யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 17 (Climax)



உண்மையைச் சொல்லவேண்டுமானால், யாழினி பலமுறை இதை நினைத்துப் பார்த்திருக்கிறாள். 

அவள் ஆரம்பத்தில், ராதாம்மாவைத் தான் 'மணாளனின் அம்மா' என்று நினைத்திருந்தாள். ஆனால், அடுத்தடுத்த சந்திப்புகளில், ராதாம்மா அவனுக்கு அத்தை முறையில்தான் வருகிறாள் என்பதை யூகிக்க முடிந்தது.

அன்று அவனது வீட்டுக்குச் சென்றிருந்தபோது கூட, 'அவனது அப்பா, அம்மாவை அவன் அறிமுகம் செய்துவைப்பான்' என்று ஆவலோடு எதிர்ப்பார்த்தாள். ஆனால், அவன் அவர்களைப் பற்றிப் பேசவேயில்லை.

அதற்கு முன்னரும், பலமுறை அவனது பெற்றோரைப் பற்றிக் கேட்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால், சந்திக்கும் நேரத்திலெல்லாம் பரபரப்போடிருந்த அவனிடம், அதைக் கேட்க அவளுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை அவர்கள் உயிருடன் இல்லாதிருந்தால், அவன் மனம் சஞ்சலப்படுமல்லவா !! 

அதுமட்டுமல்லாது, எல்லா சந்திப்புகளிலுமே, அவனது பேச்சும், மெல்லிய புன்னகையும் அவளைக் கட்டிப்போட்டு, வெட்கத்துடன் மட்டுமே உட்கார வைத்துவிடும்.

நினைவுகளிலிருந்து சுதாரித்துக்கொண்டு, "அவரோட அப்பா, அம்மா.. அவங்க இருக்காங்களா, ராதாம்மா ? அவங்களுக்கும், மணாளனின் தாத்தா அன்று  கடுமையா நடந்துக்கிட்டதுக்கும், என்ன சம்பந்தம் ? எனக்குப் புரியல ராதாம்மா" , என்று கேட்டாள் யாழினி.

"சம்பந்தம் இருக்கு யாழினி. நிச்சயமா சம்பந்தம் இருக்கு. எங்கள் எல்லோருக்குமே அதில் சம்பந்தம் இருக்கு. சம்பந்தத்திற்கான நபர் மட்டும் எங்க வாழ்க்கையில வராம இருந்திருந்தா. உங்க அப்பா மட்டும் எங்க வாழ்க்கையில குறுக்கிடாம இருந்திருந்தா !!" , ராதாம்மா பொங்கி வந்த அழுகையை அடக்க முயற்சிக்க, வானதி அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு,

"அழாதீங்க ராதா. சிலதையெல்லாம் நினைக்காம இருக்குறதும், பேசாம இருக்குறதும்தான் நல்லது. நான் யாழினிக்கிட்ட சொல்லிப் புரிய வைக்கிறேன்" , என்றாள்.

ராதாம்மா, தனது கண்களைத் துடைத்துக்கொண்டு, "இல்லை வானதி. நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிடுறேன். யாழினிக்கு எங்க அப்பா அன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கிட்டாருன்னு நிச்சயமாப் புரியணும். 

எப்படியும், அவ எங்க வீட்டுல வந்து வாழப்போறவ. வரும்போதே ரணத்தோடும் காயத்தோடும் வர வேண்டாம். இதைச் சொன்னாதான், அவளுக்கு எங்க குடும்பத்தைப் பற்றிப் புரியும்" என்று சொல்லிவிட்டு, யாழினியைப் பார்த்தாள்.

'சொல்லுங்கள்', என்பது போல யாழினி தனது முகத்தை வைத்துக்கொள்ள, அவளை அழைத்து அங்கு கிடந்த ஒரு சோபாவில் உட்காரச் சொல்லி, தானும் அவளருகே உட்கார்ந்துகொண்டு, பேச ஆரம்பித்தாள்.

சுஜிக்கும் சுற்றியிருந்த மற்றவர்களுக்கும், அந்தக் காரணம் அரசல் புரசலாகத் தெரியுமென்றாலும்கூட, ராதாம்மா சொல்வதைக்கேட்க, அவர்களும் எதிர்பார்போடுதான் இருந்தனர்.  

"யாழினி. நான் பிறந்தப்போ எங்க குடும்பம், நடுத்தறதுக்கும் கொஞ்சம் கீழே இருந்ததுன்னுதான் சொல்லணும். இதுல நான் பிறந்ததுமே, என் அம்மா வேறு இறந்துட்டாங்களாம். அப்பாதான் எங்க மூணு பேரையும் வளர்த்தார். அவரும், அடுத்த சில வருஷங்களிலேயே காலமாயிட்டார். எனக்கு அப்போ, பத்து வயசு. மீனாவுக்கு பதினாலு.

அதுக்கப்புறம், எங்க முரளியண்ணன்தான் எங்க ரெண்டுபேரையும் பார்த்துக்கிட்டான். அவன் எங்ககிட்ட ரொம்ப அன்பா இருப்பான். அம்மா, அப்பா இல்லாத பெண்களாச்சேன்னு , அதிகக் கரிசனையோடும்  இருப்பான். 

அவன் ரொம்ப ஆம்பிஷியஸ்சான பெர்சன். தான் ஒரு பெரிய தொழிலதிபராகணும்னு ஆசைப்பட்டான். அதற்கான திறமை அவன்கிட்ட இருந்தாலும், கையில் பணமில்லை. இரவுப் பகலாக உழைத்தான். உழைப்புத் தவிர, அவனுக்கு வேறெதுவுமே தெரியாது.

தன்னோட இருபது வயசுலயே ஒரு தொழிலைத் தொடங்கி அதை சக்ஸஸும் பண்ணிட்டான்னா பாத்துக்கோயேன். அவ்ளோ ப்ரில்லியண்ட். அந்த முனைப்புதான், கூடிய சீக்கிரத்திலேயே அவனை உயரத்துக்குக் கொண்டுவந்தது.

அப்புறம் என்ன !! நல்ல வீடு, வசதியான வாழ்க்கை, சமுதாயத்துல நல்ல அந்தஸ்துன்னு எல்லாமே அவனைத்தேடி வந்தது. எங்க வாழ்க்கையிலும் நிறைய நிறைய மாற்றங்கள். அடுத்த வருடங்கள்ல, அண்ணனோட திருமணம், மீனாவுடைய திருமணம், மனோ பிறந்ததுன்னு  நிறைய நல்ல நினைவுகள். 

ஆனால், எந்த ஒரு மனுஷனும் நீண்ட நாட்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது கடவுளுக்குப்  பிடிக்காதோ, என்னவோ !!

அடுத்த சில நாட்கள்ல, எங்க அண்ணன், தன்னோட தொழிலில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிச்சான். மொத்த ஆர்டருக்காகப் ப்ரொடக்ஷன் பண்ணிவச்ச கூட்ஸ, ஆர்டர் கொடுத்த கம்பெனி வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. பெரிய அளவுன்னுறதால, கடன் வாங்கி அதைத் தயாரிச்சு வச்சிருந்தான். அதனால, பெரிய அளவில் நஷ்டமாகிடுச்சு. 

கடன் கொடுத்தவங்க எல்லாரும், எங்க அண்ணனைத் தொந்தரவு செய்யவும் ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த நேரத்துலதான், இந்த மாதிரி தொழில்ல நியாயமில்லாம நடந்துகிட்டா, அவங்க மேல கேஸ் போடலாம், நஷ்ட ஈடு வாங்கலாம்னு அவனோட லீகல் அட்வைசர் சொன்னாரு. 

அதை நம்பி, எங்ககிட்டேர்ந்த எல்லாத்தையும் விற்று, அவர் கேட்ட தொகையைக் கொடுத்தோம். நியாயம் எங்க பக்கம்ங்கறதால, கேஸில் ஜெயிச்சிருவோம்னு முழுசா நம்பினோம். 

ஆனால், எங்க அண்ணனோட கம்பெனி ப்ரொடக்ட்ஸ் தரமில்லாதது, அதனாலதான் வேண்டாம்னு சொன்னோம்னு சொல்லி, எங்க நிறுவனத்தின்மீது குற்றம் சாட்டுனாங்க. பத்திரிக்கை, டிவின்னு எல்லாத்துலேயும் அந்தக் கேஸைப் பற்றிப் பேசினாங்க. எங்க நிறுவனத்தோடு பெயர், மொத்தமாப் போச்சு. 

அதற்குப் பிறகு, பிசினெஸ் ஓடுமா என்ன !!

சுற்றிப் பார்த்தா, ஆயிரம் கடன். எப்படி அடைக்கிறதுன்னே தெரியமாக் குழம்பியிருந்த அண்ணனுக்கு அப்போதான் தெரிஞ்சிது, இது எல்லாமே அவனைச் சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சின்னு. அதாவது, தொழில்ல எங்க அண்ணனுக்குப் போட்டியா இருந்தவரும், அந்த லீகல் அட்வைஸரும் சேர்ந்து செய்த சூழ்ச்சி. 

மறுபடியும், மேல்முறையீடு செய்யக் கூட எங்ககிட்ட பணம் எதுவும் கிடையாது. மறுபடியும், ஆரம்பிச்ச இடத்துக்கே வந்த மாதிரி ஆகிடுச்சு.

இந்தத் துரோகம், கடன், தொழில்ல ஏற்பட்ட தோல்வி, எல்லாமா சேர்ந்து, எங்க அண்ணனை மன உளைச்சலுக்கு உள்ளாக்குச்சி. அதுவே, அவனை கவனம் சிதற வச்சி, எங்க அண்ணனையும் அண்ணியையும் ஒரு விபத்துலப் பறிகொடுக்கவும் வச்சிது. 

இந்த சம்பவம் நடந்தப்போ, மனோவுக்கு வெறும் 6 வயசுதான். அம்மா, அப்பாவை இழந்து அவன் கதறுன கதறல் இருக்கே !! எந்தக் குழந்தைக்கும் அந்த நிலைமை வரக்கூடாது.

அதுக்கப்புறம், நானும் மனோவும், மீனாவோட வீட்டுல கொஞ்ச நாட்கள் இருந்தோம். அப்படியே இருக்குறதுக்கு பதிலா, ஏதாவது வேலை தேடிகிட்டு, மனோவையும் கூட்டிட்டுப் போயிடலாம்னு முடிவு செய்தப்போதான், மிலிட்டரிலேர்ந்து திரும்பி வந்த எங்க சித்தப்பா, எங்களைப் பார்க்க வந்தாங்க.

நடந்த எல்லாத்தையும் பார்த்து, கொதிச்சிப் போயிட்டாங்க. அவங்களுக்கு எங்க அண்ணன்னா உயிரு. அவனை அந்த நிலைக்குக் கொண்டுவந்தவங்களுக்குப் பாடம் கற்பிக்கணும்னு நினைச்சாங்க. அவங்களோட பென்சன் பணம் மொத்தத்தையும் கொட்டி வாதாடி, எங்க அண்ணன் பேருல எந்தத் தப்பும் இல்லன்னு நிரூபிச்சாங்க. 

அதுக்குப் பின்னாடி, மீட்டெடுத்த எங்க அண்ணனோட கம்பெனிய திரும்பி நடத்தலாம்னு முடிவும் செய்தாங்க. அத ஒழுங்கா நடத்துறதுலதான், எங்க அண்ணனோட வெற்றியே இருக்குன்னு சொல்லி, அதிக கவனத்தோடு பிசினெஸ் பண்ணுனாங்க. ராதா என்டர்ப்ரைசஸ் மறுபடியும் பெயரும் புகழும் வாங்க ஆரம்பிச்சிது.

அதுக்குப் பின்னாடி, எங்க சித்தப்பாதான் எங்களுக்கு அப்பா. அவன் சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு. அவர் பேச்சுக்கு நாங்க யாருமே மறுபேச்சுப் பேசுறது இல்ல. 

நான் இப்போ சொன்ன இந்த சம்பவங்களெல்லாம், எங்க எல்லாருக்குள்ளேயுமே நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஜாலியாப் பேசுற, கலகலப்பான எங்க அப்பாவை, அமைதியானவரா, கடினமானவரா மாத்துச்சி. எல்லாரையுமே, சந்தேகக் கண்ணோடப் பார்க்க வச்சுது.  

என்னை இப்படி..." , ராதாம்மா தயங்க, யாழினியின் நெஞ்சம் கனத்திருந்தது.

'அப்படியெனில், இவள் மணாளனுக்காகத் திருமணமே செய்துகொள்ளவில்லை. இதனால்தான், நம் அம்மாவைப் பற்றிப் பேசும்பொழுது, அந்தத் துன்பத்தை அவனால் உணர முடிந்ததற்காகக் கூறியிருக்கிறான்.

இவையெல்லாம் நடந்த காலத்தில், அவனுக்கும் ஓரளவுக்கு விவரம் தெரியுமல்லவா !! எத்தனை வலியைத் தந்திருக்கும் அந்த சம்பவங்கள் !! ஆயினும், ஒருமுறைகூட அதுபற்றி அவன் குறைபட்டுக்கொண்டதாகத் தெரியவில்லையே !!' , என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் அவள்.

"ராதாம்மா, எனக்கு உங்களையும் தாத்தாவையும் நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. நீங்கள் உண்மையாகவே, கிரேட்தான்" என்று சொல்லிவிட்டு, பின்னர் தயங்கியபடியே,

"எனக்கு ஒண்ணுமட்டும் புரியவேயில்லை. அன்று தாத்தா என்மீது கோபப்பட்டது, வெறுமனே வெளியாட்களைச் சேர்த்துக்கொள்ள மனமில்லாது போனதால் மட்டுமா !! எனக்கு அது இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது" என்று யாழினி கேட்க, 

"ஏ பொண்ணு, நீ உண்மையாகவே படிச்சிருக்கியா ?" ,என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார், அந்தப் பெரியவர்.

'என்னடா இது. இவருக்கு இன்னும் நம்மீது கோபம் போகவில்லையோ !! ' , என்று நினைத்துக்கொண்டு தன் விழிகளில் பல கேள்விகளோடு நின்றாள் யாழினி.

அனால் அவரோ, அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, "இந்தாப் பொண்ணு. என்னை நீ மன்னிக்கணும். கோபமானாலும் சரி, பாசமானாலும் சரி, ஏனோ தெரியல, உன்கிட்ட மட்டும் எனக்கு இப்படித்தான் பேசத் தோணுது" என்றார்.

வானதி சிரித்துக்கொண்டே, "அதில் ஒரு தப்பும் இல்லப்பா. உங்க பேத்தி. நீங்க தாராளமா கிண்டல் பண்ணலாம்" என்றாள்.

அவர் அவளிடம், "நீயும் என்னை மன்னிக்கனும்மா. உன் புருஷன்மேல இருந்த கோபத்துலதான், அன்னைக்கு யாழினிய அப்படித் திட்டிட்டேன். அந்த அட்வொகேட் கார்த்திகேயனோடப் பொண்ணும், கிட்டத்தட்ட இந்தப் பொண்ணோட சாயல்லதான் இருப்பா. 

ஒருவேளை அவன்தான், அவன் பொண்ண அனுப்பி மறுபடியும் நாடகமாடுறானோன்னு நினைச்சி, அவளை பயங்கரமாத் திட்டிட்டேன்" என்று சொல்லிவிட்டு, 

யாழினியைப் பார்த்து, "இப்போ புரியுதா பொண்ணே ? என்ன சம்பந்தம்னு ? " என்றார்.

'அப்படீன்னா.. இத்தனை நேரம் மணாளனின் குடும்பத்தை நாசம் செய்ததாக ராதாம்மா சொன்ன அந்த வக்கீல், எனது அப்பாவா ? என் அம்மாவின் வாழ்க்கையை நாசம் செய்தது போதாதுன்னு, ஊரில் பல குடும்பங்களை அழிக்கிறததான் வேலையாகவே வச்சிருக்காரா !!' , யாழினிக்கு என்னவோ போலிருந்தது.

"என்னை மன்னிச்சிருங்க தாத்தா.  அந்த நபர் உங்களுக்குத் செய்த துரோகத்துக்கு, நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன். அந்த ஆளோடப் பொண்ணுங்குற முறையில, நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்", என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவரின் காலில் விழப்போனாள்.

அவரோ, அவளைத் தடுத்துத் தூக்கி நிறுத்திவிட்டு "அடடா. இதை மணாளன் பாத்திருக்கணுமே. யாரது யாழினியை அழவச்சதுன்னு சண்டைக்கே வந்திருப்பான். அன்னைக்கு நீ போன பின்னாடி, வந்தானே !! அந்த மாதிரி" , என்று சொல்லிச் சிரித்தார். 

அங்கிருந்தவர்களும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கள்.

யாழினிக்கு, ஒரே வெட்கமாக இருந்தது.

அப்பொழுதுதான் அந்தப் பெரியவர் , " நீ அந்த ஆளோட மகளேயில்ல கண்ணம்மா. வானதி, ஒற்றை ஆளாய் நின்று வளர்த்த மகள். இன்னைலேர்ந்து, எங்க வீட்டு மருமகள். எங்க வீட்டு மருமகள் கண் கலங்கக் கூடாது. பாரு, நீ அழுதா இங்கிருக்கும் பொண்ணுங்க எல்லாரும் அழுறாங்க" , என்றார்.

அவர் சொன்னதுபோல, அங்கிருந்தவர்கள் கண்களும் கலங்கித்தான் இருந்தது. யாழினி, நெகிழ்ந்து போனாள்.

அதன்பின்னர், பெரியவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்க, 'மணாளன் எங்கே ?' , என்று கண் ஜாடையாலேயே, சுஜியிடம் கேட்டாள் யாழினி.

உடனே சுஜியும் ராதாம்மாவிடம், "யாழினி எதையோ தேடுறாப்போல இருக்கு ஆன்டி" என்று சொல்ல, 

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவர்களாய், கோரஸாக,
"மணாளன், மாடியில வெயிட் பண்ணுறான் மா. ரொம்பவே கோபத்துல இருக்கான். உன்கிட்ட தனியாப் பேசணுமாம். போ. போய் அவன்கிட்டப் பேசு. நீங்க ரெண்டுபேரும் பேசுன பின்னாடிதான், கல்யாணத்தப் பத்தியே நாங்க பேசணும். சீக்கிரம் பேசி முடிவு பண்ணுங்க" என்று சொல்ல,

அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பே, அவளது கால் மாடிப்படிகளுக்குப் பாய்ந்திருந்தது.

அவனைப் பார்க்கும் ஆவலில், தாவிக்குதித்து படிகள் ஏறினாலும், மொட்டை மாடியை அடைந்ததும், பின்புறமாகத் திரும்பி நின்ற அவனைப் பார்த்து, சற்றே பின்வாங்கினாள் யாழினி.

அவனோ, அவன் வந்ததை நொடிப்பொழுதில் கணித்தவனாய், அவள் பக்கமாகத் திரும்பி, "வாங்க மேடம். என்ன இந்தப் பக்கம் ?? உங்களைப் பெண்பார்க்க யாரோ வர்றேன்னு சொல்லிருந்தாங்களே !! வரலையா ??" என்று சொல்லிவிட்டு அவள் கண்களையே பார்த்தான். 

அவனது தீர்க்கமானப் பார்வை, அவளுள் சென்று, அவளை என்னவோ செய்தது.

"சாரி. ஐ யாம் வெரி சாரி. சாரி பார் எவரித்திங்", அவள் சொல்லிக்கொண்டிருக்க, 

அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, அவளருகில் வந்தான்.

'அப்படிச் சிரிக்காதே. இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்கிறது' ,என்று சொல்ல வேண்டும்போல இருந்தது அவளுக்கு. ஆனாலும், சமாளித்துக்கொண்டு தலை குனிந்தபடி நின்றான்.

அவன் இன்னும் கொஞ்சம் அருகில் வந்து, அவள் மோவாயைப் பிடித்து நிமிர்த்திவிட்டு, "என்னை விட்டுட்டு வேறொரு திருமணத்துக்குத் தயாராகிட்டேல்ல யாழினி ?" , என்றான்.

முதல் முறையாக, அவனது நெருக்கம், அவளை நிலைகுலையச் செய்தது. ரத்தம், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக வேகத்துடன் ஓடி, தேகத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தியது.

கண்களை மூடிக்கொண்டு, "ம்ம்ம்" என்றாள்.

"என்னது ம்மாஆ ? அப்போ, நான் உனக்கு வேண்டாமா ? வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்வது தயாராக இருந்தாயா ?", என்று சொல்லிக் கண்ணடித்துச் சிரித்தான் அவன்.

அவளுக்குக் கிறக்கமாக வந்தது. அப்படியே, அவன் மார்பில் சாய்ந்து விட்டாள்.

"யாழினி"

"ம்ம்ம்"

"யாழினி, இது மொட்டை மாடி"

"ம்ம்ம்"

"பக்கத்துக்கு வீட்டுக்குக் கூட, மொட்டை மாடியிருக்கு"

"அச்சோ" , என்றபடி சுயநினைவு வந்தவளாய் அவள் துள்ளிக் குதித்து ஓட, அவளைத் துரத்திச் சென்று, படிக்கட்டுகளில் அருகே, அவள் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு, 

"இனி நீ என்னை விட்டுட்டு எங்கேயும் போக முடியாது ??" ,என்றான் அவன்.

யாழினிக்கு தங்களுடைய முதல் சந்திப்பு நினைவுக்கு வர, 'இந்தக் கைகள் இவன் கைகளுக்குள் இருக்கத்தான் இத்தனை நாட்கள் தவம் கிடந்ததோ' என்று நினைத்துக்கொண்டு, அவனைக் கண்ணோடு கண் நோக்கி, அவன் அன்பில் அடங்கிக் கொண்டாள்.

யாழினி மணாளனின் வாழ்க்கை  இனிதே தொடங்கியது.

This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

  1. வாழ்த்துக்கள் தோழி. ரமணி சந்திரன் அவர்களின் நாவலை போன்ற எளிய நடையில் ஒரு இனிய காதல் கதை.
    படிக்கும் போது கண்களின் திரையில் காவியமாய்........

    ReplyDelete
Previous Post Next Post