Motivational Story in Tamil - பலூன் சோதனை

இந்தப் புதிய வருடத்தில் (2022), நான் உங்களுக்குச் சொல்லும் முதல் குட்டிக் கதை இது தான். இது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தேவையான ஒன்றே. கதையைப் பார்க்கலாமா ?


சுற்றியிருக்கும் சவால்களைக் கண்டு பயந்த ஒரு மகனுக்கு, அவனது அப்பா இப்படி ஒரு சோதனையை வைத்தார். 

ஒரு வாளி நிறைய தண்ணீரையும், தண்ணீரால் நிரப்பப்பட்ட பலூனையும் அவனிடம் கொடுத்து, அந்த பலூனைத் தண்ணீரில் மிதக்கவிடச் சொன்னார். அந்தச் சிறுவனால், அதை அப்படி மிதக்க வைக்க  இயலவில்லை. சில நிமிடங்களில், "முடியவில்லை", என்று சொல்லி விட்டான்.

இப்போது தந்தை வேறொரு பலூனை எடுத்தார். அதில் காற்று நிரப்பி, அதை மறுபடியும் தண்ணீருக்குள் போட்டார். அது மேலே வந்து மிதந்தது. அவர் எத்தனை முறை அதை அழுத்தி உள்ளே விட்டாலும், அத்தனை முறையும் அது மேலே வந்தது.

இப்போது, அவர் அவன் பக்கம் திரும்பி அவனிடம் சொன்னார், "தண்ணீர் என்பது உன்னைச் சுற்றியிருக்கும் சவால்கள் போன்றது. காற்று என்பது முயற்சிகள் போன்றது. தண்ணீரை நிரப்பிய பலூன் எப்படி தண்ணீருக்குள் மூழ்குமோ அப்படியே, பிரச்சனைகள், சவால்களை மட்டுமே பற்றிய சிந்தனையும் உன்னை அந்த பிரச்சனைக்குள் மூழ்கடிக்கின்றன. 

இதுவே, உயிர்க்காற்று போன்ற முயற்சியால், தன்னம்பிக்கையால் உன் சிந்தனையை நிரப்பிப்பார். எல்லாம் சாத்தியமென்று தோன்றும்" என்று.

இன்று இந்தக் கதையை வாசிக்கும் உங்கள் பலூனில் என்ன இருக்கிறது ? தண்ணீரா ? காற்றா ?

சவால்களைப் பற்றிய பயமா ? இல்லை முயற்சியைப் பற்றிய சிந்தனையா ? 

எதுவாக இருப்பினும் இந்தப் புதிய வருடத்தில், முயற்சிகளால், தன்னம்பிக்கையால் மட்டுமே உங்கள் சிந்தனையை நிரப்புங்கள். 

அது உங்களுக்கு வெற்றியைத் தரட்டுமென்று வாழ்த்துகிறேன். நன்றி.

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post