"ஏண்டி நெஜமாவே அவர்தான் மணாளனா ?" , வீட்டிற்குத் திரும்பிய பின், கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தனது விரல்நகங்களுக்கு அந்த 'ரூபி பிங்க்' நெயில்பாலிஷை அடித்தபடியே கேட்டாள், சுஜி.
"உன்ன என்ன பண்ணலாம் ?? அன்னைக்கு நான்தான் பேஸ்புக்ல காட்டுனேனே !! நீ பாக்கல? "
"எது ?? அந்த 40 பேர் நிற்கிற குரூப் ஃபோட்டோவா ?? ஓ !! நல்லா பாத்தேனே !! அதுல 'ஜூம்' பண்ணி பாத்தா , சுத்தமா முகம் தெரியாத அளவுக்கு ஒருத்தர்.
இத வெச்சிகிட்டு , நான் எப்படி அவரை அடையாளம் கண்டுபிடிக்கிறது ? உன் மனசுல நல்லாவே பதிஞ்சமுகம் அது. அதனால, அழகா இமேஜ் மேப்பிங் பண்ணிருப்ப. நான் என்ன யூகமா பண்ணமுடியும் ? சரியாப் போச்சு போ !! " , சுஜி சொல்ல , அதுவும் ஒருவகையில் உண்மைதான் என்றே தோன்றியது யாழினிக்கு.
"பார்க்க நல்லவராத்தான் தெரியுது. ஆனாலும், கொஞ்சம் யோசிச்சு, அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிட்டு, உன் மனசுல ஆசைய வளர்த்துக்கோ. புரியுதா ? இந்த லவ்வெல்லாம் சினிமால பாக்குறவர நல்லாத்தான் இருக்கும். ஆனா, நிஜவாழ்க்கைல அப்படி கிடையாது. எல்லா பக்கமும் இருந்து சிந்திச்சிப் பாக்கணும். புரியுதா ?
ஹலோ யாழினி, உன்னைத்தான்" , சுஜியின் உலுக்கலில் சுயநினைவுக்கு வந்த யாழினியை "இனி நான் என்ன சொன்னாலும், உன் காதுல விழாது" , என்று கேலி செய்துவிட்டு அவளுக்கும் நெயில் பாலீஸ் அடித்துவிட்டாள், சுஜி.
அடுத்தநாள், அங்கிருந்து ஹாஸ்டலுக்கு வந்து, பின் ஆபிஸ் வேலைகளில் மூழ்கி , அந்த வாரமே மிகவும் பிசியாக இருந்தது. ஆனாலும், அவ்வப்போது அந்த சிக்கனலில் காத்திருக்கும்போது, மணாளனின் நினைப்பு எட்டிப்பார்க்கும்.
"சுத்திமுத்தி எங்காவது இருக்கிறானா", என்று பார்த்துவிட்டு, அவனைக் காணாததால், ஒரு சின்ன ஏமாற்றத்துடன், அந்த இடத்தை கடந்துவிடுவாள்.
அந்த வாரம் அப்படியே முடிய, வெள்ளிக்கிழமை இரவு, அம்மாவைப் பார்ப்பதற்காக மதுரைக்கு கிளம்பினாள், யாழினி.
வழக்கமாக மதுரையைச் சென்றடைந்ததும், ஆட்டோ ஒன்று பிடித்து, தபால் தந்தி நகரில் இருக்கும் தன் வீட்டில் இறங்குவாள்.
அன்று ரயில் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டதால், எப்போதையும்விட கொஞ்சம் சீக்கிரமாகவே வீட்டைச் சென்றடைந்தாள்.
காலை ஆறிலிருந்து எட்டு வரை, அவள் அம்மா டியூஷன் எடுக்கும் நேரம். அதனால், இன்று யாழினி வீட்டிற்குள் நுழைந்தபோது, வராந்தாவில் தன் டியூஷன் பிள்ளைகளை உட்காரவைத்து, ஏதோ பரீட்சை நடத்திக் கொண்டிருந்தாள், வானதி.
வானதி, யாழினியின் அம்மா. தனியார் பள்ளி ஒன்றில், கணக்கு டீச்சராக வேலை செய்கிறாள். அத்தோடு, காலையும் மாலையும் இருபது மாணவர்களுக்கு , கணக்கு டியூஷன் எடுப்பதும் வழக்கம்.
வாசலில், யாழினியைப் பார்த்ததுமே, வானதியின் முகம் மலர்ந்தது.
"யாழு, இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டியே !! " , என்று முழுவதுமான மகிழ்ச்சியோடு கேட்டுவிட்டு, தன் மகளை உள்ளே செல்லுமாறு கூறினாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில், ஏற்கனவே டியூஷன் பரீட்சையை முடித்த ஒரு மாணவியை சூப்பர்விஷனுக்கு வைத்துவிட்டு, ஹாலினுள் யாழினியைப் பார்ப்பதற்காக வந்தாள்.
அந்த சிறிய அளவிலான ஹாலில் இருந்த சோபாவில், சோர்ந்தபடி படுத்திருந்தாள், யாழினி.
"ஏன்டா, கட்டில்ல போய் படுத்துக்கறது தானே !! ஏன் இப்படி சோபால படுக்கணும் ? முதுகுல்ல வலிக்கும் " , என்று சொல்லிவிட்டு, கிச்சனுக்குள் நுழைந்து அவசரமாக ஒரு காபியை போட்டுக் கொண்டுவந்து தன் மகளிடம் நீட்டினாள்.
"களைப்பால அப்படியே படுத்துட்டேன்மா. காபி குடிச்சிட்டு உள்ள போயி படுத்துக்குறேன்" , என்று கண்களைக் கசக்கியபடியே, காப்பியை வாங்கி குடித்த மகளின் தலையைத் தடவிக்கொடுத்து,
"பத்து நிமிஷம் பொறுத்துக்கோ டா. இட்லி ஊத்துறேன். சாப்பிட்டு முடிச்சிட்டா, ஒரு குட்டி தூக்கமே போட்டுரலாம். களைப்பு தீந்துரும்" , என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவள் கிச்சனுக்குள் நுழைந்தாள்.
பத்தே நிமிடத்தில், ஆவிபறக்கும் இட்லிகளோடு வந்து பார்த்தால், நன்றாகத் தூங்கிப்போயிருந்தாள், யாழினி. அந்த சோபாவிலேயே தூங்கிக்கொண்டிருந்த தன் மகளை, பாசத்தோடு பார்த்தாள், வானதி.
அடுத்த பத்து நிமிடங்களில் டியூஷனுக்கு வந்த பிள்ளைகளை எல்லாம் அனுப்பிவைத்துவிட்டு, யாழினியின் அருகில் வந்து உட்கார்ந்து, அவள் தலைமுடியை மெதுவாக வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
"எவ்வளவு வேகமாக வளர்ந்து விட்டாள் ?? இப்போதுதான் இவளை வைத்துக்கொண்டு எப்படி கரைசேரப்போகிறோமோ என்று தவித்து நின்றாற்போல் இருக்கிறது. அதற்குள், கிடுகிடுவென வளர்ந்து என்னையே தாங்கும் விழுதுபோல ஆகிவிட்டாள்" , என்று எண்ணிக் கொண்டு , தன் கடந்த காலத்தை சில நிமிடங்கள் அசைபோட்டாள், வானதி.
வானதியின் திருமணம் ஒரு காதல் திருமணம். கல்லூரியில் படிக்கும்போதே, அவளுக்கு கார்த்திகேயனுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாற, கல்லூரி இறுதி ஆண்டு முடிந்ததும் , இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இரண்டு பேர் வீட்டிலும், அவர்கள் திருமணத்தை ஒத்துக் கொள்ளவே இல்லை. இதன் மத்தியில், வானதி ஒரு பள்ளியில் வேலை பார்க்க ஆரம்பிக்க, கார்த்திகேயன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். வானதியின் சம்பாத்தியத்திலேயே, அவர்கள் இருவரின் வாழ்க்கையும் நகர ஆரம்பித்தது .
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வானதி கருவுற்றபோது, "இப்போதைக்கு குழந்தை வேண்டாமே !! கொஞ்சநாள் தள்ளிப் போடலாமே !! " என்று கார்த்திகேயன் சொன்னான்.
"முதல் குழந்தை !! எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் !! நிச்சயம் கலைக்கமாட்டேன்" , என்று காரணம் காட்டி, அவன் திரும்பத்திரும்பச் சொல்லியும் கேட்காமல், அவள் தனது முதல் குழந்தையை , அதாவது யாழினியை பெற்றுக் கொண்டாள்.
"யாழினி......" , அந்த குழந்தையின் அழுகைகூட வானதிக்கு , சங்கீதமாகத் தான் கேட்டது. கார்த்திகேயனுக்கு யாழினி மீது அந்த அளவுக்கு ஒரு பிரியமெல்லாம் கிடையாது. 'ஏனோ தானோ' வென்று இருந்தான் .
பின்னாளில், அவன் நடத்தை கொஞ்சம்கொஞ்சமாக மாறி, இருவருக்குமிடையில் ஒரு விரிசல் விழத்தொடங்கியது.
அதுவும், அந்த பிரபலமான வக்கீலிடம் அவன் அசிஸ்டன்ட் ஆக சேர்ந்த நாளிலிருந்து, அவனது போக்கு சுத்தமாக மாறிப்போனது. அந்த வக்கீலின் பெண்ணுடன், அவனுக்கு ஏற்பட்ட தொடர்பு, ஒரு சில மாதங்களில் காதலாக மலர, அவன் வானதியை சுத்தமாக ஒதுக்க ஆரம்பித்தான்.
ஆரம்ப நாட்களில், குழந்தை யாழினியுடன் தனது நேரம் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருந்த வானதிக்கு, அவனது போக்கில் ஏற்பட்ட மாற்றம் புலப்படவில்லை. அவள் அதை முழுவதுமாக உணரும் முன்பே, அவன் ஒரு பத்திரத்தைக் கொண்டு வந்து அவள் முன் நீட்டினான்.
அது ஒரு விவாகரத்துப் பத்திரம். அந்த விவாகரத்துப் பத்திரத்தைப் பிரித்துப்படித்த நாளை, வானதியால் என்றுமே மறக்க முடியாது.
இன்றுகூட , அதை நினைத்ததால் , வானதியின் கண்களில் நீர் பெருக ஆரம்பித்தது.
கண்மூடி கண்திறக்குமுன் அந்த காதல் வாழ்க்கை , கனவுபோல ஆனது.
"அப்பா எங்கே ? " , என்று கேட்கும் குழந்தையை சமாளித்துக்கொண்டு, அந்த தனியார் பள்ளியிலிருந்து வரும் சொற்பமான வருமானத்தில் , ஒற்றையாய் அந்த வீட்டையும் குழந்தையின் படிப்புச்செலவையும் சமாளித்துக்கொண்டு, அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சொந்தபந்தங்களையும் பகைத்துக்கொண்டதால், துணைக்கு என்று ஒருவர் கூட கிடையாது .
இதனாலேயோ என்னவோ , காதல் திருமணங்களின் மீது , வானதிக்கு ஒரு பெருவாரியான வெறுப்பு ஏற்பட்டது . எப்படியாவது, தானே பார்த்து யாழினிக்கு , ஒரு நல்ல இடத்தில், ஒரு நல்ல வரன் அமைத்துத்தர வேண்டும் என்பது மட்டுமே , வானதியின் ஒரே குறிக்கோளாக இருந்தது .
"யாழினியும் , இப்போ வளர்ந்துட்டா . தன் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு வந்துட்டா . இதுக்கு மேல் , அதிகம் தாமதிக்கக் கூடாது . வரன் தேடும் வேலையை , சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும் " , என்பதையெல்லாம் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டு , மறுபடியும் ஒருமுறை யாழினியின் முகத்தை பார்த்தாள் , வானதி .
தூக்கத்திலேயே , தன் அழகான இதழ்களை வளைத்து , சிரித்தாள் , யாழினி
To Be Continued..
அடுத்த பகுதி - PART 7This is my first Romantic Novel in Tamil
If you are a fan of Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi.
You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.