யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 16


முந்தைய நாள், சென்னைக்குச் செல்வதற்காக வானதி கிளம்பிக் கொண்டிருந்தபோது அவளது வீட்டின் காலிங்பெல் அழுத்தப்பட்டது. 

'இந்த நேரத்துக்கு யாராக இருக்கும் ? ', என்று யோசித்தபடியே கதவைத் திறந்தாள். அதுவரை அவள் பார்த்தேயிராத ஒரு ஆறடி இளைஞன் நின்றிருந்தான்.

"நீங்க யாரு ?"

"வானதி டீச்சர் வீடு ?"

"இதுதான். நீங்க யாரு ?"

"வீட்டுக்குள்ள போயி பேசலாமா ?" , என்று அந்த இளைஞன் கேட்கவும், வானதிக்கு ஒன்றுமே புரியவில்லை. எனினும், அவனது தோற்றத்தையும் முகத்தையும் வைத்துப் பார்க்கும்பொழுது, அவன் சந்தேகத்துக்குரிய நபராய்த் தெரியவில்லை.

அதனால், உள்ளே அழைத்துச் சென்று, ஹாலிலிருந்த சோபாவில் உட்காரச் சொன்னாள். 

"நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே" , குழப்பத்தோடு வானதி கேட்கவும், "இதுவரை நான் யாரோ ஒருத்தன்தான். ஆனால், இன்னிலேர்ந்து உங்களுக்கு ஒரு மகன் மாதிரின்னு வச்சிக்கோங்களேன்" என்றான் மணாளன்.

வானதியின் குழப்பம் அதிகமானது. 

"தம்பி, நீங்க சொல்றது ஒண்ணுமே எனக்குப் புரியல. நீங்க யாரு ?"

"ஆன்ட்டி. பயப்படாதீங்க. நான் புரியும்படி சொல்லுறேன். என் பேரு மணாளன். மணாளன் ஐபிஸ். காவல்துறையில வேலை. 

அப்புறம்.. நான் உங்கப் பொண்ணு யாழினியக் காதலிக்கிறேன். உங்க பொண்ணுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். ஆனாலும், அம்மாவோட சம்மதமிருந்தா மட்டும்தான் காதலை ஏத்துக்குவேன்னு அடம் பிடிக்கிறா" ,  மணாளன் சொன்னதும் அதை முழுமையாக மறுத்தாள், வானதி.

"என் பொண்ணப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அப்படி எதுவும் இருந்திருந்தா, அவ முதல்ல என்கிட்டத் தான் சொல்லியிருப்பா. சும்மா ஏதாவது பேசி குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க" , வெடித்தாள் வானதி.

"ஹ்ம்ம். இந்த மாதிரி பேசிட்டே இருந்தா, எந்தப் பொண்ணுதான் உண்மையைச் சொல்வாள் ? அளவுக்கு அதிகமான அன்பைக் கொட்டுறவங்ககிட்ட, அவங்க எண்ணத்துக்கு மாறான விஷயங்களை எப்படிச் சொல்ல முடியும் ? 

அதுவும், நீங்க யாழினிமேல வச்சிருக்க அன்பு இருக்கே !! அந்த அன்புக்கு எதிராக, அவளால எதுவுமே சொல்ல முடியாது. அம்மாவாகவும், அப்பாவாகவும், உலகமாகவும் இருந்து வளர்திருக்கீங்க. உங்கள் மனதைக் காயப்படுத்தக் கூடாதென்பதற்காக, அவ உங்ககிட்ட சில விஷயங்களை மறைச்சிருக்கலாம். இல்லையா ? ", மணாளன் சற்று குரலை உயர்த்திப் பேசவும், வானதியின் கரங்கள் நடுங்கின.

"எனக்கு இந்தக் காதல் கத்திரிக்காயிலெல்லாம் நம்பிக்கை இல்லை. என் வாழ்க்கை கெட்டது போதும். என் பெண்ணின் வாழ்க்கையாவது நல்லா அமையணும். அவ எதிர்காலத்தில் தான், நான் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு, அர்த்தமே இருக்கு" , இதைச் சொல்லும்பொழுது, அவள் கண்கள் நிரம்பியிருந்தன.  

"கேன் ஐ ஹோல்டு யுவர் ஹேண்ட்ஸ் ?"

"..."

மணாளன் அவளது கரங்களைப் பற்றிக் கொண்டான். 

"பயப்படாதீங்க ஆன்டி. காதலிக்கிறது தப்பில்ல. ஒரு பொண்ணுக்கு ஒரு பையன் மேல காதல் வர்றது, இயற்கை. ஆனா, இருபது வயசுல வர்ற அந்தக் காதலை அறுபது வயசு வரைக்கும் அவங்க  காப்பாத்துறதுல இருக்கு, அந்தக் காதலோட வெற்றி. 

அதுக்கு நிறையவே அன்பும், முதிர்ச்சியும் வேணும். யாழினிக்கும் எனக்கும், நிச்சயமா அது இருக்கு. எங்க வாழ்க்கை, அந்த முதிர்ச்சியை எங்களுக்குத் தந்திருக்கு"

"இல்ல. தம்பி. இப்போ எல்லாரும் இப்படித்தான் பேசுவீங்க. ஆனா.." , வார்த்தை வராது திணறிய நொடிகளில், அவளது இளமைக்கால காதலும், அதன் தோல்வியும், அது தந்த வலியும், கண்முன்னே வந்து பேயாய் மிரட்ட, 

"இது சரி வராது தம்பி" , என்று தீர்க்கமாகச் சொன்னாள்.

"நீங்க ஏன் இப்படி சொல்லுறீங்கன்னு புரியுது ஆன்டி. உங்க வாழ்க்கையில நடந்த அந்த தப்பு, எங்களுக்குள்ள நிச்சியம் நடக்காது. உண்மையைச் சொல்லனும்னா, யாழினியோட அப்பாவின் கதை வேறு. அந்த மாதிரியான நபரை நீங்கள் உங்கள் பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் செய்திருந்தாலும்கூட, அவர் அப்படித்தான் நடந்திருப்பார். அது ஒரு தனிநபரின் நடத்தை.

மனசாட்சியைத் தொட்டுச் சொல்கிறேன். நான் அந்த மாதிரியான ஆளில்லை. உங்கப் பொண்ண நல்லா வச்சிப்பேன். இதுவரைக்கும் அவ வாழ்க்கையில் பார்த்த எல்லா கஷ்டத்தையும், அவ மறக்குற அளவுக்கு எங்களுடைய வாழ்க்கை அமையும். என்னை நம்புங்கள்" என்று அவன் சொன்னபோது, அவனது கரங்கள் கொடுத்த அழுத்தமே, அவனது மனதின் உறுதியை வெளிப்படுத்தியது.

"நீங்கப் பேசுறதப் பார்க்கும்போது, எனக்கும்கூட உங்க மேல நம்பிக்கை வருதுன்னே வச்சுக்கோங்களேன். ஆனாலும், என்னால ஒண்ணுமே செய்ய முடியாது. என்னுடைய நிலைமை அப்படி.

நண்பர் ஒருத்தரோட  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நாளைக்கு யாழினியைப் பெண்பார்க்க வர்ராங்க. அதுக்காகத் தான், நான் சென்னைக்கு கிளம்பிட்டு இருக்கேன். இப்போ, வந்து நீங்க இப்படிச் சொன்னா, நான் என்ன செய்யவேன் ? 

அவங்ககிட்ட நான் என்ன பதிலைச்  சொல்லுறது ? உங்களுடைய இந்தக் கதை எல்லாத்தையும் சொன்னா, என்னுடைய பெண்ணைப் பற்றி, என் வளர்ப்பைப் பற்றி, என்ன நினைப்பாங்க அவங்க ? தப்பா பேச மாட்டாங்க ?"

"அவங்க நம்பர் இருக்கா ஆன்டி ?"

வானதி பேந்தப் பேந்த முழிக்க, "உங்க போன்ல அவங்க நம்பர் இருக்கா. நான் பேசுறேன்" என்றான் அவன்.

அவள் தனது போனை எடுத்து, அவர்கள் நம்பரைத் தேடினாள். நம்பர் கிடைத்ததும், அதைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.

"டயல் பண்ணுங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் பேசிக்கிறேன்" 

அவளும் டயல் செய்தாள். எதிர்முனையில், யாரோ அவளது அழைப்பை ஏற்க, ' என்ன சொல்வது ?' என்று குழம்பி நின்றாள் வானதி. மறுநொடியே, அவளிடமிருந்து அந்த போனை வாங்கிக்கொண்டு, தான் பேச ஆரம்பித்தான் மணாளன்.

பத்து நிமிடங்கள் பேசிவிட்டு, கடைசியாக போனை அவளிடம் கொடுத்தான்.

"மன்னித்து விடுங்கள்" , என்று அவள் பேச ஆரம்பிக்க, "வானதி. இதைச் சொல்ல இவ்வளவு தயக்கமா ? இதில் எந்தத் தவறுமே இல்லை. உண்மையைச் சொல்லனும்னா, நீ உன் பொண்ண ரொம்ப நல்லா வளர்ந்திருக்க. அதனாலதான், வலிய வந்து திருமணம் செய்துக்குறேன்னு சொன்ன பையன்கிட்டக் கூட, வேண்டாம்னு சொல்லிருக்கா. உன்னோட விருப்பத்துக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுக்குற பொண்ணுக்கு, நீ நிச்சயமா அவ விருப்பத்துக்கு ஏற்றபடிதான் எல்லாமே செய்யணும்.

நீ சென்னைக்குப் போய், அந்தப் பையன் வீட்டில் இருப்பவர்களை சந்தித்துப்பார். பிடிச்சிருந்தா, நிச்சயமா திருமணம் செய்து கொடு. எங்களுக்கும் பத்திரிக்கை அனுப்பு. அதை விட்டுட்டு, தயக்கம் என்ன தயக்கம் ?" , என்று சொன்னார் எதிர்முனையில் இருந்தவர்.

அத்தனை நேரம், அவனருகில் பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்த வானதி, மணாளன் பேசும் விதத்தை ரசித்தாளே ஒழிய, அவன் என்ன பேசினான் என்பதைக் கவனிக்கவேயில்லை. ஆனால், ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. அவன் அங்கு நடந்த எல்லாக் குழப்பத்தின் பழியையும் தனது தலையில் போட்டுக் கொண்டான். அதனை பக்குவமாக எடுத்தும் சொன்னான்.

'இவனை யாழினிக்குப் பிடித்ததில் ஆச்சரியமேதுமில்லை' என்று நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள், வானதி.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு , "சரி, வாங்க ஆன்டி. கிளம்பலாம். அப்புறம் ரொம்ப இருட்டிரும்", என்றான் அவன்.

"எதற்கு ?"

"சரியாப் போச்சு. நாளைக்குப் பெண் பார்க்கும் படலம். பொண்ணோட அம்மா, நீங்க இல்லாம எப்படி ?" , என்று சிரித்துவிட்டுக் கண்ணடித்தான்.

"நான் டீச்சரப்பா. இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா, காதைப் பிடித்துத் திருகி விடுவேன்" , என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டு, அவனுடன் கிளம்பத் தயாரானாள், வானதி.

இருவருமாக சுஜிக்கு கால் செய்து , "யாழினி கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவளைப் பொறுத்தவரைக்கும், யாரோ அவளைப் பெண்பார்க்க வரப்போறாங்க. அவ்வளவுதான். அவ அப்படியே நினைச்சுட்டு இருக்கட்டும். நம்ம எல்லாருமா அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்போம்" என்றார்கள்.

அப்புறம் என்ன.. அந்தக் காலைவேளையில், யாழினிக்குத் தெரியாதவாறு இரு குடும்பங்களும் கோவிலில் சந்தித்துப் பேசிக்கொள்ள, வானதிக்கு அவர்களை ரொம்பவே பிடித்துப் போனது.

இப்பொழுது வானதியும், ராதாவும் இவையெல்லாவற்றையும் சொல்லி முடிக்க, சுஜியைப் பார்த்துச் செல்லமாக முறைத்தாள், யாழினி.

'அடிப்பாவி. நீயும் உடந்தையா ?' , என்று சொல்லியது அந்தப் பார்வை.

'இதுக்கே இப்படியா ? மணாளனுக்கு உங்க வீட்டு முகவரியைக் கொடுத்ததே நான்தான்னு தெரிஞ்சா, பார்வையாலேயே எரிச்சிடுவ போலயே  ? ' , என்று கண்களால் பாவம் காட்டினாள் சுஜி.

நடப்பதையெல்லாம் ரசித்து, உள்ளூரச் சிரித்துக் கொண்டாலும், அந்த முதியவர் அன்று நடந்து கொண்ட விதம், இன்னும் யாழினியின் மனதில், ஒரு உறுத்தலாகத் தான் இருந்தது.

சுதாரித்துக்கொண்ட அவள், "எல்லாம் சரி ராதாம்மா. அன்னைக்கு மணாளனோட தாத்தா, என்னை அப்படி மோசமாகத் திட்டினாரே, அதற்கு என்ன காரணம் ?" என்று கேட்க, 

ராதா பெருமூச்சு விட்டுக்கொண்டு, " அது ஒரு பெரிய கதை. நீ சொல்லுற அந்த சம்பவத்தைப் பற்றி, குட்டி ராதா என்னிடம் சொன்னா. எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. எங்க அப்பா, இதுவரையிலும் யாரிடமும் அப்படிப் பேசியது கிடையாது. ஆனாலும், வருஷக்கணக்கான வலி அவரை அப்படிப் பேச வச்சிருக்கு " , என்றாள்.

அவள் சொல்வது ஒன்றும் புரியாது, யாழினி திருதிருவென்று  முழிக்க, அவளிடம் ராதாம்மா கேட்டாள், "இதுவரையிலும், மணாளன் தனது அம்மா, அப்பாவைப் பற்றி உன்னிடம் எதாவது சொல்லியிருக்கனா ?"

யாழினி வருவாள்...


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post