யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 1



இது ஒரு மென்மையான காதல் கதை. வெவ்வேறு மாதிரியான வாழ்க்கையைக் கொண்ட இருவரின் சந்திப்பு, பிரிவு மற்றும் உணர்வுகள் நிறைந்த ஒரு இதமான நாவல் இது. 

கதையின் நாயகி யாழினி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். கதாநாயகன் மணாளன் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர்கள் சந்திப்பின் ஆரம்பமே அமர்க்களம்தான். 

அப்புறம் என்ன ? மேலே படியுங்க பாஸ் !! 

இதை பிரதிலிபி என்னும் APP-ல் படிக்க , இந்த LINK-ஐ பயன்படுத்தவும் 


சென்னையில் ஒரு நெருக்கடியான காலைப்பொழுது. நகரமே வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது . அந்த ராமாபுரம் சிக்னலும்கூட.

சிக்னலில் இருக்கும் அந்த நால்ரோட்டைக் கடக்க முயன்று, வேகமாக வாகனங்கள் குறுக்கும் நெடுக்கும் செல்வதால் பதற்றத்துடன், அந்த ரோட்டின் பக்கவாட்டிலேயே நின்றிகொண்டிருந்தாள் - அந்த இளம்பெண். ஏதேனும், அவசர வேலையோ என்னவோ, அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு சாலையையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

ராமாபுரம் சிக்னல், ஒரு தானியங்கி சிக்னல்தான். ஆனால், அவ்வப்போது பழுதடைந்துவிடும். தகவல் அறிந்து, டிராபிக் போலீஸ் அங்கு வருவதற்குள்ளான 20 நிமிட இடைவெளியில், யாராலுமே அந்த அகலமான ரோட்டைக்கடக்க இயலாது. ஆனாலும், அவசர வேலை இருப்பவர்கள் மொத்தமாக ஒரு கூட்டம் சேர்ந்ததும், கடந்து செல்வார்கள்.

பிங்க் சுடிதார் அணிந்திருந்த அந்த பெண், அந்த மாதிரி ஒரு கூட்டம் சேரும்வரை காத்திருந்து, பின்னர்தான் கடக்க முடியும். ஆனாலும், அவள் அவ்வப்போது சாலையின் அருகில்வந்து, கடக்க எத்தனித்து, பின்னர், பின்வாங்கி தான் முன்புநின்ற இடத்திலேயே போய் நின்றுகொண்டாள்.

அந்த பெண்ணுக்கு, ஒரு இருபத்திமூன்று வயதிருக்கலாம். நிச்சயம், அதற்குமேல் சொல்லமுடியாது.

ஐந்தரை அடி உயரம். ரொம்ப மெல்லிசு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அளவான உடலமைப்பு. கொஞ்சம் மஞ்சள் கலந்த, வெளிர் மாநிறம். அந்த பிங்க் கலர் சுடிதார் அவள் நிறத்துக்கு எடுப்பாக இருந்தது. அவள் துப்பட்டாவை அணிந்திருத்த விதத்தில், ஒரு ஸ்டைலும் நேர்த்தியும் தெரிந்தது.

தலைமுடியை மேல்நோக்கி வாரி, ஒரு சிறிய கிளிப் இட்டுக்கொண்டு, பின்பக்க முடியை ஒரு போனி டெயில்போல் போட்டிருந்தாள். அடர்த்தியான முடி என்பதால், அது ஆடாமல் அசையாமல், கற்றையாக நின்றது.

இதுபோன்று சிறிய நெற்றியுடன் வட்டமுகத்தோடு இருக்கும் பெண்கள், எப்போதுமே அழகுதான். அதிலும், அவள் அடர்த்தியான புருவமும், அமர்வான் கண்களும், துடிப்பான உதடுகளும், அந்த உதட்டில் லேசாக ஒற்றிவிடப்பட்டிருந்த 'பேபி ப்ளம்' நிற உதட்டுச் சாயமும், அவளை பேரழகியாகவே காட்டியது.

அதனாலோ என்னவோ, சாலையைக்கடக்கும் வாகன ஓட்டிகளின் கண்கள்கூட, அவ்வப்போது அவள்மீது பட்டுவிட்டு பின் சாலைமீதே திரும்பின.

அதிக நேரமானதால், அவள் தோளில் மாட்டியிருந்த அந்த கருப்பு நிற லேப்டாப் பேக், கொஞ்சம் வலி ஏற்படுத்தியிருக்கும் போலும். அவள் முகபாவனையிலும், 'ம்ஹும்' என்ற பெருமூச்சிலும் தெரிந்தது.

அவள், சாலையின் இடப்புறமும் வலப்புறமும் பார்த்துக்கொண்டிருந்த நேரம், அவள் வலப்புற தோளின்மீது சூடான மூச்சுக்காற்று பட்டது. துளியும் எதிர்பாராதவாறு, ஓர் இடக்கரம் அவள் வலக்கரத்தைப் பற்றியது. அவளை வேகமாக இழுத்துக்கொண்டு, அந்த ரோட்டை கடந்தது.

வாகனங்களின் இரைச்சலாலும், அவை கடந்துசெல்லும் வேகத்தாலும், அவள் குனிந்துகொண்டு தன் கண்களை இருக்க மூடிக்கொண்டாள். அவள் கால்கள் மட்டும், அனிச்சையாக அந்த கரங்களுக்கு சொந்தக்காரனோடு நடந்துகொண்டிருந்தன.

பாதிதூரம் சென்றதும், லேசாக கீற்றுபோல அவள் கண்களைத் திறந்தாள். அவள் கையைப் பிடித்திருந்த 'அந்த கை' ஓர் ஆணுடைய கையென்றும், அதில் கட்டப்பட்டிருந்தது ஓர் உயர்ரக 'ஐ வாட்ச்' என்றும் மட்டும் தெரிந்தது.

முழுவதுமாக சாலையைக் கடந்து முடித்தபிறகு, அவள் மெதுவாக தலையை நிமிர்த்தி கண்களை திறந்தாள்.

அவள் இருக்கும் உயரத்திற்கு, அவன் தோள்கள்தான் அவள் கண்ணில் பட்டன. அந்த காக்கி நிறச்சட்டையும், அதில் குத்தப்பட்டிருந்த வெள்ளை பேட்ஜும், அதில் எழுதப்பட்டிருந்த அவன் பெயரும்...

தன் மனத்திற்குள்ளேயே அந்த பெயரை வாசித்துப் பார்த்தாள்.

" ஆர். மணாளன் IPS "

யாழினி.. வருவாள்..

அடுத்த பகுதி (PART - 2)

This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

3 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

  1. இக்கதையை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன் சகோ

    ReplyDelete
Previous Post Next Post