அபராஜிதா - A Rabindranath Tagore Story in Tamil


இந்தக் கதை மேற்கு வங்காளத்தை கதைக்களமாகக் கொண்ட ஒரு கதை. வரதட்சணைக்கு எதிரான கதை.

ரபீந்தரநாத் தாகூர் அவர்கள் எழுதிய அபராஜிதா. வங்காளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையை நான் உங்களுக்காகத் தமிழில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறேன்.

இதைப் படித்துவிட்டு, கல்யாணியின் தந்தை அன்று எடுத்த முடிவு சரியானதா என்பதை யோசித்து, எனக்கு பதிலகச் சொல்லுங்கள்.

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


கதையின் தொடக்கம்

அது  1916வது வருடம். சுதந்திரம் அடையாத இந்தியா.

கொல்கத்தா இரயில் நிலையத்தில் ஒரு இரயில் வண்டி நின்று கொண்டிருந்தது. அது

கொல்கத்தாவிலிருந்து ஹரித்வார் செல்லும் வண்டி. பொதுவாக ஹரித்துவாருக்குச் செல்லும் வயதானவர்களும் படிப்பு அல்லது வேலை காரணமாகப் பயணிப்பவர்களுமே அதில் ஏறுவார்கள்.

அன்று அந்த வண்டியில், அனுபம் என்னும் இளைஞன் தனது தாயுடன் ஏறினான். அவர்கள் தங்களுக்காகப் பதிவு செய்திருந்தது, ஒரு காரிடார் கோச் (corridor coach). அதாவது தனித்தனி அறைகளைக் கொண்ட கோச். இந்தக் காலத்தில் குபே அமைப்புகள் எப்படியிருக்கின்றனவோ, அதேபோலத் தான் அந்தக் காலத்து காரிடர் கோச் அமைப்பு இருக்கும். அதனால், காரிடர் கோச்சில் பயணிக்க டிக்கெட் விலையும் மிக அதிகம்.

ஆயினும், தனது தாயின் உடல்நிலை காரணமாக, அதிக விலை கொடுத்து அதில் பதிவு செய்திருந்தான் அனுபம். அவர்கள் இருவரும் தாங்கள் எடுத்து வந்திருந்த லக்கேஜ் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வசதியாக தங்களுக்கான இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்கள். 

இரயில் கிளம்புவதற்கு சில நிமிடங்களே மிச்சமிருந்தது. வெளியே ப்ளாட் ஃபார்மில், சில ஆங்கிலேயர்கள் தங்களது லெதர் பெட்டிகளுடன் நின்று பைப்பில் புகைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில், சில வியாபாரிகள், கல்லூரி மாணவர்களை வழியனுப்ப வந்த பெற்றோர்கள், ஹரித்வார்க்கு யாத்திரை செல்லும் முதியோர்களை வழியனுப்ப வந்த பிள்ளைகள் என பல்வேறு மனிதர்களை அனுபமால் பார்க்க முடிந்தது. 

அப்படி ஜன்னல் வழியாக அவன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ "இவ்வளவு மெதுவாக வந்தால் எப்படி? கொஞ்சம் சீக்கிரமாக வாருங்கள்"  என்று மெல்லிய குரலில் யாரோ சொல்வது  கேட்டது. ஆம் !! அந்தக் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.

"இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யாராக இருக்கும் ?" , என்று யோசித்தபடியே தன் இருக்கையிலிருந்து எட்டிப் பார்த்தான் அனுபம். அந்தக் குரலுக்குத் தக்கதான வயதில், யாரையும் அவனால் அங்கு காணமுடியவில்லை. ஆனாலும் அந்தக் குரலுக்குச் சொந்தமான முகத்தை எப்படியேனும் பார்த்துவிடவேண்டுமென்று அவனுக்குள் ஒரு ஆசை. தான் இருந்த இருக்கையிலிருந்து எழுந்திரித்து, அருகிலிருக்கும் கதவருகே சென்றான்.

பக்கத்து அறையில், மீண்டும் அந்தப் பெண்ணின் குரலைக் கேட்டது. ' ஓ! அப்படியெனில் அந்தப் பெண் இங்குதான் இருக்கிறாளா ?' என அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த அறையின் கதவு திறக்கப்பட்டு, அங்கிருந்து ஒரு பெண்ணும் அவள் பின்னே, இரண்டு சிறுமிகளும் வெளியே வந்தார்கள்.

அந்தப் பெண்ணிற்கு சுமார் இருபது வயதிருக்கலாம். நன்கு மடித்துவிடப்பட்ட கதர் புடவை அணிந்து கொண்டு, மிகவும் கம்பீரமாக இருந்தாள். அவள் பின்னால் வந்த சிறுமிகளுக்கு நிச்சயம் எட்டு வயதுக்கு மேலிருக்காது.

“எகஸ்கியூஸ் மீ. .. நாங்க ஏற வேண்டியது இந்த கோச் கிடையாது. இரயிலைத் தவற விட்டுவிடுவோமோன்ற பயத்துல, இதுல ஏறிட்டோம். உங்க செக்க்ஷன்ல, கொஞ்ச நேரம் மட்டும் எங்களுக்கு இடம் கொடுத்தா, அது எங்களுக்கு ஒரு பெரிய உதவியா இருக்கும். அடுத்த ஸ்டேஷன் வந்ததும், நாங்கள் இறங்கி எங்க செக்க்ஷன்ல  ஏறிக்குறோம். கேன் யூ ஹெல்ப் அஸ்?" 

அவள் அவனிடம் பேசும்போது, அனுபமுக்கு அவளுடைய குரலைத் தாண்டி அவள் கூறிய எந்த விஷயமுமே காதில் விழவில்லை. சிலை போல அவன் அப்படியே நின்றான். 

"எக்ஸ்கியூஸ் மீ .." , என மீண்டும் அவள் சொல்ல, "அவங்கள உள்ள வரச்சொல்லு அனுபம் “ என ஒரு குரல் கேட்டது. 

வேறுயாருமில்லை. அனுபமின் அம்மாவுடைய குரல்தான்.

"இந்த செக்க்ஷன் ரொம்பப் பெருசுதான். இங்க நாலு பேர் வரைக்கும் தாராளமா உட்காரலாம். நாங்க இரண்டு பேர் தானே இருக்கிகோம். அதனால, நீ உட்கார்ந்துக்கோ" என அந்தப் பெண்ணிற்கு அனுமதி அளித்தாள் அனுபமின் தாய் . 

இதைக்கேட்டதும், அந்த பெண்ணும் அவளுடன் வந்த சிறுமிகளும் தயங்கியபடியே உள்ளே சென்று ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டார்கள். 

"நாங்க ஹரித்வார் போறோம். நீங்க ?", அனுபமின் தாய் கேட்க, "இன்னும் மூனு நாலு ஸ்டேஷன்ல இறங்கிடுவோம்" என்றாள் அந்தப் பெண். 

"அவ்வளவுதானே ! அப்படீன்னா, இறங்குறவரை நீங்க இங்கேயே இருந்துக்கலாம். எதுக்கு இந்த சின்னப் பசங்கள வச்சுகிட்டு இங்கயும் அங்கயும் அலைஞ்சுட்டு ?" என அனுபமின் அம்மா சொல்ல, அந்தப் பெண் முதலில் தயங்கினாள். பின், அந்த சின்னக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்து விட்டு, "சரிம்மா. மிக்க நன்றி" என ஒப்புக் கொண்டாள். 

இத்தனையும் நடக்கும் சமயத்தில், அனுபம் தான் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த அந்தப் பெண், தன்னுடைய பையிலிருந்து ஏதோ ஒரு பத்திரிக்கையை எடுத்து அந்த சிறுமிகளுக்காக ஒரு கதையை வாசிக்கத் தொடங்கினாள். அனுபம், மீண்டும் அவளுடைய குரலால் ஈர்க்கப்பட்டு, சில நிமிடங்கள் கழித்து சுதாரித்துக் கொண்டான். சுயநினைவுக்கு வந்ததும், அவனுக்கே அவனை நினைத்து வெட்கமாக இருந்தது. 

'ச்சே! ஒரு பெண் உதவி கேட்டு வந்து உட்கார்ந்திருக்கும் போது, இப்படியா அவளை வேடிக்கை பார்ப்பது? என தன்னைத் தானே திட்டிக்கொண்டான். அதே நேரம், அடுத்த நிறுத்தமும் வந்து சேர்ந்தது. 

இன்னும் சிலர், இரயிலில் ஏறிக்கொண்டார்கள். அப்படிப் புதிதாக ஏறியவர்களில், இரண்டு ஆங்கிலேயர்கள் இவர்களின் அறைக்கு பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, " திஸ் இஸ் அட்ராஷியஸ்... இந்த கோச்சில் வந்து உட்கார, உங்களுக்கெல்லாம் யாரு அனுமதி கொடுத்தாங்க ? கீழ இறங்குங்க", என சத்தமிட்டார்கள்.

ஆம், அது சுதந்திரம் அடையாத இந்தியா அல்லவா !! அந்தகே காலத்தில், என்னதான் இந்திய நாட்டில், இந்திய மக்களின் உழைப்பில், இரயில் வண்டி ஓடினாலும், முதல் வகுப்பில் பயணிக்க இந்தியர்களுக்கு அனுமதிகிடையாது . மீறி அப்படிப் பயணிக்க வேண்டுமென்றால், பன்மடங்கு விலைகொடுத்துத் தான் டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். பன்மடங்கு என்றால், மிக மிக அதிகம். இந்தியர்கள் பயணிக்கக் கூடாது என்பதற்காகவே, அப்படியாக விலை உயர்த்தப்பட்டிருக்கும். அப்படி அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கினாலும், அவ்வப்போது இது மாதிரியான பிரச்சனைகளும் வரும். 

இந்நிலையில், அனுபமுக்கும் அவன் அம்மாவுக்கும், என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'அந்த ஆங்கிலேயரிடம் ஏதாவது பதில் கூறலாமா ? இல்லை இறங்கிவிடலாமா?' என அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண் திடீரென எழுந்துகொண்டு, அந்த ஆங்கிலேயர் இருவரையும் பார்த்து “உங்களிடம் இந்த சீட்டிற்கான டிக்கெட் இருக்கிறதா ?" எனக் கேட்டாள். 

“ வாட்? எங்களப் பாத்து எப்படி நீ இந்த கேள்விய கேக்கலாம்? இந்த இரயிலே எங்களோடது. அதுவும் இந்த முதல் வகுப்பு - எங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதுல ஏறிட்டு வாய் வேறயா ? நீங்க இப்போவே கீழ இறங்கியாகணும்" , என மிகவும் கோபமாகக் கூறினாள் அந்த வெள்ளைக்காரப் பெண்.

இந்தப் பெண்ணும் விடுவதாக இல்லை. “ஓ! அப்படீன்னா எதுக்காக உங்க அரசாங்கம் அந்த டிக்கெட்கள எங்களுக்கு விக்கிறாங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ? நீங்க தான் ஆயிரம் ரூல்ஸ் போட்டு, ட்ரீட்டீஸ் எல்லாம் சைன் பண்ணித் தானே, எங்க நாட்டையே அடிமையாக்கி வச்சிருக்கீங்க. நீங்க அந்த ரூல்சல்லாம் ஃபாலோ பண்ணமாட்டீங்களா ? 

உங்ககிட்ட ஒரு வேள, இந்த அறைக்கான டிக்கெட் இருந்தா சொல்லுங்க. நாங்க எல்லாரும் இப்பவே, இந்த நொடியே இங்கிருந்து வெளிய போறோம். இருக்கா? " எனக் கோபமாகக் கேட்டாள். அதுவும் ஆங்கிலத்தில்.

அந்த ஆங்கிலேயர்களுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. 'இதற்குமேல் இங்கிருந்தால், பிரச்சனை வந்துவிடும்' என்று அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிவிட்டனர். 

அனுபமிற்கும் அவன் அம்மாவிற்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 'இந்தப் பெண் எவ்வளவு தைரியமாக பேசுகிறாள். நமக்குக் கூட இந்த தைரியம் வரவில்லையே !! ' , என அவர்களுக்குத் தோன்றியது. அதே ஆச்சர்யத்துடன், அவர்கள் இருவரும் அவளுடைய பெயரைக் கேட்க, அவள் “கல்யாணி” எனக் கூறினாள். 

"கல்யாணி உன்னோட தைரியத்தப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஆனா, இந்த தைரியத்துக்கு உன்னோட படிப்பு தான் காரணம்னு நினைக்கிறேன். அந்த படிப்ப உனக்குக் கொடுத்த உங்க  அப்பாவத் தான் முதல்ல பாராட்டணும். சரி ! உங்க அப்பா யாரு ? உங்க ஊர் பேர் என்ன ?" , என்று அனுபமின் தாய் கேட்க, "என்னோட ஊர் கூக்ளி. அந்த ஊருல, சம்புநாத் சென் தான் என்னோட அப்பா" , என பதில் கூறினாள் கல்யாணி. 

“சம்புநாத் சென்"

இந்தப் பெயரைக் கேட்டதும், அனுபமும் அவனுடைய தாயும் அதிர்ச்சியடைந்து வைத்த கண் வாங்காமல், அவளையே பார்த்தார்கள்.

ஆம், இன்று எந்தவொரு தொடர்புமின்றி வாழும் இவர்களை காலம் ஒரு காலத்தில் இணைக்கவிருந்தது. அதுவும் சாதாரண இணைப்பா என்ன ! இப்போது அந்தக் காலத்து நிகழ்வுகள், அவர்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் சில,  அனுப்பமுக்கும் அவனது அம்மாவுக்கும் ஞாபகத்துக்கு வந்தன. 

அனுபம் மிகவும் சிறு வயதில் இருக்கும்போதே, அவனுடைய அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு, அதாவது அனுப்பமுக்கு 12 வயதான சமயத்திலிருந்தே, அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் துணையாக இருப்பது ஒரே ஒருவர்தான். அது அவனுடைய அம்மாவின் அண்ணனான அஜித் என்பவர். இந்த அஜித் மாமா சொல்வதைத்தான் அனுபம் எப்போதுமே கேட்க வேண்டியிருக்கும். 

இது இப்படியிருக்க, அனுபமிற்கு ஒரு 23 வயது ஆன போது, அவனுக்குத் திருமண ஏற்பாடு செய்து,பெண் தேட ஆரம்பித்தார்கள். அந்தக் காலத்தில், புகைப்படங்களைப் பரிமாறிக்கொள்ளும்

வழக்கம் கிடையாது. மணப்பெண்ணுக்குத் தனக்கு கணவராக வரப்போகிறவர் குறித்து எந்தவொரு தகவலும் கூடச் சொல்லப்படாது. மணமகனுக்கும் கூட இப்படித்தான். அதிக பட்சம் பெண்ணுடைய குடும்பம் பற்றிச் சொல்லப்படும் அவ்வளவுதான்.

அதுபோலவே அனுப்பமுக்கு "இந்த மாதிரி சம்புநாத் சென் என்று ஒருவர் இருக்கிறார். அவருடைய பெண்ணைத்தான் உனக்குத் திருமணம் செய்து வைக்கப்போகிறோம்" , என்ற தகவல் மட்டும் சொல்லப்பட்டது. அஜித் மாமாவின் தலைமையில் தான் இந்த அனைத்து திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன. மற்றபடி கணவர் இறந்து விட்டார் என்ற காரணத்திற்காக அவனுடைய அம்மாவைக்கூட அதிகமாக இந்த திருமண காரியங்களில் பங்கேற்க விடவில்லை. 

இப்படியே, திருமணத்திற்கான நாளும் வந்தது. மேற்கு வங்கத்தில் திருமணச் சடங்கு என்பது 2 நாட்கள் நடைபெறும். முதல் நாள் துர்கா பூஜை, அடுத்த நாள் திருமணம். அதுபோல, முந்தைய நாள் துர்கா பூஜை முடிந்தவுடன் அஜித் மாமா, சம்புநாத் சென்னை வந்து சந்தித்தார்." உங்க பொண்ணுக்கு நகை வாங்கியிருப்பீங்கயில்ல. அதையெல்லாம் தாங்க. நான் அளவு பார்க்கணும்" , எனக் கேட்டார். 

சம்புநாத் சென்னுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. 'இது என்ன பழக்கம்? நம் மீது நம்பிக்கையில்லையா? இல்லை நம்மை அவமானப்படுத்துகிறார்களா ? இவை அனைத்தையும் விட, ஒரு பெண்ணை திருமணம் செய்யும்போது, அங்கு அந்தப் பெண்ணுக்குத் தான் முக்கியத்துவம் தரவேண்டும். இது என்ன நகைக்கு முக்கியத்துவம் தருவது ?' , இந்த மாதிரி பல கேள்விகள் அவருடைய மனதில் எழுந்தன. 

ஆனாலும், "அத்தனை பேர்முன்னிலையிலும், நகையைக் கொடு" என்று கேட்கும் போது, கொடுக்காமலா இருக்க முடியும் ? ஆதலால், அவருடைய பெண்ணுக்காக வாங்கி வைத்திருந்த அத்தனை நகைகளையும் அஜித்திடம் தந்தார் சம்புநாத் சென். அஜித்தும் தன்னுடைய சார்பில் தான் கூட்டிக்கொண்டு வந்திருந்த இரு  நபரை வைத்து, நகைகள் அத்தனையையும் உரசிப் பார்த்தார். அந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து எடைப்பார்க்கும் போதும், உரசிப்பார்க்கும் போதும் சம்புநாத் சென்னின் பார்வை முழுவதும் அனுபம் மேலே தான் இருந்தது.

'இந்த அனுபம் என்னதான் நினைக்கிறான்? என்னதான் சொல்ல வருகிறான்? இந்த மாதிரி நகையை வாங்கி உரசிப்பார்ப்பதில் அனுபமிற்கும் சம்மதம் இருக்கிறதா? இல்லையெனில், இவன் ஏன் இதை எதிர்த்துப் பேசவேயில்லை ?' , என பல கேள்விகளுடன் அவனுடைய முகத்தையையே பார்த்தார் அவர். 

ஆனால், அனுபம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அங்கு நடப்பதெல்லாம் தவறு என அவனுக்கும் தோன்றிற்று. ஆனால், தன்னுடைய அப்பா இறந்த பின் தன்னைப் பார்த்து பார்த்து வளர்த்த மாமாவை எதிர்த்துப்பேச, அன்று அவனுக்கு மனம் வரவில்லை. 

கடைசியாக அந்த நகைகள் அனைத்தும் உரசிப் பார்த்து முடிக்கப் பெற்றன. அஜித்துடைய முகத்தில் பயங்கர சந்தோசம். அதே திருப்தியுடன், "சந்தோஷம் சம்புநாத் ! நகையெல்லாம் மிகச்சரியாக இருக்கு. வாங்க நம்ம இப்போ பூஜையத் தொடங்கலாம்" என்று சொன்னார். 

சம்புநாத் சென்னோ, அவரிடம் "நம்ம எல்லோரும் முதல்ல சாப்பிடலாம். சாப்பிட்ட பின்னாடி  பூஜையத் தொடங்கலாம்" என்று கூறிவிட்டு எல்லோரையும் சாப்பிட அழைத்தார். அனைவரும் ஆச்சரியத்தோடு சாப்பிடச் சென்றார்கள்.

விருந்து முடிந்தவுடன் சம்புநாத் சிங் அனைவர் முன்னிலையிலும் வந்து நின்று, “இந்தத் திருமணம் இனிமேல் நடக்காது” என்று கூறினார். அந்தக் காலத்தைப் பொருத்தவரை ஒரு பெண்ணுக்கு திருமணம் நின்றுபோவது என்பது மிகப்  பெரிய விஷயம். அதிலும், அந்த பெண்ணின் தந்தையே நிறுத்துவது என்பது மிக அபூர்வம்.

அதனால், ஆச்சர்யமாக எல்லோரும் அவரையே பார்த்தார்கள். ஆனால் சம்புநாத் சென் “எனக்கு என்னோட பொண்ணுதான் முக்கியம். அவளுக்காக எவ்வளவு நகைன்னாலும் தர நான் தயார். ஆனா, இன்னைக்கு நான் எங்க அவங்கள ஏமாத்திருவேனோன்னு இந்த நகையையெல்லாம் உரசிப் பார்த்தாங்க. அதேபோல நாளைக்கு என் பெண்ணையும் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டா, நான் என்ன செய்வேன் ? இந்த திருமணம் நிற்பதால வர்ற  பாதிப்ப விட, நடந்தா வர்ற பாதிப்பு இரண்டு மடங்கு. எனக்கு அது வேண்டாம். எல்லோரும் கிளம்புங்க. நன்றி " என்றுக் கூறி, அனைவரையும் அனுப்பி வைத்தார். 

ஊர்மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக்கொண்டார்கள். ஆனால், சம்புநாத் சென் எதையுமே தன்னுடைய காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 

நேராகச் சென்று தன்னுடைய பெண்ணை சந்தித்தார். அவள் கையைப் பிடித்துக் கொண்டு "என்னை மன்னிச்சிடு கல்யாணி. என்ன மன்னிச்சுடு. இன்னைக்கு இந்தத் திருமணம் நடந்திருந்தா நிச்சயம் உன்னோட வாழ்க்கை நல்லாருக்காது.

நானும் அந்த நகையை எடை போடுற ஒவ்வொரு நிமிடமும், அந்த மாப்பிள்ளையின் கண்களையே பார்த்துக்கிட்டிருந்தேன். ஒரு வார்த்தையாச்சும் சொல்லி அவர் அத தடுக்கமாட்டாரான்னு. ஆனா, அவர்  வாயிலேர்ந்து ஒருவார்த்த கூட வரல. உனக்காகவோ, எனக்காகவோ, அங்க நடந்தத சுட்டிக் காட்டியோ, அவர்  ஒரு வார்த்தையும் பேசல. இப்படிப்பட்டவருக்கு உன்னக் கொடுத்தா, உன் வாழ்க்கையில எந்த பிரச்சன வந்தாலும், அவர் உனக்குத் துணையா நிக்க மாட்டாரு. உனக்காகப் பேசமாட்டாரு. அப்படிப்பட்ட வரன் உனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்" என்று கல்யாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு  அழுதார்.

கல்யாணி ஒன்றுமே சொல்லாது நின்றாள். திருமணக் கோலத்தில் நின்ற அவளது கண்கள் கலங்கியிருந்தன. உண்மையில், அவளுக்கு நிறைய படிக்க வேண்டுமேன்று தான் ஆசை. ஆனால், அவளது அப்பா ஒரு வரன் கொண்டுவந்த போது, அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, அதற்கு சம்மதித்தாள். ஆனால், திருமணம் நெருங்க நெருங்க, மற்ற பெண்களைப் போல பல கனவுகளுடன் திருமண கோலத்தில் காத்துக்கொண்டும் இருந்தாள். 

அந்த சமயத்தில் நடந்த இந்த சம்பவம், அவளை மிகவும் பாதித்தது. அதன்பின், அவள் உட்கார்ந்து அழுதாள். அடுத்த சில நாட்கள் என்பது அவளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. அவளைச் சந்திக்கிறவர்கள்

யாவரும் அந்த நின்றுபோன அந்தத் திருமணத்தைப் பற்றியும், அடுத்து அவளுக்கு ஏதாவது வரன் வந்ததா என்பதையுமே கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில், கல்யாணிக்கு கோபமும் வெறுப்பும் வந்தது. ஆனால், அவள் அதையெல்லாம் வேறொரு பக்கத்தில் திருப்பினாள். 

நேராக அவள் அப்பாவிடம் சென்று, "நான் மேற்கொண்டு படிக்கணும். வெளியூர் போய் படிக்கணும். எனக்கு அனுமதி தருவீங்களா ?" என்று கேட்டாள். சம்புநாத் சென் எந்த தடையும் கூறாமல் தன்னுடையப் பெண்ணை படிப்பதற்காக அனுப்பி வைத்தார். 

கல்யாணி தனது மேற்படிப்பைப் படித்து முடித்தாள். ஓரிடத்தில் வேலைக்கும் சேர்ந்தாள் அவள் வேலைக்குச் சேர்ந்த இடம் ஒரு பள்ளிக்கூடம். ஆதரவற்ற சிறு பெண்களுக்காக நடத்தப்படும் பள்ளிக்கூடம். அவள் அங்கிருந்த சிறுமிகளைத் தன்னுடைய பெண்களாகவே நினைத்து, அவர்களுக்காக உழைக்க ஆரம்பித்தாள். அவளுடைய வாழ்க்கை என்பது வேறோரு பாதையில் மிக அழகாக நகர ஆரம்பித்தது. இப்போதும் அந்த சிறுமிகளுள் இருவரைக் கூட்டிக்கொண்டு தான், அந்த இரயில் வண்டியில் ஏறியிருந்தாள். 

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த அனைத்துசம்பவங்களும் ஞாபகத்திற்கு வரவும், அனுபமின் அம்மா கல்யாணியின் கையைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்ட்டார். 

கல்யாணியோ மிகவும் தெளிவாக “நீங்க என்கிட்ட மன்னிப்பு கேக்குறதுக்கு இது ஒன்றும் இரண்டு குடும்பத்திற்கு நடுவில் உள்ள பிரச்சனை கிடையாது. சமூகப் பிரச்சனை. நான் அன்னைக்கு அந்தப் பிரச்சனைய சந்தித்ததால தான், இன்னைக்கு இவ்வளவு படிச்சிருக்கேன். வேலை பாக்குறேன். பிரச்சனைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்குறேன். ஆதனால, நீங்கள் கவலைப்பட வேண்டாம்மா. எல்லாம் நல்லதுத்துக்கே" , என்றாள்.

அதேசமயம் அடுத்த இரயில் நிலையமும் வரவே, அவள் இறங்கவும் வேண்டிவந்தது. அவள் இறங்கிவிட்டாள்.

ஆனால், அனுபமின் மனதில் தான் பாரம் ஏற ஆரம்பித்தது. அன்றைக்கு அஜித் மாமாவைத் தட்டிக்கேட்காதது, எத்தனை பெரிய தவறு என்பதை அவன் உணர்ந்தான். 

அந்தப் பிரயாணத்திலிருந்து சில நாட்களுக்குப் பிறகு, அவன் மீண்டும் கல்யாணியை சந்தித்ததாகவும், அவளுக்கு ஒரு நல்ல நண்பனாகப் பழக ஆரம்பித்ததாகவும், அந்த நட்பு காதலாக மாறி எப்போதும், எல்லா இடத்திலும் பேசத் தயங்கும் அனுபம், ஒருநாள் கல்யாணியிடம் தயக்கத்தை உடைத்து தன்னுடைய காதலைச் சொன்னதாகவும் இந்தக் கதை நகர்கிறது. 

முடிவில் கல்யாணி அனுபமின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் "நான் இனி திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை. இந்தக் குழந்தைகளுக்காகவே வாழப்போகிறேன்" என்று கூறியதாக ரபீந்தரநாத் தாகூர் இந்தக் கதையை முடித்திருக்கிறார்.

ஆனால், என்னைப் பொருத்தவரை, 'அனுபமின் காதலை ஏற்றுக்கொள்வதா ? வேண்டாமா ?' என்பதை நீங்களோ, நானோ, இல்லை தாகூரோ முடிவு செய்ய முடியாது. அதை கல்யாணிதான் முடிவு செய்ய வேண்டும். கல்யாணிக்கு மட்டும்தான் அந்த உரிமையிருக்கிறது என்று சொல்லி நான் இந்தக் கதையை முடிக்கிறேன்.

இந்த ஒட்டுமொத்த கதையிலும், என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் - சம்புநாத் சென். ஏனெனில், தன்னுடைய கௌரவத்தைப் பற்றியோ, இந்த சமூகம் தன்னைப்பற்றி என்ன நினைக்கும் என்பது பற்றியோ அவர் யோசித்திருந்தால், அவர் அந்த தைரியமான முடிவை எடுத்திருக்கவே மாட்டார். இந்த மாதிரியான ஒரு கதை எழுதப்பட்டு 100 வருடங்களுக்குப் பின்பும் கூட, அதாவது இப்போதும் கூட, இந்த மாதிரியான ஒரு முடிவை எடுக்க, பலரும் தயங்கத்தான் செய்கிறார்கள். 

இதற்கு முக்கியமான காரணம், நாம். ஆம், நாம் தான். சமூகமாகிய நாம் தான். ஆதலால், இன்னொரு முறை ஒரு சமூக அநீதியின்போதோ, ஒரு மதிப்பு வாய்ந்த காரணத்தின் அடிப்படையிலோ, ஒரு திருமணம்

நிறுத்தப்படும்போது, அவர்களுக்கு ஆதரவு தரவில்லையென்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் , அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களின் மனதைப் புண்படுத்தாமலிருக்கவாவது நாம் முயற்சி செய்ய வேண்டுமென்பது எனது வேண்டுகோள்.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post