உயிரைக் காத்த ஒரு சிலையின் கதை | A Motivational Story in Tamil

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


- என்பது வள்ளுவன் வாக்கு.

கல்வி என்பதே அழிவில்லாத செல்வமாகும். மற்றபடி பொன், பொருள், நிலம் போன்ற செல்வங்கள் எல்லாம் அழியக்கூடிவையே. ஆனால், அவை அழிந்தாலும் கூட கல்வியைக்கொண்டு அவற்றை மீட்டுவிடலாம். கல்வியே ஆபத்துக்காலத்தில் காப்பாற்றும்.

அதை உணர்த்தும் ஒரு கதையை இதோ, நம் பார்க்கலாம்.

பல வருடங்களுக்கு முன்னர், கடற்கரையோரத்தில் ஒரு நாடு இருந்தது. “அகத்தி நாடு”  என்னும் வளமிகுந்த அந்நாட்டில், ஒரு சிற்பக்கூடமும் இருந்தது. அங்கு படித்து வந்த ஒரு மாணவனுடைய பெயர் “நந்தன்".

இந்த நந்தனுக்கு சிற்பக் கலையின் மீது ஓரளவு ஆர்வம் இருந்தாலும், சதா காலமும் சிற்பக் கூடத்திலேயே நேரம் செலவாவதை நினைத்து, ஒரே சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. ஆனால், அவனுடைய தந்தையோ, ஏதாவது ஒரு கலையிலாவது அவன் தேற வேண்டுமென்று விளைந்து, அவனை அந்த சிற்பக்கூடத்தில் சேர்த்து விட்டிருந்தார். அதனால், வேறு வழியேதும் இல்லாமல், ஒருவிதமான சலிப்புடனேயே சிற்பக்கலையைப் பயின்று வந்தான் நந்தன்.



STORY AUTHOR of this Conceptual Story : Sabari Paramasivan

இப்படியிருக்கும்போது ஒரு நாள், அவன் கடற்கரைக்குச் சென்ற வேளையில், கடற்கரை ஓரமாக ஒரு பெரிய கப்பல் நிற்பதைப் பார்த்தான். இதுவரையும் அவன் எத்தனையோ முறை அந்தக் கடற்கரைக்குச் சென்றிருக்கிறான். ஆனால், அம்மாதிரி வித்தியாசமான ஒரு கப்பலை அவன் பார்த்ததேயில்லை. அதனால், அந்த கப்பலுக்குள் சென்று அதை வேடிக்கை பார்த்தான்.

அந்தக் கப்பலின் உள்ளமைப்பும் கூட, மிகவும் வித்தியாசமாக இருந்தது. உள்ளே, இரகசியமான சில அறைகளும் கூட இருந்தன. இப்படி எல்லா தளங்களையும் பார்த்துவிட்டு, அவன் வெளியேற முனைந்த போது, நங்கூரம் எடுக்கப்பட்டு தனது பயணத்திற்குத் தயாராகியிருந்தது அந்தக் கப்பல்.

"அய்யயோ !! வெளி நபர் நான் ஒருவன் இங்கே இருக்கிறேனே !! கப்பலை நிறுத்துங்களேன்" , என்று பதறினான் நந்தன். அந்த சத்தத்தைக் கேட்டு அவன் முன்னால் வந்து நின்றான் ஆஜானுபாகுவான ஒருத்தன்.

இப்போது தான் நந்தனுக்குப் புரிந்தது. அது ஒரு சாதாரண கப்பல் கிடையாது; கடற்கொள்ளையர்களுடைய கப்பல் என்று. அவனுக்குத் தூக்கி வாரி போட்டது.

"என்னை மன்னித்து விடுங்கள்........ நான் தெரியாமல் இந்தக் கப்பலுக்குள் வந்து விட்டேன். உங்களைப் பற்றி யாரிடமும் கூற மாட்டேன்.... என்னை இறக்கி விடுங்கள் !!" என்று அந்தக் கடற்கொள்ளையனிடம் கெஞ்சினான்.

ஆனால், அவனும் அவனது ஆட்களும் நந்தனை விடுவதாக இல்லை. அவனைத் தங்களுடைய பிணையக் கைதியாக எடுத்துக்கொள்ள, கப்பல் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.

இப்படியாக, நந்தனும் அந்தக் கடற்கொள்ளையர்களுமாக பிரயாணித்துக் கொண்டிருந்த கப்பல், திடீரென்று ஒரு பெரிய சுழலில் சிக்கியது. அலைக்கழிக்கப்பட்டு தடுமாறி, கடைசியாக வேறு ஒரு நாட்டின் எல்லையில் சென்று நின்றது.

அப்படி அது எல்லையில் சென்று நின்றதுதான் தாமதம்! அந்நாட்டின் காவலர்கள் அனைவரும் வேகவேகமாக கப்பலுக்குள் சென்றனர். அவர்கள் கண்ணில் பட்ட கடற்கொள்ளையர்கள், அவர்களோடு பயணித்த நந்தன் என்று அனைவரையும் கைது செய்து, அரசன் முன்பாகக் கொண்டு சென்றனர்.

இந்தக் கடற்கொள்ளையர்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. அதனாலேயே, அந்தக் காலத்தில் இவர்களெல்லாம் பிடிபட்டால் மிகவும் கடுமையான தண்டனை கொடுப்பார்கள். அந்த அரசனும் கூட அவர்களுக்கெல்லாம் மரண தண்டனையையே வழங்கினான். அவர்களுள் ஒருவனாகக் கருதப்பட்ட நந்தனுக்கு சேர்த்துதான்.

அதனால், நந்தன் பயங்கரமாக அழ ஆரம்பித்தான். தான் ஒரு கொள்ளையனல்ல சிற்பம் பயில்பவனென்று அரசனிடம் மன்றாடினான். ஆனால், அவனருகே நின்ற கொள்ளையர்கள் அதனை முற்றிலுமாக மறுத்தனர்.

"அரசே அரசே! அவனை நம்பாதீர்கள் ! இவனும் எங்களுள் ஒருவன் தான்"என்றனர்.

"நான் உங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் அனைவருடைய தலையும் துண்டிக்கப்படும். அதுவரை நீங்களனைவரும் சென்று சிறைச் சாலையில் இருங்கள்", என்று சொல்லி கடுமையான காவல் கொண்ட ஒரு சிறைச்சாலைக்கு இவர்களை அனுப்பி வைத்தான்.

நந்தனுக்கு வேதனை அதிகரித்தது. சிறைச்சாலை அறையில் உட்கார்ந்து ஒவ்வொரு நாளும் அழுதான். இந்த நிலையில்தான் சிறைச்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு காவலருக்கு நந்தன் மீது இரக்கம் பிறந்தது.

"ஏன் தம்பி! அரசரிடம் உன்னை நிரூபித்துக்கொள்வதற்கு உன்னிடம் ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லையா ?" என்று கேட்டார்.

"ஐயா, நான் என்ன செய்வது ? நான் ஒரு சிற்பி. அதை நிரூபிப்பதற்காக கையிலேயே உளியையும் கல்லையும் தூக்கிக்கொண்டேயா வர முடியும்" என்று விரக்தியில் பதிலளித்தான் நந்தன்.

அந்த காவலாளி யோசித்து பார்த்துவிட்டு, "சரி தம்பி... நானே உனக்கு ஒரு உளியைக் கொண்டு வந்து தருகிறேன். நீ ஒரு சிற்பத்தை செதுக்கு. ஒருவேளை, உண்மையாகவே உனக்கு சிற்பம் செதுக்கத் தெரிந்தால், அரசரிடம் உன்னை நிரூபித்துக் கொள்ளலாம் அல்லவா !!" என்று கூற, அவனுக்கும் அது ஒரு நல்ல யோசனையாகப்பட்டது. கூடிய விரைவில், அந்தக் காவலாளி மூலமாக ஒரு உளியை வாங்கிக்கொண்டான்.

அந்தக் காலத்து சிறைகளில் படுப்பதற்கு வசதியாக ஒரு திண்டு போட்டிருப்பார்களல்லவா !! அந்தத் திண்டிலேயே தன்னுடைய சிற்பத்தை செய்துக்க முடிவெடுத்தான். கல்வி கற்கும் காலத்தே முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ளாதலால், சிற்பம் செதுக்குவது கடினமாக இருந்தது. ஆயினும், தனது தலைமைச் சிற்பி கூறிய அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகப்படுத்திப் பார்த்து, இரவு பகல் பாராமல், இமைப்பொழுது தூங்காமல், ஒரு நல்ல சிற்பத்தை செதுக்க முயற்சிதான் அவன்.

இப்படியே நாட்கள் நகர, அவனுடைய தண்டனைக்கான நாளும் வந்தது. பொதுவாக, மரண தண்டனைக் கைதிகளிடம் அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக, "உனது கடைசி ஆசை என்ன ?" என்று கேட்பார்களே !! அதுபோல நந்தனிடமும் கேட்டார்கள்.

"எனக்கு ஒரே ஒரு ஆசை தான். நான் இத்தனை நாள் வாழ்ந்த இந்த சிறைச்சாலையில் அரசருக்கென்று ஒரு பரிசைத் தயாராக்கி வைத்துள்ளேன். அந்தப் பரிசை என்னால் எடுத்துத் தரவியலாது என்பதால், அதை பார்வையிட அரசர் பெருமானார் இங்கு வரவேண்டும். அது போதும்" என்றான் நந்தன்.

'மரண தண்டனைக் கைதி' என்பதால், அரசரும் ஒத்துக்கொண்டார். அவனது அறையைப் பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்கு வந்தார். அரசருக்கு எதிர்புறமாக சிற்பம் செதுக்கப் பெற்றிருந்த திண்டை மறைத்துக்கொண்டு நின்றான் நந்தன்.

"எனக்கு ஏதோ பரிசு கொடுக்க வேண்டுமென்று சொன்னாயே !! என்ன பரிசு அது ?" என்று அரசர் கேட்க, அவன் நின்ற இடத்திலிருந்து சற்று விலகி அந்த சிற்பத்தைக் காட்டினான் நந்தன்.

அந்த சிற்பத்தில்.. அந்த சிற்பத்தில் ராஜ மாதாவின் திருமுகம் !! அரசருக்கு அப்படியே புல்லரித்து விட்டது.

"அப்படியெனில், நீ கடற்கொள்ளையன் இல்லையா ? அன்று நீ சொன்னது போல, சிற்பி தானா ?" , என்று என்று வியந்து அவனை விடுவித்தார். அத்தோடு, எந்தத் தவறுமே செய்யாமல் சிறைவாசம் பெற்றதற்கு இழப்பீடாக ஒரு தொகையையும் கொடுத்து அவனை அவனுடைய நாட்டுக்கும் அனுப்பி வைத்தார்.

இன்று இந்தக் கதையில் பார்த்தது போலத் தான் நண்பர்களே !!

ஆபத்தில் நமக்கு யார் உதவுகிறார்களோ, இல்லையோ, நாம் கற்ற “கல்வி” கைகொடுக்கும்.கல்வி என்றால் பாடப்புத்தகங்களில் படிக்கும் பாடங்களும், நாம் வாங்கி வைத்திருக்கும் பட்டங்களும் மட்டுமல்ல. நாம் கற்றுக் கொள்கிற எல்லா தொழில்கள், எல்லா கலைகளுமே கல்வியில் தான் அடங்கும்.

நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு நாம் கற்றுக் கொள்கின்ற அந்தக் கல்வியே, ஆபத்துக் காலங்களில் நம்மைக் காப்பாற்றும். இதை நீங்கள் இன்று அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு கதையை எழுதிக்கொண்டு வருகிறேன். அதுவரை நன்றி.

Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள்
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX

 

This is a motivational story in tamil to encourage students to learn more and learn arts, crafts too. You can see a lot of Tamil Motivational Videos and Tamil Motivation Stories in this website. For more Motivational Stories in Tamil, Kutty Stories and Historical Stories, please continue reading APPLEBOX.
 

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post