இதை பிரதிலிபி என்னும் APP-ல் படிக்க , இந்த LINK-ஐ பயன்படுத்தவும்
"என்ன அங்கிள், காலையிலேயே ராசிபலனா ? சரி சொல்லுங்க, இந்த வாரம் எனக்கு என்ன போட்டுருக்கு ? ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா நடக்குமா ?", சுஜியின் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்த அடுத்தநொடியே தன் துணுக்கான பேச்சை ஆரம்பித்தாள், யாழினி.
"ஆமா, ஆமா, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஒரு செய்தி இருக்கு. இன்னிக்கு ராத்திரி நல்லா கல்லு மாதிரி நாலு இட்லி கிடைக்கப் போகுது, உனக்கு", துணுக்குத்தனம் சற்றும் குறையாமல் தன் பங்குக்கு அவளை கிண்டல் செய்தார் ராமநாதன்.
ராமநாதன் சுஜியின் அப்பா. இளவட்டங்களோடு சரிசமமாகப் பேசி, கிண்டலும் கேலியும் செய்வதில் அவருக்கு ஒரு தனி ஆனந்தம்.
"வந்ததும் வராததுமா, அவளை எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க ? யாழி, சுஜி உள்ள குளிச்சிட்டிருக்கா. நீ போய் அவ ரூம்ல உன் பேக்க வச்சுட்டு வா. உனக்கு வெஜிடபிள் சூப் ரொம்ப பிடிக்கும்ல. உனக்காகத்தான் பண்ணி வச்சிருக்கேன். சூட்டோட சூடா, ஒரு பவுல் குடிச்சிடு", என்று அவளை கிச்சனுக்குள் அழைத்துபோனாள், சுஜியின் அம்மா.
அப்புறம் என்ன, "சுவையான மதியச்சாப்பாடு, நெட்பிலிக்ஸில் "ஜேன்" என்ற ஆங்கிலத்தொடர், ஒரு குட்டித்தூக்கம்" என்று எல்லாம் சிறப்பாக நடந்தேறியது.
இரவுச் சிற்றுண்டிக்குப் பின்னர், தோழிகள் இருவரும் வழக்கம்போல மொட்டை மாடிக்கு ஏறிச்சென்று, ஒரு பாயை விரித்து உட்கார்ந்துகொண்டார்கள். அந்த நிலவொளியும், சில்லென்ற காற்றும் தூக்கத்தை வரவழைத்தாலும், இவர்களிருவரும் தங்கள் மனத்தில் தேக்கிவைத்துள்ள விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுமுன், தூங்குவது கிடையாது.
மாடிப்பக்கம், வேறுயாரும் அவ்வளவாக வர மாட்டார்கள். அதனால், எந்தமாதிரியான சீட்ரெட் விஷயங்களையும் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கான இடமாக, அந்த மாடி தான் இருந்தது.
"சரி, நீ நேத்து எதோ சொல்லவந்தது நிறுத்துனியே, முதல்ல அத சொல்லு", என்று ஆரம்பித்தாள் சுஜி.
கேட்கவா வேண்டும் ? ராமாபுரம் சிக்னல் பழுதடைந்ததில் ஆரம்பித்து, மணாளனுடன் நடந்த சண்டை வரையிலுமாக அத்தனையையும் சொல்லிமுடித்தாள், யாழினி.
"அடப்பாவி. இவ்வளவு நடந்துருக்கு. மூச்சுவிடலையே நீ நேத்து !!", என்று கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு கேட்டாள், சுஜி.
"என்ன பண்ணுறது ? அதுதான் அந்த வளர்ந்துகெட்டவன் நேத்து என் மூடயே ஸ்பாயில் பண்ணிட்டானே !!"
"ப்ச்.. நியாயந்தான்.. ஆமா, நல்லா பாத்தியா ? அது உண்மையான போலீஸ் டிரஸா இல்ல எதுவும் நாடக கம்பெனிக்காக.."
அவள் முடிக்கும் முன்பே "அதெல்லாம் நல்லாத்தான் பாத்தேன். உண்மையான போலீஸ்தான். நீ வேற பயமுறுத்தாத ..", என்று இடைமறித்தாள் யாழினி.
"ஹா ஹா ஹா.. அட சும்மா சொன்னேன், யாழினி. சரி போட்டோ ஏதாவது இருக்கா ? யாருமே கரைக்க முடியாத யாழினியையே கரைச்சிருக்காருன்னா, அவர பாத்தே ஆகணும்", சுஜி கேட்க "அடடே, நம்மகூட ஒரு போட்டோ எடுத்து வச்சிருக்கலாமோ" என்று மனத்தில் நினைத்துக்கொண்டு "இது என்ன அசட்டுத்தனமான யோசனை", என்று எண்ணி சிரித்துக்கொண்டாள்.
"ஏய் சுஜி. உனக்கு நக்கல் ஜாஸ்தியாத்தான் போகுது. அதெப்படி யாரோ ஒருத்தரை நான் போட்டோல்லாம் எடுத்துவைக்க முடியும் ? ம்ம்ம் ? "
"அட, என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க ? யாரோ ஒருத்தரா அவரு ? ம்ம்,, ம்ம்,, சொல்லுங்க.. யாரோ ஒருத்தரா ?"
யாழினிக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. அதே நேரத்தில், இப்படி ஒருத்தனை ஒரே நாள் சந்திப்பில் காதலன் ஸ்தானத்துக்கு கொண்டுபோய், அவனை நினைத்து உருகுவது சுத்த பைத்தியக்காரத்தனமாகக்கூட தோன்றியது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் உண்மையில் திருமணமானவனா ஆகாதவனா என்பதுகூட, அவளுக்குத் தெரியாது. அதை நினைத்துப் பார்த்ததுமே, ஒருமாதிரியான பயம் அடிவயிற்றிலிருந்து கிளம்பி நெஞ்சுவரை வந்து தொண்டையை அடைத்தது.
"யாழி... என்ன ஒரு மாதிரி இருக்குற ? நான் சும்மாத்தான் கிண்டல் பண்ணுனேன். வருத்தப்படுறியா என்ன ? "
"ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் வேற ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டிருக்கேன்.."
"என்ன விஷயம் ?"
"அது வந்து.. வந்து.. அவருக்கு ஏற்கனவே திருமணமாயிருந்தா ? "
"அட பைத்தியமே. இவ்வளவுதானா ? எடு அந்த பேஸ்புக்க !! அதுல இல்லாதவங்க இப்போ யார் இருக்காங்க ?", என்று முகப்புத்தகத்தைத் திறந்து இருவரும் 'மணாளன்' என்ற நபரை தேட ஆரம்பித்தார்கள்.
ஏகப்பட்ட மணாளன்கள் இருந்தாலும், 'IPS படித்த மணாளன் இவராக மட்டும்தான் இருக்கவேண்டும்', என்ற யூகம் அவர்களுக்கு இருந்தது. ஒருவாறாகத் தேடி, மணாளனின் 'ஐடி'யைக் கண்டுபிடித்தார்கள்.
'ராதா மணாளன்' என்பது அவன் முழுப்பெயர் போலும். 'ஸ்டேட்டஸ் சிங்கிள் " , என்பது தவிர மற்ற எல்லா தகவலும் மறைக்கப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக பயிற்சியின்போது அவன் தனது பேட்ச் மேட்டுகளுடன் எடுத்த்துக்கொண்ட 'க்ரூப் போட்டோ' ஒன்றை, தனது ப்ரொபைல் படமாக செட் செய்து வைத்திருந்தான். ஆனாலும் , எவ்வளவு முயற்சி செய்தாலும், அதை விரிவுபடுத்தி அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
உண்மையில், அதில் ஏமாற்றம் சுஜிக்குத்தான். யாழினியோ அவனை முழுவதுமாக தன் மனதில் வரைந்துவைத்திருந்தாள்,, அதனால், அந்த சிறிய அளவு படத்தில்கூட 'நிற்பது அவன்தான்', என்று அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது.
மேலும், அவனது பக்கத்தை துலாவிப்பார்க்கும்போது, ராதா என்ற ஒரு பெண் தனது பதிவு ஒன்றில் அவனை டேக் செய்திருப்பது தெரியவந்தது.
தொலைதூரத்தில் இருந்து எடுத்த போட்டோ. ஆதலால், விரிவுபடுத்தும்போது அவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அங்கு நிற்பது அவனென்றும், அவன் அந்த பெண்ணோடு 'கொஞ்சம் நெருக்கமாகவே நிற்கிறான்' என்றும் மட்டும் யாழினிக்கு புரிந்தது.
அவளுக்கு இப்போது, அழுகையாக வந்தது. எதோ ஏமாற்றப்பட்டது போன்ற ஒரு உணர்வு உருவாகியது.
"அடச்சீ.. என்ன மாதிரியான உணர்வு இது ?", என்று அவளுக்கு தோன்றியது.
அவன், இவளிடம் 'காதல்' என்ற பெயரில் ஆசைவார்த்தை காட்டவில்லை. காதலிப்பதாக ப்ரொபோஸ் செய்யவில்லை. இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு ஊர் ஊராகவெல்லாம் சுற்றவில்லை. இப்படி எதுவுமே நடக்காதிருக்கும் இந்த நிலையில், இவளுக்கு ஏன் இப்படி ஒரு ஏமாற்றம் ?
ஒருவேளை, யாழினி தன் மனதையும் மீறி 'மணாளனை' உள்ளூர காதலிக்க ஆரம்பித்துவிட்டாளோ ?
அப்படியானால், அவனுடன் நெருக்கமாக இருக்கும் அந்தப்பெண்.. அதுதான், ராதா.. அவனுக்கு யார் ??
யாழினி மீண்டும் வருவாள்.
This is my first Romantic Novel in Tamil
If you are a fan of Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi.
You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.