"சீசன் நேரத்துலகூட இப்படி கறாரா அளக்குறீங்களே, மத்த நேரத்துல எப்படி ? ஸ்கேல் வச்சி அளப்பீங்களோ ?", செயின்ட் தாமஸ் மலையடிவாரத்தில் இருந்த அந்த பூக்கடை அக்காவைக் கேலிசெய்து பேசிக்கொண்டிருந்தார்கள் சுஜியும் யாழினியும்.
சென்னையில் இருக்கும் மிக அழகான இடங்களில் செயின்ட் தாமஸ் மலையும் ஒன்று. எந்த கோடையில், எத்தனை டிகிரி வெயில் அடித்தாலும் , அந்த மலையின் உச்சி மட்டும், ஒரு 'ஹில் ஸ்டேஷன்' போன்று இருக்கும்.
அந்த மலையின் உச்சியில் இருக்கும் அமைதியான தேவாலயமும், அந்த தேவாலயத்தை ஒட்டியுள்ள சிறிய இடமும், அந்த இடத்தில் நின்று பார்த்தால் தெரியும் மீனம்பாக்கம் ரன்வேயும் மிகவும் பிரமாதமாக இருக்கும். சொல்லப்போனால், சென்னையில் இப்படி ஒரு இடம் இருப்பது, சென்னைவாசிகள் பலருக்கும்கூடத் தெரிவதில்லை.
சுஜியும் யாழினியும் , எப்போதாவது மனஅமைதியை விரும்பினார்கள் என்றால், சென்றுவரும் இடம் இந்த செயின்ட் தாமஸ் மலையாகத்தான் இருக்கும். அந்த தேவாலயத்தில், ஒரு சிறிய பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, பின்னர் அந்த சிறிய 'பென்ஸ்' போன்ற இடத்தில் நின்று , டாப்வியூவில் தெரியும் விமான ஓடுதளத்தையும், அதன் பக்கத்தில் இருக்கும் பசுமை வாய்ந்த பார்க்கையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இன்றும் கூட, அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள்.
பூக்கடை அக்காவிடம் பேசிமுடித்து, அவள் கொடுத்த முல்லைப்பூவைக் கையில் வாங்கி முகர்ந்து பார்த்தாள், யாழினி. மிதமான வாசம். அவளுக்கு, குப்பென்று மணம்வீசும் பூக்கள் , அவ்வளவாக பிடிப்பதில்லை. அதனாலேயே, மல்லியைவிட முல்லை ரொம்ப பிடிக்கும்.
அதுவும் இன்று, எப்பொழுதும்போல் இல்லாமல் , நல்ல நெருக்கமாகத் தொடுத்திருந்தார்கள். மேலும், இன்று முடியைப் பின்னலிட்டிருந்தது, பூவைச் சூட்டிக்கொள்ள ரொம்ப வசதியாக இருந்தது. தலையில் பூவைத்த பின்னர், பின்னங்கழுத்திலும் பின்னங்காதிலும் ஏற்படும் சில்லென்ற உணர்வு, அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
'சூடியிருந்த முல்லைப் பூவாலா, இல்லை இயற்கையாகவேயா' என்றெல்லாம் தெரியவில்லை, அன்று அந்த இரண்டு பெண்களுமே, எப்பொழுதையும்விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகாகத் தெரிந்தார்கள்.
மலையின் உச்சிக்குச் செல்ல 500 படிக்கட்டுகள் ஏறவேண்டும். என்னவோ தெரியவில்லை, இன்று 200 படிக்கட்டுகள் ஏறுவதற்குள், அவர்களுக்கு மூச்சிரைத்தது. சற்று நேரம், பக்கவாட்டிலிருந்த திண்டுச்சுவற்றில் உட்கார்ந்து, பின் எழுந்தபோது
"லினி", என்ற அந்த குரல் கேட்டது.
நிச்சயம், இந்தமாதிரி அவள் பெயரை அழைப்பது வேறு யாராக இருக்கமுடியும் ? சேவியரைத் தவிர !!
யாழினியை ஒரு இனம்புரியாத பதட்டம் பற்றிக்கொண்டது. அனிச்சையாகவே, சுஜியின் கரத்தைப் பற்றிக்கொள்ளத் தேடினாள். சத்தம் வந்த திசையைநோக்கி பார்த்தபோது, அங்கு சேவியர்தான் நின்றிருந்தான். அவனருகில், இன்னொரு நபரும் நின்றிருந்தார். அநேகமாக , அவன் நண்பராக இருக்க வேண்டும்.
பதற்றத்தில் அவள், "சேவியர், நீங்க எங்கே இந்தப்பக்கம் ?" என்று கேட்டுவிட்டாள்.
"இந்த கேள்விய நான்தான் உன்கிட்ட கேட்கணும். ஹா ஹா ஹா " , என்று ஏதோ ஜோக் அடித்தவன்போல சிரித்துவிட்டு
"நான்தான் உன்கிட்ட முன்னமே சொல்லியிருக்கேனே, லினி . என் வீடு இந்தப்பக்கம் 'பட் ரோடு' ல தான் இருக்குன்னு. நமக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. சும்மா, எப்பவாது எனக்கு பொழுது போகலேன்னா, மலைமேலே ஏறிப்போய் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன். சரி, நீ எங்கே இங்கே ?", என்று சேவியர் கேட்க
"ம்ம்ம்ம்... நாங்க இங்கல்லாம் அடிக்கடி வருவோம். வேடிக்கைபார்க்க மட்டுமில்ல. எங்களுக்கு மதத்தையெல்லாம் மீறி, கடவுள் நம்பிக்கையும் அதிகமாவே இருக்கு", என்று முந்திக்கொண்டாள் சுஜி.
"நான் உன்கிட்ட கேக்கவே இல்லையே !!", என்று மூஞ்சில் அடித்தாற்போல் சொன்னான் சேவியர்.
சுஜியின் முகம் சட்டென்று வாடிப்போனது.
"அவ சரியாத்தான் சொல்றா. நான் சொன்னா என்ன ? அவ சொன்னா என்ன ? சரி, நாங்க கிளம்புறோம்", என்று சொல்லிவிட்டு சுஜியின் கரத்தைப்பிடித்து "வா போகலாம்" , என்றாள் யாழினி.
"ஒன் மினிட் லினி. இவரை உன்கிட்ட அறிமுகம் செய்யணும். இவர் என்னோட க்ளோஸ் பிரெண்ட். பேரு வாசன். வாசன், திஸ் இஸ் யாழினி. நான் சொல்லியிருக்கேனே " , என்று அவரிடம் சொல்லிவிட்டு அவருக்கு ஏதோ சமிக்கை செய்தான்.
அவரும் அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவனிடம் மெல்லிசான குரலில், ஏதோ சொன்னார். அது யாழினிக்கு ஒரு மாதிரி அசவுகரியத்தைத் தந்தது.
உடனேயே, அவள் "ஓ.. வணக்கம்.. நாங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். இப்போ மலைல ஏறினாத்தான் சரிவரும். மன்னிக்கவும், இப்போ நாங்க கிளம்புறோம்" , என்று சொல்லிவிட்டு பதிலுக்காகக் காத்திராமல், படியில் ஏற ஆரம்பித்தாள்.
சுஜியின் முகம், இன்னும் சோர்வுடன்தான் இருந்தது. அவன் சட்டென்று மூஞ்சிலடித்தாற்போல் பேசியது, அவளை அதிகமாக பாதித்திருந்தது என்று யாழினிக்கு நன்றாகப் புரிந்தது.
"நிச்சயம் அவன் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. என் தோழியைச்சொல்ல அவனுக்கென்ன உரிமையிருக்கு ? ", என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே படிகளை ஏறினாலும், அவ்வப்போது 'அவன் அவர்களைப் பின்தொடருகிறானோ' என்ற சந்தேகத்தால், திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தாள்.
அவள் எதிர்பார்த்ததுபோல, சேவியர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து தொந்தரவெல்லாம் கொடுக்கவில்லை. "வெளியிடங்களில், எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற அளவுக்காவது தெரிந்து வைத்திருக்கிறானே", என்பதை நினைக்கும்போது, யாழினிக்கு அவன்மீது கொஞ்சம் மரியாதை கூடியது.
"எதற்கும் ஒருமுறை உறுதிசெய்துகொள்ளலாம்", என்று பின்பக்கம் பார்த்துவிட்டு முன்னால் திரும்பியபோது, தனக்கெதிரே, வந்த அந்த நபரின்மீது இடித்து, நிலைதடுமாறி, பின் அந்த நபராலேயே கைத்தாங்கலாகப் பிடித்து நிறுத்திவைக்கப்பட்டாள்.
இதயம் படபடக்க, கண்களை மூடிக்கொண்டு, மூச்சுவாங்கி நின்றவளை, வேகமாக வந்து அணைத்துக்கொண்டாள் சுஜி.
"அடியேய், நினைப்ப எங்க வெச்சிருக்க ? கொஞ்சம் மிஸ்ஸாயிருந்தா கூட என்ன ஆயிருக்கும் ? உன் அம்மாவுக்கு யார் பதில் சொல்றது ? எல்லாம் அந்த கடன்காரன், மணாளனோட நினைப்பாலதானே !! " , என்று திட்டிக்கொண்டே 'யாழினிக்கு ஏதேனும் அடிபட்டிருக்கிறதா' , என்று அவளைக் கரிசனையோடு சோதனை செய்தாள்.
அப்படி எதுவும் இல்லையென்பது உறுதியானதும், யாழினி விழும்போது தாங்கிப்பிடித்த அந்த நபரைப்பார்த்து " தாங்க் யூ சார்" , என்று மிகவும் பணிவோடு சொன்னாள்.
அந்த நபர் "யூ ஆர் வெல்கம். படியில் ஏறும்போது எப்போதுமே கவனமாக இருங்கள்" , என்றார்.
யாழினிக்கு, அந்த குரலை எங்கோ கேட்டாற்போல் இருந்தது. அப்போதுதான், சுயநினைவு வந்தவளாய் , தலைநிமிர்ந்து அந்த நபரைப் பார்த்தாள். பார்த்தமாத்திரத்தில், அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.
அங்கே அவளெதிரில், சுஜியை நோக்கியபடி நின்றுகொண்டிருந்தது, மணாளன். போலீஸ் உடையில் இல்லாமல், இன்று அந்த மெரூன் சட்டையில் சற்று அதிகம் மிடுக்காக இருந்தான்.
"அப்படியென்றால், இவர்மீதா இடித்தோம் ? இவரா நம்மைத் தாங்கிப்பிடித்தார் ? ஏன் நமக்குமட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது ? நாலைந்து நாட்களாக நம் கண்கள் 'பார்க்கவேண்டும்' , என்று நினைத்த ஒரு நபர், கண்முன்னே நிற்கிறார். ஆனால், அமர்வோடு அவரைப் பார்க்கும்படியான சூழ்நிலையோ, இடமோ இது இல்லை . மேலும் , அன்று அவரிடம் வீராப்பாகப்
பேசிவிட்டு, இன்று இப்படி இடித்துத்தள்ளி அவராலேயே காப்பாற்றப்படும் நிலைக்கு வந்துவிட்டோமே !! " , என்று பல விஷயங்களை அவள் மனம் சிந்தித்துக் குழம்ப, அவளையறியாமலேயே, அவனை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த நொடி, அவனும் திரும்பி இவள்பக்கம் பார்க்க, கண்ணோடு கண் சந்தித்துக்கொள்ளும்படி ஆனது. தீர்க்கமான அவன் பார்வை, அவளுள் சென்று ஏதோ செய்து, அவள் தொண்டையை அடைத்தது.
அந்த நேரத்தில்தான், "யாழு, அவருக்கு நன்றி சொல்லு", என்று அவள் தோளை உலுக்கினாள், சுஜி.
"அதெல்லாம் தேவையில்ல. அவங்க இப்போ என்கிட்டே சண்டைபிடிக்காமல் இருந்தால், அதுவே போதும் !!
உங்களை போல, ஒரு தோழி கிடைப்பதற்கு உங்கள் தோழி கொடுத்து வைத்திருக்க வேண்டும். நைஸ் டு நோ யூ. இப்ப வர்றேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது மீண்டும் சந்திக்கலாம் " , என்று சுஜியைப் பார்த்து சொல்லிவிட்டு, யாழினியைப்பார்த்து மறுபடியும் அந்த மின்னல் பார்வையை வீசிவிட்டுச் சென்றான், மணாளன்.
அந்தப் பார்வை யாழினியை நிலைகுலையச் செய்தது.
"அட !! இந்த காலத்துல இப்படி ஒரு ஜென்டில்மேன். என்ன ஒரு ஆச்சரியம் !! சரி, யாழி மேடம், இப்பவாச்சும் அந்த மணாளனோட நினைப்பு இல்லாம நடக்க ஆரம்பியுங்க. அப்புறம் மறுபடியும் கீழே விழுந்தா தாங்கிப்பிடிக்க , இன்னொரு ஜென்டில்மேன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் " , என்று சுஜி சொல்லியபோதுதான் "இதே மாதிரி இவள், அவன் பெயரை அவன் முன்னாலேயே சொன்னது" , யாழினிக்கு நியாபகம் வந்தது.
அப்படியானால்.. அவன் அதை கவனித்திருந்தானேயானால்.. யாழினிக்கு அவன் மீது ஒரு 'சாப்ட் கார்னர்' இருப்பது, அவனுக்கு இந்நேரம் தெரிந்திருக்குமே !!! என்ன ஒரு வெட்கக்கேடு !!
"இப்படி என்னை மாட்டி விட்டுட்டியேடி சுஜீ ......" , என்று சொல்லி அவளை அடிக்க கையை ஓங்கினாள், யாழினி. எல்லாம், செல்லமாகத்தான்...
யாழினி வருவாள்...
This is my first Romantic Novel in Tamil
If you are a fan of Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi.
You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.