான் அவருக்குத் தெரிந்தது, அவர் நினைத்ததை விடவும் அவர்கள் கொடூரமானவர்கள் என்று. அவர் கணித்ததை விடவும் அவர்கள் பலசாலிகள் என்று.

அதனால், புத்திசாலித்தனமாக தனது கப்பலுக்கே வந்த சேர்ந்தார் அவர். பாதுகாப்பு அதிகாரிக்கோ ஐயோடாவென்று இருந்தது. "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே !!" என்று நினைத்துக் கொண்டு அடுத்த அறிவிப்பை விடுத்தார் அவர்.

"இதோ பாருங்கள். இப்போது கொள்ளையர்கள் யாரென்று தெரியும். அவர்கள் இருக்கும் இடம் வரை அழைத்துச் செல்லவும் இயலும். ஆனால், கொடூரமான அக்கொள்லையர்களை எதிர்க்க மட்டும் இப்போது நமக்கு ஆட்கள் தேவை. யாரேனும் உள்ளீர்களா ?" என்று.

அங்கிருந்தவர்களுக்கு ஒரே சந்தேகம். "அந்த இரண்டாவது காவலர் தான் ஏற்கனவே கொள்ளையர்களைப் பார்த்துவிட்டு முடியாது என்று வந்து விட்டாரே !! நம்மால் முடியுமா ?" என்று கலக்கம்.

ஆனாலும், யாரேனும் ஒருவருக்காவது தைரியம் இல்லாமல் போய்விடுமா என்ன !! ஒருவருக்கு மட்டும் தைரியம் வந்தது. அவர் தான் ஒரு மூன்றாம் நிலை காவலர்.

இப்போது அவரிடமும் ஒரு படை கொடுக்கப்பட்டது. முதல் நிலைக் காவலர் கண்டறிந்த இடத்துக்கு இரண்டாம் நிலை காவலர் அவர்களைக் கொண்டு சேர்க்க, மூன்றாம் நிலை காவலரால் அந்த கொள்ளைக் கூட்டமும் பிடிக்கப்பட்டது.

ஒரு வழியாக வேலை முடிந்ததில் மகிழ்ச்சியுற்ற அந்த பாதுகாப்பு அதிகாரி மூன்று பேரையும் அழைத்தார். மூன்று பேரையும் பாராட்டினார். அதற்கென்று ஒரு பெரிய விழாவையே எடுத்தார்.

ஆனால், அந்த விழாவில் வைத்து தான் அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி.

என்னவென்று ? "கொள்ளையர்கள் பிடிபட்டதற்கு யார் காரணம் ?" என்று.

"தடையத்தை வைத்து அவர்கள் இருந்த இடத்தைக் கண்டறிந்த முதன்மைக் காவலரா ? சுழலை மீறி, அவர்கள் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற இரண்டாம் நிலைக் காவலரா ? அல்லது கொள்ளையர்களோடு சண்டையிட்டு பொருட்களை மீட்டு வந்த மூன்றாம் நிலைக் காவலரா ? யார் இதில் இருப்பதிலேயே திறமைசாலி ? யார் இந்த பொருட்களெல்லாம மீட்கப்பட்டதற்குக் காரணம் ?" என்று.

அப்போது தான் அந்தப் பாதுகாப்பு அதிகாரி அவர்களுக்கு பதிலைச் சொன்னாராம்.

"இந்த மூன்று பேரில் யாருடைய திறமை பெரியது ? யாருடைய பங்கு முக்கியமானது ? என்று நாம் யோசிக்கும் வரையிலும், நம் யாருக்குமே இந்தக் காரியம் எப்படி சாத்தியமாயிற்று ? என்பது விளங்காது.

ஏனென்றால், இந்த மூன்று பேருடைய பங்கும் சேர்ந்ததால் மட்டுமே இன்று நம்மால் அந்த கொள்ளையர்களை பிடிக்கவியன்றது. இதில் யாராவது ஒருவரது பங்கு இல்லாமல் போயிருந்தால் கூட நம்மால் அவர்களைப் பிடித்திருக்க இயலாது" என்று.

அவர் சொல்வது சரிதானே !!

கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை மீட்க வேண்டுமென்றால், முதலில் அவர்கள் யார் ? எங்கிருந்து வந்தார்கள் ? என்பது தெரிய வேண்டும். கண்டுபிடித்தால் மட்டும் போதாது, அவர்கள் இருக்கும் இடத்தையும் சென்றடைய வேண்டும். சென்றடைந்தால் மட்டும் போதாது. அவர்களை எதிர்த்து சண்டையிட்டு பொருட்களை மீட்டும் வர வேண்டும்.

இந்த மூன்றில், ஏதேனும் ஒன்று தவறினால் கூட, அவர்களது குறிக்கோளான கொள்ளையர்களைப் பிடித்தல் பொருட்களை மீட்டல் என்பது சாத்தியமில்லாது போயிருக்கும்.

இதே மாதிரி தான், நமது குறிக்கோளும். அதை நாம் அடைய வேண்டுமென்றால், மூன்று முக்கியமான காரியங்களை நாம் செய்தாக வேண்டும்.

ஒன்று: அந்த முதன்மைக் காவலர் கொள்ளையர்கள் இருந்த இடத்தை கண்டறிந்தது போன்று நாமும் நமது குறிக்கோளை எவ்வாறு அடைவது என்று ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்.

இரண்டு: அந்த இரண்டாவது காவலர் ஒரு பெரிய சுழலையும் மீறி கொள்ளையர்கள் இருந்த இடத்தைச் சென்றடைந்தது போன்று நாமும், பெரிய பிரச்சனைகள் வந்தாலும் கூட, அவற்றைக் கடந்து குறிக்கோளை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

மூன்று: அந்த மூன்றாவது காவலர் அக்கொள்ளையர்கள் இருந்த இடத்துக்குச் சென்றதும், எப்படி தைரியமாக சண்டையிட்டு அவர்களை வெற்றி கொண்டாரோ, அதேபோன்று நாமும் தைரியமாகக் களத்தில் செயல்பட்டு, முழுமூச்சோடு வெற்றியை ஈட்ட வேண்டும்.

இந்த மூன்றில் ஒன்றைக் கூட தவறவிடாது இருந்தாலே போதும். நாம் குறிக்கோள் எதுவாகினும், அதை எளிதில் அடைந்து விடலாம். நீங்கள் நினைத்த எதை வேண்டுமானாலும், சாதித்தும் விடலாம்.
இதை இந்தக் கதை உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு கதையோடு நாம் மறுபடியும் சந்திப்போம்.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post