யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 14

 "உங்க ரூம் யாழினிய, ஹாஸ்டல் வார்டன் கீழே வரச் சொன்னாங்க. அவளப் பார்க்க யாரோ வந்திருக்காங்களாம்" , ரூம் வாசலில் நின்றுகொண்டு, எட்டிப்பார்த்தபடியே அந்தப் பெண் சொல்ல, யாழினியை உலுக்கி எழுப்பினாள், அவளது தோழி.

அசந்து தூங்கிக்கொண்டிருந்த யாழினி, தனது படுக்கையில் புரண்டபடியே, கண்களைக் கீற்றுபோலத் திறந்துகொண்டு, "ம்ம்ம். என்னாச்சு ? டைம் என்ன ?" என்றாள். 

"என்ன மேடம், இன்னும் தூக்கம் போகலையா ? நான் வெளிய போயிட்டுத் திரும்பி வந்தப்போ, மணி நாலு. நீ அப்போவே தூங்கிட்டுதான் இருந்தே. இப்போ ஏழாகுது. 

முதல்ல முகத்தைக் கழுவு. உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்களாம். வார்டன் ஸ்வீட்டிகிட்ட சொல்லியனுப்பிருக்காங்க. முகத்தைக் கழுவிட்டுக் கிளம்பு ", என்றாள் அவளது தோழி.

அப்பொழுதுதான், தன்னிலை வந்தவள் போலப் பதறி எழுந்து கொண்டாள், யாழினி.

'ஒருவேளை மணாளனாக இருக்குமோ !! அவனது அலைபேசி அழைப்பை ஏற்கவில்லையென்றதும் நேரே ஹாஸ்டெலுக்கே வந்து விட்டானோ !!' , என்று நினைத்துக்கொண்டு, வேகமாகத் தனது அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.

அது ஒரு மகளிர் விடுதியென்பதால், ஆண்கள் யாருக்கும் உள்ளே வர அனுமதி கிடையாது. அப்பாவாக இருந்தாலும் சரி, தாத்தாவாக இருந்தாலும் சரி, மெயின் கேட் அருகில் தான் காத்திருக்க வேண்டும். வாசலில் வாட்ச்மேன் அமரும் இடத்தில், அதற்கெனவே ஒரு ஸ்பெஷல் பென்ச் கூடப்  போடப்பட்டிருக்கும்.யாழினி இருந்த ரூமின் ஜன்னல் வழியாகப் பார்த்தால், அந்த இடம் நன்றாகவே தெரியும். 

யாழினி நினைத்தது சரியாகத்தான் இருந்தது. மணாளன்தான் அங்கு நின்றுகொண்டிருந்தான். 

'பரவாயில்லை. நம்மைத் தேடி இங்குவரை வந்துவிட்டானே' , என்று மனதின் ஒரு ஓரம் மகிழ்ந்தாலும் , 'ஏன் இந்த அற்ப மகிழ்ச்சி பெண்ணே ?? ஒரு நொடி, அவன் தாத்தா சொன்னதை சிந்தித்துப் பார். அவர் சொன்ன அந்த வார்த்தைகளையெல்லாம்  கேட்டபின், மானமுள்ள எந்தப் பெண்ணாவது அவனைச் சந்திப்பாளா ? கீழே போகாதே' , என்று இன்னொரு மனம் தடைபோட்டது. 

மறுபடியும் எட்டிப் பார்த்தாள். அவனது முகம் எப்பொழுதும்போல் இல்லாது, மிகுதியாக வாடிப்போய் இருந்தது. அது யாழினிக்கு வருத்தத்தை அளித்தது. அவன்மீது ஒரு கரிசனையையும் ஏற்படுத்தியது. 

வேகமாக பாத்ரூமுக்குள் சென்று, முகத்தை அலம்பிக்கொண்டு, கீழே செல்லத் தயாரானாள். அவனது தாத்தாவின் சொற்கள், மறுபடியும் மறுபடியும் அவளது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. இருந்தாலும், தேடி வந்தவனை அவமதித்து அனுப்ப, அவளது மனம் இடம் தரவில்லை. 

விரைந்து சென்று, அவன் முன்னால் போய் நின்றாள்.

"யாழினி. ஐ ஆம் சாரி பார் எவரித்திங். எல்லாமே, ஒரு குழப்பத்தில் நடந்துவிட்டது. நம்ம பேசினால், எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்" , என்றான்.

யாழினி, அவனது முகத்தைப் பார்க்கவேயில்லை. குனிந்துகொண்டே, "சாரி மணாளன். தேடி வந்தவரை அவமானப்படுத்த வேண்டாமேன்னு மட்டும்தான் கீழே வந்தேன். உங்களுக்கும் எனக்கும் நிச்சயமாக சரிப்பட்டு வராது. 

ஒருவேளை இந்த உறவு தொடர்ந்தால்கூட, அது கல்யாணத்தில் போய் முடியாது. காதல் கைகூடாது என்று தெரிந்தும்கூட அதைத் தொடரும் அளவுக்கு, நானும் தரம் கெட்டுப் போய்விடவில்லை" , என்றாள்.

"என்ன பேச்சு இது, யாழினி ? கொஞ்சம் நிதானமாக இரு. நான் உன்கிட்ட சில நிமிஷம் தனியாகப் பேசணும்" 

"சாரி மணாளன். வி ஆர் டன். மேலப் பேச ஒண்ணுமேயில்லை. விட்ருங்க" , என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குமேல் எதுவும் பேசாமல், திரும்பிச் சென்றான் மணாளன்.

யாழினியின் கண்களில், நீர் பெருக்கெடுத்து வழிந்தது. அழுதுகொண்டே, படியேறித் தனது அறைக்கு வந்துவிட்டு, படுக்கையில் படுத்து தேம்பித் தேம்பி அழுதாள்.

"என்ன ஆச்சு ?" , என்று ஒரு தோழி கேட்க "அவளைத் தனியாக விடு. லெட் ஹெர் க்ரை அலோன். சில நேரங்களில், அழுவதுகூட ஒரு விதமான ஆறுதலைத் தரும்" ,என்று அவளைத் தடுத்து யாழினியைத் தனிமையில் விட்டாள், இன்னொருத்தி.

அழுதுகொண்டிருந்த யாழினியை இருகரம் நீட்டி அழைத்து, அணைத்துக்கொண்டது தலையணை. 

அதற்குத்தான், அனைவரையும்விட மிக நன்றாகத் தெரியும் காதலின் வேதனை. ஏனெனில், தலையணைகள் இது மாதிரி பல காதல்களையும் கண்ணீரையும் கண்டிருக்குமல்லவா !!

மறுநாள், அலுவலகத்திற்குச் சென்றதும் அலுவலக வேலையில் வழக்கத்தைவிட கவனம் காட்டினாள், யாழினி. சுஜியிடம்கூட, அதிகம் பேசவில்லை. பெயருக்கு , "கோயில் பிரயாணமெல்லாம் சௌகரியம்தானா ? " என்று கேட்டுக் கொண்டாள். 'எங்கே அதிகம் பேசினால், அழுதுவிடுவோமோ !! ' , என்ற பயம் அவளுக்கு.

அதிசயமாக, சுஜியும் அதைக் கண்டுகொள்ளவில்லை. விடுப்பு எடுத்துவிட்டுச் சென்று வந்திருந்ததால், மிகவும் அதிகமான வேலைகள் பாக்கியிருந்தன, அவளுக்கு. அத்துடன் ஒரு பெரிய ப்ராஜெக்ட் டிக்கெட்டும் அவள் தலையில் வந்து விழவே, அவற்றை முடிப்பதிலேயே அவள் மும்முரமாக இருந்தாள்.

யாழினிக்கோ, என்னதான் முயற்சி செய்தாலும், தனது துக்கத்தை அடக்க முடியவில்லை. அவ்வப்போது ரெஸ்ட் ரூமுக்குச் சென்று, அழுதுவிட்டு வந்தாள்.

ஒரு கட்டத்தில், தனது மனதிலிருந்த பாரத்தை எப்படியாவது சுஜியிடம் சொல்லிவிட வேண்டுமென்று தோன்றியது. சுஜியின் இருக்கைக்குச் சென்று, "இன்னிக்கு மத்தியானம், ஃபுட் கோர்ட் போய் லஞ்ச் சாப்பிடலாமா ? " என்று யாழினி கேட்க, 

"சாரி டீ. செவ் ஒண் டிக்கெட். சீக்கிரம் முடிக்கணும். முடிச்சிட்டேன்னா, ஈவினிங் போகலாம்" , என்றாள் மற்றவள். 

சில நேரங்கள் இப்படித்தான் அமைந்துவிடும். மனம் முழுவதும் பாரம் அழுத்தினாலும், யாருடனும் பகிர வாய்ப்பு கிடைக்காது. எந்த வேலையிலும் கவனம் செலுத்தவும் முடியாது. பிரச்சனைகள் மண்டைக்குள் புகுந்து உறுத்திக் கொண்டிருக்கும். ஆனால், என்ன செய்வது ? இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொள்வதிலும், சமாளிப்பதிலும்தான் வாழ்க்கையே இருக்கிறது. 

அன்றைய தினம், யாழினிக்கு அப்படியாகிவிட, தனது இருக்கையில் உட்கார்ந்து, எதையெல்லாமோ சிந்தித்துக் கொண்டும் சுஜிக்காகக் காத்துக் கொண்டும் இருந்தாள், அவள்.

"சாரி யாழி. இப்போ தான் அந்த டிக்கெட்டை ஓரளவுக்கு சால்வ் பண்ணிருக்கேன். நீ ஏதோ பேசனும்னு சொன்னியே. புட் கோர்ட்டுக்குப் போகலாமா ? " என்று சுஜி வந்து கேட்டபொழுது, மணி ஐந்திருக்கும். 

அதற்காகவே காத்திருந்தவளைப் போல, உடனடியாகத் தனது பர்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பினாள், யாழினி.

******

"அப்போ.. தானே வலிய வந்து உன்கிட்ட பேச வந்தவர நீ விரட்டியிருக்க. அப்படித் தானே ? " , புட் கோர்ட்டுக்கு வந்து, மூலையில் கிடந்த ஒரு டேபிளைப் பிடித்துக் கொண்டு, நடந்த எல்லாவற்றையும் யாழினி சொல்லி முடிக்க, அவளிடம் கேட்டாள் சுஜி. 

"இவ்வளவு நேரம் நான் பேசினதுல, உனக்கு இது மட்டும்தான் புரிஞ்சுதா ?"

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனாலும், நான் சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையே !!" 

யாழினி அவளைக் கோபமாகப் பார்க்க, சுஜியும் பதிலுக்கு முரைத்துக் கொண்டு, "என்னடி ?  என்ன ? பண்ணுற தப்பு எல்லாத்தையும் பண்ணிட்டு, என்னை முரைக்கிரையா ?" , என்றாள்.

பெருமூச்சு விட்டுக்கொண்டாள், யாழினி.

"காதல்ல அதிகமாத் தேவைப்படுறது அன்பு இல்லை யாழினி. நிதானமும் நம்பிக்கையும். அது ரெண்டுமே இல்லேன்னா, அது என்ன மாதிரியான காதல் ?

கொஞ்சம் நிதானிச்சிருந்தா, அவர் என்ன சொல்ல வந்தார்னு நீ கேட்டிருக்கலாம். அவர் பக்கம் இருக்குறது, சரி செய்வது மாதிரியான பிரச்னையென்றால், அழகாக சரி செய்திருக்கலாம். அதை விட்டுட்டு, இப்படி நீயும் அழுது, அவரையும் கஷ்டப்படுத்தி....."

அவள் சொல்வதில் ஒரு உறுதியான நியாயம் இருக்கிறதென்று தோன்றினாலும், தான் செய்தது 'சரி' என்றே  தோன்றியது யாழினிக்கு.

"அப்படியில்லை சுஜி. இது ஒத்து வராது. அவங்க தாத்தாவுக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்கலை. இதில் திருமணமென்று வருகிறபொழுது பலவற்றையும் சிந்திக்க வேண்டியுள்ளது. எனது அம்மா, அப்பாவின் கதை, அது இதுவென்று எல்லாம் வெளியே வரும்பொழுது, அது ஒரு பெரிய குழப்பத்தையே ஏற்படுத்திவிடும்.

திருமணமே நடக்காது என்கிறபொழுது, அவருடன் எனக்கென்ன பேச்சு ? நானென்ன டைம் பாஸுக்கா காதலித்தேன் ? மேலும், அங்கு நடந்த அவமானத்திற்குப் பிறகு, அவருடைய முகத்தைப் பார்க்கக்கூட எனக்கு தைரியமில்லை " , என்று தனது விழியோரமாகக் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடியே அவள் சொல்லிக் கொண்டிருக்க, அதே நேரத்தில், அவளது அலைபேசியும் ஒலித்தது.

"யாழி. அம்மா பேசுறேன். எப்படிடா இருக்கே" , மனதளவில் அழுதுகொண்டிருந்த யாழினி, தனது அம்மாவின் குரல் கேட்டதும், உடைந்தே விட்டாள். 

அவளது விசும்பல் சத்தம், எதிர்முனையிலிருக்கும் வானதிக்கு கேட்டுவிடாதபடி, போனைப் பிடுங்கி, தான் பேச ஆரம்பித்தாள், சுஜி.

"சாரி, ஆன்டி. யாழினி சாப்பிட்டுட்டு இருக்கா. அஞ்சு நிமிஷத்துல முடிச்சிருவா. நீங்க சொல்லுங்க, எப்படி இருக்கீங்க" , என்று ஆரம்பித்து அவள் பேசிக்கொண்டிருக்க, அந்த சில நிமிடங்களில், தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டாள், யாழினி. 

சுஜி, தான் பேசிமுடித்துவிட்டு போனை யாழினியிடம் கொடுத்தாள். 

"யாழிம்மா, இந்த வெள்ளிக்கிழமை அம்மா சென்னைக்கு வர்றேன். எல்லாம் நல்ல விஷயமாத்தான். சுஜிகிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்கேன். அவ வீட்டுலதான் தங்கவும் போறேன். நீ மறக்காம வர்ற வெள்ளிக்கிழமை, உன்னுடைய சில ட்ரெஸ்சையெல்லாம் எடுத்துட்டு, சுஜி வீட்டுக்கு வந்துரு" ,என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

குழப்பத்தோடு, 'என்ன ?' என்பதுபோல சுஜியைப் பார்த்தாள், யாழினி.

"அது வந்து யாழி.. உன்னைப் பெண்பார்க்க, யாரோ வரப்போறாங்களாம். போனமுறை நீ ஊருக்குப் போயிருந்தப்பவே, ஆன்டி உங்கிட்ட சொல்லியிருந்தாங்களாமே. 

அவங்களுக்கு ஏற்கனவே உன்னைப் பிடிச்சிருக்காம். சும்மா பார்மாலிட்டிக்குத் தான், இந்த சந்திப்பு. மற்றபடி, உனக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா, இங்கவச்சே சின்னதாக ஒரு நிச்சியதார்தம்கூட..." , சுஜி ஒரு குண்டைத் தூக்கிப் போட, இடிந்துபோய் உட்கார்ந்தாள், யாழினி.

 To be continued..


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post