யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 12


மணாளனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றது, வேறுயாருமில்லை. அந்தப்பெண் ராதாதான்.

"என்ன அத்தான் இது ? உங்களைத் தேடி, நான் வீடு பூரா அலைஞ்சிட்டு இருந்தேன். நீங்க என்னடான்னா, இப்படி தனியா ஒரு ஓரத்துல வந்து நிக்குறீங்க. பக்கத்துல நின்ன ஆளத் திடீர்னு காணுமேன்னு தேடப்போயி, இப்போ தாலி கட்டுறதையும் பார்க்க முடியாம போயிருச்சு" , என்று சொல்லிக்கொண்டே , அவனை அந்த மேடைப்பக்கமாக இழுத்துப் போனாள், அவள்.

அவள் பேசும்போது, அவள் கன்னங்கள் சிவந்து, மையிடப்பட்ட கண்கள், அத்தனை பாவங்களையும் கொட்டித் தீர்த்தன.

யாழினி, அவளையும் பார்த்தாள், அவள் இருக்கமாகப் பிடித்திருக்கும் மணாளனின் கைகளையும் பார்த்தாள். அவளுக்கு அது சற்று பொறாமையையும், 'நாம் மட்டும் இங்கு அந்நியமாக நிற்கிறோமே' என்ற உணர்வையும் ஏற்படுத்தியது.

மேடைக்கு அருகில் சென்ற ராதா, "நியாயப்படி பார்த்தா, நம்ம தான் முதல்ல பிளெஸ்ஸிங்ஸ் வாங்கிருக்கணும். இப்போ பாருங்க, அத்தான். உங்களால, மற்ற எல்லாரும் வாங்கின பிறகு கடைசில வந்து நிக்கிறோம்" , என்று சிணுங்கிக்கொண்டிருந்தாள்.

அங்கிருந்து ஒரு தவிப்போடு, பின்னால் திரும்பிப் பார்த்து, 'சாரி.. கொஞ்சம் காத்திரு..' என்பது போல சைகை செய்தான், மணாளன்.

"கண்ணம்மா.. முதல்ல வந்தா என்ன ? கடைசி வந்தா என்ன ? உங்க ரெண்டு பேருக்கும்தான் எங்களுடைய  முதல் ஆசீர்வாதமே !!" , என்று சொல்லி, அவர்கள் இருவரையும் பக்கத்தில் கூப்பிட்டு, ஒருசேர அணைத்துக்கொண்டனர், அந்த தம்பதியர்.

அத்தோடு, ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ராதா கேட்க, மணாளன் அங்கிருந்து வேகமாகத் திரும்பிவர முயல்வதை, யாழினியால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனாலும், அந்தப் பெண் ராதா விடுவதாகத் தெரியவில்லை. கட்டாயப்படுத்தி கேட்டுக் கொண்டும், அந்த காட்டன் சேலையணிந்த பெண்மணியிடம் போய், செல்லமாக முறையிட்டுக் கொண்டும் இருந்தாள்.

அவளை மணாளன் ஏதோ சொல்லி கண்டிப்பதையும் , உடனேயே, அவள் அந்த காட்டன் சேலைப் பெண்மணியைக் கட்டிக்கொண்டு விசும்புவதையும்கூடப்  பார்க்க முடிந்தது.

"போட்டோ எடுக்கணும்னு தானடா கேக்குறா ? எடுத்துக்கலாமே.. நாமளும் சேர்ந்தாற்போல ஒரு போட்டோ எடுத்து, ரொம்ப நாளச்சுல்ல. இப்படி விசேஷங்களின்போது எடுத்தால்தானே உண்டு" , என்று அந்த பெண்மணி சொல்ல, அத்தனை பேரும் ஒருசேர நின்று, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 

"நினைச்சத சாதிக்காம விடமாட்டாளே, நம்ம ராதாக்குட்டி" , என்று செல்லமாக அவள் கன்னத்தைக் கிள்ளினார், அந்த வயதானவர்.

பின்னர், ராதாவிடம் அந்த காட்டன் புடவைப் பெண்மணி எதையோ சொல்ல, அந்த வயதானவரின் கையைப் பிடித்து, பக்கத்திலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள், ராதா.

அவள் அந்தப் பக்கமாகச் செல்லவுமே, யாழினியின் பக்கமாக நடந்து வந்தான், மணாளன்.

"ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி, யாழினி. ராதா எப்பவுமே இப்படித்தான். ரொம்பவும் பிடிவாதம். இந்த குடும்பத்தோட செல்லப்பெண்ணா, யாரும் எதுவும் சொல்லவும் முடியாது. ம்ஹும் " , என்றான்.

நடந்த எல்லாவற்றையும் கண்டு, மனதில் ஒரு பாரம் இருந்தாலும், பெயருக்கு "இட்ஸ் ஓகே" , என்றாள் அவள்.

"சரி, என்கூட வா. நான் உன்னை முக்கியமான ஒருத்தர்கிட்ட அறிமுகம் செய்து வைக்கிறேன் " , என்று சொல்லி, அவளை அந்த மேடைப் பக்கமாக கூட்டிச் சென்றான், அவன். 

முதலில், அந்த காட்டன் சேலைப் பெண்மணியிடம் அவளைக் கூட்டிச்சென்று, "ராதாம்மா.. இதுதான் யாழினி" , என்றான்.

"இதுதான் யாழினி என்றால், இவன் ஏற்கனவே நம்மைப்பற்றி

 சொல்லியிருக்கிறானா ? அப்படியெனில், என்னவென்று சொல்லியிருப்பான் ? அதைவிட, யாரென்று சொல்லியிருப்பான் ?" , என்று நினைத்துக் குழம்பியபடி நின்றாள், யாழினி.

அந்த காட்டன் சேலைப்பெண்மணி.. இல்லை.. ராதாம்மா.. அப்படித்தானே, அவன் சொன்னான்.

ராதாம்மா, யாழினின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, " நல்லா இருக்கியா யாழினி ? முதல்ல மன்னிக்கணும். என்னால, உன்ன தனியா வந்து பார்த்து விசாரிச்சிக்க முடியல. 

எங்க அப்பா கொஞ்சம் பலகீனமானவர். நான் அவர் பக்கத்துலேயே நின்னு பாத்துக்கணும். இல்லேன்னா, சின்னப் பையன் மாதிரி, அங்க ஏறட்டா, இல்ல இங்க இறங்கட்டான்னு ஏதாச்சும் பண்ணிடுவாரு. 

வருஷத்துக்கு ஒரு தடவையாவது கீழே விழலைன்னா ஆச்சரியம்தான். விசேஷ நேரம்ல, அதான் இன்னும் ரெண்டு மடங்கு கவனம். தப்பா நினைச்சுக்காதே " , என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.

அவ்வளவு வசீகரமான புன்னகை அது. " மணாளன் சிரிக்கும்போது கூட, இதே மாதிரித்தான் இருக்கும். அப்படியெனில், இவரைப்போலத்தான் மணாளன் இருக்கிறான்போல" , என்று நினைத்துக்கொண்டாள், யாழினி.

" அம்மா எப்படி இருக்காங்க யாழினி ? " ,  என்று தொடர்ந்தாள், ராதாம்மா.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சுஜியின் வீட்டைத்தவிர , இதுவரை யாரும் அவள் அம்மாவை விசாரித்ததே இல்லை. ராதாம்மா இப்படி கேட்கும்பொழுது, நெகிழ்ச்சியும், கூடவே "மணாளன் அவளைப் பற்றிய எல்லாவற்றையும் இவளிடம் சொல்லியிருக்கிறான்" , என்ற  தெளிவும், யாழினிக்கு கிடைத்தது.

"நல்லா இருக்காங்க, ஆன்டி. தேங்க்ஸ் பார் ஆஸ்கிங். நீங்க கேட்டதுல, ரொம்ப சந்தோசம்" , என்றாள் அவள்.

ராதாம்மா, சிரித்துக்கொண்டே.. "யாழினி.. முதல்ல அந்த தேங்க்ஸ்சை நீயே வச்சிக்கோ. இதற்கெல்லாம், நன்றி சொல்லத் தேவையே இல்லை. அப்புறம், நான் மணாளனுக்கு அத்தை. உனக்கு அம்மா முறைக்கு வருவேன். நீ என்னை அம்மான்னோ, இல்ல சித்தின்னோ கூப்பிடலாம். இல்லைன்னா, இதோ இவர்கள் எல்லோரையும்போல, 'ராதாம்மா' என்றுகூடக் கூப்பிடலாம். உன் விருப்பம்தான். ஆனால், ஆன்டி என்று அழைக்காதே. சரியா ? " , என்றாள்.

"சரி ராதாம்மா" , என்றாள் யாழினி.

"நல்ல ட்ரெயினிங் போலயே, மனோ. பொண்ணு, கப்புன்னு பிடிச்சிக்கிட்டா !!" , என்று அவனைக் கிண்டல் செய்தாள், ராதாம்மா.

அவனும், ஒரு மாதிரி சிரித்துக்கொண்டு, ஓரக்கண்ணால் யாழினியைப் பார்த்தான்.

உண்மையில், அவளை 'ராதாம்மா' என்று அழைக்கும்போது, யாழினிக்கு கொஞ்சம்கூட அந்நியமாகத் தோன்றவில்லை. ரொம்ப காலம் பழகிய ஒரு நபரிடம் பேசுவதுபோலவே இருந்தது. அவளது புன்னகை, அவள் பேசிய விதம், அன்பான அந்த குரல், என்று எல்லாமே அவளுக்கு பிடித்திருந்தது.

இப்போது அந்த இடம் சற்று பழகிய இடம்போலத் தோன்றி, கொஞ்சம் எளிதாக மூச்சுவிட முடிந்தது.

"மீனாகிட்ட கூட்டிட்டுப் போ, மனோ. இல்லேன்னா, ரெண்டுபேரும் சீக்கிரம் மேடைல இருந்து ரூமுக்குப்  போயிருவாங்க" , என்று ராதாம்மா சொல்ல, யாழினியைக் கூட்டிக்கொண்டு அந்த மேடைப்பக்கம் போனான், மணாளன்.

"மீனாத்தை, இது யாழினி. என் தோழி " ,என்று அறிமுகம் செய்தான்.

இவளை பார்த்து, அந்தப் பெரியவரின் முகம் மட்டும் கொஞ்சம் டல்லடித்தது. 

ஆனால், மீனாத்தை முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டு, "வா யாழினி.. நல்ல இருக்கியா ? மனோவுக்கு பெண்களில்கூட தோழிகளெல்லாம் இருப்பது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ராதாகிட்டக்கூட ஒழுங்காப் பேசமாட்டான். என்னடா, இவங்கள எப்படி நீ பிரெண்டு பிடிச்ச ?" , என்று செல்லமாக அவன் தோளைத் தட்டினாள்.

"பிரண்ட் ஆகுறதுக்கு, ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் நல்லாப் பேசினா போதாதா ? இந்த காலத்துப் பொண்ணுங்கதான் நல்லா சகஜமாப் பழகுறாங்க. அதனால இவனும் பேசவேண்டி வந்துருக்கும்" , என்றார் அந்தப் பெரியவர். அவர் முகத்தில், கொஞ்சம் கடுகடுப்பு தெரிந்தது.

உடனே மணாளன், "சரி மாமா. நான் இவங்கள, சாப்பிடக் கூட்டிட்டுப் போறேன். மறுபடியும், கங்கிராஜுலேசன்ஸ். எங்க அத்தைய ஒங்க கைல ஒப்படைக்கிறேன். மறுபடியும், பத்திரமாப் பாத்துக்கோங்க " என்று சொல்லிவிட்டு, அவளை கூட்டிக்கொண்டு, மேடையிலிருந்து கீழே இறங்கினான்.

"இப்போ, நீ பாத்த ரெண்டு பெரும், என்னுடைய ரெண்டு அத்தைகள். மீனாத்தை மூத்த அத்தை. ராதாம்மா, சின்ன அத்தை. ஆனால், அவர் எனக்கு அம்மா மாதிரிதான். மாதிரி இல்லை. அம்மாவே தான். 

அப்புறம், மீனாத்தை மாமா கொஞ்சம் சிடுமூஞ்சி. உனக்கே புரிஞ்சிருக்கும். தாத்தாவை மட்டும் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. தாத்தா ரொம்ப நல்லவர். ஆனா, சீக்கிரத்துல கோபம் மட்டும் வந்துரும். பாசமா இருந்தாலும், ஒரேடியாப் பாசமா இருப்பார். 

ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் பிஸினஸ் முழுசயும்கூட அவரேதான் பார்த்துட்டு இருந்தார். இப்போ, கொஞ்ச வருஷமா அவரால முடியல. வயசாகுதுல்ல. இப்போ, ராதாம்மாதான் மொத்த பிசினசையும் கவனிச்சிக்குறாங்க. நான் அப்பப்போ உதவி பண்ணுறதோட சரி. ஆனாலும், எங்க யாராலயும் தாத்தா அளவுக்கு அத கவனிச்சிக்க முடியல. பிகாஸ், ஹி வாஸ் மோர் இன்டு இட். 

வேற யாரு இருக்கா ? ஆங்ங்.. மறந்துட்டேனே.. அந்த வாலுக்குரங்கு, ராதா. அவகிட்ட இப்போ அறிமுகம்பண்ணத் தேவையில்லை. கேட்டா பாத்துக்கலாம்" , சந்தோசமாக மூச்சுவாங்கியபடியே பேசிய அவனிடம் கேட்கவென்று, நிறைய கேள்விகள் இருந்தன அவளுக்கு.

' இதுவரையிலும் இவனது அப்பா அம்மாவைப் பார்க்கவே முடியவில்லையே !! இவன் அப்பா, அம்மா எங்கே இருக்கிறார்கள் ?? அவர்களைப் பற்றி ஏன் இவன் எதுவுமே சொல்லவில்லை ?? இந்த ராதாம்மாவுக்கு குடும்பம் எதுவும் கிடையாதா ?? அவரது கணவர் அல்லது குழந்தைகள், என்று யாரையும் இவன் அறிமுகம் செய்யவில்லையே ?? ' , இப்படியான பலப்பல கேள்விகள் அவளுக்குள்.

ஆனால், அவற்றை இப்பொழுது கேட்பது, இங்கிதமாக இருக்குமா ?

அவன் , "சாப்பிடக் கூட்டிட்டுப் போகவா யாழினி ? " , என்று கேட்டான்.

பின் அவனே, " இல்லை வேண்டாம். நீ, நான், ராதாம்மா, மூணு பேரும் சேர்ந்தே சாப்பிடப் போகலாம். அப்போதான், இன்னும் நிறைய பேசமுடியும். இப்போ போனா, சரி வராது. கொஞ்சம் பொறுத்துக்கோ " , என்று பதிலையும் சொல்லிக் கொண்டான்.

"ச்சே சாரி.. உன்னைப் பற்றி யோசிக்கவே இல்லையே. உனக்கு ரொம்பப் பசி எதுவும் இருக்கா யாழினி ? " என்று மறுபடியும் கேட்டான்.

இல்லையென்று தலையை ஆட்டினாலும், அவள் முகம் சற்று வாட்டமாக இருந்தது. அவளுக்கு பசித்திருக்கும்போல, எனத் தானாகவே புரிந்துகொண்டு, ஒரு க்ளாசில் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தான்.

அவள் இருந்த பசியில், அதைப் பருகியபோது, தொடையும் வயிறும் சேர்ந்து குளிர்ந்தாற்போல் இருந்தது.

மடமடவென்று அவள் குடிக்கும்போது, விம்மித் தணியும் அவள் தொண்டைக் குழியையே பார்த்துக் கொண்டிருந்தான், மணாளன். அப்பொழுது, ஒரு மஞ்சள் புடவையணிந்த பெண், அவர்கள் முன்னால் வந்து நின்று , " மனோ !! அங்க கேட்டரிங்ல ஏதோ, குளறுபடியாம். ராதாத்தை உன்ன மேல கூப்பிடுறாங்க " ,என்று அவனைக் கூப்பிட்டாள்.

அவளை அந்த ஹாலில் இருந்த ஒரு சோபாவில் உட்கார்த்தி வைத்து விட்டு,  "நீ கொஞ்ச நேரம், இங்கேயே வெயிட் பண்ணு யாழினி. நான் சீக்கிரம் வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றான். 

இப்பொழுது அந்த ஹாலில், வெகு சில பெண்கள் மட்டும் உட்கார்ந்து, அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரையும் அவளுக்குத் தெரியாததால், 'என்ன செய்யலாம் ? ' என்று யோசித்து, தனது மொபைல் போனை எடுத்து அதைப் பார்ப்பதுபோல, பாவனைசெய்ய ஆரம்பித்தாள், யாழினி.

சில நேரங்களில், மொபைல் போன்கள் இப்படிக் கூட கைகொடுக்கும். நமக்கு சங்கோஜமாக இருக்கும் இடங்களில், யார் முகத்தையும் பார்க்காது, போனில் முக்கியமான ஒன்றைப் பார்ப்பதுபோல பாவனை செய்துகொள்ளலாம்.

அவள் தனது போனை 'அன்லாக்' செய்யுமுன்னரே, " தாத்தா உங்களப் பாக்கணும்னு வரச்சொன்னாங்க " என்று ஒரு குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தபொழுது, அவள் எதிரே, ராதா நின்றிருந்தாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ.. மிஸ், உங்களைத்தான். தாத்தா பாக்கணும்னு சொன்னாங்க. என்னோட வர்ரீங்களா ?" ,என்றாள்.

என்ன பதில் சொல்லவென்று தெரியாமல், "ம்ம்ம்.. இதோ.. வர்றேன்.." , என்று அவளுடனே செல்ல எழுந்தாள், யாழினி.

ராதா முன்னாள் செல்ல, அவளைப்பின் தொடர்ந்து சென்றாள்.

போகிற வழியில், "ஆர் யு ஆல்சோ ஒர்கிங் வித் ராதா அத்தான் ?" , என்றாள் ராதா.

அங்கே அத்தான், அத்தான் என்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த ஒரு பெண், இப்படி நுனி நாக்கில் ஆங்கிலம்பேசுவது, வியப்பாக இருந்தது. அது சரி. எங்கு எப்படிப் பேசவேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறாள். தெரியாதவர் என்பதால், சற்று மிடுக்குடன் பேச முயற்சி செய்கிறாள், என்பது மட்டும் நன்கு புரிந்தது.

"இல்லை",என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த யாழினியின் மனதில், அப்போழுது பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

" மணாளன் வேறு உடனில்லையே !! இந்த நேரத்தில், எதற்காக அந்த பெரியவர் நம்மை அழைக்கிறார் ? அவரிடமும் மணாளன், நம்மைப் பற்றிச் சொல்லியிருப்பானா ? இல்லையா ? " , என்று பல கேள்விகளும் குழப்பங்களும் அவளுள் ஓடிக்கொண்டிருந்தன.

கடைசியாக அவர்களிருவரும், அந்தப் பெரியவர் இருந்த அறையைச் சென்றடைந்தார்கள்.

அந்த அறையில், அந்தப் பெரியவர் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருக்க, அவரருகே, வேறு ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்.

யாழினியை பார்த்ததும், அந்தப் பெரியவர் தன் பக்கத்திலிருந்த நடுத்தர வயதுக்காரரிடம் " இந்தப்  பொண்ணத்தான் நீ சொல்றியா ? " , என்று கேட்டார்.

அதற்கு அவரும், "ஆம்" என்று தலையாட்ட, " ஏ.. பொண்ணு.. இங்க வா.." என்று கூப்பிட்டார் , பெரியவர்.

யாழினிக்கு, ஒரு மாதிரியாக இருந்தது. ஆனாலும், அந்த அறைக்குள் சென்று, அவர் முன்னால் நின்று கொண்டாள்.

"உன் பேர் என்ன ?"

"யாழினி"

"நல்ல பெயர்தான். உங்க அப்பா பேரு என்ன ? "

"......"

"உன்னைத்தான் கேக்குறேன்.. உங்க அப்பா பெரு என்ன ? "

அவர் கொஞ்சம் அழுத்திக் கேட்டார். அவளுக்கு இந்தக் கேள்வி, ஒருபுறம் எரிச்சலையும் மறுபுறம் வருத்தத்தையும் ஒருசேர வரவழைத்தது. அவஸ்தையாக இருந்தது. 

பெரும்பாலும், யாழினி தனது அப்பாவின் பெயரை எங்குமே சொல்வது கிடையாது. ரெக்கார்டுகளில் பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்த ஒரு பயனும், அந்த பெயரால் அவளுக்கு இல்லை. இக்கட்டான ஒரு சூழ்நிலையில், அவளையும் அவள்  அம்மாவையும் தவிக்க விட்டுச்சென்ற அந்த ஆளின் பெயர்மீது, தீராத ஒரு வெறுப்பு உண்டு.

ஆனாலும், அதையெல்லாம் இங்கு விளக்கிக்கொண்டிருக்க முடியுமா என்ன ? அதனால், விருப்பமில்லையென்றாலும், அந்தப் பெயரைச் சொன்னாள்.

"கார்த்திகேயன்"

" என்ன வேலை பாக்குறாரு ? "

" வக்கீல் "

" என்னது "

"ஹைக்கோர்ட்டுல, கிரிமினல் லாயரா இருக்காரு"

"எப்படி ? நல்ல வசதியான, அதுவும் சமுதாயத்துல நல்ல மரியாதையோட இருக்குறப் பையனையாப் பார்த்து காதலிக்கணும்ங்குறது உன் ஐடியாவா ? இல்லை, உங்க அப்பா ஐடியாவா ?" , பெரியவர் கேட்க , நிலைகுத்திப்போய் நின்றாள், யாழினி.

யாழினி வருவாள்..


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post