யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 8


 "ஏண்டி, நீ சொல்றதெல்லாம் உண்மைதானா ? இல்ல கனவு கண்டு உளருறியா ?" , சுஜி கேட்க, நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் யாழினி.

"யாழினி மேடம், காதுல விழுதா ? உங்களத்தான் கேக்குறேன்"

"எல்லாம் உண்மைதான்" , என்று சொல்லிவிட்டு, யாழினி மறுபடியும் சிரிக்க,

"அப்போ.. உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சு. தனியா ஒருத்தரோட ரெஸ்ட்டாரண்ட் போற அளவுக்கு " , என்று தன் வழக்கமான கிண்டலை ஆரம்பித்தாள், சுஜி.

"நான் போகணும்னு நினைக்கல. ஆனா, எப்படி போனேன்னும் தெரியல"

"ஓ.. அப்போ கால் தானாவே நடந்ததுன்னு சொல்லுற.. ம்ம்ம்.. ம்ம்ம்.." , என்று தன் ஒரு புருவத்தைமட்டும் தூக்கிக்கொண்டு தலையசைத்தாள் சுஜி.

"ஓய்ய்ய்ய்.... "

"யாழி, இனிமேல், எல்லாம் அப்படித்தான். எனக்கு தெரியும்" , கண்ணடித்தாள்.

"அந்த ரெஸ்ட்டாரண்ட் ரொம்ப நல்லா இருந்தது சுஜி. கண்டிப்பா, நம்ம ரெண்டு பேரும், ஒரு நாள் அங்க போகணும். செம்பருத்திப்பூவும், தேனும் கலந்து, நல்ல சிகப்பு நிறத்துல, ஒரு ஜூஸ் கொடுத்தானே பாக்கணும். அப்படி ஒரு டேஸ்ட்" , யாழினி பேச்சை மாற்ற,

"என்கிட்டயே, பேச்ச மாத்த முயற்சி பண்ணுற !! ம்ம்ம்.. நல்ல முன்னேற்றம்டீ " , என்று யாழினியின் கன்னத்தை தட்டினாள், சுஜி.

யாழினி, வெட்கப்பட்டாள். அவள் வெட்கப்படும்போது, இன்னும் அழகாகத் தெரிந்தாள். அந்த நொடியில், சுஜிக்கு ஒரு மெல்லிய கலக்கம் ஏற்பட்டது. 

"யாழு, நான் ஒண்ணு சொன்னா, தப்பா நினைச்சிக்க மாட்டியே ? "

"ம்ஹூம்.. மாட்டேன். சொல்லு" , இடப்புறமும் வலப்புறமும் தலையை அசைத்து, செல்லம் கொஞ்சியபடியே சொன்ன யாழினியிடம், எதிர்மறையாகப் பேசுவது, அவளுக்கு விருப்பமில்லை.

ஆனாலும், வேறு வழியில்லை. நல்ல தோழிக்கு அடையாளம், தன் தோழிக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வதேயாகும். மேலும், தவறு செய்யும்போதோ, பாதை மாறும்போதோ, இடித்துரைக்கும் உரிமை, உயிர்த்தோழிக்கு இருக்கிறது. ஆகவே, 'அதைச் சொல்வதில் தவறில்லை' என்றே சுஜிக்கு தோன்றியது.

"உன் தனிப்பட்ட விஷயத்தில், மூக்கை நுழைக்கிறேனோன்னு  தவறா நினைக்கக் கூடாது"

"அட.. சொல்லுடி.. எனக்குன்னு, உன்னைத் தாண்டியெல்லாம் தனிப்பட்ட விஷயம் கிடையாது. சொல்லு"

"அந்த ராதா பத்தி எதாவது தெரிஞ்சிதா ? "

யாழினி யோசிக்க, "அதுதாண்டி, அன்னைக்குப் அந்த போட்டோல, அவரோட நெருக்கமா நின்னு போஸ் குடுத்துதே, ஒரு பொண்ணு. பேர்கூட, ராதான்னு கண்டுபிடிச்சோமே. அததான் கேக்குறேன்" , என்று அவளுக்கு ஞாபகப் படுத்தினாள், சுஜி.

யாழினியின் முகம் கொஞ்சம் வாடித்தான் போனது.

"நீ வருத்தப்படுவேன்னு தெரியும் யாழிம்மா. ஆனா, இது உனக்கு 'பப்பி லவ்' கிடையாது. இந்த வயசுல  ஆரம்பிக்கும் காதல், கல்யாணத்துல முடிஞ்சாத்தான், அழகு.

உனக்கும் இது நல்லாவே தெரியும். அதுமட்டுமில்லாம, ஆன்ட்டி உன்மேல வெச்சிருக்கிற நம்பிக்கைக்கு, நீ எது செய்தாலும், நல்லா யோசிச்சு, சரியா மட்டும்தான் செய்யணும் "

"ம்ம்ம்.. புரியுது சுஜி. புரியுது. நான் முன்னெல்லாம் இப்படி கிடையாது. ஆனா, என்னை அறியாமலேயே, இப்போல்லாம், மனசு அலைபாயுது. வேறு எதையுமே யோசிக்கத் தோணமாட்டேங்குது " , உதடுகளை மடித்துக்கொண்டு பெருமூச்சு விட்டாள்.

"ஒண்ணும் பிரச்னையில்ல. அடுத்த முறை, அவரை சந்திக்கிறப்போ, அவருக்கு ஏற்கனவே, திருமணம் நிச்சயமாயிருக்கான்னு கேளு. ஏன்னு கேட்டா, தெரிஞ்சிக்கிறதுக்காகத்தான்னு சொல்லு. அவரே பதில் சொல்லுவார்"

"ஹ்ம்ம்.." , என்று தலையை ஆட்டினாள், யாழினி.

"நான் சொன்னதுல, எதுவும் வருத்தமா ?"

"நிச்சயம் கிடையாது. நீ எதுவா இருந்தாலும், என் நல்லதுக்குத்தான் சொல்லுவ. எனக்குத் தெரியும். நியாயப்படி பார்த்தா, நான் உனக்கு நன்றிதான் சொல்லணும்"

"உன் நன்றி யாருக்கு வேணும் ? ஒண்ணு பண்ணு, ஒரு சாக்கோ பார் வாங்கிக்கொடு"

"வெயிட்டை குறைக்கப் போறேன்னு சொன்ன. இப்போ, ஐஸ்கிரீம் கேக்குற"

"அதெல்லாம் நாளைலேர்ந்து பாத்துக்கலாம். முதல்ல ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு" 

இடையில், என்னதான் அந்த பேச்சு தொய்வுற்றாலும், அந்த உரையாடலின் முடிவில், ஆரம்பத்தில் இருந்த கலகலப்பிற்கே வந்துவிட்டனர்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டதாலோ, என்னவோ. அடுத்தநாள், சுஜிக்கு ஜுரம் வந்துவிட்டது. அவள் அலுவலகத்திற்கு வரவில்லை. அவளில்லாமல, யாழினிக்கு போரடிக்க ஆரம்பித்தது.

முந்தையநாள் உரையாடல் ஞாபகத்துக்கு வரவும், பேஸ்புக்கைத் திறந்து, அந்த ராதாவின் முகப்புப்படத்தை  பார்த்தாள்.

'என்ன ஒரு அழகான பெண் இவள் !!' , என்று தோன்றியது.

நீண்ட மூக்கு. 'கருவண்டு' போன்றிருந்த கண்கள். கண்ணாலேயே, பேசி விடுவாள் போல. அத்தனை அழகாக இருந்தது அவள் கண்கள். 

யாழினியின் கண்கள் கொஞ்சம் அமர்வானவை. சொல்லப்போனால், அவளுடைய முகத்தில் அவள் கண்கள்தான், 'பெரிய மைனஸ்' என்று அவளுக்குத் தோன்றும். அப்படி இருக்கும்போது, இந்தப் பெண்ணின் கண்ணைப் பார்த்தால், அவளுக்கு பொறாமையாக இருந்தது. கைபேசியில், தனது புகைப்படத்தைத் தேடியெடுத்து , தன்  கண்களையும் பார்த்துக்கொண்டாள்.

'ச்ச.. இந்த கண்கள், இன்னும் கொஞ்சம் பெருசாய் இருந்திருக்கலாம்' , என்று தோன்றியது.

ஞாபகம் வந்தவளாய், மணாளனுடன், அந்த பெண் நிற்பதுபோன்ற புகைப்படத்தைத் தேடி, அதைத் தன் கைப்பேசித் திரையில், விரித்துப் பார்த்தாள். இந்தமுறை, சற்று கவனமாகப் பார்த்தபோது, அது ஒரு 'க்ராப்' செய்யப்பட்ட புகைப்படம் போல இருந்தது.

இருவரின் பக்கங்களிலும், வேறு சிலர் இருந்திருக்க வாய்ப்புண்டு. அந்த பெண் ராதா, இதை கிராப் செய்து வைத்திருக்கலாம். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. இது உண்மையான சிந்தனையா ? இல்லை, மணாளனின்மீதான காதலில், இப்படியெல்லாம் தோன்றுகிறதா ? அவளுக்குப் புரியவில்லை.

தனது அலைபேசியில், அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்கும்போது, பின்னாலிருந்து, யாரோ அழைத்தார்கள்.

"யாழினி, நீங்க கேப்ல வர்றீங்களா ? இல்ல சந்தோஷோட கார்ல வர்றீங்களா ?" , என்று கேட்டபடி, பின்னால் வந்து நின்றாள், வித்யா.

"எங்க வரணும்"

"நீங்க மெயில் செக் பண்ணலயா ? இப்போ, ஒரு அரை மணிநேரம் முன்னாடிதான், ஆனந்த் 'மெயில்'  பண்ணிருக்கார். டீம் அவுட்டிங் போகணுமாம். 'கிரீன் பார்க்' ஹோட்டலுக்கு. அதுக்குத்தான் இப்படி அவசர அவசரமா, எல்லாரும் கிளம்பிட்டு இருக்கோம்"

"ப்ச்ச்... முன்னாடியே, தகவல் சொல்லமாட்டாங்களா ?"

"என்ன பண்றது ? எல்லாம், கடைசி நேரம் தான் முடிவு பண்ணுவாரு, அவரு. இன்னைக்குள்ள போகணுமாம். நாம எப்படியும், ஹாஸ்டல் சாப்பாடுதானே சாப்பிடப் போறோம். அதுக்கு பதிலா, இன்னைக்கு கிரீன்பார்க்ல சாப்பிடுவோம். அவ்ளோதான்"

"இல்ல. நான் வரல"

"யாழி, எனக்கு கம்பெனிக்கு வேற யாரும் இல்ல. மத்த எல்லாருமே பசங்க. திவ்யா, இன்னைக்கு ஒர்க் அட் ஹோம். சாக்க்ஷின்னு ஒருத்தி இருக்காளே. அவ எப்போ பாத்தாலும், அந்த நவீணோடதான் கடல போட்டுட்டு இருப்பா. நீங்க இன்னைக்கு வரலைன்னா, நானும் போகப்போறது இல்ல" 

"அது வந்து..." , என்று குழம்பியபடி யாழினி விழிக்க,

"நீங்க சுஜிக்கு மட்டும்தான் ஃபிரண்டா ? எங்கள எல்லாம் ஃபிரண்டா நினைக்க மாட்டீங்களா ?" , என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சொன்னாள், வித்யா.

"இப்படி கேட்டால் எப்படி ? சரி, நானும் வரேன். நான், நீ, சாக்க்ஷி, நவீண், எல்லோரும், சந்தோஷ் கார்ல போகலாம். சரிதானே ?"

"ஓ.. கண்டிப்பா.. தாங்க் யூ, யாழினி"

அவள் சென்றபின், தனது லேப்டாப்பை 'லாக்' செய்துவிட்டு, ரெஸ்ட்ரூமுக்குச் சென்று ஒப்பனையை சரிபார்த்துவிட்டு, கிளம்பினாள்.

லாபியில் வைத்துதான் தெரிந்தது, சந்தோஷின் காரில் ஏற்கனவே, நான்கு பேர் அமர்ந்திருப்பது.

"சாரி கோகிலா. பிளான் கொஞ்சம் மாறிடுச்சு. நீங்க சேவியரோட கார்ல வந்துருங்க" , என்று சொல்லிவிட்டு, பதிலுக்காகக் காத்திராமல்  கிளம்பினான், சந்தோஷ்.

இவர்கள் ஏறிக்கொள்வதற்கு வசதியாக, இவர்கள் முன்னாலேயே வந்து, தன் ஜெட்டாவை நிறுத்தினான், சேவியர்.

இப்போது அதில் ஏறவில்லையென்றால், கோகிலாவுக்கும், தனது பழைய கதையையெல்லாம், விளக்க வேண்டியிருக்கும். அதனால், ஒன்றும் சொல்லாமல் ஏறிக்கொண்டாள், யாழினி.

கார் பிரயாணத்தின் போது, ஒன்றிரண்டு முறை, அவன் பேச முயற்சி செய்தாலும், ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு, அதிகம் கவனிக்காதது போலவே இருந்துகொண்டாள். அவனும், அதிகம் தொந்தரவு செய்யவில்லை. இப்பொழுதெல்லாம், அவன் அவளைப் புரிந்துகொண்டவன் போலத்தான் இருக்கிறான். 

"மனிதர்கள் எல்லோருமே, நல்லவர்கள்தான். சந்தர்ப்பங்களில், வெவ்வேறு மாதிரியாக நடந்துகொள்கிறார்கள்" , என்று நினைத்துக்கொண்டாள்.

ஹோட்டல் கிரீன் பார்க், வடபழனியின் இரைச்சலுக்கு மத்தியில் அமைந்த, ஒரு அழகான ஸ்டார் ஹோட்டல். அதன் உள்ளே சென்றதும், இவ்வளவு நேரம் அடித்த வெயிலும், வெளியே கேட்ட இரைச்சலும், நொடிப்பொழுதில் மறைந்து போயின.

அந்த பெரிய டைனிங் ஹாலில், ஒருபக்கம் பஃபேயில் உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. பார்ப்பதற்கே, அழகாக இருந்தது. 

இரண்டு டேபிள்கள், இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. பத்துபேர், ஒரே இடத்தில் அமர்ந்துகொள்ள, யாழினியும், கோகிலாவும் மட்டும், தனியாக, நான்கு பேருக்கான டேபிளுக்குப் போகும்படி ஆனது. டேபிளைத்  தள்ளி, சேர்த்துப் போடுவதற்கு வழியிருந்தால்கூட, யாழினி அதை விரும்பவில்லை.

"ஆர் யூ ஓகே கர்ல்ஸ் ? ஒன்னும் பிரச்சனை இல்லையே ? " ,என்று விசாரித்துவிட்டுப் போனான், சேவியர். கரிசனையுடன்கூடிய சாதாரண விசாரிப்புதான். ஆனாலும், எப்போது, எப்படி மாறுவான் என்பதை யூகம் செய்ய முடியாது. 

அந்த இடம், யாழினிக்கு, ஒரு மாதிரி அந்நியமாக இருந்தது. எல்லோருமே ரொம்ப பார்மலாக இருந்தனர். கோகிலாவும், கொஞ்சம் அமைதியான ஆள்தான். சுஜி ஒருத்திமட்டும் வந்திருந்தால், இருக்கிற எல்லோரையும் கிண்டல் செய்து, அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றியிருப்பாள். அவள் ஒருத்தி இல்லாதது, 'இந்த மாதிரியான புழுக்கத்தைத் தரும்' , என்று யாழினிக்கு நிச்சயம் தெரியாது.

துவக்கத்திற்காக, அவர்கள் வைத்துவிட்டுப் போன, கபாப் ஐட்டங்களை கொறித்தபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள், யாழினி.

அவளுக்குப் பக்கத்தில், கிட்டத்தட்ட பதினைந்துபேர் அமருமளவுக்கு, ஒரு டேபிளும், அதைச்சுற்றி ஒரு பெரிய குடும்பமும், இருப்பதைப் பார்த்தாள். 

சுமார், மூன்று, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்கள் இருந்தனர். அதில், இருவர் உடுத்தியிருந்த பட்டும், அணிந்திருந்த நகைகளும் மிடுக்காகவும், படாடோபமாகவும், இருந்தது. ஹோட்டலுக்கு வருவதற்கெல்லாம், அது கொஞ்சம் அதிகம்தான்.

மாடர்னாக உடையணிந்த, இரண்டு நடுத்தரவயதுப் பெண்கள், அவர்கள் குழந்தைகள், கணவர்கள் என்று எல்லோருமாக உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு நேரத்தில், 'அது ஒரு பணக்காரக் குடும்பம்' என்பதை கிரகித்துக்கொண்டாள், யாழினி.

'பொருளாதாரத்தில் , எப்படி இருந்தால் என்ன ? அத்தனைபேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. வேறென்ன வேண்டும் ? ' , என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனால், அந்த குடும்பத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், மிகவும் எளிமையாக ஒரு பெண்மணி, அங்கு நடுநாயகமாக அமர்ந்திருப்பது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'கஞ்சி' போடப்பட்ட, மெரூன் நிற காட்டன் புடவையும், கழுத்தில் மெல்லிய சங்கிலியும், கையில் வளையல் அணியாது, இடக்கையில் மட்டும் ஒரு வாட்சுமாக இருந்தார், அந்த பெண்மணி. அவர் முகத்தில் இருந்த சாந்தமும், கம்பீரமும், புன்னகையும், அவரைத் தான், ஏற்கனவே பார்த்திருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தின.

அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, தூரத்திலிருந்து இருவர், அந்த டேபிளுக்கு அருகில் வருவது தெரிந்தது. செல்லம் கொஞ்சியபடி, ஒரு ஆணின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்தாள், அந்த பெண்.

யாழினியால், அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவள், ராதா....

யாழினிக்கு தூக்கிவாரிப் போட்டது.


யாழினி வருவாள்.....


அடுத்த பகுதி - PART 9

This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post