Napolean Love Story in Tamil | மாவீரன் நெப்போலியனின் காதல் கதை

காதல் கதைகளைக் கேட்க விருப்பமில்லாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன ? அதுவும் வரலாற்று காதல் கதைகளைக் கேட்பதற்கு ?

Napolean Love Story

ம்ம்ம்.. அந்த தைரியத்தில் தானே நாம் தொடர்ச்சியாக சில வரலாற்றுக் காதல் கதைகளைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது, ஒரு வித்தியாசமான கதை. காதலுக்கு யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம். ஆனால், காதலுக்கு காதலர்களே எதிரிகளாக வந்தால், அதைவிடக் கொடுமை வேறு எதுவுமேயில்லை. அப்படி ஒரு காதல் தான் இந்த நெப்போலியன் ஜோசபினின் காதல்.

இந்தக் கதையைப் பலரும் பல விதமாகச் சொல்வதுண்டு. ஆயினும், நாம் இன்று பார்க்கப்போவது, வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் ஜோசஃபீனின் கடிதங்களின் அடிப்படையில் நான் எழுதிய கதையைத் தான். எனது புரிதல், எனது சித்தாந்தம், எனது கற்பனை ஆகியவையும் இதில் கலந்திருக்கும் என்பதால், படு ஸ்ட்ரிக்ட்டான வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் கதையைப் படிக்கும்பொழுது, தவறேதும் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும். 

சரி, நாம் இப்போது இந்தக் கதையைப் பார்க்கலாமா ? 

கதை தொடங்குகிறது 

ஜோசஃபின் மற்றும் நெப்போலியனின் சந்திப்பு 


சாதாரண குடும்பத்தில் பிறந்து, உயரிய குறிக்கோளோடு வளர்ந்து, 1795 -வது வருடம் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தில், கனரக பீரங்கிகளுக்கான உட்பிரிவில் இராணுவ ஜெனரலாகவும் உயர்ந்தான் நெப்போலியன் போனப்பார்ட். அப்போது அவனுக்கு வெறும் ஒரு 26 வயதே ஆகியிருந்தது. 

அந்த நாட்டில், அதே சமயத்தில் அவன் வயதுக்காரர்களில் பெரும்பாலானோர் பிழைப்புக்காக வேலை தேடிக்கொண்டிருந்தார்கள். இல்லையெனில் காதல், திருமணம், குழந்தைகள் என்று லௌகீக வாழ்க்கையில் திளைத்திருந்தார்கள். ஆனால், நெப்போலியனைப் பொருத்தவரைக்கும் தீராத ஒரு வெறி. "நாம் முன்னேற வேண்டும்" என்கிற வெறி. அதனாலேயே, அந்த வயது வரைக்கும் அவனுக்கு 'காதலி' என்று யாரும் கிடையாது. காதலிக்க நேரமும் கிடையாது. 

இப்படியிருக்கும்போது ஒருநாள், நெப்போலியனுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தில் உயரதிகாரியாக இருந்த பாரஸ்சின் நட்பு கிடைத்தது. நட்பு ரீதியாக, ஃபாரஸ் நெப்போலியனைத் தனது வீட்டில் நடக்கும் விருந்து ஒன்றிற்கு  அழைக்க, ஆட்சேபனையின்றி அதில் கலந்துகொண்டான் நெப்போலியன். அந்த விருந்தில், அவன் 'ரோஸ் தாட்சர்' என்கிற கவர்ச்சியான பெண்ணை சந்தித்தான். இவன் அவளோடு பேச முயன்றபோது, "நீங்கள் தான் நெப்போலியனா? உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லையெனில், பிரான்ஸ் மிலிட்டரியே கிடையாதாமே !!" என்று கேட்டு அவனை ஆச்சரியப் படுத்தினாள், ரோஸ் தார்சர். ஒன்றும் பேசாது , வெறும் புன்னகையை மட்டும் பரிசாகத் தந்து விடைபெற்றான் நெப்போலியன்.
 
ஆனால், உள்ளூர அவனுக்கு அவள் தன்னை புகழ்ந்தது பிடித்திருந்தது. ரோஸ் தார்சர் ஒன்றும் பேரழகியெல்லாம் கிடையாது. ஆனால், நேர்த்தியான உடை, அறிவார்ந்த பேச்சு, திறமறிந்து பழகும் விதம் என்று கவர்ச்சிகரமாக இருந்தாள். அதனாலோ, இல்லை பொதுவாகவே வசதியான வீட்டுப் பெண்கள் மீது நெப்போலியனுக்கு இருந்த ஈர்ப்போ என்னவோ, அவளுடன் ஏற்பட்ட நட்பைத் தொடரவேண்டுமென்று நெப்போலியனுக்குத் தோன்றியது. அடுத்த சில நாட்களில், அடிக்கடி அவளைத் தனிமையில் சந்திக்கவும்  ஆரம்பித்தான். அந்தப் பழக்கத்தில், அவளுடைய பெயரைச் சுருக்கி ஒரு செல்லப் பெயரும் வைத்தான். 'மேரி ஜோசபின் ரோஸ் தாட்சர்' என்பது தான் அவளுடைய உண்மையான பெயர். ஆனால், நெப்போலியன் அவளுக்கு வைத்த பெயர், ஜோஸபின்.

இப்படியே நாட்கள் கடந்துபோக, ஒரு நாள் அவர்களது சந்திப்பின்போது, "நம்ம ரெண்டுபேரும் கல்யாணம் செஞ்சிக்கலாமா, ஜோசஃபின் ?" என்று கேட்க, அதிர்ந்து போனாள் ஜோசஃபின்.


மென்மையாக ஒரு துரோகம் 


என்னடா இது ? எந்தவொரு விஷயத்திற்காக ஒரு பெண் மகிழ்சியடைய வேண்டுமோ, அந்த விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாளா ? என்று நினைக்கிறீர்களா ? ஆம், இங்கு தான் உங்கள் அனைவருக்கும் ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. 

ஏனெனில், ஃபாரஸ் நெப்போலியனை நண்பனாக்கிக் கொண்டது, விருந்திற்கு அழைத்தது, ஜோஸபின் நெப்போலியனிடம் வந்து பேசியது, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் - இவையெல்லாமே, திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் தான். 

அத்தனை நாட்கள் தனது அந்தரங்கக் காதலியாக இருந்த ஜோஸபினைக் கழற்றிவிடுவதற்காக பாரஸ் அரங்கேற்றிய நாடகம். என்னதான் ஆரம்பத்தில், ஜோசஃபின் இதெற்கெல்லாம் உடன்பட்டாலும், அவளுக்கு  நெப்போலியனைத் திருமணம் செய்துகொள்ள துளி கூட விருப்பமில்லை.

காரணம் ? பிரான்ஸ் நாட்டின் சமூகக் கட்டமைப்பு. 

ஆம், இரண்டாவது உலகயுத்தம் முடிகிறவரையிலுமே ,பிரான்ஸ் நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருந்தன. சமூகத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக நடத்தப்படவில்லை. உச்சஸ்தானத்தில், அரச குடும்பம் அவர்களுக்கு சாதகமான மத குருமார்கள், அடுத்த வரிசையில் அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிற அரிஸ்டோகிராட்ஸ், வியாபாரிகள், செல்வந்தர்கள், இவர்களுக்காகவே உழைக்கிற பிரான்ஸ் இராணுவம், அதில் பணிபுரிந்தவர்களின் குடும்பங்கள், அதன் பின் அடிமைகள் என்று பல வரிசைகள் இருந்தன அந்தக் காலத்து பிரான்ஸில். 

இதில் இந்த ஜோஸபின் ஃபாரஸ் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் அரிஸ்டோகிராட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், நெப்போலியன் ? கீழ்மட்டத்திலிருந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது சொந்தத் திறமையால் மட்டுமே இராணுவத்தில் ஓரு உயர்ந்த நிலைமைக்கு வந்த வாலிபன். "அவன் தகுதியென்ன ! நம் தகுதியென்ன ! நம்மை விட இரண்டு நிலைகளுக்குக் கீழான இவனை நாம் திருமணம் செய்துகொள்வதா?" என்று யோசித்தாள் ஜோஸபின்.

ஆனால், ஃபாரஸ்சோ அவளை நிர்பந்தப்படுத்தினான். "உனது பழைய வாழ்க்கை ஞாபகமிருக்கா ?" , என்றார் கேட்டான். ஜோசஃபீனுக்கு அவளது கடந்த காலம் கண்முன் விரிந்தது. அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. கணவனுடைய மரணத்திற்குப் பிறகு திக்கற்று நின்ற அவளுக்கு இந்த ஃபாரஸ்தான் அடைக்கலம் கொடுத்திருந்தான், தனது ஆசை நாயகியாக. ஆனால். ஜோசஃபீனின் செலவுகள் அவனுக்குக் கட்டுப்படியாகவில்லை. அதனால், அவளை எப்படியாவது கைமாற்றிவிட வேண்டுமென்ற எண்ணத்தில்தான், அவன் நெப்போலியனுக்கு வலை விரித்திருந்தான். 

ஆனால், ஜோசஃபின் இப்போது உடன்பட மறுப்பதால், "இனிமேல், உன்ன என்னால பாத்துக்க முடியாது. 32 வயசான உன்ன நெப்போலியன் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னதே பெரிய விஷயம். உனக்கு அவனும் வேண்டானா, உன் நெலம பரிதாபம் தான்" என்று மிரட்டினான் ஃபாரஸ். 

நெப்போலியன் ஜோசஃபின் திருமணம் 

 
ஜோஸபின் வேறுவழியின்றி அந்தத் திருமணத்திற்கு சம்மதித்தாள். இரகசியமாக நடந்த அந்த திருமணத்தின் போது நெப்போலியனுக்கு 26 வயது ஜோஸபினுக்கு 32 வயது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஜோசபினின் முதல் மகனுக்கு 15 வயதும், அவளுடைய பெண்ணிற்கு 14 வயதும் ஆகியிருந்தது, அந்த சமயத்தில். 

நெப்போலியனோட குடும்பத்தார் இந்தத் திருமணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இராணுவத்தில் அவருடன் வேலை செய்தவர்கள், மறைமுகமாக அவரைக் கிண்டல் செய்தார்கள். ஆனால், ஜோசஃபின் மீதிருந்த காதலால் நெப்போலியன் எதையுமே பொருட்படுத்தவில்லை. ஆரம்பத்தில், அவளை எப்படி காதலித்தாரோ, அதுபோலவே தொடர்ந்து காதலித்து வந்தார். ஆனால், ஜோஸபினை பொருத்தவரையில் அந்தத் திருமணம், வெறும் இலாப நோக்கத்திற்காகச் செய்துகொள் திருமணம் மட்டும்தான். 

இது இப்படியிருக்க, திருமணமான இரண்டாவது நாளே நெப்போலியன் ஒரு போருக்காக இத்தாலிக்குச் செல்லவேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது, ஜோசஃபீனின் நியாபகமாக அவளுடைய ஒரு ஓவியத்தைத் அவன் தன்னோடே எடுத்துச்சென்றான். இராணுவமுகாமில் இருக்கும்போது அந்த ஓவியத்தை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும், அவளது நினைவுகளில் மூழ்குவதுமாகவே இருந்தான். அதுமட்டுமல்லாமல், அவளுக்கு நிறைய கடிதங்களும் எழுதுவான். அந்தக் கடிதங்களில் நெப்போலியனுக்கு ஜோசஃபின் மீதிருந்த காதலும், 'அவளைச் சிறிதும் கூடப் பிடிக்காத நம்முடைய குடும்ப நபர்களிடம், அவளைத் தனியாக விட்டு விட்டு  வந்துவிட்டோமே' என்ற அக்கறையும் நன்றாகவே பிரதிபலிக்கும்.

நெப்போலியன் இப்படிக் காதலில் உருகிக்கொண்டிருக்க, ஜோஸபின் என்ன செய்தாள் தெரியுமா? அவன் காட்டிய அன்பில் ஒரு சதவீதத்தைக் கூட, அவள் அவனுக்குத் திருப்பித் தரவில்லை . பழையவாறே, பார்டி, நண்பர்களுடன் சிநேகிதம் என தொடர்ந்து கொண்டிருந்தாள். ஆரம்பத்தில், அவன் அனுப்பிய சில கடிதங்களுக்கு, பதில் கடிதம் போட்ட ஜோசஃபினுக்கு, அதன் பின் நெப்போலியன் எழுதிய கடிதங்களைப் பிரித்துப் படிக்கக் கூட நேரமில்லை. 

அவளைப் பொருத்தவரையில் காதல் என்பது ஒரு மாயை. பைத்தியக்காரர்கள் மட்டுமே, அதன் உலகத்தில் வாழ முடியும். அப்படி அவள் நினைத்ததன் பின்னணியில்கூட ஒரு முக்கியமான காரணமுள்ளது. அதுதான் அவளுடைய முதல் கணவன் அவளுக்குச் செய்த கொடுமைகள். துரோகங்கள். அவனது கொடுமைகளால், அவளது மனநிலை ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தது. "மனசாவது மண்ணாவது. திருமணம் என்பதே சுய இலாபத்திற்கு மட்டும்தான்" என்று மறந்துபோயிருந்தது ஜோசஃபீனின் மனது. இத்தோடு நெப்போலியன் குடும்பத்திலிருந்தவர்கள் அவள் மீது காட்டிய வெறுப்பும் சேர்ந்துகொள்ள, அவள் மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தாள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான், போரில் ஒரு மிகப் பெரிய வெற்றியை அடைத்துவிட்டு, மீண்டும்  பாரிஸ்க்கு வந்தான் நெப்போலியன். அவர் வந்ததும் வராததுமாக, ஜோசஃபீனைப் பற்றி ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லி அறிவுருத்தினார்கள், அவனது குடும்பத்து ஆட்கள். ஆனால், நெப்போலியன் அவர்கள் கூறிய ஒன்றைக்கூட நம்பவில்லை. அந்த அளவுக்கு அவனுக்கு ஜோசஃபீனின் மீது ஒரு கண்மூடித்தனமான காதல்.

அந்தக் காதலே, அவனை ஜோஸபின் என்ன கேட்டாலும் அதைக் கொடுக்க வைத்தது. அவளுக்குப் பிடிக்கிற எல்லாவற்றையும் அவள் காலடியில் கொண்டுவந்து கொட்ட வைத்தது. அவளுக்கு ரோஜாப் பூக்கள் என்றால், மிகவும் பிடிக்கும். வீட்டைப் பராமரிப்பது அதைவிடவும் பிடிக்கும். விலையுயர்ந்த நகைகள் என்றால், அலாதியாகப் பிடிக்கும். இது எல்லாவற்றையுமே மிகச் சரியாகப் புரிந்துகொண்ட நெப்போலியன், எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துகொடுத்தான். உலகத்திலுள்ள எல்லா ரோஜாச் செடிகளையும், எல்லா விதமான ரோஜாக்களின் வகைகளையும், கொண்டுவந்து இறக்கினான். ஒவ்வொரு போரின் வெற்றியின்போதும், ஒவ்வொரு வகையான நவரத்தினத்தாலான நெக்லஸ் அவளுக்குப் பரிசாக வழங்கப்படும்.

இப்படியே, இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.

காலத்தின் ஓட்டத்தில், நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் ஒரு முக்கிய அரசியல் பதவியை வகிக்கும் தலைவனாக வளர்ந்து நின்றான். அப்போது, நெப்போலியனுக்கு ஜோசஃபின் மூலமாக குழந்தை பிறக்கவில்லை என்பதை ஒரு ஆயுதமாக எடுத்தார்கள், அவனது குடும்பத்தார். "நீ இவ்ளோ பெரிய பதவிக்கு வந்து என்ன பிரோயஜம் ? நீ சம்பாதிக்கிறத எல்லாம் அனுபவிக்க, உனக்கு ஒரு குழந்தை வேண்டாமா ? உன்னோட பதவியை அலங்கரிக்க, உனக்கு வாரிசு வேண்டாமா ?" என்று அவனிடம் கேள்விகள் கேட்டனர்.

நெப்போலியன் குடும்பத்தாரின் கேள்வி 


அந்த சமயத்தில், நெப்போலியன் அவர்களிடம் சொன்ன வார்த்தைகள்தான் ஜோசஃபீனின் மனதை மொத்தமாக மாற்றின. "காதல் என்றால் என்ன ?" என்பதை அவளுக்குப் புரிய வைத்தன. அப்படி நெப்போலியன் என்ன சொன்னார் என்று தெரியுமா ? 

"எனக்குப் பிறந்தால்தான் அது என்னுடைய குழந்தையா? ஜோசஃபின் என்னுடைய மனைவி என்னும் முறையில், அவளுடைய குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் தான். அதனால், எனக்கு மிகவும் பிடித்த அவளது பெண்ணுக்குப் பிறந்திருக்கும் குழந்தையை நான் என்னுடைய வாரிசாக அறிவிக்கிறேன். இனிமேல் யாரும், இந்த வாரிசு விஷயமாக என்னிடம் பேசக்கூடாது" என்று அறிவித்தான் அவன். 

எல்லோருமே வாயடைத்துப் போனார்கள். ஜோஸபினும் சேர்ந்துதான்.

அந்த இரவு, தன்னுடைய அறைக்குச் சென்று அழுத ஜோஸபின், நெப்போலியன் தனக்கு அனுப்பிய கடிதங்களையெல்லாம், பிரித்துப் படித்துப் பார்த்தாள். அந்தக் கடிதங்கள், அவளுக்கு அவன் இதயத்தை விரித்துக் காட்டின. அவள் அதுவரை உணராத காதலை அவளுக்கு உணர்த்தின. தான் இதுவரை செய்த தவறுக்காக, நெப்போலியனை சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டுமென்று அவள் விரும்பினாள். அவன் இதுவரை அவளுக்குத் தந்ந காதலை அவனுக்குத் திருப்பி தரவேண்டுமென ஆசைப்பட்டாள். 

ஆனால், காலம் அதற்கெல்லாம் அவளுக்கு அவகாசம் கொடுக்கவில்லை. அடுத்தநாளே, நெப்போலியன்  ஒரு படையெடுப்பிற்காக எகிப்துக்குக் கிளம்பினான். பிரான்ஸ் நாட்டின் அரசியல்வாதிகள் சிலபேரை சந்தித்து அவள்களைத் தனக்கு சாதகமாக மாற்ற வேண்டுமென்று ஜோசஃபீனிடம் சொல்லிவிட்டு, பிரியாவிடை பெற்றுக்கொண்டான். 

அவள்தான் பேச்சு சாமர்த்தியத்தில் கெட்டிக்காரியாயிற்றே !! "சீக்கிரமாக அவன் தந்த அந்த வேலையை முடித்துவிட்டு அவனை சந்திக்க வேண்டுமென்று முடிவு செய்தாள். அப்படியே, தனது மனமாற்றத்தையும் சொல்லி, தன்னுடைய காதலையும் அவனிடம் வெளிப்படுத்த வேண்டுமென முடிவும் செய்திருந்தாள்.

ஆனால், இந்த இடத்தில்தான் இந்த கதையின் முக்கியமான திருப்புமுனையே இருக்கிறது.

காதலில் ஒரு திருப்புமுனை 


நெப்போலியன் எகிப்தில் இருக்கும்போது அங்கிருக்கும் இராணுவ அதிகாரிகள் மூலமாக ஜோசஃனுக்கு இருந்த தகாத உறவைப் பற்றித் தெரியவந்தது. ஆயினும், அவனால் அதை முழுவதுமாக நம்ப இயலவில்லை. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரிந்துகொள்ள விரும்பிய நெப்போலியன், தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான 'ஜூனட்' என்பவனை அழைத்து விசாரித்தார். அப்பொழுது, சில மாதங்களுக்கு முன்பு ஜோசஃபின் செய்த தவறுகள், அவளுக்கு யமனாக வந்து நின்றன. 

அதாவது, நெப்போலியன் இத்தாலி ராணுவ தளவாடத்திலிருந்தபோது, ஜோசஃபினுக்கும் 'ஹிப்போலைட்' என்கிற அதிகாரிக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது. இந்தத் தொடர்பைப் பற்றி நெப்போலியனிடம் சொன்ன ஜூனட், ஆதரத்திற்காக ஜோசஃபின் ஹிப்போலைட்டுக்கு எழுதிய சில கடிதங்களையும் கொண்டு வந்து காட்டினான். அன்றைக்கு ஆரம்பித்தது நெப்போலியனின் பழிவாங்கும் படலம்.

"என்னோட காதலுக்கு துரேகம் செய்த ஜோஸபினுக்கு நானும் துரோகத்தையே திருப்பி தருவேன். இதோ, இப்போது பாருங்கள் நெப்போலியனின் இன்னொரு முகம்", என்று சொல்லிக்கொண்ட நெப்போலியன், தனது அணைத்து கட்டுப்பாடுகளையும் தகர்த்திவிட்டு, பல பெண்களோடு உறவு ஏற்படுத்திக்கொண்டார். காதல், கடிதங்கள் எல்லாவற்றையும் ஒரம்கட்டி வைத்துவிட்டு, மீண்டும் தனது அரசியல் பயணத்தைத் தீவிரப்படுத்த ஆரம்பித்தார். 

ஆனால், இந்த சமயத்தில் ஜோஸபினோ, அவரது காதலுக்காக ஏங்கினாள். எப்படியாவது அவரைச் சென்று சந்திக்க வேண்டுமென துடித்தாள். ஆனால், நெப்போலியன் அவளை சந்திக்க மறுத்துவிட்டான். ஜோஸபின் ஆடிப்போனாள். அழுதாள், ஏங்கினாள், கதறினாள். ஆனாலும், நெப்போலியன் அவளைக் கண்டுகொள்ளவில்லை. அவளைக் கண்டுகொள்ள, அவனுக்கு நேரமுமில்லை. ஏனெனில், அவனது கவனம் முழுவதும், பிரான்ஸ் நாட்டைக் கைப்பற்றி, அதன் அரசனாவதில் மட்டும்தான் இருந்தது. அடுத்த சில நாட்களில், தன்னுடைய அறிவாலும் இராஜ தந்திரத்தாலும், அரச குடும்பத்தில் பிறக்காத நெப்போலியன் பிரான்சின் அரசனும் ஆனான். 

என்னதான் போர், அரசியல், இதிலெல்லாம் வெற்றி கண்டிருந்தாலும், நெப்போலியனின் காதல் வாழ்க்கை ஓர் பேரிடர் தான். முடிசூடுவதற்கு முந்தைய நாள் கூட, நெப்போலியன் அனுபவித்த மனவேதனைக்கு அளவே இல்லை. துரோகம் செய்த ஜோஸபினை அரசியாக ஏற்றுக்கொள்ளவும் மனம் வராமல், அவளை விவாகரத்து செய்யவும் முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவித்தான் அவன். ஆனால், அன்று மனதுக்கும் அறிவுக்கும் நடந்த போராட்டத்தில், மனதுதான் வென்றது. தன்னுடைய மனம் முழுவதும் நிறைந்திருக்கும் அவளைத்தவிர, வேறு யாரையும் அரசியாக ஏற்க அவன் மனம் இடம் தரவில்லை. அதனால், ஜோஸபினையே பிரான்ஸ் நாட்டின் இராணியாக முடி சூட்டினான்.

அதிகாரியாக இருந்தபோதே வாரிசைப் பற்றிப் பேசிய அவன் குடும்பத்தார், அரசனான பின்பு சும்மா விடுவார்களா? நச்சரித்துக்கொண்டே இருந்தார்கள் ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் நெப்போலியனுடைய மனதை யாராலும் அசைக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட நெப்போலியனுக்கு, தான் செய்த துரோகத்தை நினைத்தும், ஆரம்பகாலத்தில் அவன் தந்த அன்பைத் இப்போது தன்னால் திருப்பித் தர இயலாததை நினைத்தும், வருந்தி வருந்தி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த ஜோஸபினுக்கு, இடி மாதிரி ஒரு செய்தி வந்து சேர்ந்தது.

அதாவது எந்தச் சிறுவனை நெப்போலியன் தனது வாரிசாக அறிவித்திருந்தானோ, அந்தச் சிறுவன் ஒரு பெரிய வியாதி ஏற்பட்டு இறந்து போனான். இதன்பின், தன்னுடைய குடும்பம் சொல்வதைப் போல் தனக்கு ஒரு வாரிசு வேண்டுமென்பது நெப்போலியனின் எண்ணமாகவும் மாற ஆரம்பித்தது. 

காதல் முறிந்தது 


இதன் விளைவாக ஒருநாள், நெப்போலியன் ஜோஸபினை அழைத்து தான் அவளை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தான். மயங்கி விழுந்தாள் ஜோசஃபின். அவளைத் தூக்கிகொண்டுபோய் அவளது அறையில் விட்டுவிட்டு, "எனது முடிவில் மாற்றமில்லை. ஆனால், விவகாரத்துக்குப் பின்னும்கூட  இருக்கலாம்" , என்று சொன்னான். ஆனால், ஜோசஃபின் வெகு சீக்கிரத்தில் அங்கிருந்து வெளியேறினான்.

பின்னர், குறித்த நாளில் நெப்போலியனுக்கு இரண்டாவதாகத் திருமணமும் நடந்தது. குழந்தைகளும் பிறந்தது ஆனால், எந்தப் பதவிக்காக அவன் திருமணம் செய்தானோ, அந்தப் பதவி வெகுசீக்கிரத்தில் பறிபோயிற்று. இந்த இடைவெளியில், நெப்போலியனின் நினைவிலேயே வாழ்ந்த ஜோஸபினும் சீக்கிரமாக இறந்து போனாள்.

ஆட்சியை இழந்த நெப்போலியன், ஒரு தனித்தீவில் சிறையில் அடைக்கப்பட்டான். இரைப்பைப் புற்றுநோய் ஏற்பட்டு, நோய் படுக்கையிலும் விழுந்தான். ஒரு சில ஆண்டுகள் ஐரோப்பாவையே ஆட்டிப்படைத்து, அங்கிருந்த ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, 'ஒரு மனிதனின் வளர்ச்சியை அவனது பிறப்பு தீர்மானிப்பதில்லை' என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த நெப்போலியன், மே 5ம் தேதி இறந்தும் போனான்.

ஆனால், பைத்தியக்காரத்தனமாக ஜோஸபினைக் காதலித்த நெப்போலியன், எப்போதுதான் அவளை மறந்தான் ? அவளுக்குப் பின் யாரைத்தான் காதலித்தான் ? இது மாதிரியான பல கேள்விகளுக்கு,  மரணப்படுக்கையில் நெப்போலியன் சொன்ன வார்த்தைகள் பதில் கூறின. 

அவர் மரணப்படுக்கையில் கூறிய கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா ?? 

"France, Napolean's Army; The Head of the Army, Josephine"

அதாவது, "நெப்போலியன் பிரான்ஸின் இராணுவம்; ஜோஸபின் அந்த இராணுவத்தின் தலைவி" 

அதாவது, நெப்போலியன் தன்னுடைய கடைசி மூச்சு வரைத் தன்னுடைய காதலியாக நினைத்தது, ஜோசஃனை மட்டும்தான். என்ன செய்ய ? அவளுக்குத்தான் அவனது காதலியாக இருக்கக் கொடுத்துவைக்கவில்லை.

இந்த உலகில் இருப்பதிலேயே மிகவும் கொடூரமானது துரோகம். அதுவும் காதலுக்கும் நட்புக்கும் செய்கிற துரோகம், ரொம்பவே கொடூரமானது. தன்னுடைய கணவனுக்கு உண்மையாக இல்லாத ஜோசஃபினும், அவள் செய்த துரோகத்துக்கு தண்டனை தருவதாக நினைத்துக்கொண்டு நெப்போலியன் அவளுக்குச் செய்த துரோகமும் தான், இந்த காதலுக்கு எதிரிகள்.

மாவீரன் நெப்போலியன் ஜோசபினின் இந்தக் காதல் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் . மீண்டும் ஒரு காதல் கதையோடு, நாம் சீக்கிரம் சந்திக்கலாம் . நன்றி.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post