யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 3

 


இதை பிரதிலிபி என்னும் APP-ல் படிக்க , இந்த LINK-ஐ பயன்படுத்தவும் 

"லினி இந்த பிங்க் கலர் சுடிதாரில் நீ ரொம்பவே அழகா தெரியுற. கார்ஜியஸ்"

"ம்ம்ம் ..."

"ஆமா, நீ போட்டுருக்கிற லிப்ஸ்டிக்  பேபி பிளம் கலர் தானே !! அது கூட இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கு " ,  என்று சொல்லிவிட்டு யாழினியின் அருகில் கிடந்த அந்தச் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டான் சேவியர்.

"ஓ .." , என்று பெயருக்கு சொல்லிவிட்டு இந்தப்பக்கம் சுவற்றைப்பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டாள், யாழினி . 

யாழினிக்கு சேவியரை அவ்வளவாக பிடிப்பதில்லை . ' அவன்மீது வீசும் குப்பென்ற பெர்பியூம் வாசனை ,  சதாசர்வகாலமும் அவள் அழகை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருக்கும் அவன் பேச்சு , இங்கிதம் இல்லாமல் அவன் காட்டும் நெருக்கம் ' என்று எதுவுமே அவளுக்கு பிடிப்பதில்லை.

இது மட்டுமில்லாமல், அவள் பெயரை அவன் சுருக்கிக்கூப்பிடுவது அவளுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.

தங்களுக்கு விருப்பமில்லாதவர்கள், தங்கள் பெயரைச் சுருக்கிக்கூப்பிடுவது பெண்களுக்கு பிடிக்காது. மேலும், "யாழினி" என்ற பெயருக்குத் தான் என்ன குறைச்சல் ? அதிலும், தமிழுக்கே உரித்தான அந்த சிறப்பு ழகரத்தை எடுத்துவிட்டு, அவள் பெயரை 'லினி' என்று அழைப்பது எந்த விதத்தில் நியாயமாகும் ?

அவனை பிடிக்காமல் போனதற்கு, இவையெல்லாம் கூட இரண்டாந்தரமான காரணங்கள்தான் . இதற்கெல்லாம் மேலான. முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது .

இரண்டு மாதங்களுக்கு முன்பு, 'ஏதோ ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும்' என்று சொல்லி யாழினியை மீட்டிங் ரூம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான் சேவியர். அங்கு வைத்து, சிறிய அளவிலான கிப்ட் பாக்ஸ் ஒன்றை அவள் கையில் கொடுத்து, அதில் வைரமோதிரம் இருப்பதாகவும், அவள் அந்த மோதிரத்தையும் தன் காதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான் .

அதை சற்றும் எதிர்பாராத யாழினி, தனக்கு தற்போது காதலிக்கும் எண்ணமே இல்லையென்றும், அப்படி ஒரு எண்ணம் வந்தாலும், இதுவரை அவளுக்கு சேவியரின்மீது எந்தவிதமான ஈர்ப்பும் ஏற்படவில்லையென்றும் சொல்லி மறுத்துப்பேசினாள் .

அதைக்கேட்டு அவனுக்கு கடுமையான கோபம் வந்ததும், அதை மறைத்துக் கொள்ள முயன்று ஒருமாதிரியாக அவன் சிரித்து சமாளித்ததும், அப்பட்டமாகத் தெரிந்தது . அப்போது கூட, அவன் எதிர்பார்த்த விஷயம் நடக்காததால், ஏமாற்றமடைந்து இப்படி ரியாக்ட் செய்கிறான் என்றுதான்  நினைத்தாள்.

ஆனால் அவன் "ஆச்சரியமா இருக்கு யாழினி . வைர மோதிரத்துக்கு மயங்காத பெண்களே இல்லைன்னு சொல்லுவாங்க . நீ என்னடான்னா வேணாம்னு சொல்லிட்ட. ஒருவேளை, இதவிட பெருசா எதுவும் எதிர்பாக்குறியா என்ன ?" , என்று சொன்னபோது அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது .

பெண்களைப் பற்றி இவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் ? எதையாவது விலையுயர்ந்த பொருளைக் காட்டினால், மயங்கி மடியில் விழுமளவுக்கு பலகீனமானவர்கள் என்றா ? இல்லை, பணம்தான் காதலுக்கு அடிப்படை என்றா ?

எப்படி நினைத்தாலும் சரி. அவன் புரிந்துகொண்ட அடிப்படையே 'தவறு' , என்பது மட்டும் யாழினிக்கு நன்றாகப் புரிந்தது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவன் யாழினியை பின்தொடர ஆரம்பித்தான். அவளுக்கு இது ஒரு மாதிரியான பயத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியது. பின்னாட்களில், அவனைப் பார்க்கும்போது ஒரு மாதிரியான வெறுப்பு பற்றிக்கொள்ள இதுவே காரணமாக அமைந்தது.

"லினி, உன்னத்தான் கேக்குறேன். காதுல விழலையா ?"

"ம்ம்ம் .. உஹ் .. ஹம்" கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, "உங்ககிட்ட நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேனே சேவியர் . எனக்கு உங்ககூட பேச விருப்பமில்லைன்னு " என்றாள் .

"அதுக்காக நாங்க அப்படியே விட்டுறமுடியுமா ? எங்க முயற்சிய, நாங்க பண்ணிட்டே தான் இருப்போம். என்ன நான் சொல்றது !! " , என்று சொல்லிவிட்டு அவள் அருகில் இருந்த அந்த ஸ்பூனை எடுத்து அவள் டிபன் பாக்சில் இருந்த வெஜிடபிள் ரைஸை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். 

இரண்டு மூன்று ஸ்பூன்கள் சாப்பிட்டுவிட்டு, "ஹாஸ்டல் சாப்பாடு கூட நல்லாத்தான் இருக்கு" என்று சொல்லிவிட்டு அதே ஸ்பூனில் கொஞ்சம் சாப்பாடு எடுத்து, "நீயும் டேஸ்ட் பண்ணிப்பாரேன் " என்று அவளிடம் நீட்டினான். இவனது இந்த இங்கிதமில்லாத செயல், அவளுக்கு அருவருப்பைத் தந்தது.

அவள் ஒரு மாதிரி முறைக்க, ஏதோ அதன் அர்த்தம் புரிந்தவிட்டவன்போல "இன்னைக்கு இது போதும். நாளை மீண்டும் சந்திக்கலாம் ", என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவன் கிளம்பிய பின்தான் யாழினிக்கு மூச்சுவிடவே முடிந்தது . 

அவன் சாப்பிட்டு மிச்சம் வைத்ததை சாப்பிட மனதில்லாமல் லன்ச் பாக்ஸை அப்படியே மூடி வைத்தாள் யாழினி .

"இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த தொந்தரவு யாழினி ? பேசாம ஹராஸ்மென்ட் செல்-ல கம்ப்ளைன்ட் பண்ணிரலாம். எவ்வளவு சீக்கிரம் பண்ணுறோமோ அவ்வளவுக்கு நல்லது" ,  தன் தோழியின் பிரச்சனையறிந்து சொன்னாள் சுஜி .

"என் நிலைமை என்னன்னு உனக்குத் தெரியாதா சுஜி ? தேவையில்லாத பிரச்சனை எதுக்குன்னு பாக்குறேன். இன்னும் கொஞ்சநாள் பாக்கலாம்" , என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சுவிட்டாள்.

"சரி இவன விடு. நீ ஏதோ சொல்லணும்னு ரொம்ப ஆர்வமா வந்தியே. அது என்ன விஷயம் ? " , தன் தோழியின் மனதை திசைதிருப்பவேண்டி இந்த கேள்வியைக் கேட்டாள் சுஜி.

" இல்லடீ .. இன்னைக்கு அந்த ராஸ்கல் என் நல்லமூட ஸ்பாயில் பண்ணிட்டான். நான் நாளைக்கு சொல்லட்டுமா ? "

"ம்ம்ம் .. அதுவும் சரிதான் . நாளைக்கு சனிக்கிழமை. நீ என் வீட்டுக்கு வந்துரு. அப்படியே, ஞாயிற்றுக்கிழமை ராத்திரி வர தங்குறமாதிரி டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துரு "

சுஜியின் வீடு கிண்டியில் இருந்தது. யாழினி, அவ்வப்போது விடுமுறைகளின்போது அவள் வீட்டுக்குச் சென்று தங்கிவருவது வழக்கம்தான். சுஜியின் குடும்பம் என்பது யாழினியைப் பொறுத்தவரையில் அந்நியப்பட்ட ஒன்று கிடையாது. அவர்களுக்கும்கூட யாழினி, அப்படித்தானே. 

"நான் வர்றதுல அம்மா அப்பாவுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லையே ?" ,  சும்மா ஒரு பேச்சுக்கு யாழினி கேட்க "அடடா .. மறந்துட்டேனே !! பெரிய தொந்தரவு ஒண்ணு இருக்கே !! நீ கிலோ கணக்கில் சாப்பிட்டு எங்க வீட்டு அரிசி எல்லாத்தையும் காலிபண்ணிடுவியே" , என்று கிண்டல் செய்தாள் சுஜி .

இருவரும் மனதாரச் சிரித்தார்கள். அந்த சூழலில், எந்தமாதிரியான ஒரு சிரிப்பு அவர்களுக்கு அவசியமானதாகவே இருந்திருக்கும். 

சுஜியின் சாப்பாட்டையே யாழினியும் பகிர்ந்துகொண்டு, அதற்குப்பின் வேலையில் மூழ்கிவிட அந்த நாள் அப்படியே கழிந்தது.

சாயங்காலம், மறுபடியும் அந்த சிக்னலைக் கடக்க காத்திருக்கும்போது, அன்றையதினம் காலையில் நடந்த அத்தனையும் ஒருமுறை நிழலாடி அவள் உதட்டில் புன்னகையை வரவழைத்தது.

அவளையும் மீறி, அவள் கண்கள் சுற்றுமுற்றும் பார்த்தன. 'அந்த சிக்னலருகே எங்காவது அந்த வண்டியும், காக்கிநிற யூனிபார்ம் அணிந்த இளைஞனும் இருக்கிறார்களா' என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, இல்லாததால் சற்று ஏமாற்றமடைந்து பின், ஹாஸ்டல் சென்று சேர்ந்தாள் யாழினி. 

அவள் கண்கள் அப்படி தேடி அலைந்ததையும், தானாக சிரித்துக்கொண்டதையும், எங்கிருந்தோ இரு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.


அடுத்த பகுதி - PART 4

யாழினி வருவாள்...


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

 

 


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post