பாகமதியின் காதல் கதை - Bagamathi Love Story in Tamil

இப்போது நீங்கள் இங்கே காண்பது, ஹைதிராபாத் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு ஓவியம். 



இது 16-வது நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பாகமதி என்னும் நடன மங்கையின் ஓவியமாகும். பாகமதி என்ற பெயரையும் இஸ்லாமிய மன்னரான குலி குதுப் ஷா இவரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலையும்  தாண்டி, வேறெந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை. ஆயினும், இந்தப் பகுதியைச் சுற்றியமைந்த கிராமங்கள் சிலவற்றில் ஒரு உருக்கமான காதல் கதை வலம் வருகிறது.

அந்தக் கதைகளோடு, சில வரலாற்றுக்குக் குறிப்புகளையும், எனது கற்பனையையும் சேர்த்து நான் எழுதியிருக்கும் காதல் கதை தான் - இந்த பாகமதியின் காதல் கதை.

கதையை வாசிக்கலாமா ?

அது 16ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி. இன்று ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் அமையப் பெற்றிருக்கும் அந்தப் பகுதியை 'குதுப் ஷாகிக்கள்' என்ற சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிச் செய்து கொண்டிருந்தார்கள். 

அந்த குதுப்ஷாகிக்களின் வம்சத்தில், நான்காவது மன்னர் - இப்ராஹீம் குலி குதுப்ஷா.

இந்த இப்ராஹும் குலி குதுப்ஷா, இளம் வயதிலேயேயே போரில் மரணமடைய, பன்னிரண்டு வயதேயான அவருடைய மகன் முகம்மது குலி குதுப்ஷா ஆட்சியில் அமர்த்தப் படுகிறான். சிறுவன் என்பதால், அவனுக்கு அந்த ஆட்சியின் தளபதிகள் மற்றும் இஸ்லாமிய மதகுருக்கள் ஒரு அரண் போல நின்றார்கள். எதிரி அரசர்கள் எல்லாரிடமிருந்தும் அவனைப் பாதுகாத்து வந்தார்கள்.

ஆனால், குலி குதுப்ஷாவுக்கு இது சலிப்பைத் தான் தந்தது. பின்னே, அரண்மனைக்குள்ளேயே பூட்டி வைத்தால், ஒரு பன்னிரண்டு வயது சிறுவனுக்கு எப்படித் தான் இருக்கும் ? 

ஆயினும், சில வருடங்கள் இப்படித் தான் நகர்ந்தன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள், குலி குதுப்ஷாவுக்கு 'நாம் ஒரு நாளாவது வெளியே சென்று சுதந்திரமாக இருக்க வேண்டும்" என்ற ஆசை எழுந்தது. தந்திரமாகத் திட்டமிட்டு, மாறுவேடத்தில் எல்லாரையும் ஏமாற்றிவிட்டு குதிரையை எடுத்துக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினான் குலி. சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி, சில மைல்கள் கடந்து செல்ல, மூசி என்ற ஆற்றங்கரையில் தான், அவனுக்கு சுயநினைவே வந்தது. 

ஆற்றில் சூரியக்கதிர்கள் வைரம்போல் மின்ன, சலசலவென ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் அவனை சுண்டியிழுக்க, ஆற்றில் இறங்கும் ஆசையும் வந்தது. கையில் மாற்றுடை கூடக் கிடையாது. எனினும், காற்றில் காயுமென்ற தைரியத்தில், ஆற்றில் இறங்கினான் அவன். அப்படியொரு ஆசையோடு ஆற்றில் மூழ்கி எழுந்தான். 

ம்ம்ம்ம்.. இன்னொரு முறை.. 

"என்ன ஒரு ஆச்சரியம் ? யாரிந்தப் பேரழகி ?", அவர் விக்கித்துப் போனான்.

ஏனெனில், அவன் மூழ்கிய இடத்துக்குப் பக்கத்திலேயே, ஒரு பெண்ணும் மூழ்கியப்படி இருந்தாள். சில நிமிடங்களுக்கு அவளிடம் எந்தவொரு அசைவுமில்லை.

"ஆழமறியாமல் மூழ்கிவிட்டாளா !! இல்லை இறந்துபோன பிணமா ?" என்றெண்ணிய குலிக்குதுப்ஷா, அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவளைக் கரைக்குக் கொண்டுவந்தான்.

கரைக்கு வந்தது தான் தாமதம், "உனக்கென்ன பைத்தியமா !! மூழ்குபவர்களுக்கும் மூச்சிப் பயிற்சியெடுப்பவர்களுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு ?" , என்று கத்தினாள் அவள். அவள் முகம்  அவ்வளவு அழகாக இருந்தது.

அதை ரசித்தபடியே, "அப்படியானால், நீ மூழ்கவில்லையா  ?" என்று கேட்டான் குலி.

அவள் விழுந்து, விழுந்து சிரித்தாள். "யார் மூழ்கியது ? நானா ? நான் பிறந்ததிலிருந்தே இந்த ஆற்றில்தான் குளித்துவருகிறேன். பல ஆண்டுகளாக மூச்சுப் பயிற்சியெடுத்து வருகிறேன். நானா மூழ்கியது ?" என்றாள்.

குதுப்ஷாவுக்கு அது ஒரு மாதிரியாகிவிட்டது. "அதிகமாக வெளியுலகம் அறியாததால் தான் இந்த முட்டாள்தனமோ" என்று தோன்றியது. குதிரையை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பிவிட்டான்.

ஆனால், அரண்மனைக்கு வந்தப்பின்பும் அவனை அந்தப் பெண்ணின் சிரிப்பு ஆட்டிப் படைத்தது. "அவள் எவ்வளவு அழகாக இருந்தாள் ? ஆனால், நம் முதல் சந்திப்பே இவ்வளவு மோசமானதாக அமைந்துவிட்டதே",  என்ற எண்ணம் அவனது ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மறுபடியும், அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
 
"அவள் தினமும் அந்த ஆற்றுக்கு மூச்சுப் பயிற்சியெடுக்க வருவதாகச் சொன்னாளே !!", என்றெண்ணி மறுநாளும் மாறுவேடத்தில் ஆற்றங்கரைக்குச் சென்றான் குலி.

எதிர்பார்த்தபடியே, அந்தப் பெண்ணும் அங்கிருந்தாள். அவர் அந்தப் பெண்ணிடம் சென்று "நான் கபீர். மன்னர் குலியின் இராணுவத்தில் பணிபுரிகிறேன். நேற்று இங்கு.."

"ம்ம்ம். ஞாபகம் இருக்கிறதே. இப்போது என்ன வேண்டும் ?"

"என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்"

"ம்ம்ம். சரி"

குலியின் நடை, உடை, பாவனைகள் எல்லாம் அதற்கேற்றப்படி இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு எந்தவொரு சந்தேகமும் தோன்றவில்லை. அவனுடைய பேச்சு கண்ணியமாக இருந்ததால், அவள் அவனுடன் தொடர்ந்து பேசினாள். அந்தப் பேச்சு நீண்டது. இருவரும் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசினார்கள். அந்த சந்திப்பு இருவருக்குமே மகிழ்ச்சியை வழங்க, அடுத்தடுத்து அதே போல சந்திதார்கள். சந்திப்புகள் தொடர்ந்தன.

ஒவ்வொரு சந்திப்பின் போதும், குதுப்ஷா அந்தப் பெண்ணிடம் அவளது பெயரைக் கேட்பான். ஆனால், அவள் பதில் கூறியதில்லை. ஏதாவது சொல்லித் தவிர்த்து விடுவாள்.

 இப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது ஒருநாள் , கபீர் வடிவத்திலிருந்த குதுப்ஷா அந்தப் பெண்ணிடம் தன் "காதலை" வெளிப்படுத்தினான். "பெயர் தெரியாதவளே !! நீதான் என் உயிர். நான் உன்னைக் காதலிக்கிறேன்", என்றான்.

அவள் அதிர்ந்தாள்.


"க..கபீர்.. நம் இருவருக்குமே பதினான்கு வயதுதான் ஆகிறது. இதற்குள் நமக்கு எப்படி காதல் வரும் ? அதைவிட நான் யாரென்ற உண்மை தெரிந்தால், நீ நிச்சயமாக என்னைக் காதலிக்க மாட்டாய்",  என்றாள்.

"இல்லை. எனக்கு நன்றாகத் தெரியும். இது காதல் தான்" ,என்று உறுதியாகச் சொன்னான் குலி.

அவள் பதிலேதும் கூறாமல், எழுந்து சென்றாள். கலங்கிய கண்களுடன்.

அவளது மௌனத்தின் அர்த்தம் புரியாத குலி, "சரி, நாளை அவளிடம் பேசிக்கொள்ளலாம். அவள் மனதை மாற்ற முயற்சி செய்யலாம்" என்று முடிவு செய்து, அங்கிருந்து திரும்பிவிட்டான்.

ஆனால், அடுத்தநாள் மூசி ஆற்றங்கரைக்கு வந்தபோது குலி குதுப்ஷாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனெனில், அந்தப் பெண் ஆற்றங்கரைக்கு வரவில்லை. இரவு முழுவதும் காத்திருந்தும், அவர் ஏமாற்றத்துடன் தான் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

அடுத்தநாள், மற்றொரு அதிர்ச்சியான செய்தி அவனுக்குக் காத்திருந்தது !!

அதாவது மூசியாற்றில், வெள்ளம் ஏற்பட்டதாகவும் ஆற்றுக்கு அருகிலிருந்த கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவனுக்குத் தகவல் கூறப்பட்டது. உடனடியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட சென்றான். என்ன தான், மக்களைப் பற்றிய கவலை அவனுக்கு இருந்தாலும், அதே கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற அந்த பெண்ணைப் பற்றிய கவலையும் ஒரு புறம் அவனை அழுத்தத்தான் செய்தது.

ஆயினும், தனது நாட்டின் அரசனனென்ற முறையில், தன் காதலையும் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தான் குலி குதுப் ஷா. அதிலேயே, அடுத்த சில மாதங்கள் சென்றுவிட, அதற்கு அடுத்ததாகத் தான் தனது காதலியைத் தேடும் முயற்சியைத் தொடங்கினான். ஆனால், கடுமையான முயற்சிக்குப் பின்னும், அவனால் அந்தப் பெண்ணைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

" எனது கேள்விக்கு எந்தவொரு பதிலும் கூறாமல் சென்ற அந்தப் பெண் இப்போது எங்கு இருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள் ? உயிருடன் இருக்கிறாளா, இல்லையா ?" என்பது போன்ற கேள்விகள் அவனை வாட்டி வதைத்தன. சில நேரங்களில், குதுப் ஷாவுக்குப் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.

ஆனால், குதுப் ஷா தொடர்ந்து அப்படிக் கவலையுடன் உட்கார்ந்துகொள்ள காலம் இடமளிக்கவில்லை. அடுத்தடுத்து சில போர்கள். அடுத்தடுத்து சில அரசியல் மாற்றங்கள் என்று தனது அரசியல் வாழ்க்கையில் முழுவதுமாக கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொறுப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, நிற்கக் கூட நேரமில்லாமல் அலைந்தான் குதுப் ஷா. அந்தப் பெண்ணைத் தேடுவதையும் கூட கைவிட்டான்.

இப்படியே நாட்கள் கடந்து செல்ல, ஒரு ஆளுமை நிறைந்த அரசரானார் முகம்மது குலி குதுப் ஷா. காலப்போக்கில், தனது தந்தையான இப்ராஹீம் குலி குதுப்ஷாவை விட மிகவும் சிறந்த ஒரு மன்னராக உருவெடுக்கத் தொடங்கினார்.

இப்படியிருக்க, நாட்டைத் திறம்பட ஆட்சி செய்துவந்த முகம்மது குலி குதுப்ஷாவுக்கு அமைச்சர்களும் மக்களும் ஒரு விழா எடுக்க ஆசைபட்டனர். அந்த விழாவில் நடனமாட, அவர்கள் நாட்டிலேயே சிறந்த நாட்டிய மங்கை ஒருத்தியையும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நடன மங்கையின் பெயர் தான் "பாகமதி".

பாகமதியைப் பற்றி குலி குதுப்ஷா ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறார். இருந்தாலும், அவளைக் நேரில் கண்டதில்லை. "சரி, இந்த விழாவில் காணலாம்" என்று அவர் இருக்க, விழாவிற்கான அந்த நாளும் வந்தது. விழாவின் போது, மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி கூறினார்கள், நிறைய புகழாரங்கள், கவிதைகள் எல்லாம் பாடினார்கள். தான தருமங்கள் செய்யப்பட்டன. இறுதியாக, அரங்கமே ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்த நடனமும் ஆரம்பித்தது.

அனைவரது கண்களும் அவளது அழகுப் பிம்பத்துக்குக் காத்திருக்க, ஒரு அழகிய மயில் போல, நடன அரங்கிற்குள் நுழைந்தாள் பாகமதி.

தனது முகத்திரையை விலக்கி, பாகமதி நடனமாடத் தொடங்கிய போது, அதிர்ந்து போனார் குலி குதுப்ஷா. அந்த அரங்கத்திலிருந்த அத்தனை பேரின் கண்களும் அவளது உடல் அங்கங்களின் மீதிருக்க, குதுப்ஷாவின் கண்கள் மட்டும் அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.

ஏன் ?

ஏன் ?

ஏனெனில், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் மூசியாற்றங்கரையில் அவர் தொலைத்தாரே, ஒரு காதலி.. அந்தக் காதலி வேறு யாருமில்லை. பாகமதி. பாகமதியே  தான்.

"நான் யாரென்ற உண்மை தெரிந்தால், நீ என்னிடம் இப்படிக் காதல் என்று வந்து நிற்க மாட்டாய்" , என்று அன்று அவள் சொன்னதன் காரணம் - அவள் ஒரு தேவதாசி.

ஆம், அது 16ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியல்லவா !! அது தானே தேவதாசிகளுக்கிருந்த உயரிய உரிமைகள், கடமைகளெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்ட காலம் !! 

அன்றைய தேதிக்கு தேவதாசிகள் தங்கள் மனம் விரும்பும் ஒருவரைத் திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்குக் கிடையாது. சொல்லப்போனால், முறையான திருமணமே அவர்களுக்குக் கிடையாது.

அதனால் தான், மனதளவில் பாகமதி கபீரைக் காதலித்தாலும், அவனிடம் எந்தவொரு பதிலும் சொல்லாதது.

இவையெல்லாம் குலி குதுப்ஷாவின் மனதில் ஓடிக் கொண்டிருக்க, பாகமதியின் நடனமும் நடைபெற்று முடிந்தது. நடனம் முடிந்து அரசரிடம் தனது பரிசுப்பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பகமதி அவரருகே வந்த நேரத்தில், குலி குதுப்ஷாவின் விரல்களில் நடுக்கமுற்றன.

"இப்பொழுதே இவளிடம் நாம் யாரென்று சொல்லி விடலாமா ? இல்லை.. இவளுக்கு குதுப்ஷாவைத் தெரியாது. கபீரைத் தான் தெரியும். அதனால், கபீராகத் தான் நான் அவள் முன்னால் சென்று நிற்கவேண்டும்"

எதுவும் பேசாமல், பரிசுப்பொருளை மட்டும் கொடுத்தனுப்பினார் அவர்.

பின்னர், திட்டமிட்டபடியே பாகமதியின் வீட்டுக்கும் சென்றார். அரசர் முகம்மது குலி குதுப்ஷாவாக அல்ல. சாதாரணச் சிப்பாயான கபீராக. ஆனால், சாதாரணச் சிப்பாயான அவருக்கு தேவதாசிகளின் இல்லத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வீட்டின் காவலர்கள் அவருக்கு அங்கு அனுமதி தரவில்லை.

"நான் பாகமதியைப் பார்க்க வேண்டும். எனக்கு அனுமதி தாருங்கள். ஒரே ஒருமுறை மட்டும் அனுமதி தாருங்கள்" , என்று கெஞ்சினார். அவர்களோ, "நிச்சயமாக முடியாது" என்று மறுத்தனர்.

"அனுமதி கூட வேண்டாம். கபீர் வந்திருக்கின்றேன் என்று மட்டும் பாகமதியிடம் கூறுங்கள்" , என்றார். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

"பாகமதி !! பாகமதி !!", கத்திகொண்டே இருந்தார்.


சற்று நேரத்தில், இந்தப் பிரச்சனை பாகமதியின் காதுக்குச் சென்றடைந்தது. பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தாள் பாகமதி.

"கபீர்,, நீங்களா !!"
 
கபீரைக் கண்டு, விக்கித்துப் போய் நின்றாள்.


கபீர் இப்போது அவளிடம் நடந்து வந்து "பாகமதி, அன்று நான் கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்கிறேன். நான் உன்னைக் காதலிக்கிறேன். உனக்கு என்னைத் திருமணம் செய்துக்கொள்ள சம்மதமா?" என்று கேட்க, அவள் கண்கள் கலங்கின.

"நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. சட்டங்கள் அதற்கு அனுமதிக்காது. சென்று விடுங்கள். இந்த இடத்திலிருந்து சென்று விடுங்கள் " , என்று அவரிடம் கூறினாள்.

"ஏன் பாகமதி ? ஏன் ?"

"இல்லை கபீர். இல்லை. இனி இங்கு நீங்கள் நிற்காதீர்கள். ஏற்கனவே, இவர்களுக்கு நமது பழக்கம் தெரியவந்து இவர்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நினைத்ததால் தான், சில வருடங்களுக்கு முன் தலைமறைவானேன். இப்போது மறுபடியும் உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டல் ? திவ்யாவு செய்து பொய் விடுங்கள் கபீர். போய் விடுங்கள்"

அவள் கதறினாள்.

இப்போது கபீர் தனது மாறுவேடத்தைக்  கலைத்துக் கொண்டார். கம்பீரத்தோடு முகம்மது குலி குதுப்ஷாவாக அவள் முன்னால் வந்து நின்றார்.

"இந்த நாட்டின் அரசரான முகம்மது குலி குதுப்ஷா கேட்கிறேன். உனக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா?" , என்றார்.

கண்ணீருடன், அவர்முன் மண்டியிட்டு உட்கார்ந்தாள் பாகமதி.

ஆரம்பத்தில், அவர் பேச்சுக்குத்தான் கேட்கிறார் என்று பலரும் எண்ணினார்கள். ஆனால், உண்மையில் குலி குதுப்ஷா பேச்சுக்கெல்லாம் சொல்லவில்லை. தனது மத குருக்கள்,அமைச்சர்கள் என்று எல்லோரிடமும் பேசிப் புரியவைத்து, எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி, பாகமதியைத் திருமணம் செய்துக் கொண்டார்.

அது மட்டுமல்லாமல், தனது தலைநகரத்தை 'கோல்கொண்டா' என்ற இடத்திலிருந்து பாகமதியின் ஊரான 'சிச்சுலம்' என்ற இடத்திற்கு மாற்றி அமைத்தார். அந்த ஊருக்கு பாகமதியின் பெயரை வைத்து பாக்கியநகர் என்று பெயர் வைத்ததாகவும், பின் பாகமதிக்கு  'ஹைதர் மகால்' என்ற பட்டம் வழங்கியபோது, அந்த ஊரின் பெயரும் "ஹைதராபாத்" என்று மாற்றப்பட்டதாகவும், செவிவழிக் கதைகள் உண்டு.

ஆனால், இவற்றுக்கெல்லாம் எள்ளளவும் வரலாற்றுச் சான்றுகள் கிடையாது.

எனினும், இந்தத் தகவல்களின் அடிப்படையில் நான் எழுதியுள்ள கதை உங்களை சில நிமிடங்களுக்கு ஒரு வரலாற்றுக் காதலுக்குள் பயணிக்க வைத்திருக்கும் என்ற எண்ணத்தோடு இந்தக் கதையை முடிக்கிறேன். நாம் வேறு சில கதைகளோடு மீண்டும் சந்திப்போம்.

கீழே காணும் கதைகளை நீங்கள் படிக்க விரும்பினால், LINK-ஐ கிளிக் செய்து படியுங்கள். நன்றி.
  

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post