Motivational Story in Tamil - ஆந்தை நாணயமும் ஏழை வியாபாரியும்

நாம் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் சமயங்களில் "எனக்கு மட்டும் ஏன் இப்படி ?", என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது. அந்தக் கேள்விக்கு இந்தக் கதை உங்களுக்கு பதிலளிக்கும். கதையை வாசிக்கலாமா ??To watch this as a video, please click the PLAY BUTTON below


ஒரு அழகான கிராமத்தில், ஏழை வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வீட்டில் தின்பண்டங்களைச் செய்து அதை ஒரு மிதிவண்டியில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாகச் சென்று விற்று வருவது தான் அவருடைய தொழில். 

அவர் என்னதான் உற்சாகமாகவும், நேர்மையாகவும் அந்தத் தொழிலைச் செய்தாலும், அவருக்கு அதன் மூலமாகப் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. பல நேரங்களில், முதல் போட்டு தின்பண்டங்கள் செய்வதற்குக் கூட, அவரிடம் பணம் இருக்காது. அப்படியென்றால், அவரது பொருளாதார நிலையை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

இப்படியிருக்க, ஒரு நாள் இரவு நேரத்தில், அவர் வியாபாரம் முடிந்து வந்து கொண்டிருக்கும்போது, வழியில் யாரோ இருவர் ரகசியம் பேசிக்கொள்வது, அவர் காதில் கேட்டது. பொதுவாகவே, நம்மில் பலருக்கு ரகசியத்தை ஒட்டுக் கேட்கும் ஆர்வம் உண்டல்லவா ? அது மாதிரியே அந்த வியாபாரிக்கும் ஒரு ஆர்வம்.

அதனால், 'அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் ?' என்பதை கவனித்துக் கேட்டார்.

"நம்ம கிராமத்துல, யாரோ ஒருத்தர் கிட்ட ஆந்தை நாணயம்னு ஒண்ணு இருக்கு", என்றார் ஒருவர்.

"ஆந்தை நாணயமா ? அப்படியென்றால் என்ன ?", என்றார் மற்றவர்.
ஆக மொத்தத்தில், வியாபாரியின் காதில் ஒன்று மட்டும் தெளிவாக விழுந்தது. அதாவது, அந்த ஊரில் யாரிடமோ ஆந்தைத் தலைப் பதிக்கப்பட்ட நாணயம் ஒன்று இருக்கிறது. அந்த நாணயத்தை பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சென்று காட்டி, நிலா தேவதையிடம் ஏதாவது கஷ்டத்தைக் கூறினால், நிலா தேவதை இறங்கி வந்து ஒரு பொக்கிஷத்தைத் தருவாள். இது மட்டும் அந்த வியாபாரிக்கு நன்றாகப் புரிந்தது. 

இப்படி அந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்ட பின்னர், அவருக்கு ஒரு  நப்பாசை. 'ஒருவேளை இதெல்லாம் உண்மையாக இருந்து, தனக்கு அந்த நாணயம் கிடைத்தால், தனது கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமே !!' என்று அவருக்குள் ஒரு எண்ணம். 

ஆதலால், அடுத்த நாளிலிருந்து, தனக்குக் கிடைக்கும் எல்லா நாணயங்களையும் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். ஆனால், அவர் நேரமோ !! என்னவோ !! அந்த ஆந்தை நாணயம் அவரது கைகளில் கிடைக்கவே இல்லை.

இப்படியே நாட்கள் கடந்து செல்ல, அந்த வியாபாரியின் பொருளாதார நிலைமை சிறிது சிறிதாகச் சரிய ஆரம்பித்தது. அவர் கொண்டு சென்ற தின்பண்டங்கள் வியாபாரமாகவில்லை. அதனால், மீண்டும் முதல் போட்டு தின்பண்டங்களைச் செய்ய முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருநாள் பயங்கரமான மழைக்கு மத்தியில், அவர் தனது மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டார். 
பதறிப்போனார் அந்த வியாபாரி. பின்னே !! தின்பண்டங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்துவிட்டன. ஜாடிகள் உடைந்துவிட்டன. மிதிவண்டியும் பழுதாகிவிட்டது. 

இனி இவற்றையெல்லாம் சீர் செய்யாமல், வியாபாரத்தை எப்படித் தொடர முடியும் ? சீராக்க வேண்டுமென்றால், அவரிடம் ஏது காசு?
"ஐயோ கடவுளே !! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் ? இப்படி அடுக்கடுக்காகப் பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், நான் என்னதான் செய்வேன் ?"  என்று மனமுடைந்து அழுதார்.

பின்னர், அந்த உடைந்த மிதிவண்டி, நொறுங்கிய ஜாடிகள், பிற பொருள்கள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, உடைந்த மனதுடன் தனது வீட்டுக்குச் சென்றார். 

வீட்டிலோ !!  மனைவி, குழந்தைகள் அனைவரும் பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் வியாபாரி, நடந்த எல்லாவற்றையும் கூறி, இதற்கு மேல் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையென்று அழுதார். 

அப்போது, இவற்ற்றையெல்லாம் கேட்ட அவரது சிறிய மகன் அடுப்பங்கரைக்கு சென்று ஒரு சிறிய மண் உண்டியலை எடுத்து வந்தான்.

"அப்பா, எதுவுமே இல்லைன்னு நினைக்காதீங்க. இதோ, இதுல நான் கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருக்கேன். விளையாடுறதுக்கு பொம்ம வாங்கணும்னு நெனச்சேன். ஆனா பரவால்ல. இத நீங்களே வச்சிக்கோங்க. இத வச்சி எதாவது செய்ங்க", என்று அன்போடு கூறி அந்த உண்டியலைக் கொடுத்தான். 

கண்ணீருடன் அந்த மண் உண்டியலை பெற்றுக்கொண்ட வியாபாரி, அதை உடைக்கத் தயங்கினார். ஆனால், அவருக்கு வேறு வழியே கிடையாது. அதனால், மனதை மிகவும் கல்லாக்கிக் கொண்டு அந்த உண்டியலை உடைத்தார். உண்டியலும் உடைப்பட்டது. அதிலிருந்த சில்லறைகள் எல்லாம் சிதறின.

"ஆந்தைநாணயம், ஆந்தை நாணயம்" , என்று கத்தினான் அவர் மகன்,

ஆம், அத்தனை நாள் அவர் தேடிக்கொண்டிருந்த ஆந்தை நாணயம், அவரது வீட்டிலேயே இருந்த சிறிய மண் உண்டியலில் தான் இருந்தது. அது அவருடைய நிலைமையையே மாற்றியது. 
சற்று சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே !! 

ஒரு வேளை அந்த வியாபாரிக்கு அடுக்கடுக்காக சில பிரச்சனைகள் வரவில்லையென்றால், நிச்சயமாக அந்த மண் உண்டியல் அவர் கண் முன்னே உடைக்கப்பட்டிருக்காது. நாணயமும் அவர் கண்ணுக்குத் தெரிந்திருக்காது. வேண்டுமென்றால், அந்தச் சிறுவன் தானாகவே தான் அதை உடைத்து விளையாட்டு பொம்மைகள் வாங்கியிருப்பான். அவ்வளவுதான்.

அதுபோல் தான், நமக்கு வரும் இந்தப் பிரச்சனைகளும், நாம் சந்திக்கும் இந்த சவால்களும் இல்லையென்றால், நமது பலத்தையே நம்மால் அறிய இயலாது போய்விடும். 

அதனால், இன்னொரு முறை "எனக்கு மட்டும் ஏன் இப்படி !!" என்று கேட்கும் முன்னர், நாம் அடுத்த கட்டத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்கள் மனதில் பதிய வைத்தால் போதும். பிரச்சனைகள் சவால்களாகத் தெரியும். நீங்கள் முன்னேறி விடுவீர்கள் என்று சொல்லி, இந்த கதையை முடிக்கிறேன். நன்றி.

Check these stories also from APPLEBOX

உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 

தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

This section in APPLEBOX is exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

In YOUTUBE, you can search for Applebox Motivational Stories, Kutty Stories Applebox and Kutty Kadhai Applebox. Both my channel and website has a good collection of motivational stories in Tamil. Those Stories include Stories of
Successful People in Tamil
Motivational Video in Tamil for Students
Motivational Video in Tamil for College Student
Moral Stories in Tamil and Kutty Stories.

To watch this as a video, please click the PLAY BUTTON below

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post