யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 7



அந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில், சென்னைக்குத் திரும்புவதற்காக, தனது உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள், யாழினி.

"இதில் சுஜிக்காக அதிரசம் வாங்கி வச்சிருக்கேன். மறக்காம, நாளைக்கே அவகிட்ட குடுத்துரு. அப்படியே, அவங்க அம்மா அப்பாவையும் விசாரிச்சதா சொல்லு" , என்று ஒரு சம்படத்தோடு வந்து நின்றாள், வானதி.

"இத்தோட, இத நீ நாலாவது தடவை சொல்லுறம்மா. கண்டிப்பா, நாளைக்கு போனதும் முதல் வேலையா, இத அவ கிட்ட கொடுத்துடறேன். போதுமா ?" , சொல்லிவிட்டு யாழினி சிரிக்க,

"அப்படி இல்லடா. போன தடவ, இதே மாதிரிதான் சொன்ன. அப்புறம், நாலு நாள் கழிச்சித்தான் கொண்டுபோய் கொடுத்த. யாருக்கு எது கொடுத்தாலும், புதுசா இருக்கும்போதே கொடுத்துரணும் டா" என்று சொல்லி, அந்த சம்படத்தை யாழினியின் பைக்குள் திணித்தாள்.

"அப்புறம் யாழிம்மா, நான் சொன்னத கொஞ்சம் யோசிச்சிப் பாரு. நல்ல வரன். அந்த பையனுக்கு, ரெண்டு அண்ணன்கள், ரெண்டு அக்கா. அந்த மாதிரி ஒரு குடும்பத்துல நீ கல்யாணமாகிப் போனா, உனக்கு இன்னும் நிறைய சொந்தக்காரங்க கிடைப்பாங்க. ரெண்டு பேரா, தனியா நிற்க்கிற நமக்கு, அந்த மாதிரியான ஆதரவு கண்டிப்பா தேவை.

அதுமட்டுமில்லாம, நம்ம நிலைமை தெரிஞ்சி வர்ற சம்பந்தம். அதிகமா, நாள் எடுத்துக்காத. யோசிச்சு சொல்லு" , என்றாள்.

"ம்ம்.. புரியுது.. சரிம்மா.." , என்று பெயருக்குச் சொன்னாலும், யாழினிக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கத்தான் செய்தது.

எப்பொழுதும், எல்லா விஷயங்களையும், சரளமாகப் பகிர்ந்து கொள்ளும் தன் அம்மாவிடம், மணாளனைப் பற்றிய விஷயங்களை மட்டும், ஏன் மறைக்கவேண்டும் என்று தோன்றியது ?

சரி. அப்படியே சொல்வதென்றாலும், என்னவென்று சொல்வது ? அவளுக்கு அவன்மீது ஏற்பட்டிருக்கும் இந்த ஈர்ப்பைபற்றி, என்னத்தான் சொல்லமுடியும் ?

"அம்மா, ஒரு நிமிஷம்" , என்று கூப்பிட்டு விட்டு, சொல்லவந்த விஷயத்தைச் சொல்லாமல்,

"இல்ல சும்மாதான். ஒண்ணும் முக்கியமானதில்ல" , என்று சமாளித்துக்கொண்டாள்.

மதுரையிலிருந்து கிளம்பி, சென்னை வந்தபிறகுகூட, அந்த குற்றவுணர்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்தது. 

"தன்னை மட்டுமே, உலகமாக நினைக்கும் தன் அம்மாவிடம், எதையோ மறைத்து விட்டோம் !! " என்பது போன்ற உணர்வு, அவளை வாட்டி வதைத்தது.

அடுத்த இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை. "ஆபீஸ் வேலை ஒருபுறம், இந்த குழப்பம் மறுபுறம்" , என்று மனதளவில், ஒரு மந்தமான நிலையிலேயே இருந்தாள், யாழினி. எதைப்பற்றியும், அதிகம் யோசிக்கவில்லை.

வழக்கமாக, சிக்னலின் அருகில் நிற்கும் போது, மணாளனின் நினைப்பு வந்து போகும். ஆனால், இந்த இரண்டு நாட்கள், அந்த நினைப்பும்கூட வரவில்லை.

ஆனால், 'காதல்' அவளை அப்படியே விட்டு விடுமா என்ன ?

அந்த நாளில், இரவு ஏழு மணியளவில், ராமாபுரம் சிக்னலைக் கடப்பதற்காக, சாலையின் ஒருபுறமாக நின்றுகொண்டிருந்தாள். அவள் முகத்தில், மிகுதியான சோர்வு. முடிகூட கொஞ்சம் கலைந்திருந்தது. சிக்னல் பழுதடைந்திருந்ததால், டிராபிக் போலீஸின் சைகைக்காகக் காத்திருக்க நேர்ந்தது.

அவர் சைகைகாக, அவரையே பார்த்துக்கொண்டிருந்தபோது, அவளது முதுகுக்கு சற்றே பின்னால், யாரோ நிற்பது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.

ஒரு சூடனான மூச்சுக்காற்று. எதிர்பாராத வகையில், "யாழினி" என்ற மென்மையான குரல்.

யோசித்துக் கொண்டே, தனது வலப்புறமாகத் தலையைத் திருப்பி, பின்னால் பார்த்தவளுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி.

அங்கே நின்றது, "மணாளன்" .

அவளுக்கு திடீரென்று 'சாக்'கடித்தது போன்ற உணர்வு. மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு, ஒரு திணறலும் ஏற்பட்டது. பல நாட்களாக, தான் பார்க்க விரும்பிய ஒருவனை, தன் விழிகள் தேடிக்கொண்டிருந்த ஒருவனை, இவ்வளவு அருகில் கண்டதாலோ !! என்னவோ !!

அவள், அதை சரி செய்யும் முன்பே, அவன் "மிஸ். யாழினி, உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். அனுமதி கிடைக்குமா ? " , என்றான்.

அவளையும் அறியாமல், "ஆம்" என்று, அவள் தலை, அசைந்தது.

பொதுவாக, ஒருவர் கேள்வி கேட்கும்போது, அந்த கேள்விக்கான பதிலை, நம் மனம் உடனே சொன்னாலும், மூளை யோசித்துவிட்டுத்தான் சொல்லும்.

இன்றோ, ஒரு அனிச்சை செயல்போல, அவள் மூளை எதையும் சிந்திக்கும் முன்பே, "சரி" என்ற வண்ணம் தலை அசைந்திருக்கிறது.

"இங்க வேணாம். பக்கத்துல இருக்குற ரெஸ்டாரன்ட் எதுக்காவது, போய் பேசலாமா ? " என்று அவன் கேட்க, முன் சொன்னது போன்றே, எதையும் யோசிக்காமல், அவள் கால்கள் அவனைப் பின்தொடர்ந்தன.

அவன் அழைத்துச்சென்ற அந்த ரெஸ்டாரண்டின் அமைப்பு, மிகவும் நேர்த்தியாக இருந்தது. அது ஒரு 'ரூப் டாப் ரெஸ்டாரெண்ட்'. தோட்டம் போல வடிவமைக்கப் பட்டிருந்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த பூச்செடிகளும், கொடிகளும், அவற்றிலிருந்து பூக்களும், மிதமான வாசமும், ஏதோ நந்தவனத்திற்கே வந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தின.

குறிப்பாக, கம்பிகளைச் சுற்றி வளைந்திருந்த மயில் மாணிக்கப் பூக்கள், அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்தன. மிகச்சிறிய வயதில், தனது தோழி ஒருத்தி வீட்டில், பார்த்ததாக ஞாபகம். இன்று, இங்குதான் மறுபடியும் பார்க்கிறாள்.

"இரைச்சலோடு கூடிய இந்த சிக்னலின் அருகில், இப்படி ஒரு ரம்மியமான ரெஸ்டாரன்டா !! " , என்று அவள் வியப்பிலே ஆழ்ந்திருந்தபோது.

"இங்கே உட்காரலாமா, யாழினி ? " என்று அவன் கேட்க, மண்டையை ஆட்டிக்கொண்டு, அவன் காட்டிய அதே இடத்தில் உட்கார்ந்தாள், அவள்.

யோசித்தபடியே, மலர்களைப் பார்ப்பதுபோல, பாசாங்கு செய்துகொண்டிருந்தாள். எவ்வளவு நேரம்தான், அப்படி சமாளிக்க முடியும் ?

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நிமிர்ந்து அவனைப் பார்த்தபோது, அவன் 'அவளைத்தான் இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்பது புரிந்தது.

அவன் பார்வை தீர்க்கமாகப் பாய்ந்து, அவனை முதன்முதலில் சந்தித்தபோது ஏற்படுத்திய, அதே உணர்வை ஏற்படுத்தியது. அவன் வசீகரமான முகத்தில், தவழ்ந்த புன்னகை, அவள் முகத்திலும் பரவியது.

இன்று வித்யாசமான உடையில் இருக்குகிறான். போலீஸ் அணியும் சீருடை இல்லை. டி-ஷர்ட்டும் இல்லை. நேர்த்தியாக அழுத்தி இஸ்திரி போடப்பட்ட, செக்டு மெரூன் நிற, முழுக்கைச் சட்டை. என்றும், அவன் அணிந்திருக்கும் அந்த வாட்ச். கைகளால் மோவாயைத் தாங்கி, அவன் உட்கார்ந்திருக்கும் தோரணை. தன்னையுமறியாமல், பார்த்துக்கொண்டே இருந்தாள்.

"ஏற்கனவே, இங்க வந்துருக்குறீங்களா, யாழினி ?" என்றான், அவன்.

அப்பொழுதான், சுய நினைவுக்கு வந்தவளாய் சுதாரித்துக்கொண்டு, "ஹ்ம்ம்.. அது வந்து.. இதுவரை இல்லை. இப்படி ஒண்ணு இருக்கறதே தெரியாது" , என்றாள்.

"ஓ.."

"சார், ஆர்டர் பண்ண ரெடியா ? " , சர்வர் வந்து இடைமறித்தார்.

அவள், மீண்டும் தலைகுனிந்தாள். இப்படி ஒரு ஆணுடன், தனியாக ஒரு இடத்தில் வந்து அமர்ந்திருப்பது, அவளுக்கு இது முதல் முறை. அதனால், அவளையறியாமலேயே, கூச்சம் மேலிட்டது. சுற்றி அமர்ந்திருப்பவர்கள், தங்களையே பார்ப்பதுபோன்று தோன்றியது. அது உண்மையில்லையென்றாலும், அவளுக்கு அப்படித்தான் தோன்றியது.

"யாழினி.. உங்களுக்கு என்ன வேணும் ?"

அப்போதுதான் அந்த மெனுகார்டை, பெயருக்குக் கூடத் தான் பார்க்கவில்லை, என்பது அவளுக்கு உரைத்தது.

யோசித்துவிட்டு, "ஒரு காஃபி போதும்" என்றாள்.

"ராத்திரி ஏழு மணியாகுது. காபி மட்டும் எப்படி போதும் ? " என்று கேட்டுவிட்டு, "இங்கே எல்லாமே, நல்லா இருக்கும். வித்யாசமாவும் இருக்கும். மெனுவைப் பார்த்துட்டு சொல்லுங்க " , என்றான்.

அவன் ஒரு சாண்ட்விச்சை ஆர்டர் செய்ய, அவளும் அதையே சொல்லிவிட்டு, கூடுதலாக ஒரு ஜுஸையம் சொன்னாள்.

சர்வர் சென்றதும், மறுபடியும் அமைதி.

ஒரு நொடி, மூளைக்குள் ஸ்பார்க் அடிக்க, அப்போதுதான் ஞானோதயம் வந்தவள் போல, " எனக்கு ஒரு சந்தேகம். என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் ? நான் இதுவரை என் பெயர உங்ககிட்ட சொன்னதே இல்லையே !! " என்றாள்.

"ஹா ஹா. இன்ட்ரஸ்டிங். நான்கூட உங்ககிட்ட என் பெயரைச் சொல்லவே இல்லை. உங்களுக்கு என் பேரு எப்படி தெரியும் ? அதே மாதிரித்தான் " என்றான்.

'ஏன்தான் கேட்டோமோ ? ' , என்பது போல இருந்தது அவளுக்கு.

"அது.. உங்க யூனிபார்மில நீங்க குத்தியிருந்த பேட்ஜ். அத பாத்துதான்" , என்று சொல்லி நாக்கைக் கடித்துக்கொண்டு, "ஆமா, நான் இதுவரை உங்கள பேர்சொல்லி கூப்பிட்டதே இல்லையே !! பின்ன எப்படி, எனக்கு உங்க பெயர் தெரியும்னு... "

"ஹா ஹா" , மறுபடியும் அதே சிரிப்பு.

'தயவு செய்து அப்படி சிரிக்காதீர்கள். எனக்கு என்னவோ செய்கிறது' , என்பதுபோல இருந்தது அவளுக்கு. அவஸ்த்தையுடன், அவனைப் பார்த்தாள்.

"நீங்க கூப்பிடல. ஆனா உங்க பிரண்டு சொன்னாங்களே.. அன்னைக்கு.. செயின்ட் தாமஸ் மவுண்ட்ல வச்சி.. நீங்க ஏதோ, மணாளன் நினைப்பில இருந்ததா !! அது நானில்லையா ?? "

'அடப்பாவி சுஜி. உன்னாலதானா !!' , என்று மனதுக்குள் செல்லமாக திட்டிக்கொண்டு,

"அப்படியில்லை...அவ சொன்னது என்னன்னா.." , முழுவதும் நனைந்தபிறகு, முக்காடு போடுவதைப் போல் இருந்தது.

பேச்சை மாற்றுவதற்காக "சரி, என் பேர... எப்படி ? ", என்றாள்.

"அதுவும் அன்னைக்குதான். ஞாபகம் இல்லையா ? நீங்க கீழே விழப்போனப்போ, ஓடிவந்து கட்டிப்பிடிச்சுட்டு சொன்னாங்களே !! " , கொஞ்சம்கூட யோசிக்காமல் பதில் சொன்னான்.

ஆச்சரியம்தான். எதையெல்லாம் கவனித்திருக்கிறான், இவன்.

"அந்த ஒரு நொடியிலேயே, இது எல்லாத்தையும் நோட் பண்ணுனீங்களா ?"

"நான் பாக்குற வேல அப்படி. இந்த வேலையில இருந்துட்டு, இது கூட பண்ணலன்னா எப்படி ?"

"ஓ.. அப்போ, இந்த மாதிரி பொண்ணுங்களோட பெயரெல்லாம் 'நோட்' பண்ணுறதுக்குத்தான், போலீஸ் வேலைக்கு வந்தீங்களாக்கும் !! " , சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள்.

'அதெப்படி ஒரே சந்திப்பில், இவ்வளவு உரிமையெடுத்துக் கொண்டோம் ? ' , என்று அவளுக்குப் புரியவில்லை.

"சார்.. யுவர் சாண்ட்விச்.."

வெயிட்டரின் அழைப்பில், அந்த பேச்சு கிடப்பில் போடப்பட்டது.

அதுவரை, சாப்பிடும் எண்ணம் இல்லயென்றாலும்கூட, அவர் வைத்துப்போன பதார்த்தங்களின் வாசத்திலும், பசியிலும், அந்த சாண்ட்விச்சை சுவைக்க ஆரம்பித்தாள்.

உண்மையில், அது மிகவும் நன்றாக இருந்தது. உருக்கிய வெண்ணெயின் வாசம் தூக்கலாக இருந்ததனால், 'சுவை' , ஒருபடி மேலாகவே இருந்தது.

சாப்பிடும்பொழுதில், இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

முடித்தபின், அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வரவே, "அவன் சீக்கிரம் கிளம்பவேண்டும்" என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

"பில்லை நானே கொடுக்குறேன்" , என்று அவள் சொன்னபோது,

"இல்ல, நான் ஏற்கனவே செட்டில் பண்ணிட்டேன். கை கழுவுவதற்காகப் போனேனே அப்போவே. ஒண்ணும் பிரச்சினையில்ல, அடுத்த முறை நீங்களே கொடுத்துருங்க. ஈகுவாலிட்டி. சரிதானே !! " , என்றான்.

சிரித்துக்கொண்டாள்.

இருவரும் வெளியே வந்தார்கள்.

"நான் டிராப் பண்ணவா ?" , என்றான்.

"இல்லை. நானே போய்டுவேன்"

முதல் சந்திப்பிலேயே, அவளிடம் அதிகம் உரிமையெடுக்க முடியாது. அது இங்கீதமில்லையென்பது, அவனுக்குத் தெரியும். அதனால், அவளைக் கட்டாயப் படுத்தவில்லை.

"சரி, பத்திரமாப் போங்க. அப்புறம், திரும்ப எப்போ பாக்கலாம்? " , என்று அவன் கேட்க,

ஒரு புன்னகையைமட்டும் பதிலாய்த் தந்துவிட்டு, தான் செல்லவேண்டிய திசையை நோக்கித் திரும்பினாள். மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

'ஒருமுறை பின்னல் திரும்பிப் பார்த்தால் என்ன' , என்று யோசித்துவிட்டு, 'இல்லை. வேண்டாம்" , என்று கட்டுப்படுத்திக் கொண்டாள். மீண்டும், நடந்தாள்.

இத்தனை நாள், அப்படி நடக்கும்போது துணைக்கென்று, அவள் யாரையும் எதிர்பார்த்ததில்லை.

ஆனால், இன்று. அவள் நிழல், தன்னுடன் நடக்க, அவன் நிழலைத் தேடி ஏங்க ஆரம்பித்தது.

யாழினி, வருவாள்.


அடுத்த பகுதி - PART 8

This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post