யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 15


 ஹாஸ்டல் அறைக்கு வந்ததும், முதல் வேலையாகத் தனது கட்டிலில் படுத்துக்கொண்டு சிணுங்க ஆரம்பித்தாள், யாழினி. அவளது அறையிலிருந்த மற்றவர்களுக்கு, அன்று பார்த்து 'இரவு ஷிஃப்டாக' அமையவே, அவள் அழுவதற்கு அது வசதியாகிப் போனது.  

சிணுங்கலில் ஆரம்பித்து, மூச்சுத் திணறும் வகையில் தொடர்ந்தது அவள் அழுகை.

'இந்த மணாளன் என் வாழ்வில் வரும் வரையில், எவ்வளவு நிம்மதியாக இருந்தது என்னுடைய வாழ்க்கை !! திடீரென்று ஒருநாள் வந்தான். எதிர்பாராத அளவுக்கு மகிழ்ச்சியைத் தந்தான். எதிர்காலம் நன்றாக இருக்குமென்ற நம்பிக்கையைத் தந்தான். 

இருட்டில் வாழ்ந்தவனுக்கு வெளிச்சத்தைத் தந்து, பின்னர் காரிருளில் அவனை விட்டுச் சென்றது போல, என்னைவிட்டு விலகிச் சென்றானே !! அவனை மறக்கவும் முடியாமல், இந்தக் காதலைத் தொடரவும் மனமில்லாமல், இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறேனே !!

இல்லையில்லை. அவன்மீது எந்தத் தவறும் இல்லை. என்மீதுதான் தவறு. எனக்கெதுக்கு இந்தக் காதல் கத்திரிக்காயெல்லாம் ?!'

ஏங்கியபடியே, ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தாள்.

முந்தைய நாள், அவன் வந்து நின்ற அந்த இடத்தைப் பார்த்தபொழுது, கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. எப்பொழுதும் கம்பீரமாகப் பேசும் அவன், அன்று எந்த அளவுக்கு இறங்கிப் பேசினானே !! அவள் கையெடுத்துக் கும்பிட்டபோதும்கூட, ஏதும் பேசாமல், மௌனமாகத் திரும்பினானே !! அவனது முகம், அவள் கண்முன்னே வந்து வந்து போனது.

போனை எடுத்து, அவன் எண்ணைத் தேடினாள். இருமனதோடு, அவனுக்கு டயல் செய்தாள். எதிர்முனையில் யாரும் எடுக்கவில்லை. 'ஒருவேளை கோபத்தில் இருப்பானாக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டு, மறுபடியும் அழைத்தாள். அப்பொழுதும், அந்த முனையிலிருந்து பதிலில்லை.

அடுத்து ஒருமுறை அவள் அழைக்கும் முன்பே, போனின் ஒளித்திரை மின்னியது. விழிகள் விரியத் திரையைப் பார்த்தாள், யாழினி. அது அவள் அம்மா, வானதியிடமிருந்து வந்த அழைப்பு.

"யாழி, சுஜி எல்லாத்தையும் சொன்னாளா ?"

"ம்ம்ம்ம்"

"ஏன்டா ? என்ன ஆச்சு ? குரல் ஒரு மாதிரி இருக்கு !!"

"ஒண்ணும் இல்லம்மா. அப்புறம்.." , அவள் ஏதோ சொல்ல முயற்சிக்க, அதன் முன்னரே பேசத் தொடங்கினாள், வானதி.

"நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குறேன், யாழி. அழகு மாமா, இன்னைக்கு அந்தப் பையனோட வீட்டிலிருந்து சிலபேரைக் கூட்டிட்டு வந்திருந்தார். கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். பல நாட்கள் கழித்து, புதுசா சில சொந்தங்கள் கிடைச்ச மாதிரியான உணர்வு. நிச்சயமா இந்த உறவு நிலைக்கும்னு தோணுது. முன்னாடி, நீ சுஜியோட பேமிலிய அறிமுகம் செய்து வைத்தபொழுது கூட, இந்த மாதிரித்தான் தோணுச்சு. 

இப்படியெல்லாம் கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம் யாழிம்மா. உனக்கும் அந்தப் பையனைப் பிடிக்கணும். இந்த வரன் நல்லபடியா அமைஞ்சி வரணும். அது ஒண்ண மட்டும்தான், இப்போ நான் கடவுள்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்"

வானதி சொல்லச் சொல்ல, யாழினியின் தொண்டை விக்கித்தது. இப்படிப் பேசும் அம்மாவிடம், எப்படி இந்தக் காதல் விவகாரத்தைச் சொல்வது ? அதுவும், தோற்றுப்போன காதலை. அம்மா தனக்காகச் செய்த தியாகங்களுக்கு முன்னால், இந்தக் காதெலெல்லாம் ஒன்றுமே இல்லையே !!

யோசித்துக் குழம்பியபடியே, தான் சொல்ல விரும்பியதைச் சொல்லாமல் சமாளித்தாள். பின்னர், சம்பிரதாயத்துக்கு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, அந்த அழைப்பைத் துண்டிக்க, மறுபடியும் ஒரு அழைப்பு வந்தது. 

மணாளனிடமிருந்து...

"கடவுளே !!" , கதறினாள் யாழினி.

அவளும் என்னதான் செய்வாள் ? இப்பொழுது மணாளனின் அழைப்பை ஏற்றால், அது அந்தக் காதலைத் தொடர, அவள் தரும் சமிக்கைபோல் ஆகிவிடாதா ? 

தன்மீது உயிரையே வைத்திருக்கும் அம்மாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாது, அவள் சொல்வதைக் கேட்பதா ? இல்லை தன்மீது அளவுகடந்த வெறுப்பைக் கொப்பளிக்கும், அவனது தாத்தாவிடம் அவளைக் கொண்டுபோய் நிறுத்துவதா ? 

"என் மாதிரி ஒரு நிலை, வேறு யாருக்குமே வரக்கூடாது கடவுளே !!" , என்று பிதற்றிவிட்டு தனது போனை அணைத்தாள். பாரம் அவளை மிகுதியாக அழுத்தியது. வழக்கம்போல, தலையணையைக் கட்டிக்கொண்டு படுத்துக் கொண்டாள். இப்போதெல்லாம், அந்தத் தலையணை அவளுக்கு இன்னொரு தோழி போல ஆகியிருந்தது.

***

அடுத்து வந்த நான்கு நாட்களும், நரகம் போல் கழிந்தன யாழினிக்கு. 

"நான் வேண்டுமானால், ஆன்டியிடம் இதுபற்றிச் சொல்லிப் புரிய வைக்கட்டுமா ?" என்று சுஜி பலமுறை கேட்டும், "இந்த விவகாரம் பற்றி, அம்மாவிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லக்கூடாது" என்று மறுத்து விட்டாள், யாழினி.

அந்த வெள்ளிக்கிழமையன்று, வானதி கேட்டுக்கொண்டதற்கிணங்க, தனது துணிகள் சிலவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அலுவலகத்திலிருந்து சுஜி கிளம்பும்போது, அவளுடனேயே அவள் வீட்டுக்குக் கிளம்பினாள். அந்த இரவு, தூங்கும்பொழுதுகூட தேம்பியபடியே தான் இருந்தாள்.

பக்கத்தில் படுத்திருந்த சுஜிக்கு, இது நன்றாகவே புரிந்தது. அத்தனை நாட்களில், தனது தோழியின் விசும்பலும், அழுகையும் அவளை பாதிக்காமல் இல்லை. ஆனாலும், அவளால் என்னதான் செய்ய முடியும் ?

"என்னடி இது ? நான் ஆன்டிகிட்ட சொல்லுறேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்னுற. நீயும் சொல்ல மாட்டேன்னுற. சரி அப்போ எல்லாத்தையும் மறந்துட்டு இந்தக் கல்யாணத்த ஒதுக்குவேன்னு பார்த்தா, அதுவும் இல்லை. நானும் என்னதான் செய்யுறது ?" போர்வைக்குள் இருந்தபடியே, கிசுகிசுத்தாள்.

அதை பலமாக மறுத்துவிட்டு, அழுகையை அடக்கிக்கொண்டு படுத்தாள், யாழினி.

***

அடுத்த நாள், காலை ஆறு மணிக்கெல்லாம் வானதி சுஜியின் வீட்டுக்கு வந்துவிட, பெரியவர்களுக்கிடையில் ஒரு பெரிய உரையாடல் நடந்துகொண்டிருந்தது. கண்விழித்த யாழினியும் சுஜியும், படுக்கையறையிலிருந்து வெளிப்படவும்,

" முன்னாடி பார்த்ததுக்கு சுஜி ரொம்ப இளைச்சுப் போயிட்டால்ல. என்ன ஆச்சு ? டயட், அது இதுன்னு சரியா சாப்பிடுறது இல்லையோ !! " என்று வானதி கேட்க,

"யாரைப் பார்த்து என்ன சொல்லிட்டீங்க ? அவளுக்கு டயட்டோட ஸ்பெல்லிங் கூடத் தெரியாது" என்று கிண்டல் செய்தார், சுஜியின் அப்பா.

உடனே அவள் அம்மாவும் , "சும்மா இருங்க. அவளுக்குக் கோபம் வந்துடும். அப்புறம், அதை சமாதானம் செய்ய, நானாக்கும் பிரியாணி செய்து கொடுக்கணும்" , என்று அவள் பங்குக்கு வஞ்சப் புகழ்ச்சி செய்தாள்.

 "வாங்க ஆன்டி. வந்ததும் வராததுமா, உங்க எல்லாருக்கும் நான் டாபிக் ஆகிட்டேனா ? " , என்று உள்ளிருந்து வெளியே வந்த சுஜி கேட்கவும், அனைவரும் சிரிக்க, அதுவரை அவளுக்குள்ளிருந்த இறுக்கம் குறைந்து, அந்தச் சூழல் இலகுவாகுவது, யாழினிக்கும் புரியாமல் இல்லை. 

" வானதி. நீ இங்க வந்து சேர்ந்தத அவங்ககிட்ட சொல்லிட்டியா ? சரியா அஞ்சு மணிக்கு வந்துடுவாங்கல்ல ? " , ராமமூர்த்தி கேட்க, 

"ஆமாண்ணா. சொல்லிட்டேன். அவங்க சரியான நேரத்துக்கு வந்துருவாங்க" , என்றாள் வானதி.

"அப்படீன்னா, ஒண்ணு பண்ணுவோம். பக்கத்துக் கோயில்ல நான் ஒரு பூஜைக்குக் கொடுத்திருக்கேன். சுஜியையும் யாழினியையும் விட்டுட்டு, மற்ற எல்லாரும் போயிட்டு வந்துரலாம். நல்ல காரியம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, கோயிலுக்குப் போறது நல்லதுதானே !!" , என்று ராமமூர்த்தி சொல்ல, அப்ஜெக்க்ஷனே இல்லாமல், சரியென்றார்கள் எல்லோரும்.

மற்ற நாளாயிருந்தால், சுஜியும் யாழினியும்கூட வரிந்து கட்டிக்கொண்டு 'நானும் வருகிறேன்' என்று சொல்லியிருப்பார்கள். இன்று அவர்களிருவரும் இருக்கும் மனநிலையில், அவர்களுக்கும்கூட தனிமைதான் தேவைப்பட்டது.

அதனால், எந்தவொரு எதிர்க்கருத்தும் சொல்லாமல், வீட்டிலேயே தனித்திருக்க முடிவு செய்தார்கள்.

அவர்கள் சென்றபின்பு, நேராக வந்து "சுஜி, எனக்கு ஒரு உதவி" , என்றாள் யாழினி.

அவள் கேட்ட தோரணையிலேயே, 'ஏதோ வில்லங்கமாகத் தான் கேட்கப் போகிறாள்', என்று தோன்றியது சுஜிக்கு. அதனால், குழப்பத்தோடு அவள் பார்க்க, "ப்ளீஸ்.. எனக்கு ஒரே ஒருமுறை மணாளனின் குரலைக் கேக்கணும். என்னுடைய நம்பரிலிருந்து அழைத்தால், அவர் எடுப்பாரான்னு தெரியல. உன்னோட போன்.." என்று இழுத்தாள், யாழினி.

"தப்பு யாழினி. இதெல்லாம் தப்பு, நான் மாட்டேன். வேறு ஒருவரைப் பெண் பார்ப்பதற்காக வரச்சொல்லி விட்டு,  பழைய காதலரின் குரலைக் கேட்கவேண்டுமென்று சொன்னால், அதற்கென்ன அர்த்தம். யாரை நீ முட்டாளாக்கப் பார்க்கிறாய் ?

உன்னையே நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும், எனக்கு நன்றாகப் புரிகிறது. தயவு செய்து, மனதை மாற்றிக்கொள்" , என்று வெகுண்டாள் சுஜி.

அதுவும் நியாயமாகப் படவே, தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டாள், யாழினி.

அடுத்த சில மணி நேரங்களில், போனவர்கள் எல்லோரும் வீடு திரும்ப, பரபரப்போடு இயங்க ஆரம்பித்தது அந்த வீடு. பூவாசமும், பலகாரங்கள் செய்யும் வாசமுமாய், களைகட்டியது அந்த வீடு. யாழினியும், வானதியின் விருப்பப்படியே, ஒரு கரும்பச்சை நிறப் புடவையைக் கட்டிக்கொண்டாள்.

ஐந்து நாட்களுக்கு முன்புதான், மணாளனின் வீட்டு நிகழ்ச்சிக்காக, ஆசை ஆசையாக ஒரு புடவையைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள். இன்றோ, வேறு ஒருவருக்காக !!  அவளது இதயத்தை யாரோ பிழிந்து எடுப்பதுபோல இருந்தது அவளுக்கு.

'என்ன மாதிரியான நிலையடா இது !!' என்று நினைத்துக்கொண்டு, தனது தாய் சொன்ன ஒரே காரணத்துக்காக, அப்படிக் கிளம்பினாள் அவள்.

சரியாக ஐந்து மணிக்கு, அந்தப் பையன் வீட்டார், மாடிப்படி வழியாக ஏறி வரும் சத்தம் கேட்டது. யாழினியின் இதயம் பட படத்துக் கொண்டது. நிமிர்ந்து சுஜியைப் பார்த்து, கண்ணாலேயே தனது நிலையை வெளிப்படுத்தினாள்.

சுஜியும், 'வருந்தாதே. பொறுமையாக இரு' என்று சைகை காட்டினாள்.

அடுத்த சில வினாடிகளில், வாசலிலிருந்து "என்ன கண்ணம்மா. என்னிடம் உனக்கு என்ன கோபம் ? எங்கிட்டக் கூடச் சொல்லாமலே கிளம்பிட்டியே !!" , என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

யாழினி வருவாள்...


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post