Motivational Stories in Tamil | Magical Watch | ஒரு குட்டிக் கதை


 AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN

சில ஆண்டுகளுக்கு முன், லண்டனில் ஒரு தொழிலதிபர் இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர், திறமையானவர், புத்திசாலி. தனது சொந்த முயற்சியின் மூலம், ஒரு வியாபார சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருந்தார்.

ஒருநாள், அவர் ஒரு முக்கியமான கூட்டத்திற்குப் போக வேண்டியிருந்தது. அது வியாபாரிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு. அதன்மூலம், நிறைய முதலீட்டாளர்களின் அறிமுகம் கிடைக்கும். அந்த அறிமுகம், பின்னாட்களில் அவரது தொழிலுக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும்.

அதே நாளன்று, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த உடல்நிலையில், அவரால் அந்த கூட்டத்திற்குச் செல்ல முடியாது.

அப்படிச் செலவில்லையென்றால், தனது தொழிலில் ஒரு சிறிய நஷ்டத்தையேனும் அது ஏற்படுத்தும். அதனால், "யாரை அனுப்பலாம் ?" என்று சிந்தித்துப் பார்த்தார்.

அவருக்கு அவரது மகன்தான் ஞாபகத்துக்கு வந்தான். அவன் நன்கு படித்தவன். தொழிலிலும் அவருக்குத் துணையாக இருந்தான். ஆனாலும், இந்த மாதிரியான முக்கிய கூட்டங்களுக்குச் சென்ற முன்னனுபவம் அவனுக்குக் கிடையாது.

"முன்னனுபவம் இல்லாத அவனை அங்கு அனுப்புவது சரி வரமா ?" என்ற ஐயம் எழுந்தாலும், வேறு வழியேதும் இல்லையென்பதால், தனது மகனை அழைத்தார்.

அவனிடம் ஒரு கைக்கடிகாரத்தை கொடுத்து, "இன்று, நீ ஒரு முக்கியமான கூட்டத்திற்குச் செல்ல வேண்டும். அது மிகவும் முக்கியமான கூட்டம். அங்கு நீ மிகவும் கவனமாகப் பேச வேண்டும். அதற்கு உனக்கு இந்தக் கடிகாரம் உதவும்.

எப்பொழுதெல்லாம் இந்தக் கடிகாரம் அதிர்வை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நீ பேசிக்கொண்டிருக்கும் நபரிடம், இரண்டு மடங்கு கவனத்தோடு பேசவேண்டும். பின்விளைவுகளை யோசித்துப் பேசவேண்டும். இந்தக் கடிகாரத்தின் துணையோடு, நீ அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டால், நிச்சயமாக உனக்கு வெற்றி கிடைக்கும்" , என்று கூறினார்.

அவனும் அந்த கைக்கடிகாரத்தை பெற்றுக் கொண்டு. தனது கைகளில் அணிந்து கொண்டான். அந்த முக்கியமான சந்திப்பிற்குப் புறப்பட்டான்.

ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில், அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரிய பெரிய முதலீட்டாளர்கள், தலைசிறந்த தொழிலதிபர்கள் என்று பலர் வந்திருந்தனர். அதில் ஒருசிலர், அவனுக்கு ஏற்கனவே பரிட்சையமானவர்கள். ஒரு சிலர், அவனது தந்தையின் போட்டியாளர்கள்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு, அவனும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டான். அப்பொழுது திடீரென்று ஒரு நபர், அவன் முன்னால் வந்து நின்றார். அவனிடம், "நீ ஜே.கேயின் மகன் தானே. உனது அப்பா எத்தனை பெரிய தொழிலதிபர் தெரியுமா ? அவரது சாயல் உனக்கு அப்படியே இருக்கிறது. நீ நடந்து கொள்ளும் விதம்கூட அவர் மாதிரிதான் இருக்கிறது. ஒருவேளை வருங்காலத்தில் நீயும்கூட, அவரைப் போல பெரிய ஆளாக வருவாய் என்று நினைக்கிறேன். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?" என்றார்.

இந்த வாலிபரின் மனம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. திறமைசாலியான தனது தந்தையோடு தன்னை ஒப்பிடுவதைப் பார்த்து, ஆனந்தம் அடைந்தது.

அந்த நேரத்தில் அவர், "நீங்கள் சிங்கப்பூரில் போன வருடம் ஒரு தொழில் ஆரம்பித்தீர்களல்லவா ? அந்தத் தொழில், இப்பொழுது எப்படிச் செல்கிறது ?" என்று கேட்டார்.

அவன் பதிலளிப்பதற்காக வாயைத் திறந்த அதே நேரத்தில், அவனது கடிகாரம் அதிர்ந்தது. உடனேயே, அவனுக்கு தனது தந்தை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. நிதானித்து யோசித்துப் பார்த்தான்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட அவர்களது தொழில், இப்பொழுது நஷ்டத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஆனாலும், மறந்து இந்த நபரிடம் அதைச் சொல்லியிருந்தால், முதலீட்டாளர்கள் யாரிடமாவது, அவர் தெரிந்தோ, தெரியாமலோ சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சொல்ல நேர்ந்தால், முதலீட்டாளர்கள் மறுபடி இவர்களது தொழிலில் பணத்தை இறக்குவதென்பது கடினம்.

இதை யூகித்ததும், "யா. கோயிங் குட். தாங்க் யூ", என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்களில், இன்னொரு நபர் அவனருகில் வந்தார். அவர் அவனது தந்தையின் போட்டியாளர். அவனிடம், "உனது தந்தையும் நானும் ஒரே நேரத்தில் தொழில் தொடங்கியவர்கள்தான். நான் தரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். தரமான பொருட்களை மட்டும்தான் பயன்படுத்துவேன். அதனால் நான் கட்டும் கட்டிடங்கள் சற்று விலை அதிகமானவையாக இருக்கின்றன.

ஆனால், உன் தந்தை அப்படியில்லை. தரத்தைப் பற்றி யோசிப்பதேயில்லை. அதனால்தான், அவரது கட்டிடங்கள் எல்லாம் விலை குறைந்தவையாக இருக்கின்றன. அதிகமாக மக்களைச் சென்றடைந்து வெற்றியையும் தந்தன. உன் தந்தையும் சீக்கிரத்திலேயே சாதித்து விட்டார்", என்றார்.

பொதுவாக யாருக்குமே, தனது தந்தையைத் தரக்குறைவாகப் பேசும்பொழுது கோபம்தான் வரும். இந்த வாலிபனுக்கு அதிகமாகவே கோபம் வந்தது. அவரிடம், "அதெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் தரமான பொருட்களைத்தான் பயன்படுத்துகிறோம்" என்று பதில் சொன்னான்.

அதைக்கேட்டு அவர் சிரித்துக்கொண்டே, "எல்லாம் மக்களையும் ஏமாற்றுவது போல என்னையும் ஏமாற்ற வேண்டாம். உங்களுக்கு மட்டும், இத்தனை குறைவான விலையில், தரமான பொருட்கள் எப்படி கிடைக்கும் ?" என்று ஏளனமாகக் கேட்டார்.

அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதே நேரத்தில், அவனது கைக் கடிகாரம் அதிர்ந்தது. தனது தந்தை சொன்னது, மறுபடியும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

சுதாரித்துக் கொண்டு, "மிஸ்டர். நோர்மன், நீங்கள் ஏற்கனவே உங்களது மனதில் எங்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணத்தை விதைத்துக் கொண்டீர்கள். அப்படியிருக்க, நான் என்ன பதில் சொன்னாலும், அது உங்களைத் திருப்திப்படுத்த இயலாது. எதற்காக இந்தப் பேச்சு? வாருங்கள், அடுத்த வேலையைப் பார்க்கலாம்" என்று அவரை அழைத்துக்கொண்டு, வேறு இடத்துக்கு நகர்ந்தான்.

அடுத்தடுத்து, அவன் நிறைய பேரைச் சந்தித்தான். அதில், ஒரு சிலர் அவனைப் புகழ்ந்தார்கள். ஒரு சிலர் அவனைக் காயப்படுத்தினார்கள். ஒரு சிலர் அவனைக் கோபப்படுத்தினார்கள்.

எல்லோரையும் சமாளித்து, அந்த சந்திப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்குத் திரும்பிய அடுத்த நொடி, தனது தந்தையை சந்தித்தான்.

தன் கையில் கட்டியிருந்த அந்தக் கடிகாரத்தைக் கழற்றி, தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு, "இனிமேல், எனக்கு இந்தக் கடிகாரம் தேவைப்படாது. இதன் மூலம், நீங்கள் எதை எனக்குக் கற்றுக்கொடுக்க விரும்பினீர்களோ, அதை நான் கற்றுக்கொண்டேன்" என்று சொன்னான்.

"இனிமேல், நமது தொழிலில் நமக்கு எந்தக் கவலையும் இல்லை. நமது மகனை நம்பி, நமது தொழிலை ஒப்படைக்கலாம்", என்று திருப்தியடைந்தார்.

அந்தத் தந்தை, தனது மகனுக்கு என்ன சொல்ல விரும்பினாரோ அதையே நான் உங்களுக்குத் சொல்கிறேன்.

நிதானத்தை இழந்த நிலையில், யாரிடமும் எந்த வார்த்தையையும் பேசாதீர்கள் !!

குறிப்பாகத் தொழில் சம்பந்தமான நண்பர்களிடம் பேசும் பொழுது, மிகுந்த ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் உங்களது அலுவலக நண்பர்களாக இருக்கலாம், சக வியாபாரியாக இருக்கலாம், போட்டியாளராக இருக்கலாம். அவர்களிடம், நிதானம் தவறிய நிலையில், ஒரு வார்த்தைகூடப் பேசிவிடாதீர்கள்.

குடும்பத்திலும்கூட, உங்களது நிதானத்தில் விளையாடும் நபரிடம், ஜாக்கிரதையாக இருக்கப் பழகுங்கள்.

பொதுவாக, நம்முடைய நிதானத்தை நாம் எப்போது இழப்போம் ? ஒருவர் நம்மை மிகுதியாகப் புகழும்போது, மகிழ்ச்சியில் நிதானம் இழப்போம். ஒருவர் நம்மை பயமுறுத்தும்போது, பதற்றத்தில் நிதானம் இழப்போம். ஒருவர் நம்மைக் கோபப்படுத்தும்போது, கோபத்தில் நிதானம் இழப்போம்.

அப்படிப்பட்ட தருணங்களில், நாம் ஜாக்கிரதையாக இருக்க மாட்டோம். வார்த்தைகளின்மீது, கவனம் செலுத்த மாட்டோம்.

அதனால், நிதானம் தவறும் தருணங்களை உணர்ந்து, கவனமாகப் பேசுங்கள்.

இப்படியான சின்னச் சின்ன மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்துவதன் மூலம், நீங்கள் மிகப் பெரிய அளவில், வெற்றியடைய முடியும். இந்த மாதிரியான மாற்றங்களை உங்களுக்குள் ஏற்படுத்த, என்னுடைய கதை உங்களுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கையில், இந்தக் கதையை முடிக்கிறேன். இன்னொரு நாள், இன்னொரு கதையுடன் சந்திக்கலாம்


I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,
Applebox Motivational
Motivational Stories Applebox, Kutty Stories Applebox,
Oru Kutty Kadhai Applebox and

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post