Motivational Stories in Tamil | Alexander Graham Bell | ஒரு குட்டிக் கதை

 AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN

1850-களில், கனடாவில் ஒரு சிறுவன் இருந்தான். இந்த உலகத்தை மிகவும் அதிகமாக நேசித்த ஒரு சிறுவன். தனது தாயை ரசித்த ஒரு சிறுவன்.அவனது தாய் வாசிக்கும் பியானோ இசைக் கருவியில் வாசிக்கும் இசை இன்னும் அதிகமாக பிடிக்கும்.

அவன் வளர்ந்து வருகையில், அவனுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. மற்ற சிறுவர்களின் தாய்க்கும் தனது தாய்க்கும் உள்ள ஒரு வேறுபாடுதான் அது. மற்ற சிறுவர்களின் தாயால், அவர்கள் பாடல்கள் பாடும் பொழுதும், கவிதைகள் சொல்லும் பொழுதும், மழலையாகப் பேசும் பொழுதும், அதைக் கேட்டு ரசிக்க முடியும். ஆனால், அவனது தாயால் இவை எதுவுமே இயலாது.

ஏனெனில், அவனது தாய்க்கு செவித்திறன் குறைபாடு இருந்தது.

'தான் பேசுவதை தனது தாயால் கேட்க முடியவில்லையே' என்ற சிறிய வருத்தம் அவனுக்கு இருந்தாலும் அவனது தாயின் குறை, அவனுக்குப் பெரிதாகத் தோன்றியது இல்லை. மாறாக அவனது தாய் பியானோ வாசிப்பதும், அவனுக்கு பாடங்கள் சொல்லித் தருவதும், அவனுக்கு ஒரு வியப்பையே ஏற்படுத்தும். அவனது தாயின் இந்த தன்னம்பிக்கை, அவனுள் அசைக்க முடியாத நேர்ச்சிந்தனையாக, தாய் தந்த நம்பிக்கையாக வேரூன்றியது.

ஒரு சிறிய விஞ்ஞானியாகவும், செவித்திறன் குறைபாடுள்ளோர் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து கொண்டிருந்த தனது தந்தையிடமிருந்து சமிக்கை மொழியைக் கற்றுக்கொண்டான். தனது தாயிடம் தான் விரும்பிய எல்லாவற்றையும் பேச, அது உதவியது. அவனுக்கும் அவனது தாய்க்கும் இடையே, வார்த்தைகளே இல்லாத அந்த உன்னதமான பந்தம் தொடங்கியது.

சிறு வயதில், "நீ வளர்ந்ததும் என்னவாக போகிறாய் என்று யாராவது கேட்டால்" , "எதைச் செய்தால், எனது தாயைக் கேட்க வைக்க முடியுமோ, அதை நான் நிச்சயம் செய்வேன்" என்று பதில் சொல்லுவான், அவன்.

உண்மையில் அவை விளையாட்டுக்கு சொல்லிய வார்த்தைகள் இல்லை. தனது பதினாறு வயதிலிருந்தே, செவித்திறன் சீரமைப்பிற்கான கருவியைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் இறங்கினான். அடிப்படை அறிவியலை மட்டுமே அறிந்த நிலையில், அது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது. போதுமான பணமும் இல்லை.

நாம் அனைவருமே ஏதாவது ஒன்றை செய்து விடவேண்டும் என்று ஒரு முயற்சியில் இறங்குவோம் ஆனால் காலம் நம்மை அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒரு திசையில் திருப்பும் அந்த மாதிரிதான் அவனையும் வேறு ஒரு திசையில் திருப்பியது.

பணத்துக்காக, வேறு சில நிறுவனங்களின் துணியை நாடி, அவர்களுக்குத் தேவையான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தான். ஆனால், எல்லாவற்றிலுமே ஒலியுடன்தான், அவன் விளையாடிக் கொண்டிருந்தான். ஒலியை எப்படி எழுத்தாக மாற்றுவது,ஒலியை எப்படி பெருக்குவது ஒலியுடன் விளையாடுவது என்பது மாதிரியான ஆராய்ச்சிகளை செய்துகொண்டிருந்தான்.

தனது கண்டுபிடிப்புகளில் குளறுபடி ஏற்படும் போதெல்லாம், தனது தாயை பியானோ இசைக்கச் சொல்லிக் கேட்பான். அந்த இசை, அவனுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுக்கும். மறுபடியும், தனது முயற்சியைத் தொடருவான்.

நாட்கள் நகர்ந்தன. அவனால், செவித்திறன் மேம்பாட்டிற்கானக் கருவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அந்தத் தேடல் அவனது வாழ்க்கையிலேயே முக்கியமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. ஒரு முனையில் பேசினால், 20 அடிகளுக்கு அப்பாலிருக்கும் மறுமுனையில், அந்த ஒலி கேட்குமாறு ஒரு கண்டுபிடிப்பு.

அதுதான், தொலைபேசி.

நாம் இதுவரைப் பார்த்துக்கொண்டிருந்தது, தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் வாழ்க்கையில் இருந்துதான்.

தொலைபேசி, அவருக்கு பெயரையும், புகழையும், வருமானத்தையும் ஈட்டித் தந்தது. வியாபாரப் பின்னணி எதுவுமே இல்லாத அவன் குடும்பத்துக்கு, அது ஒரு வியாபாரத்தையும் தந்தது.

ஆனாலும், செவித்திறன் மேம்பாட்டுக் கருவியைக் கண்டுபிடிக்க, தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டுதான் இருந்தார். அவரால் இயலவில்லை என்றாலும், இருபது ஆண்டுகளுக்குப் பின், மில்லர் என்ற விஞ்ஞானி அதைக்கண்டுபிடிக்க, தொலைபேசியின் அடிப்படை அறிவியல்தான், காரணமாக அமைந்தது.

அவரிடம், எத்தனையோ பேர் "உனது தாய்க்கு இருப்பது ஒரு குறை" என்று சொல்லியிருக்கிறார்கள். தங்களது அனுதாபப் பார்வையையும் வீசியிருக்கிறார்கள். ஆனால், பெல்லுக்கு அது ஒரு நாளும் குறையாகத் தெரிந்தது கிடையாது. மாறாக தனது தாயைப் பார்க்கும்பொழுது, அவள் ஒரு போராடும் பெண்மணியாக, இந்த உலகத்திலிருக்கும் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே, அவருக்குத் தோன்றியது.

அவளிடமிருந்து அவர் கற்றுக்கொண்டது, குறைகளை நினைத்து வருந்தும் இயல்பை அல்ல. மன உறுதியை. நேர்ச் சிந்தனையை.

அதனால்தான், எதை மற்றவர்கள் 'ஒரு குறை' என்று சொன்னார்களோ, அதையே தனது ஆராய்ச்சியின் அடிப்படையாக எடுத்துக்கொண்டார். வெற்றியின் உச்சியிலும் கூட அவர் தனது குறிக்கோளை மறக்காது இருந்தார்.

இந்தக் கிரஹாம் பெல்லை ஒரு கண்டுபிடிப்பாளராக, விஞ்ஞானியாக, தொழிலதிபராக உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவர் ஒரு மனிதநேயமிக்க மாமனிதர்.

இன்றும் கூட, இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதாவது ஒரு சிறிய குறையை பெரிதாக எண்ணி, அதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கலாம். உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களிடம் இருக்கும் குறைகளை, உங்களைச் சார்ந்தவர்களின் குறைகளை, பெரியதாக எண்ணி வருந்திக் கொண்டிருந்தால், நிச்சயமாக அந்த வருத்தத்தை உதறித் தள்ளுங்கள்.

இந்த உலகம் எதை உங்களது குறை என்று சொல்கிறதோ, அதையே உங்கள் வெற்றிக்கான காரணியாக மாற்றுங்கள். சோர்வுகள் வந்தாலும், தோல்விகள் வந்தாலும், உங்களது குறிக்கோளில் உறுதியாக இருங்கள். நல்ல சிந்தனைகள் தோற்றுப் போவதற்கு இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஆகவே, நல்ல சிந்தனையோடு, மன உறுதியோடு, உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

அப்படிப்பட்ட உங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமைய, எனது வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் !!


I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,
Applebox Motivational
Motivational Stories Applebox, Kutty Stories Applebox,
Oru Kutty Kadhai Applebox and

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post