ஒரு அரபுநாட்டு வியாபாரியின் கதை - A Motivational Story in Tamil

"எல்லாம் நன்மைக்கே !!"

சிலருக்கு இதைக் கேட்கும் போது ஆறுதலாக இருக்கும். பலருக்கு இதைக் கேட்கும் போது எரிச்சலாகத் தான் வரும்.

"நான் இவ்ளோ கஷ்டப்படுறேன். இதுல்லாம் நன்மைக்கா ?", என்று கோபம் வரும்.

நீங்கள் இந்த இரண்டில் எந்த வகையினராக இருந்தாலும் சரி, இந்தக் கதையை வாசியுங்கள். இது உங்களுக்கு ஒரு நல்ல பாடத்தைச் சொல்லித் தரும்.

இது அரபு தேசத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறக் கதையின் மையக்கரு.'ஆயிரத்தியோரு அரேபிய இரவுகள்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம். பல்வேறு மாற்றங்கள் செய்து, சுவாரஸ்யத்தை கூட்டி எழுதியிருக்கிறேன்.

இப்போது நாம் இதை வாசிக்கலாமா ?

அது அரபு தேசத்திலிருந்த 'பாக்தாத் நகரம்'. மிகப்பெரிய செல்வந்தர்களுக்கும், திறமைவாய்ந்த வியாபாரிகளுக்கும் பெயர் போன, 'பாக்தாத் நகரம்'.

அந்நகரத்தில், மாபெரும் செல்வந்தரான ஒரு தந்தை இருந்தார். அவருக்கு அவரைப் போன்றே திறமைசாலியான நான்கு ஆண்மக்களும் இருந்தார்கள்.

அந்நால்வரில், முதல் மூவரும் கொஞ்சம் காரியக்காரர்கள். கொஞ்சம் என்று சொன்னால் அது தவறு. அவர்கள் மூவரும் தங்களால் கூடியமட்டிலும் காரியசமர்த்தர்கள். யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி சம்பாதிக்க வல்லவர்கள்.

ஆனால், நான்காவது மகனோ நீதிக்கும் நியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று வாழ்பவன். இரக்கத்தோடு நடந்துகொள்பவன்.

இப்படியிருக்க ஒரு நாள், அந்தப் பணக்கரைத் தந்தை இறந்து விடுகிறார். அவரது நல்லடக்கம் முடிந்ததும், அவர் மக்கள் சொத்துக்கள் அனைத்தையும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

அவ்வாறு பங்கிடும் போது, காரியக்காரர்களான அந்த முதல் மூன்று சகோதரர்களும் எடுத்துக்கொண்டது, சொத்தின் மாபெரும் பங்குகளை. ஆம், முக்கியமான இடங்களில் அமையப்பெற்ற கடைகள், செழிப்பான நகரங்களில் அமையப்பெற்ற வீடுகள், லட்சக்கணக்கில் பொற்காசுகள் என்று மகத்தான செல்வங்கள் எல்லாம் அவர்கள் வசம் சென்றது.

நான்காவது மகனுக்குக் கிடைத்ததுவோ, வனாந்தரத்தில் அமையப்பெற்ற ஒரு வீடும், ஆயிரம் எண்ணிக்கையில் பொற்காசுகளும் மட்டுமே !! ஆயினும், அவற்றை மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, வனாந்தரத்தில் அமையப்பெற்ற அவ்வீட்டுக்குக் குடி பெயர்ந்தான், அந்தத் தந்தையின் கடைசி மகன்.

அவன் தான் இந்தக் கதையின் நாயகன். அவனது பெயர் அபூபக்கர் சித்திக் சலீம்.

இவ்வாறாக வனாந்தரத்தில் அமையப்பெற்ற அந்த வீட்டுக்கு வந்த அபூபக்கர், முதன் முதலில் செய்தது, அந்த வீட்டை சுத்திகரிப்பது தான். ஏனெனில், அந்த அளவுக்கு கவனிக்கப்படாது, பாழடைந்து கிடந்தது அந்த வீடு. அவன் அந்த வீட்டை சுத்தம் செய்தான். பதவல்களை ஒதுக்கினான்.

அப்போது தான், அவனுக்கு அங்கு ஒரு மூட்டை கிடைத்தது. அந்த மூட்டையில், சில புராதான பொருட்கள் இருந்தன. அவற்றோடு, அவனது தந்தை எழுதிய ஒரு கடிதமும் இருந்தது.

தந்தையின் நினைவுகள் தன் மனதை நெகிழ்த்த, அவரது நினைவுகளோடேயே அக்கடிதத்தைப் பிரித்துப்படித்துப் பார்த்தான் அன்புமகன் அபு.

"மகனே அபூ, உனது கையில் தான் இந்தக் கடிதம் கிடைக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்", என்று ஆரம்பித்த அந்தக் கடிதம், இவ்வாறாகத் தொடர்ந்தது.

"மகனே அபூ, உனது கையில் தான் இந்தக் கடிதம் கிடைக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில், எனது மறைவுக்குப் பிறகு உனது சகோதரர்கள் உன்னை வஞ்சிப்பார்கள்.

ஆயினும், மனம் கலங்காதே !! எல்லாம் நன்மைக்கே !!

நீ மூட்டையில் பார்க்கும் பொருட்களை தமஸ்குவிற்குச் சென்று விற்று வா. லாபம் கிடைக்கும். உனது வியாபாரம் பெருகும். பொக்கிஷமும் கிடைக்கும்.

நிதானமாக இரு. பொறுமையாக இரு. எப்போதும் ஒன்றை மறவாதே !! எல்லாம் நன்மைக்கே !!"

இதை வாசித்து முடித்ததும், அபுவுக்கு நம்பிக்கை பிறந்தது. 'எந்த சூழ்நிலையிலும் மனம் தளரக்கூடாது' என்ற எண்ணமும் பிறந்தது.

அதே நம்பிக்கையோடு, அன்றைய இரவு அவன் தூங்கச் சென்றான்.

ஆனால், அடுத்த நாள் காலையிலோ, அவனுக்கென்று ஒரு பிரச்சனை காத்திருந்தது.

ஆம், அந்நகரத்தின் காவலர்கள் அவனை வந்து கைது செய்தார்கள். அதிகாரிகளின் முன்பாக அவனைக் கொண்டு சென்று நிறுத்தினார்கள்.

அதாவது, அந்நகர விதிமுறைப்படி கண்காணியின் முன்பாக மட்டும் தான், சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டுமாம். அப்போது தான் பாரபட்சமின்றி அது பிரிக்கப்படுமாம். அதனால், அதை மீறுபவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அவர்கள் சட்டம் சொல்லிற்று.

ஆனால், அபுவின் அண்ணன்கள் தான் அந்த விதிமுறையை மதிக்கவே இல்லையே !! அதனால், மொத்தமாக நான்கு சகோதரர்களும் சேர்ந்து விசாரணைக்காக நிறுத்தப்பட்டார்கள். தலைக்கு ஆயிரம் பொற்காசுகள் அபராதம் கட்டவேண்டும் என்று தண்டனையும் வழங்கப்பட்டார்கள்.

அபுவின் அண்ணன்களைப் பொறுத்தவரையிலும், பிரச்சனையே இல்லை. ஆயிரம் பொற்காசுகள் நஷ்டப்பட்டாலும், மீதமுள்ள சொத்துக்கள் லாபமே !! ஆனால், அபுவுக்கோ 'இருந்ததும் போச்சுடா, சாமி' என்ற நிலைமைதான்.

ஆயினும், "எல்லாம் மாறும். எல்லாம் நன்மைக்கே !!" என்று மனதைத் தேற்றிக்கொண்டு அடுத்தது செய்ய வேண்டியத்தைப் பற்றி மட்டுமே அவன் யோசித்தான்.

தந்தை சொல்லியபடி தமஸ்குவிற்குச் சென்று வியாபாரம் தொடங்க, பிரயாணமாகவும் புறப்பட்டான்.

அடுத்த இருபது நாட்களில் தமஸ்கு வந்தது. அங்கு நடந்த சந்தை அவனுக்கு நம்பிக்கையையும் தந்தது.

ஆம், அங்கு அவன் கொண்டுசென்ற பொருட்களுக்கெல்லாம் ஏகபோக மவுசு. 'எனக்கு உனக்கென்று' போட்டிப்போட்டு அவற்றை வாங்கிக்கொண்டார்கள். அவன் கேட்டதை விடவும் அதிக விலையைக் கொடுத்து, அவனது லாபத்தை அதிகரித்தார்கள்.

அதே நேரத்தில், அவன் சற்றும் எதிர்பாராதவாறு, தமஸ்குவின் காவலர்கள் வந்து அவனை கைது செய்தார்கள்.

பிரச்சனை என்னவெனில், அபூபக்கர் தனது வியாபாரத்துக்காகப் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் தமஸ்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான பொருட்கள். ஒரு காலத்தில், அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரும்பெரும் அரசாங்கப் பொருட்கள்.

அதன் பின், கேட்கவா வேண்டும் ?

அபுவின் விளக்கங்கள் எதுவுமே, அங்கு செல்லுபடியாகவில்லை. அவனது கூக்குரல் அரசனின் காதுக்கும் எட்டவில்லை. ஈவு இரக்கமின்றி, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான் அபு.

அந்தத் தருணத்தில் முதன்முறையாக, தனது நம்பிக்கையிலிருந்தும் அவன் தளர்ந்தான்.

"எல்லாம் நன்மைக்கே, எல்லாம் நன்மைக்கே என்று தந்தை சொன்னாரே !! இப்போது எனது இந்த நிலைமையும் கூட, நன்மைக்கா ? இந்தக் குற்றமும் இந்தத் தவறான தண்டனையும் கூட, நன்மைக்கா ? ஏன் எனக்கு மட்டும் இப்படியொரு நிலைமை ?", என்று அழுது புலம்பினான்.

ஆனாலும், அவனுக்குள் துளியளவுக்கு ஒரு நம்பிக்கை. 'கூடியமட்டிலும், ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும்' என்ற வாஞ்சை. அதற்கான வாய்ப்பு குறைவெனினும், தளராமல் சிந்தித்துக்கொண்டே இருந்தான் அவன்.

இப்படியே நாட்கள் நகர்ந்தன.

அவனது தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான அந்த மாதமும் வந்தது. அதே சமயத்தில், அபு காத்துக்கொண்டிருந்த அந்த வாய்ப்பும் வந்தது.

ஆம். பொதுவாக மரண தண்டனைக் கைதிகளிடம், "உனது கடைசி ஆசை என்ன ?" என்று கேட்பார்களே !! அதே மாதிரி, அபுவிடம் அவர்கள் கேள்வி கேட்டார்கள்.

மற்றவர்கள் போல விரக்தியோடு பதில் சொல்லாமல், சாதுரியமாக ஒரு பதிலைச் சொன்னான் அபூபக்கர்.

"நான் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வைத் தொழுகை செய்ய வேண்டும். அதுவும், எனது தந்தை பயன்படுத்திய அதே தொழுகைப் பாயில் அமர்ந்து அல்லாஹ்வைத் தொழுகை செய்து, அதன் பின்னர் உயிரை விட வேண்டும்", என்று சாதுரியமாக ஒரு கோரிக்கையை வைத்தான்.

இறைவனது காரியம் என்பதால், தமஸ்கு அரசரும் அதை ஏற்றுக்கொண்டார்.

தண்டனை தேதியை ஒத்திவைத்து, அவன் கேட்டபடி பாயை எடுத்துவர, பாக்தாத்திற்கு ஆள் அனுப்பினார்.

தண்டனைக்கான நாளன்று அந்தப் பாயும் வந்து சேர்ந்தது.

கொலைக்களத்தில், எல்லோரும் தன்னையே பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பாயைப் போட்டுத் தொழுகை செய்தான் அபு. தொழுதுவிட்டு, அதை அப்படியே எடுத்து அரசர் முன்பாக நீட்டிவிட்டு, ரெண்டு துண்டுகளாக, கிழித்தும் போட்டான்.

வினோதம் பாருங்கள். கிழிக்கப்பட்ட பாயிலிருந்து, மடக்கி வைக்கப்பட்ட சில பப்பைரஸ் துண்டுகள் சிதறி கீழே விழுந்தன. சிதறி விழுந்த துண்டுகள் அபுவுக்காக சாட்சி சொல்லின.

ஆம், விஷயம் என்னவென்றால், அபூபக்கரின் தந்தைக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. அரண்மனை சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கினாரென்றால். அரச முத்திரையோடு விற்பனைச்சீட்டுக்கள் போடாமல், அவற்றை அவர் வாங்கிக் கொள்வதே கிடையாது. பிற்காலத்தில், ஏதேனும் பிரச்னை வந்தால் அவை மட்டும் தான் தன்னைக் காப்பாற்றும் என்பது அதன் காரணம்.

இந்த விஷயமும், அவர் அப்படி வாங்கும் விற்பனைச் சீட்டுக்களை தொழுகைப் பாயில் மறைத்துவைப்பதும் ஆபூவுக்கு நன்றாகவே தெரியும்.

ஆயினும், இந்த தமஸ்கு சம்பந்தப்பட்டு ஒரு சீட்டு இருக்கிறதா என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆயினும், அவன் தன்னால் இயன்றமட்டும் முயற்சி செய்து பார்த்தான்.

அதிர்ஷ்டவசமாக அச்சீட்டுக்கள் கிடைத்தன. அவற்றில் தமஸ்குவின் முத்திரைகள் இருந்தன. அவையும், சில மாதங்களுக்கு முன்னர் நேர்மையற்றவராகப் பிடிபட்ட, தமஸ்குவைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரின் முத்திரைகளாக இருந்தன. அவை அபுவின் தந்தை மற்றும் அபுவின் மீதான உண்மைத் தன்மையை நிரூபணமும் செய்து அவனை விடுத்தன.

இப்படியாக அபூபக்கர் விடுவிக்கப்பட்ட அந்த நாளில், அவன் மனம் மிகவும் வேதனைக்குள்ளாகியிருந்தது.

அவன் வேதனையில் இப்படிச் சொன்னான்.

"அரசரே !! நான் எனது தந்தையின் கடிதத்தைப் படிக்காமலே இருந்திருக்கலாம். அவர் சொன்னபடி தமஸ்குவின் சந்தைக்கு வராமலே இருந்திருக்கலாம். இப்படி தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு துன்பப்படாமலே இருந்திருக்கலாம். பாருங்கள், எல்லாம் நன்மைக்கே என்று நம்பி எப்படி ஏமாந்திருக்கிறேன்"

அதை ஆமோதித்த தமஸ்கு அரசரரும் இப்படிச் சொன்னார்.

"நீ சொல்வதும் சரி தான் அபூ. இந்தத் தந்தைகளுக்கே வேறு வேலையில்லை போலும். உன் தந்தை என்னவென்றால், தமஸ்குவில் வியாபாரம் செய்தால், வியாபாரம் பெருகுமென்று கடிதமெழுதியிருக்கிறார். என் தந்தை என்னவென்றால், பாக்தாத்தில் ஒரு வனாந்தரமிருக்கு. வனாந்தரத்தில் ஒரு கருவாலியிருக்கு. கருவாலிக்குப் பக்கத்துல ஒரு பாழடைஞ்ச கிணறிருக்கு. கிணத்துக்குள்ள பொக்கிஷச் சுரங்கமே இருக்கு", என்று எனக்குக் கடிதம் கடிதமெழுதியிருக்கிறார்.

நானென்ன உன்னைப்போல, அதை நம்பி மரத்தைத் தேடிக்கொண்டா அலைகிறேன் ? போ, போ. போய், உன் வேலையைப் பாரு", என்று கிண்டலாகச் சொன்னார்.

அபுவுக்கோ, தூக்கிவாரிப் போட்டது.

அட, அந்த பாக்தாத் வனாந்திரமும், வனாந்திர கருங்காலி மரமும், அதன் கீழே பாழடைந்த  கிணறும், வேறு எங்கு இருக்கிறதாம் ?

அபுவின் வீட்டைத் தவிர !!

ஆக மொத்தத்தில் அவன் இத்தனைப் பிரச்சனைகளுக்கும் பிறகு அதைக் கண்டுபிடித்தான் எனவும், கண்டுபிடித்து பெரிய செல்வந்தனானான் எனவும் இந்தக் கதை நிறைவு பெறுகிறது.

இப்போது சொல்லுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில், 'எல்லாம் நன்மைக்கே' என்று நினைப்பது சரியா? இல்லை தவறா ?

சரி தானே !!

ஆதலால் நீங்களும், நம்பிக்கையோடு இருங்கள். நிதானத்தோடும், பொறுமையோடும் நடந்து கொள்ளுங்கள். 'அடுத்தது என்ன செய்ய வேண்டும் ?' என்று யோசியுங்கள்.

அப்படி யோசித்தால், எல்லாம் நன்மைக்கே !! யோசித்தால் மட்டும், எல்லாம் நன்மைக்கே !!

இதை இந்தக் கதை சொல்லித் தந்திருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை முடிக்கிறேன். மீண்டும், சந்திக்கலாம். மிக்க நன்றி.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post